Skip to main content

எழுதியெழுதி அழித்தல்‘நீ என்ன சாதின்னு யாராவது கேட்டா, மூஞ்சில அடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லனும். என்ன சொல்லலாம்’ என்றான், முன்பொருமுறை திருமாறன்.

சிறுசிலிருந்து நண்பன்.  நாடக நடிகன்.  பெரியார் ஆதரவாளன்.  திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டான்.  எங்கிருக்கிறான் இருக்கிறானா என்று கூட யாருக்கும் தெரியாதவன்.

அவன் கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.

‘சரி, நீ என்ன சொல்லுவ?’ என்றான்.

‘அப்படி யாராவது கேட்டா, நான் உண்மைய சொல்லுவேன்.  அதுவே மூஞ்சில அடிச்சா மாதிரி தான் இருக்கும்’.

அன்றைக்கு, அவன் கண்களில் பொறாமை தெரிந்தது. 

என் ‘சாதி மறுக்கப்பட்ட’ அடையாளம், கேட்கிறவர் மூஞ்சை பெயர்க்கும்.  ஒரு தலித்தாக பிறந்ததில், நான் அனுபவித்த ஒரே சலுகை இது தான்!  

*****


தொடர்ச்சியான சாதிக் கொலைகளால் எல்லாருமே பதறிப் போயிருக்கிறோம்.   நிறைய பேருக்கு உயிரோடிருப்பது குறித்த பயம்; பலருக்கு இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்ற கசப்பு.  குழம்பிப் போயிருக்கிறது சூழல்.

‘நான் உயர்சாதியைச் சார்ந்தவள்;  ஆனால், ஆணவக் கொலையை எதிர்க்கிறேன்’ என்ற அறிவிப்பைக் கூட இப்படி பதட்டப்பட்டவர்களின் குரலாகத் தான் நான் பார்க்கிறேன்.  அதில் கோபப்படவோ, வருத்தப்படவோ எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  அவர்கள் எதையோ சொல்ல வந்து, பதறிப் போய் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  கையறு நிலை!  

இதில் இன்னுமொரு விஷயமும் இருக்கிறது.  இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எனக்கான ஆதரவுக் குரல் எது, எதிர்க்குரல் எது என்ற போதமில்லாமல் நான் இருப்பது?  

******

சாதி குறித்து யோசிக்கும் பொழுது, இந்த சமூகத்தில் இரண்டு பாடுகள் தான் இருக்கின்றன - ஒன்று தலித் வாழ்க்கை என்ற சாதி மறுக்கப்பட்ட வாழ்க்கை; மற்றொன்று, சாதி வாழ்க்கை!   இவையிரண்டுமே பிறப்பால் தான் தீர்மானிக்கப்படுகின்றன.  இருந்தாலும், ஒவ்வொருவரும் தாம் தேர்ந்துகொண்ட கருத்துருவாக்க அரசியல் சார்ந்து தனது வாழ்க்கைப் பாட்டை மாற்றிக் கொள்ள முடியும்.  தலித் வாழ்க்கையை சாதி வாழ்க்கையாகவும்; சாதி வாழ்க்கையை தலித் வாழ்க்கையாகவும்.

ஒரு தலித்தை, சாதிவாழ்க்கைக்கு அனுமதிப்பது தான் சாதியின் சூட்சுமம்.  அது ஒரு தூண்டில்.  ஆசை காட்டுதல்.  பொது மைதானத்தில் தூக்குலிடுதல்.  தன்னை முழுமுதற் சக்தியாக சாதி முன்வைக்கும் தருணம் இது.  

இதற்கு எதிரான வழிமுறையும் ஒன்று உண்டு, அதாவது, சாதி வாழ்க்கையிலிருந்து ஒருவர் தலித் வாழ்க்கைக்கு வந்து சேர்வது.  இதுவும் தெளிவான ஒரு அரசியல் நடவடிக்கை தான்.  ஆனால், இப்படி மாறுகிறவர்களுக்கு சாதி என்ற சொல்லாடலில் எந்த இடமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.  இவர்களைப் பேச முடியாத ஊமைகளாகவே ‘சாதி’ வைத்திருக்கிறது.  மீறி அவர்கள் எழுப்பும் குரல்களை உடனடியாக சந்தேகிக்கிற சூழலையே அது நமக்கு வழங்குகிறது.  ஏனென்றால்,  சாதி ஆள் ஒருவர், தன்னை தலித்தாக அறிவித்து கொண்டு வாழ்வதற்கான வாய்ப்புகள் இங்கே உருவாக்கப்பட்டிருக்கவில்லை.  இது ஏன் என்று நாம் பார்க்கலாம்.

******

தலித்தாக பிறந்த ஒருவர், சாதி நபராக மாறுவது சாத்தியம் என்றால், தர்க்கப்படி, சாதி ஆண் / பெண் தலித்தாக மாறுவதும் சாத்தியம் தான்.   ஆனால், இந்த வாய்ப்பு தலித் உரையாடலில் மறுக்கப்பட்டே வந்திருக்கிறது.  

இதற்கும் சில காரணங்கள் உள்ளன. சமீப காலமாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளையும் அபகரிக்க வருகிறார்களோ என்ற பயம், வாழ்க்கை நெடுக அடைந்த அவமானங்கள் உருவாக்கியுள்ள ‘எதையும் சந்தேகிக்கிற’ பார்வை, சாதிக்காரராகவே இருக்கிறார்களா அல்லது தலித்தாக இருக்கிறார்களா என்பதை சோதித்து அறிந்து கொள்ள முடியாத தன்மை, தலித்தாக மாற ஆசைப்படுவதற்கும் மாறிவிடுவதற்குமான கணிசமான இடைவெளி.   இதனால், சாதியிலிருந்து தலித்தாக மாறுவதற்கான பாதை நிரந்தரமாய் அடைக்கப்பட்டிருக்கிறது.  

ஆனால், இந்தத் தடை தொடர்ந்து இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை; அப்படி எதிர்பார்ப்பது பகுத்தறிவும் இல்லை.

பிறப்பால் சாதி மறுக்கப்பட்ட தலித்துகள், சாதி ஆண் / பெண் எதிர்ப்படும் பொழுது கேட்பதற்கு, ஏராளமான கேள்விகளை வைத்திருக்கின்றனர்.  இந்தக் கேள்விகளில் பலவும் விமர்சனங்கள்.  சாதி ஆணோ / பெண்ணோ தலித்துகளிடம் நெருங்கி வருகையில் இந்த விமர்சனங்களோடு தான் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.  இது எப்பொழுதுமே ஒரு தர்மசங்கடமான சந்திப்பு தான்.  அதைத் தவிர்ப்பதற்கும் வழி வகைகள் இல்லை.  

ஏனெனில், அந்த விமர்சனங்கள் தலித்துகளின் இருத்தலோடு தொடர்புடையவை.  கேள்விகளோடு இருத்தல், கேள்விகளால் இருத்தல், கேள்விகளாய் இருத்தல்.   ஆனால் தலித்துகளின் கேள்விகளை நியாய தர்மத்தோடு புரிந்து எதிர்வினையாற்ற இன்றளவும் எந்த சாதி ஆணோ / பெண்ணோ கற்றுக் கொண்டிருக்கவில்லை.  சாதியை விட்டு வெளியே வர ஆசைப்படுகிற அல்லது வந்துவிட்டதாய் அறிவிக்கிற யாரும் கூட இந்தக் கேள்விகளின் அக - புற நுட்பங்களை உணர்ந்து கொள்ளவில்லை.  ஏன் இப்படி?  

******

‘தலித் என்றால் சாதி மறுத்தல்’ என்று சொல்லுகிறபட்சத்தில், அது ஏன் பிறப்பால் சாதி இழந்தவர்களுக்கு மட்டுமான அடையாளமாக இருக்க வேண்டும்?   தத்தம் சாதி அடையாளத்தைப் புறக்கணிப்பவர்கள் அல்லது மறுப்பவர்களும் ‘தலித்’ என்று அழைக்கப்படுவதை எது தடுக்கிறது?  

தலித் இலக்கிய உருவாக்கத்தின் போது இந்தப் பிரச்சினை ‘யார் தலித் இலக்கியத்தை எழுதலாம்? அல்லது யார் எழுதுவது தலித் இலக்கியம்?’ என்ற கேள்வியாக முன்வைக்கப்பட்டிருந்தது.  அந்த நேரத்தில், ‘தலித்தாக பிறந்தவர்களே தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்; ஏனென்றால் தலித் அனுபவத்தை தலித் மட்டுமே உணர முடியும்' என்ற முடிவு எட்டப்பட்டிருந்தது.  

இந்தப் பதில், ‘அனுபவம்’, ‘இலக்கியம்' என்ற சொற்களைப் பயன்படுத்திக் கொண்டாலும், இலக்கிய உருவாக்கம் சார்ந்த பதில் இல்லை.   அனுபவத்தை பிறப்பு தீர்மானிப்பதில்லை என்ற மிகச் சாதாரண தகவல் மூலம் இந்தப் பதிலை முறியடிக்க முடியும், ஆனால், யாரும் அப்படி செய்திருக்கவில்லை, ஏனென்றால், தலித் இலக்கியம் குறித்த அந்த பதில் படைப்பின் விநியோகம் மற்றும் அதன் படைப்பாளிக்குக் கிடைக்கும் சமூகப் பொருளாதார உபரி விளைவுகள் சார்ந்தது என்பதை எல்லோரும் நன்றாகவே அறிந்திருந்தனர்.  

இது ஒரு மிக முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கிறது:  தன்னை தலித்தாக அறிவிக்கிற பிறப்பால் தலித் அல்லாத ஒருவர், அவ்வாறு அறிவிப்பதன் மூலம் கிடைக்கவிருக்கிற சமூகப் பொருளாதார லாபங்களைத் துறக்கிறேன் என்ற உறுதிமொழியையும் சேர்த்தே வெளியிட வேண்டியிருக்கிறது.   பிரச்சினையின் மையம் தலித் வாழ்க்கையை யார் எழுதலாம் என்பது அல்ல, அதன் அரசியல் பொருளாதார விளைவுகளை யார் அனுபவிப்பது என்பது தான்.

இந்த நாட்டின் வி நியோக முறை, சாதி ஆட்களுக்கே சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது.  தலித் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்ல முடிந்திருந்தால், அதற்கான பிதாமகர்கள், மகோன்னதர்கள், சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் என்று ஒரு கூடை சாதி ஆட்களை இந்த தேசம் நமக்கு அடையாளப்படுத்தித் தந்திருக்கும்.   இலக்கிய விஷயத்தில் இப்படித்தான் தலித்துகள் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டார்கள்.

இதுவும் கூட, பட்ட பின் வந்த அறிவு தான்!  முதல் முறை, கம்யுனிச இயக்கத்துடன் அவர்கள் படு தோல்வி அடைந்திருந்தனர்.  அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் இது.

தலித்துகளின் அவநம்பிக்கை, தலித் வாழ்க்கையை எழுத முனையும் ‘பிறரின்' மீது என்பதை விட, இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலக்கிய உற்பத்தி, மறு உற்பத்தி மீதே என்பது தான் உண்மை.

******

தலித் என்ற அடையாளத்தை, சாதி மறுத்த எல்லோரின் அடையாளமாக மாற்றுவதை முதலில் எதிர்க்கப்போகிறவர்கள், சந்தேகமே இல்லாமல், சாதி மறுக்கப்பட்ட தலித்துகள் தான்.  அவர்களது எதிர்ப்பு, அடிப்படை நம்பிக்கை ஒன்றிலிருந்து தோன்றுகிறது; ‘சாதி எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒன்றரக் கலந்து போயிருக்கிறது; அதனால், சாதியே அனைவரது சிந்தனையாகவும் மாறியிருக்கிறது; சாதியை மறுக்கும் ஆசை, சாதியை மறுத்த நிலை அல்ல’.  

*****

சாதி, சிந்தனை முறையைத் தீர்மானிக்கிறது என்ற கருத்தை தலித்துகள் மட்டுமல்ல, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள்.  ‘சாதி, இங்கு வாழ்க்கை முறையாக இருக்கிறது, அதுவும் சடங்கு, சம்பிரதாயங்கள், குடும்பம், கிளை, குலம் என்று பண்பாட்டு வாழ்க்கையாக சாதி காணப்படுகிறது’ என்ற ஒரு கருத்து கடந்த இருபது முப்பது வருடங்களாக தமிழில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  உள்ளூர் பண்பாட்டு அறிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற கருத்துப் பரப்பாளர்கள் நூற்களின் மூலம் இச்செய்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.  

பிரபலமாய் இருக்கக்கூடிய அவர்களது புத்தகங்களில் வெளிப்படும் வாதம் இரட்டை நாக்குகளைக் கொண்டிருக்கிறது; ஒரு பக்கம், சாதி, கொடூரமான, மனிதத்தன்மையற்ற பழக்கவழக்கம் என்று விவரிக்கிறார்கள்; மறு பக்கம், மரபான பழக்கவழக்கங்கள் அனைத்தையும் இழந்து தமிழ் பண்பாடு எவ்வாறு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்கள்.  பொதுவாக அவர்கள் சொல்ல விரும்புவது ஒன்று தான்: ‘சாதி, மனிதாபிமானமற்ற ஒன்று தான்; ஆனால், அதற்காக ஒட்டு மொத்த மாற்றம் என்பது பண்பாட்டுச் சீர்கேடு; சமூகம், தன்னைத் தானே மெது மெதுவாக மாற்றிக்கொள்ள அவகாசம் தேவை’.

*****

இந்த இடத்தில், சமீபத்தில் வெளியான, ஒரு முக்கியமான புத்தகத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.  19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் சாதி குறித்து உருவான மிக முக்கியமான சொல்லாடலொன்றின் தோற்றத்தை வரலாற்று நோக்கில் விவரிக்கும் புத்தகம் இது.  ‘பறையா பிரச்சினை: நவீன இந்தியாவில் சாதி, சமயம், சமூகம்' (The Pariah Problem: Caste, Religion and the Social in Modern India) என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம், 2014ம் ஆண்டு, கொலம்பியா பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.  இதன் இந்திய பதிப்பை 2015ல் நவயானா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  பறையா என்ற பெயர் தலைப்பில் இடம்பெற்றது, எத்தனை முகங்களை அறைந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இதை எழுதிய ரூபா விஸ்வநாத், மிக முக்கியமான சிந்தனையாளர் மற்றும் செயற்பாட்டாளர்.  என் நண்பர்.  தொடர்ச்சியாக சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்.  சமீபத்தில், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட போது, அது குறித்த உலக நாடுகளின் அறிஞர்கள், பேராசிரியர்களின் கண்டனக் குரலை ஒலிக்கச் செய்ததில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்.

அவருடைய ‘பறையா பிரச்சினை’ என்ற நூல் பல விதங்களில் நமக்கு முக்கியமானது.  (அது குறித்து விரிவாகப் பின்னர் எழுதுவேன்.)  நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ரூபாவின் புத்தகம் இன்னும் கூடுதல் தீவிரத்துடன் விவாதிக்கிறது.  

*****

இன்றைக்கு, சாதி குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும் நாம் கொண்டிருக்கக்கூடிய ஏராளமான முன்முடிவுகள் காலனிய காலகட்டத்தில் எவ்வாறு உருவாயின என்பதை ஆதாரபூர்வமாக விவரிக்கும் நூல் இது.  சாதிய மேல் - கீழ்  நிலைகள் இந்து சமய கருத்தாக்கங்கள் மட்டுமே என்ற யோசனை எவ்வாறு உருவாக்கப்பட்டது; அதனை உருவாக்கியவர்கள் யார்; சாதி பற்றிய உரையாடலில், சமூகம் என்பதும் அரசியல் பொருளாதாரம் என்பதும் வெவ்வேறு காரணிகள் என்ற கருத்து எவ்வாறு வலுப்பெற்றது; தலித்துகளை உயர்த்துவது, உயர்சாதியினரின் கடமை என்ற ‘சாதி பொறுப்புணர்வு’ எந்தச் சூழலில் உருவாக்கப்பட்டது; சாதி ஒழிப்பு, மிக நிதானமாக செய்யப்படவேண்டிய சமூக சீர்திருத்தம் என்ற யோசனையின் பின்னுள்ள அரசியல் என்ன என்பதையெல்லாம் இந்தப் புத்தகம் வரலாற்று பூர்வமாக விவரிக்கிறது.

தலித்துகளின் பின்னடைவிற்கான முக்கியக் காரணம்,  தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுவது போல கற்பிக்கப்பட்ட அசுத்தமோ, கல்வியற்ற நிலையோ, தீண்டாமையோ, அடிப்படை வாழ்வாதாரங்கள் இல்லாமையோ, ஒழுங்கற்ற சமய நடவடிக்கையோ, ஒழுக்கக் குறைபாடோ இல்லை, இவையனைத்தையும் உருவாக்கும் அரசியல் பொருளாதார சுயச்சார்பின்மை தான் என்பதை இருபதாம் நூற்றாண்டு பின்னைக் காலனிய இந்திய அரசு எவ்வளவு திறமையாய் தவிர்த்து வந்திருக்கிறது என்பதை விளக்கும் இந்நூல், இதன் பின்னணியில், தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான எந்தவொரு முன்னெடுப்பும் எவ்வாறு திட்டமிட்டு தகர்த்தெறியப்பட்டிருக்கிறது என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறது.

******

சாதி குறித்து நமக்கிருக்கும் பல்வேறு முன்முடிவுகளில் ஒன்று, அது நமது சிந்தனையையும், அன்றாட வாழ்க்கையையும் தீர்மானிக்கும் பண்பாட்டுக் காரணி என்ற விளக்கம்.  இதன் மூலம், ஒவ்வொரு சாதியும் ஒரு தனியான பண்பாட்டைக் கொண்ட இனக்குழு என்பது போன்ற சித்தரிப்பு முன்வைக்கப்படுகிறது.  தனியான சடங்கு முறைகள், பிரத்தியோக வாழ்க்கை வட்டச் சடங்குகள், தனித்துவமான நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்கள், பிரித்தறிய முடிகிற சிந்தனை முறைகள், உணவுப்பழக்கவழக்கங்கள், உடை முறைகள் இருப்பதாகச் சொல்லும் பேச்சு வழக்கு ஒன்று தமிழ்ப் பொது வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.  

ஆனால், இதை ஆதாரங்களோடு நிரூபிக்கிற மாதிரியான எந்தவொரு அறிவியல் பூர்வ ஆய்வோ அல்லது அதற்கான முயற்சியோ கூட நம்மிடம் இது வரையில் இல்லை.  ஆனாலும், இந்த முன்முடிவு, சரி பார்க்கப்பட்ட உண்மையைப் போல் மீண்டும் மீண்டும் விநியோகிக்கப்படுகிறது.  மிகச் சிறிய வட்டார வேறுபாடுகளை, அதுவும் உணவு, பேச்சு வழக்கு, போன்றவற்றில் மட்டுமே கொண்டு, ஆனால், மிகப்பரந்த அளவில் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் தொகுதியாகத் தான் நாம் இயங்கி வருகிறோமேயொழிய, தனித்தனியான சாதிப் பண்பாட்டுத் தீவுகளாக இல்லை என்பதே தொடர்ந்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  ஆனாலும், ஒரு நாட்டுப்புறக்கதையைப் போல, சாதிப் பண்பாடுகளால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்றொரு வழக்காறு நமக்குள்ளே தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது.

*****

சாதி, பொருளாதார லாபங்களை இலட்சியமாகக் கொண்ட ஒரு அரசியல் நிலைப்பாடு; அதாவது, அரசியல் பொருளாதார கருத்து நிலை.  அது நெடுங்கால சூதாலும், கூட்டுச் சதியாலும், உடலுழைப்பு குறித்த இழிந்த சிந்தனையாலும், பொதுவான மூடத்தனத்தாலும் செய்யப்பட்டிருக்கிறது.  

இந்த அரசியல் முழுக்க முழுக்க, இந்நாட்டின் வளங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமத்துவமற்ற உத்தி.   இந்த அநியாய உத்திமுறையை நியாயப்படுத்துவதற்கே பாரம்பரிய கதை மரபுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  

இந்தியத் தொன்மங்களின் ஒட்டுமொத்த வேலையும், இந்த அநியாய உத்திமுறை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் எழும் பகுத்தறிவு சார்ந்த கேள்விகளை, கடவுள் - சாங்கியம் - மரபு என்ற பெயர்களில் காப்பாற்றுவதாகவே இருக்கிறது.  இதனாலேயே ஒவ்வொரு சிக்கலான வரலாற்று தருணங்களிலும் தொன்மங்களை மீட்டெடுத்து நவீனப்படுத்தும் காரியம் சாதி அரசியலின் இன்றியமையாத வேலைத்திட்டமாக இருக்கிறது.  

நாயக்கர் கால ஆட்சியின் போது இங்கு குடியமர்த்தப்பட்ட புதிய குடிகளின் மூலம் ஏற்பட்டிருந்த சாதி அரசியல் மாற்றங்களிலிருந்து தன்னை புதுப்பித்துக் கொள்வதற்காக, இராமாயண - மகாபாரதக் கதைகளை பரப்புரை செய்யும் நாட்டுப்புறக்கலைகளை பராமரித்தது போல, இந்த இருபதாம் நூற்றாண்டில், உணவு உற்பத்தி முறைகளும் உற்பத்தி உறவுகளும் மாறத் தலைப்படும் இக்காலகட்டத்தில் மீண்டும் தொன்மங்களை பரப்புரை செய்யும் மின்னணுக் காட்சி வடிவங்களும் எழுத்து வடிவங்களும் உருப்பெறுவதை நாம் காணமுடியும்.

*****

சாதியை அரசியல் நிலைப்பாடு என்று விளக்குவோமானால், அதனை ஒருவர் மீறி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதாவது, ஒரு சாதி ஆள், தலித்தாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.  அவருக்குள், சாதியுணர்வு இன்னமும் ஒளிந்திருக்கிறதா என்ற சந்தேகத்திற்கு அவசியமே இல்லாத வகையில், அவர் தலித்தாக மாறி விட முடியும்.  ஆனால், அவர் அதற்கு இன்னுமொரு காரியத்தை செய்ய வேண்டும்.

தலித்துகளுக்கு, சாதி மறுக்கப்படுவதன் மூலம், எவ்வாறு ‘அரசியல் பொருளாதார உரிமைகள்’ மறுக்கப்பட்டிருக்கின்றனவோ அதே போல, தலித்தாக மாற விரும்புகிற நபர், தனது சாதி அடையாளம் வழங்கியிருக்கிற ‘அரசியல் பொருளாதார உரிமையை’ மறுத்து விட்டு வர வேண்டும்.  இவ்வாறு மறுப்பது, சாதி ஆட்களை, அவர்கள் ஆசைப்படுவது போலவே, முழுமையான தலித்தாக மாற்றிவிடுகிறது.  இந்த தேசத்தில் வழக்கிலுள்ள ‘அரசியல் பொருளாதார உரிமை’, சமத்துவமின்மை மீதே கட்டப்பட்டுள்ளது என்பதால், இந்த உரிமை மறுத்தலை எவ்விதத் தயக்கமுமின்றி நியாய ஆவேசத்துடன் செய்யலாம்.

சாதி ஆணை விடவும் சாதி பெண்ணிற்கு, இந்த உரிமையைத் துறந்து வருதல், எளிதாக இருப்பதற்கு, காரணம் சொல்ல வேண்டுமென்று அவசியமில்லை.  திராவிட தந்தை வழி நாடகத்தில், தந்தையும் தாய் மாமனுமே ஒட்டு மொத்த வசனத்தையும் பேசி விடுகிறார்கள்;  பெண்கள் அதிகபட்சமாக பின்பாட்டு பாடுகிறவர்களாகவும், மேடையிலேயே பார்வையாளர்களாகவும் அல்லது மேடை அலங்காரப் பொருட்களாகவுமே பணியாற்றுகிறார்கள்.  இதில் அசெளகரியம் அடையும் பெண்கள், காதலின் மூலமாக தங்களை தலித்தாக மாற்றிக் கொள்கிறார்கள்.  காதல், இந்த தேசத்துப் பெண்கள், பாரம்பரியமாய் கடைபிடித்து வரும், தலித்தாக மாறும் சூட்சுமம்.  இந்த உத்தி முறை சாதி ஆண்கள் விஷயத்தில் கதைக்கு உதவுவது இல்லை.  ஆனால், தலித்தாக மாறுவதை காதலாக மட்டுமல்லாமல் அரசியலாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

******

இந்த யோசனையை கேட்ட மாத்திரத்தில் இதற்கு வரக்கூடிய முதல் எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைத்துப் பார்க்கிறேன்.  ‘வக்கிரம்!’

‘தனக்கு ஒரு கண் இல்லை என்பதற்காக, அடுத்தவரையும் ஒரு கண்ணை தோண்டிக் கொள்ளச் சொல்வது என்னவொரு மனநிலை? வக்கிரம்!’  இவ்வாறு சொல்ல விரும்புகிறவர்களிடம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்.  தயவு செய்து இந்த ஒற்றைக் கண் உவமையை மாற்றி விடுங்கள்.  ரொம்பப் பழசாயிருச்சு. 

உண்மையில், தங்களுக்கு நெற்றியில் ஒரு விசேஷ கண் இருப்பதாய் நம்பிக்கொண்டு, அதற்கொரு கூலர்ஸூம் அணிந்து கொண்டு திரிகிற, இந்த தேசத்து சாதி ஆட்களிடம், ‘கூலர்ஸை கழற்றிவிட்டு வாருங்கள்' என்று மட்டுமே சொல்கிறேன்.

*****
இந்த தேசம், சாதி அடிப்படையில் வழங்கும், அரசியல் பொருளாதார உரிமையை மறுத்து, தங்களை தலித்தாக மாற்றிக் கொள்கிற நபர்கள் பெருகுவது பல வகைகளில் நமக்கு நன்மை தர முடியும்.  இவ்வாறு, சாதி உரிமையை மறுத்து வந்த பின்பு, சமத்துவ நோக்கில் அமைந்த புதிய அரசியல் பொருளாதார தளங்களை நாம் யோசிக்கவும் உருவாக்கவும் முயற்சி செய்யலாம்.  அதே நேரம், தலித்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இந்த தேசத்தின் பாரம்பரிய, ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய பகிர்வு முறையை மாற்றியமைக்கவும் ஒரு நாள் நம்மால் முடியலாம்.

Comments

//இந்த தேசத்துப் பெண்கள், பாரம்பரியமாய் கடைபிடித்து வரும், தலித்தாக மாறும் சூட்சுமம். இந்த உத்தி முறை சாதி ஆண்கள் விஷயத்தில் கதைக்கு உதவுவது இல்லை. ஆனால், தலித்தாக மாறுவதை காதலாக மட்டுமல்லாமல் அரசியலாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.//
இது மிகவும் ஏற்கப்படவேண்டிய, ஆனால் பலத்த எதிர்ப்பிற்குள்ளாகக்கூடிய புள்ளி. அதைப்போலவே 'சாதி' என்பதைத் 'தலித்' என்பதன் எதிர்மையாக கட்டமைக்கும் தங்கள் இந்த எழுத்து.... இது புதிய தொடக்கம். அதுவும் , அத்துடன் இதில் 'சாதி' மற்றும்'ஜாதி' எவ்வாறு வருகிறது என்பதுவும். மற்றொன்று...
" Paraiah... ! " நூல் பற்றியது. அதைக்குறித்து ஒரு activism தொடர்பாகப் பேச விரும்பினேன். இது சரியான தருணமாகப் படுகிறது. அந்தச் சொல்லும் சொல்லாடலும் அதன் சர்வதேசத் தன்மையும் எவ்வாறு அந்த நூலில் வருகின்றது என்பதை நான் பார்க்கவேண்டும் என்பது - முதல் நிபந்தனை... என்றபோதும்... அந்தச் சொல்லாடல் மற்றும் சொல் ஒழிப்பு தொடர்பாகவும் நாம் செயற்பாட்டினுள் வரவேண்டியிருக்கிறது.
//இந்த தேசத்துப் பெண்கள், பாரம்பரியமாய் கடைபிடித்து வரும், தலித்தாக மாறும் சூட்சுமம். இந்த உத்தி முறை சாதி ஆண்கள் விஷயத்தில் கதைக்கு உதவுவது இல்லை. ஆனால், தலித்தாக மாறுவதை காதலாக மட்டுமல்லாமல் அரசியலாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.//
இது மிகவும் ஏற்கப்படவேண்டிய, ஆனால் பலத்த எதிர்ப்பிற்குள்ளாகக்கூடிய புள்ளி. அதைப்போலவே 'சாதி' என்பதைத் 'தலித்' என்பதன் எதிர்மையாக கட்டமைக்கும் தங்கள் இந்த எழுத்து.... இது புதிய தொடக்கம். அதுவும் , அத்துடன் இதில் 'சாதி' மற்றும்'ஜாதி' எவ்வாறு வருகிறது என்பதுவும். மற்றொன்று...
" Paraiah... ! " நூல் பற்றியது. அதைக்குறித்து ஒரு activism தொடர்பாகப் பேச விரும்பினேன். இது சரியான தருணமாகப் படுகிறது. அந்தச் சொல்லும் சொல்லாடலும் அதன் சர்வதேசத் தன்மையும் எவ்வாறு அந்த நூலில் வருகின்றது என்பதை நான் பார்க்கவேண்டும் என்பது - முதல் நிபந்தனை... என்றபோதும்... அந்தச் சொல்லாடல் மற்றும் சொல் ஒழிப்பு தொடர்பாகவும் நாம் செயற்பாட்டினுள் வரவேண்டியிருக்கிறது.
Raja M said…
“சாதி, பொருளாதார லாபங்களை இலட்சியமாகக் கொண்ட ஒரு அரசியல் நிலைப்பாடு; அதாவது, அரசியல் பொருளாதார கருத்து நிலை. அது நெடுங்கால சூதாலும், கூட்டுச் சதியாலும், உடலுழைப்பு குறித்த இழிந்த சிந்தனையாலும், பொதுவான மூடத்தனத்தாலும் செய்யப்பட்டிருக்கிறது.”

என்ற வரிகள் தாம் இந்தக் கட்டுரையின் அடித்தளம் எனக் கருதுகிறேன். இதை ஒட்டி, உண்மையிலேயே ஒருவர் சாதியைக் கடந்த ஒருவராகக் கருதப்பட வேண்டுமானால், “தலித்துகளுக்கு, சாதி மறுக்கப்படுவதன் மூலம், எவ்வாறு ‘அரசியல் பொருளாதார உரிமைகள்’ மறுக்கப்பட்டிருக்கின்றனவோ அதே போல, தலித்தாக மாற விரும்புகிற நபர், தனது சாதி அடையாளம் வழங்கியிருக்கிற ‘அரசியல் பொருளாதார உரிமையை’ மறுத்து விட்டு வர வேண்டும்”

என்று கூறி உள்ளீர்கள். இந்தக் கூற்று, சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது.

முதலில், பிறப்பால் ஒரு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் தலித்தாக மாற விரும்புகிறார் என்றால், அவருக்கு அவர் சாதியால் கிடைக்கும் பிரத்யேகமான அரசியல்/பொருளாதார உரிமைகள் எவையெவை என்று எந்த அடிப்படையில் (நடைமுறை ரீதியில்) ஒருவர் கண்டறிவார்? நீங்களே உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டபடி, கல்வி/வேலை போன்றவற்றில் அரசியல் ரீதியாக நடைமுறையில் உள்ள சாதி சார்ந்த இட ஒதுக்கீடுகள், தலித்தாக மாற விரும்புவருக்கு, அவரது பிறப்பு சாதியில் இருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமான சலுகைகளை அளிக்கக் கூடுமன்றோ?.

அதுமாத்திரமின்றி, ஆதிக்கச் சாதியில் பிறந்த ஒருவர், சாதி சார்ந்து அவருக்குக் கிடைக்கும் அனுகூலங்களை, ஒருவர் தம் தனி மனித வாழ்க்கையில் வேண்டுமானால் மறுக்கலாம். அது ஒரு போற்றுதலுக்ககுரிய மகானின் வாழ்க்கையாக, ஆனால் அரசியல் ரீதியாக பொருட்படுத்தத் தேவையில்லாத ஒன்றாக இருக்கத் தான் இந்தியாவில் வாய்ப்பு அதிகம்.

இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள, ‘அரசியல் பொருளாதார ரீதியாக’, என்னென்ன தனிப்பட்ட சலுகைகளை சாதி வழங்குகிறது என்பது குறித்த தெளிவு வேண்டும். பெரும்பாலான வெள்ளையர்கள் வாழும் தேசங்களில் இருக்கும் கருப்பர்களுக்குச் சட்டரீதியான சமத்துவம் இருப்பதால் இனம் சார்ந்த பாரபட்சம் நடைமுறையில் இல்லை என்று வாதிடுபவர்களுக்கு எதிரான வாதத்தை “White Privilege” என்ற கருதுகோள் மூலம் சமத்துவத்தை வழிமொழிபவர்கள் முன்வைக்கிறார்கள். இத்தகைய கருதுகோள்களில் உள்ள உண்மையை, சமூக/கள ஆய்வுகளின் மூலம், நிருவவும் செய்கிறார்கள்.

உதாரணமாக, வேலை வாய்ப்புகளில் கருப்பர்களுக்கு இருக்கும் சமத்துவமின்மையைச் சுட்டிக் காட்ட, ஒரு பல்கலைக் குழு கீழ்க்கண்ட ஆய்வைச் செய்த்து. அவர்கள் வேலை கேட்டு அனுப்பப்டும் விண்ணப்பப்படிவங்களில், சில விண்ணப்பங்களில் வெள்ளையர்கள் சாதாரணமாக வைக்கும் பெயர்களையும் (கானர், ஸ்மித்), சில விண்ணப்பங்களில் கருப்பர்கள் சாதாரணமாக வைக்கும் பெயர்களையும் (லக்கீஷா, ஜமால்) பொய்யாக வைத்து அனுப்பினார்கள். மற்றபடி தகுதிகள் சமமாகத் தான் இருந்தன. வெள்ளையர்களின் பெயர்கள் கொண்ட விண்ணப்பங்கள், கருப்பர்கள் பெயர்கள் கொண்ட விண்ணப்பங்களைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள். இத்தகைய ஆய்வுகள், தொடர்ந்து செய்யப்படுவதால், தொடர்ந்து மக்களிடையே விவாதிக்கப்படுவதால், மிக, மிக மெதுவாக சமூக மாற்றம் நிகழ்கிறது.
... (2)
Raja M said…
... (2)

“சாதிப் பண்பாடுகளால் நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்றொரு வழக்காறு, ... எந்த அறிவியல் பூர்வ ஆய்வோ அல்லது அதற்கான முயற்சியோ கூட இல்லாமல்...” நம்மிடையே புழங்கி வருகிறது என்று நீங்கள் சாடியுள்ளது நியாயமானதே. அதற்கினையாக, சாதி அரசியல்/பொருளாதார ரீதியில் என்னென்ன சலுக்கைகளை வழங்குகிறது என்பது குறித்து திட்டவட்டமான தெளிவையளிக்கும் அறிவியல் பூர்வ ஆய்வோ அதற்கான முயற்சியோ கூட நம்மிடத்தில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இது என் அறியாமையாக இருக்கலாம், என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பொதுவெளியில் முன்வைக்கப்படும் பெரும்பாலான வாதங்கள் “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா”, என்ற ரீதியில் தான் இருக்கின்றன.

“சாதியைக் கடந்த” ஒரு சமூகம் இந்தியாவில் விளைய அடிப்படையில் சாதிப்பிரச்னையை ஒரு அரசியல்/பொருளாதார நிலைப்பாடாகக் கருத வேண்டும் என்பது புதியதா என்ன? இதன் அடிப்படையில் தானே, சாதி சார்ந்த சமத்துவமின்மையை ஒழிப்பதாகச் சொல்லி, இந்திய அரசியல் கோட்பாட்டில் சமத்துவக் கருத்துக்களும் (Articles 15 and 17), பின்னால் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளும் கைக்கொள்ளப்பட்டன? அந்தக் கொள்கைகளே, குறுகிய காலத்தில் சில பலன்களை அளித்தாலும், இந்தியச் சமூகத்தில் சாதி சார்ந்த அரசியலை இன்னும் வலுப்படுத்தி விட்டனவோ என்ற ஐயம் ஒவ்வொரு தேர்தலிலும், வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போதெல்லாம் எழுகிறதே.

“சாதியைக் கடந்த” ஒரு இந்தியச் சமூகம் உருவாகத் தேவையான அரசியல்/பொருளாதார நிலைப்பாடுகளைக் குறித்தத் தெளிவான புரிதல் முதலில் தேவை. அந்தப் புரிதலை உறுவாக்கும் பொறுப்பு இந்தியாவில் உள்ள அறிவுஜூவிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும், ஆய்வுக் குழுக்களுக்கும், சமூக ஆர்வர்லர்களுக்கும் உள்ளது. அந்தப் புரிதலின் அடிப்படையில் சமூக மாற்றத்திற்குத் தேவையான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறின்றி, “சாதி உரிமையை மறுத்து வந்த பின்பு , சமத்துவ நோக்கில் அமைந்த புதிய அரசியல் பொருளாதார தளங்களை நாம் யோசிக்கவும் உருவாக்கவும் முயற்சி செய்யலாம்.”, என்பது தனிமனிதர்களின் சாகசத்தை, மாற்றத்தைப் பற்றி யோசிப்பதற்கான ஒரு முன் நிபந்தனையாக வைப்பது போல இருக்கிறது.

Popular posts from this blog

இளையராஜாவை வரைதல் - 1

ஒன்று
‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 
‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.
‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.
‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி -  இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
*
‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.
வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.   
இந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை.   கொஞ்சம்…

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.  
அசுரன்ஒருநவயுகப்படம்.  அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.  இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி.  பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.  
திரைப்படவரலாற்றறிஞர்கள்இதைமறுக்கக்கூடும்.  ரொம்பகாலத்திற்குமுன்னாடியேஇது

இளையராஜாவை வரைதல் - 3

மூன்று
திரைப்படங்களில் காதல், பாசம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறோமே தவிர, அது ஆண்களின் காதல், ஆண்களின் பாசம் என்பது எல்லோருக்கும் தெரியும்.   பெண்களின் காதல் உணர்வுகளைப் பேசுகிற திரைப்படங்களோ அல்லது ராஜா பாடல்களோ இந்த உலகத்தில் இல்லை.
அதே போலத்தான், பாசமும். எல்லா ராஜா பாடல்களும் தாய்ப் பாசப் பாடல்கள் தான். அதுவும் கூட பெரும்பாலும் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள். சில நேரங்களில் இதைப் பாடுகிறவர்கள் பெண்களாக இருந்து உங்களைக் குழப்பக் கூடும். ஆனால், அவர்களும் கூட ஆண்களின் பாசத்தைத் தான் பெண் குரல்களில் பாடுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். 
ஆண்களின் காதல், ஆண்களின் தாய்ப்பாசம் என்று பயணத்தை ஆரம்பித்தால் போகிற வழியில் ஒரு புதைகுழி இருக்கிறது. அதற்கு உள-பகுப்பு-ஆய்வு என்று பெயர்.  காதலாவது பாசமாவது, இரண்டுமே ஒன்று தான் என்று நிரூபிக்க அது தயாராக இருக்கிறது. 
*
‘தமிழ்த் திரைப்படங்களில் தாய்ப்பாசம்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறவர்கள், இரண்டு வகைத் தாய்மார்களை நமக்கு அடையாளம் காட்ட முடியும். எம்ஜியார், சிவாஜி போன்ற மந்தமான ஆண்களின் வீரத்தை உசுப்பி விடும் தாய்மார்கள், ரஜ…