Monday, 27 June 2016

இன்னொரு வாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல? - சீமா செந்தில்


எல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது ? 
" தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது .
ஏன் நான் தலித்தும் அல்ல ?
தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல "போராட்டம் "முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன"
என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் . 
இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அருவத்தின் அழுகிய உடல். எத்தனை அளவு மூளைக்குள் அந்த அருவத்தின் அழுகல் அதிகப் படுகிறதோ அத்தனை அளவு தன்னை சமூகத்தில் மேன்மை கொண்டது என்று உரிமை கொள்கிறது . 
உடுமலை சங்கரின் படுகொலைக் காட்சியின் பதட்டத்தோடு தொடங்கும் இந்த ஆய்வுவெளி .....["இது அவநம்பிக்கைக் கடல் ...என்று எனக்குச் சொல்வார் யாரும் இல்லை . சொல்லியிருந்தால் படகை எடுத்திருக்கவே மாட்டேன் .அது இரத்தம் போல் பிசுபிசுப்பானது என்று கதையாகக் கூட யாரும் எழுதியிருக்கவில்லை' ] இனி திரும்பவே கூடாது என்ற தப்பித்தல் மனோபாவத்தில் கிராமத்தில் இருந்து வெளியேறும் சாதி மறுக்கப்பட்ட இளைஞனையும் .......அதே தப்பித்தல் மனோபாவத்தில் உடன் இணைந்து வெளியேறும் துணையாய் அவனைக் கருதும் சாதி வீட்டுப் பெண்களின் மன நிலையையும் .....
தலித் என்ற சொல்லின் வேர் ...அது பொதுவெளியில் புரிந்து கொள்ளப்பட்டதும் ...நிறுவப்பட்டதுமான நிலையின் பிறழ்வு .......[அது தனது கட்டமைப்பில் இருந்து தளர்ந்து அல்லது நீர்த்துவிட்டதா ?]
சாதி ஆட்கள் சாதியல்லாத தலித்தாக முனையும் போது அதன் அங்கீகாரம் குறித்த சந்தேகமும் போதாமையும் .......
தலித் இலக்கியம் யாரால் எழுதப் படலாம் .....அல்லது யார் எழுதுவது ?
அவ்வெளியில் இருந்து விலக்கப்பட்ட அல்லது கட்டாயமாக மறுக்கப்பட்ட இலக்கிய வகைமை எழுத்தாளர்கள் அல்லது நவீனர்கள்
"தங்களின் மற்றவர்களை "[இந்த தங்களின் மற்றவர்கள் என்ற பதம் முக்கியத்துவம் வாய்ந்தது ] எப்படிக் கைக்கொள்கிறார்கள் ? ...அதன் விளைவு என்ன ? 
தலித் என்பவர் விடுதலைக்கான போராட்டத்தில் .....இதில் இருந்து விடுபட வேண்டும் என்ற அடையாளத்தையும் ...விடுதலையின் இலக்கு எது என்ற இன்னொரு அடையாளத்தையும் நோக்கி ......இரு வேறு அடையாளங்களுக்குள் இயங்கும் சிக்கலையும் என இதுவரை நிலவி வரும் பொதுக் கருத்தோட்டத்தின் போதாமைகளை ...தரவுகள் ..ஒப்பீடுகள் ...வகைமைப் படுத்தல் .....இறுதியில் தன் தனித்ததான தீர்மானம் மொழிதல் என்று முற்றிலும் வேறு தளத்தில் இயங்குகிறது இந்நூல் .
பூர்வ பௌத்தர்களின்மீதான அழித்தொழிப்பில் ....கிளைத்தெழுந்த நொறுக்கப்பட்டவர்கள் என்ற பதம் கொண்ட தலித் என்னும் சொல்லாடல் ....அதன் "மூலம்" மறுக்கப்பட்டு எப்படி சாதி மறுக்கப்பட்டவர்களின் ஒற்றை அடையாளம் ஆகிறது என்பது தான்தவிர்க்க முடியாத வேதனை நிகழ்வாகிறது . 
போலவே .....ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வெளியேறும் நிகழ்ச்சி ...யாரிடம் இருந்து என்ற கேள்வியை தன்னகத்தே இயல்பிலேயே கொண்டிருக்கிறது .ஆதிக்க சாதிகளிடம் இருந்து என்றால் யார் ஆதிக்க சாதி ? ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் யார் ஒடுக்கப்பட்டவர்கள் ? உண்மையில் அறுதியான ஒரு பட்டியல் அப்படி நிலவுகிறதா ? ஒடுக்கப்பட்டவனிலும் ஒரு ஒடுக்கப்பட்டவன் என்ற பட்டியலின் இறுதி புள்ளி எது ?
முற்றிலும் தன் விலக்கம் செய்து கொள்ளும் ஒரு சாதியும் ....முற்றிலும் சாதி மறுக்கப்பட்ட இன்னொரு பிரிவும் எவ்வாறு சாதியமைப்பின் புறத்தே இருந்து கொண்டு ஆளுமை செய்வதும் ...அடக்கப்படுவதும் ? 
போலச் செய்தல்...திரும்பச் செய்தல் என்ற வடிவம் பெறுகையில் எவ்வாறு அது கலக உணர்ச்சி ஆகிறது ? 
தொன்மங்கள் ....நாட்டார் வழக்குகள் எவ்வாறு தெய்வமாக்கல் எனும் நிகழ்வு மூலம் ......தலித்துகளின் அடையாளத் துடைப்பு செய்கின்றன ?சாதிய படுகொலைகள் நீடிக்கும் போது தெய்வமாக்கல் இப்போது நிகழாமல் போனதின் ....அல்லது தெய்வமாக்கலின் மறதிக்கு பின்புலம் என்ன ?
இந்தக் கேள்விகள் மிக்க காத்திரமானவை . அதை இந்த நூல் அலசும் விதம் அலாதியானது மட்டுமல்ல .....ஆய்வுப் பூர்வமானது . 
கலகக்காரர்களின் கால்வழி மரபு எனும் கட்டுரையில் எம் எஸ் எஸ் பாண்டியன் அவர்களுக்கு அளித்திருக்கும் எதிர்வினை .... அயோத்திதாசரை அணுகவேண்டிய முறை குறித்தும் ....பெரியாரால் பேச முடிந்ததை ஏன் அவரது வழித்தோன்றல்கள் பேச முடிவதில்லை என்பதையும் அலசும் முறை நூலின் பின்னட்டையில் குறிப்பிட்டதை போல புதிய கண்களை திறந்து வைக்கக் கூடியவை .
எவ்வகையிலும் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவன் .......முகம் கொடுக்கவொண்ணா கொடூரங்கள் அரங்கேறும்போது ...எது தன்னை மறுக்கிறதோ ...எது தன்தனித்த அடையாளத்தை மறுக்கிறதோ ......அதையே வலிந்து பூண்டு கொண்டு
அதையே தன் அடையாளமாய் சொல்ல நேர்கிற அவலம் எதனால் என்று அறிய விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்கவும் ....நெஞ்சில் இருத்திக் கொள்ளவும் வேண்டியதாக ........தன் உட்செறிவில் நிலை கொள்கிறது இந்நூல் .
இந்நூலில் இருந்து மேற்கோள்களை சொல்லி எழுதவேண்டுமென்றால் அதுவே ஒரு சிறுநூலாகி விடும் ஆபத்து இருப்பதால் ஒற்றை மேற்கோளை சொல்லி இந்த மட்டிலும் விலகிக் கொள்கிறேன் .
"தலித்தாக மாறுவதை காதலாக மட்டுமல்லாமல் அரசியலாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் .
இந்த யோசனையைக் கேட்ட மாத்திரத்தில் இதற்கு வரக்கூடிய முதல் எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைத்துப் பார்க்கிறேன் .'வக்கிரம் '!
'தனக்கு ஒரு கண் இல்லை என்பதற்காக அடுத்தவரையும் ஒரு கண்ணை தோண்டிக்கொள்ளச் சொல்வது என்னவொரு மனநிலை? வக்கிரம்!' இவ்வாறு சொல்லல விரும்புகிறவர்களிடம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான் .தயவு செய்து இந்த ஒற்றைக் கண் உவமையை மாற்றி விடுங்கள் .ரொம்பப் பழசாயிருச்சு .
உண்மையில் தங்களுக்கு நெற்றியில் ஒரு விசேஷக் கண் இருப்பதாய் நம்பிக்கொண்டு அதற்கொரு கூலர்ஸும் அணிந்துகொண்டு திரிகிற , இந்த தேசத்து சாதி ஆட்களிடம் ,'கூலர்ஸை கழற்றிவிட்டு வாருங்கள்' என்று மட்டும் சொல்கிறேன் "
நன்றி . பேராசிரியர் தருமராஜ் அவர்களுக்கு .

Sunday, 26 June 2016

பெருஞ்சமூக வெறுப்பாளன்? - செல்வேந்திரனின் மதிப்புரை

பெருஞ்சமூக வெறுப்பாளன்? - செல்வேந்திரனின் மதிப்புரை


குளிர்ந்த காற்று சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனிய மாலையில் மிக ஆபத்தான புத்தகத்தைப் பற்றி பேச நாம் குழுமியிருக்கிறோம். மிகப் புராதனமானதும் கனம் தோறும் புதிய பரிமாணங்களைக் கொண்டு முன்னகர்வதும் எதிர் தரப்பு மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே அனுதியிருக்கக் கூடியதுமான ‘தலித்’ உரையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை மானுடவியல் சமூகவியல் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டவரும் இலக்கியத்தில் தேர்ந்த அறிஞரும் புனைவிலக்கியவாதியும் பேராசிரியருமான திரு.டி.தர்மராஜ் எழுதியிருப்பது எவ்வளவு ஆபத்தானது? இந்த நியாயமற்ற போருக்கு இந்த உரையாடலுக்கு முற்றிலும் புதியவனான நான் நண்பன் எனும் முறையில் அழைக்கப்பட்டிருக்கிறேன். 
சில மாதங்களுக்கு முன்பு கலை விமர்சகர் தீப்தா ஆச்சாரின் நேர்காணல் ஒன்று தி இந்துவில் வெளியானது. இந்திய நவீன ஓவியங்களின் உள்ளுறையும் கருப்பொருளும் உள்ளடுக்கும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டு காட்டுவதுதான் தலித் ஓவியங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லியின் சவி சவர்க்கர் மற்றும் நமது சந்ரு மாஸ்டரின் ஓவியங்களை இவ்வகைமையைச் சார்ந்தது என அவர் தெரிவித்திருந்தார். அறியாச் சிறுவனாகிய எனக்கு ‘தலித் ஓவியம்’ எனும் சொல்லாடல் ஒரு திடுக்கிடலைத் தந்தது. ஏற்கனவே தலித் இலக்கியம் எனும் பஞ்சாயத்தே இருபத்தைந்து ஆண்டுகளாகத் தீர்ந்திடாத நிலையில் இது என்ன புதுசாக தலித் ஓவியம். அதிலும் மிக ஆழமான உள்ளுணர்வு சார்ந்த வெளிப்பாட்டைக் கொண்ட சந்ரு மாஸ்டரைப் போன்ற மேதைகளை இப்பட்டியல் குறுக்கி விடாதா? தலித் ஓவியங்களைத் தொடர்ந்து தலித் கட்டடக்கலை, தலித் சிற்பம், தலித் சமையல், தலித் தையல் என புதிய வகைமைகள் உருவாகுமா எனும் கேள்விகளோடு சந்ரு மாஸ்டரை நோக்கி ஓடினேன்.
அதுவும் ஒரு இனிய மாலை. அவரும் நானும் விவாதிக்க ஆரம்பித்தோம். நான்தான் இலக்கியக் கோட்டி ஆயிற்றே. பேச்சு ‘தலித் இலக்கியங்களை யார் எழுதலாம்’ எனும் பண்டார வன்னியன் காலத்துப் பழைய விவாதத்திற்குப் போயிற்று. நான் பூமணியின் பிறகு, ஜெயமோகனின் வெள்ளை யானை போன்ற நாவல்களை முன் வைத்து அவரோடு வாதிட்டுக் கொண்டிருந்தேன். அவர் பிறிதொருவர் புலன்களுக்குத் தட்டுப்படாத தலித் வாழ்வின் நுண்ணிய சிக்கல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். விவாதம் விரிந்து கொண்டே இருந்தது. அவர் பேசப் பேச நான் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் கவனமாக தலித் அல்லாதவர்களை தலித் உரையாடலிலிருந்து அப்புறப்படுத்துகிறீர்கள் என்றேன். சமூக மனிதனாக எனக்கு பெண்ணூரிமை, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், பேரினவாதம் இன்ன பிற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இருக்கும் உரிமை சமூக நீதியைப் பற்றிப் பேசவும் உண்டு என்றேன். விவாதத்தின் ஒரு கட்டத்தில் நான் முன்னெப்போதும் கேட்டிராத ஒரு கடுத்த வார்த்தையை உதிர்த்து ‘நீங்க யாருடா இந்தப் பிரச்சனைகளைப் பேசுறதுக்கு.. ஏன் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க பேசிக்கிட மாட்டமா.. நீங்க சரியில்லைங்கறத தொடர்ந்து உக்கிரமா சொல்லிக்கிட்டே இருக்கறதும் எங்க செயல்பாட்டோட ஒரு பகுதிதான்.. நீங்க அத கேட்டுத்தாண்டா ஆகணும்’ என்றார். நான் காயடிக்கப்பட்டதைப் போல உணர்ந்தேன். ஒரு விவாதத்திலிருந்து இதைப் பேசும் தகுதி உனக்கில்லையென நான் முதன் முறையாக வெளியேற்றப்பட்ட தருணம் அது. இதை இங்கே பகிர்வதன் நோக்கம் சந்ரு மாஸ்டரால் நான் அவமதிக்கப்பட்டேன் என்பதைச் சொல்வதற்காக அல்ல. நம்முடைய குருமரபிலும் இன்றைய கார்ப்பரேட் நிர்வாக முறையிலும் அவமதிப்பு என்பது ஒரு முக்கியமான கற்றுக்கொடுக்கும் முறை. சில விஷயங்கள் அவமதிப்பு இல்லாமல் மூளைக்குள் ஏறாது. 
எனது நண்பர்களின் காதல் விவகாரங்களில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அவ்வப்போது எனக்கு நேரும். அத்தகு விவகாரங்களில் மிகுந்த சிக்கலானது ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இஸ்லாமிய பெண்ணை காதலித்து விடுவது. இந்த காதல்களுக்காகப் பரிந்து பேச போகும் தருணங்களில் பெண் தரப்பில் பெரும்பாலும் வன்முறையோ எதிர்ப்போ சிறிதும் இருக்காது. மிக அமைதியாக மிக உறுதியான குரலில் ‘நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிர்ப்பில்ல தம்பி.. பையனை முஸ்லீமா மாறச் சொல்லுங்க.. பொண்ணைத் தர்றோம்’என்பார்கள். தலித் அல்லாத ஒருவனுக்கு தலித் உரையாடலில் இடம் இல்லை என்பதும் கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒன்றுதான். ஆம் தலித் உரையாடல் ஒரு மதமாகிப் போய்விட்டது. அங்கே வேற்று மதத்தினருக்கு இடமே இல்லை என குழப்பத்துடன் அன்றிரவு உறங்கிப் போனேன்.
டி.தர்மராஜின் நாஎத அல்ல நூல் இந்தக் குழப்பங்களைத் தீர்க்கும் என நினைத்தால் அது ஏராளமான துணைக் கேள்விகளின் மூலம் இந்தக் குழப்பத்தை மேலும் தீவிரமடையச் செய்கிறது. தலித் எழுத்தை தலித் அல்லாதோர் எழுதக்கூடாதோ என்றால் ஏன் செட்டியார் இலக்கியத்தையோ வெள்ளாளர் இலக்கியத்தையோ அவர்கள் அல்லாதோர் எழுதக்கூடாதா எனும் கேள்வி ஏழவில்லை? இது அத்தகைய அடையாளங்களால் உருவாகும் ஆதாயங்களை மனதில் வைத்து எழுப்பக் கூடிய பண்டார வாதம் என்கிறார். அரசியல் பொருளாதார லாபங்களைத் துறந்து தலித் வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொள்ள முன்வரும் முன்மாதிரியற்ற ஒரு செயல்திட்டம் பேராசிரியரால் முன் வைக்கப்படுகிறது. திகைப்பூட்டும் அந்த முன் வடிவம் மேலதிக விவாதங்களுக்கு வழிகோலுவதாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை எனும் கட்டுரை இத்தொகுதியின் மிக முக்கியமான சுவாரஸ்யமான ஒரு கட்டுரையாகப் படுகிறது. நாலாபுறமும் மாட்டுக்கறி வரலாற்றை அலசி கடைசியில் அவற்றை சமைப்பதில் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நுண்ணிய அசூயையும் அதை சமைக்க நமக்குத் தெரியாது என்பதுமே ஒத்துக்கொள்ளக் கூடிய காரணங்களாக இருக்கின்றன. ஒரு பெரும் புனைவுக்குரிய தன்மைகளுடன் நாற்புறமும் விரியும் கட்டுரை. அதனுள்ளே அவரது சின்னாத்தாளின் காதல் சரிதம் ஒரு சிறுகதையாக இருக்கிறது. விரித்து நாவலாக எழுதும் சாத்தியமுள்ள ஜெ.என்.யூவின் மாயக்கவர்ச்சி சூழல் இருக்கிறது. 
மெட்ராஸ் திரைப்படத்தை அதன் திரையாக்கத்திற்காக திரைக்கதை பயிலும் மாணவனாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நுண்ணிய உள்ளடுக்குகளை டி.ஆர் அவிழ்க்கும் முறைமை ஆச்சர்யம் தருகிறது. எவ்வளவு விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பது புரிகிறது. 
இந்த நூலை நான் பல இடங்களில் வைத்து வாசித்தேன். அலுவலக மேஜையில், பேருந்தில் பயணிக்கையில், ரயிலில், பைக்கை மெக்கானிக்கிடம் கொடுத்து விட்டு காத்திருக்கையில், உணவுக்காக ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கையில் - ஒரு நூலை ஒரு அமர்வில் வாசிக்கும் வாழ்க்கை முறையும் இல்லை - அதற்குரிய பொறுமையான பயிற்சியும் இல்லை என்பதால் - இந்த நூலின் அட்டையைப் பார்த்து சிறிய திடுக்கிடலுடன் மின்னும் கண்கள் அப்புறம் என்னை இயல்பானவனாக நடத்த முடியாத தடுமாற்றத்திலிருந்தே இந்நூலையும் இது பேசும் சிக்கல்களையும் எளிதாகப் புரிந்து கொள்கிறேன். கடந்த ஒரு வார காலமாக இந்தப் புத்தகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்நூலையும் என்னையும் சேர்த்துப் பார்க்கும் சிலர் மெள்ளத் தயங்கியபடி சுற்றி வளைத்து கேட்க விரும்பும் கேள்வி ‘நீ ஒரு பறையனா?’ என்பதே. அதை நான் புரிந்து கொள்கிறேன். சிலருக்கு அதிரடியாக நான் பறையன் அல்லது பறையன் இல்லை எனும் பதில்களில் எது உங்களுக்கு ஆத்மதிருப்தியளிக்கும் என திருப்பிக் கேட்டேன். 
பொருளாதார முன்னேற்றம் இந்த சிக்கல்களைத் தீர்த்து விடுமா என்றால் அதற்குரிய வாய்ப்பே இங்கு மறுக்கப்படுகிறது என்கிறார். அரசியல் அதிகாரம் இச்சிக்கலைக் குறைக்குமா என்றால் அதற்குரிய முன்னுதாரணமே உலகம் முழுக்க இல்லை என்கிறார். கல்வியில் முன்னேறி அறிவுப்புலத்தைக் கைப்பற்றினால் மாறிவிடுமா என்றால் நானே ஒரு முன்னுதாரணமென நகைக்கிறார். இலக்கியம் மாற்றுமா என்றால் இருபத்தைந்து வருட தலித் இலக்கியம் ஒரு முட்டுச் சந்தில் பரிதாபகரமாக தவிக்கிறது என்கிறார். சினிமாவா என்றால் இப்போதுதான் மெட்ராஸ், பன்றி, சாய்ரத் என உரையாடலே துவக்கியிருக்கிறது என்கிறார். இந்நூல் எவ்வகையிலும் பிரச்சனைகளுக்கான தீர்வு நூல் அல்ல. இந்தப் பத்துக் கட்டுரைகளின் மூலம் மீண்டும் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார், நீண்ட நெடிய தலித் விவாதங்களில் ஒரு தவிர்க்க இயலாத தரப்பாக இந்த நூலை மாற்றியிருக்கிறார். அந்த வகையில் இந்நூல் தலித் அல்லாதவர்களும் வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
இந்நூலில் திடுக்கிட வைக்கிற அல்லது மேலதிக விவாதங்களைக் கோருகிற நிறைய்ய துணை விஷயங்கள் உள்ளன. ஒரு நூல் வெளியிட்டு விழாவில் அத்தனைக்கும் ஆசிரியனிடமிருந்து தெளிவை எதிர்பார்த்துக்கொள்ள இயலாதுதான். உதாரணமாக சிலவற்றை மட்டும் இங்கே கேட்கலாமென தோன்றுகிறது.
1. ஒடுக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் சமத்துவம் பேணப்படும் என்கிறார். அரசியல் அதிகார தளத்தில் நிறுவன தளங்களில் நமக்கு இதில் எந்த முன்மாதிரியும் இல்லை.
2. கைசிக நாடகத்தின் மீட்புருவாக்கம் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த விஜயநகரத்தை மீட்புறுவாக்கம் செய்வதே - வெளிப்படையான பிராமண திரட்சியை உருவாக்குகிறது என்கிறார். அனைத்து கலைகளும் சடங்கிலிருந்தே துவங்குகிறது என்றால் சடங்கு கோலோச்சிய கலைகளை மீட்புருவாக்கம் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியின் ஆபத்து திகைப்பை உருவாக்குகிறது. மெலட்டூர் பாகவத மேளாவிலிருந்து பேட்டையில் கணியான் ஜாதியினர் நிகழ்த்தும் மோகனம் வரை இந்த லாஜிக்கை பொருத்திப் பார்த்தால் எந்த கலையையும் போஷிக்க வேண்டிய தேவையென்னவாக இருக்க முடியும்? 
இந்த நூலின் மொழிநடை மயக்கமூட்டுவது. புனைவிலக்கியவாதிகள் கூட பயன்படுத்தியிராத பல புதிய உத்திகளை கட்டுரையாக்கத்தில் பயன்படுத்துகிறார். அதுவே நெடும் கட்டுரைகளை வாசிக்கும் அயற்சியிலிருந்து நம்மை மீட்கிறது. ஆணவக்கொலை போன்ற நிம்மதியிழக்கச் செய்யும் விவகாரங்களைக் கூட சமநிலை இழக்காமல் லும்பன் மொழிக்குத் தாவாமல் பதட்டமோ கோபமோ அச்சமோ சுயபச்சாதபமோ அல்லது நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசரமோ இல்லாமல் கூட ஒருவரால் எழுத முடியும் என்பதே சூழலின் ஆச்சர்யங்களுள் ஒன்று. சங்கர் படுகொலை வீடியோ கலப்புத் திருமணம் செய்த இரு வலுவான இடைநிலை மற்றும் மதங்களைச் சார்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து உடைத்து நொறுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவனாக என்னுள் உருவாக்கிய சமநிலைக் குலைவை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் ஒரு பைத்தியத்தைப் போல அரற்றிக்கொண்டும் சொந்தத் தம்பியை இழந்த துக்கத்திலும் தலித் தலைவர்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆவலுடனும் நான் இருந்தேன். ஆனால், டிஆரின் அந்தக் கட்டுரை ஒரு சிந்தனையாளராக அவரது இடம் தமிழில் எத்தகையது என்பதைக் காட்டியது. 
நூலை வாசித்து முடித்த பின் புதிய குழப்பங்கள் தரும் ஆயாசத்துடன் மீண்டும் இந்த வரிகளை வாசித்துக் கொண்டேன். கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் பேசியிருக்கக் கூடிய பொதுவுடைமை சித்தாந்ததங்கள் பகுத்தறிவுக் கொள்கைகள் தீவிர கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்று விட்டன என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியா? 
இந்த ஆபத்தான நூலில் தர்மராஜ் எழுப்பும் கேள்விகளை அவரது விவாத கருவிகளைக் கொண்டு சுயமாக எழுப்பிப் பார்த்தால் நான் ஒரு வாணியச் செட்டியாரும் இல்லை.. ஒரு நாடாரும் இல்லை.. ஒரு போயரும் இல்லை..கிறிஸ்தவனும் இல்லை.. இந்துவும் இல்லை.. இந்தியனும் இல்லை.. தமிழனும் இல்லை.. இப்போதைக்கு நான் ஒரு பெருஞ்சமூக வெறுப்பாளன் மட்டுமே. இதையும் கூட டிஆர் நாளைய விவாதத்தில் உடைத்து ஏறியக் கூடிய சாத்தியம் உண்டு.
தர்மராஜிற்கு என் வாழ்த்துக்களும் அன்பும். 
(25/06/16 அன்று நெல்லையில் நடந்த ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)

Saturday, 25 June 2016

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் வெளியீட்டு விழாஅழைப்பு, திருநெல்வேலி

திருநெல்வேலியில் காற்றடிகாலம் தொடங்கி விட்டது.

காற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது.  ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை?), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது.  மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   'குத்தாலத்துல தண்ணி விழுதாமா?' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது.

குத்தால சீசன் திருநெல்வேலி பற்றி  ஏன் யாருமே நாவல் எழுதவில்லை?

நான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது.  இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா.

கவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள்.

மாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது.  இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.Friday, 17 June 2016

நான் ஏன் தலித்?

அன்புள்ள டி. தருமராஜ்,

சென்னை புத்தகக் காட்சியில் ‘நான் ஏன் தலித் அல்ல?’ புத்தகத்தை வாங்கினேன்.  உங்களது வாதம், பெரும் சங்கடத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது.  ஆணவக் கொலைகள் பற்றிய கட்டுரை (அது கட்டுரை இல்லை கட்டுரைகள்) பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது.  இப்பொழுது தான், ‘நான் ஏன் தலித் அல்ல?’ என்ற கட்டுரையை வாசித்து முடித்தேன்.  இந்தக் கட்டுரைக்கும் உங்களது ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கும் பெரிய பாய்ச்சல் நடந்திருக்கிறது.  அந்தப் புத்தகத்திற்கு நீங்கள் எழுதியிருந்த முன்னுரை எனக்கு நினைவில் இருக்கிறது.  என்னைக் கேட்டால், அதை இந்தப் புத்தகத்தின் முதற்படி என்று சொல்வேன்.  அதை வாசித்திருந்தாலே இப்பொழுது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும் என்றும் நினைக்கிறேன்.  துரதிர்ஷ்டவசமாக அந்தப் புத்தகம் இப்பொழுது எனக்குக் கிடைக்கவில்லை.  அதன் மின் வடிவம் கிடைத்தால் வசதியாக இருக்கும்.  முடிந்தால் அனுப்பித் தாருங்கள்.  அல்லது கிடைக்குமிடத்தை சொன்னால் கூட போதும்.

சிவமணி பார்த்திபராஜாஅனுபுள்ள சிவமணி பார்த்திபராஜா, 

2003ல் வெளிவந்த ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கான முன்னுரையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன்.  உண்மை தான், அந்த முன்னுரையை, இன்றைய சூழலில், ‘நான் ஏன் தலித்?’ என்றும்  தலைப்பிட்டு வாசிக்கலாம்.  அந்தப் புத்தகத்தின் மின் வடிவம் தயாரிக்கப்படவில்லை.  அந்தப் புத்தகமும் அச்சில் இல்லை.  அதன் மேம்படுத்தப்பட்ட அச்சு வடிவம் தயாராகிக் கொண்டிருக்கிறது.  அயோத்திதாசர் பற்றிய முழுமையான நூலாக அது தயாராகி வருகிறது.  கிழக்கு பதிப்பகம் மூலமே அதுவும் வெளிவரும்.

இதற்கிடையே, உங்களது தேவையைக் கருதி, அந்த முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டிலும் இங்கே தனியாக தந்திருக்கிறேன்.

‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ புத்தகம் உங்களுக்கு பிடித்திருக்கிறது குறித்து மகிழ்ச்சி.  முழுமையாகப் படித்து விட்டு உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

டி. தருமராஜ்

*****************


(‘நான் பூர்வ பெளத்தன்' முன்னுரையிலிருந்து…)

எழுதுவதற்கான காரணங்கள் குறித்து ஏராளமாய் பேசப்பட்டுள்ளன. நிறைய பேருக்கு எழுத்து ஒரு கலை. சிலர் எழுதுவதன் மூலம் யோசிக்க விரும்புகிறார்கள். எழுதினால் மட்டுமே சிலருக்கு மன அமைதி கிடைக்கிறது. எழுத்து இன்னும் சிலருக்கு முகவரி போல.  இதற்கெல்லாம் அப்பால், ஆத்ம விசாரணையை மேற்கொள்வதன் மூலம், கடந்த காலக் குற்ற ஞாபகத்திலிருந்து விடுதலையடையும் உத்தியாகக் கூட ‘எழுதுதல் அறிவுறுத்தப்படுகிறது.
பல நேரங்களில் எழுத்து உணர்வுகளின் குவியலாகக் கற்பனை செய்யப்படுகிறது. அது, தன்னை வாசிக்கிறவர்களுக்குப் பல்வேறு வகையான உணர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது. ஒரு எழுத்து தரக்கூடிய உணர்வைப் பொறுத்தே அவ்வெழுத்தும் தரப்படுத்தப்படுகிறது. அழுகையை அல்லது அதற்கு நிகரான மன இறுக்கத்தைத் தோற்றிவிக்கும் எழுத்தையே முதல்தரமான எழுத்து என்று ஒப்புக்கொள்ளும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. 
எழுத்து, ஓர் வாகனத்தைப் போல் செயல்பட வேண்டுமென்று சிலர் கருதுகிறார்கள். அது, வாசகரை வேறொரு தளத்திற்குத் தூக்கிச் செல்வது இன்றியமையாதது என இவர்கள் வாதிடக்கூடும். 
ஆனால், எழுத்து பற்றிய ஒரு தலித்தின் பார்வை இவற்றிலிருந்து மாறுபட்டதாகவே அமைந்திருக்கிறது.
****************
‘எழுத்து பரவலாக்கப்பட்டதும், எழுதப்பட்ட செய்திகளையெல்லாம் படிக்க முடிகிற ஒரு தலித், தன்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அவதூறுகளையே முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனை விதமான அவதூறுகள்!
சிலவற்றைப் பார்த்த மாத்திரமே புரிந்து கொள்ள முடிகிறது - அவை சேற்றை வாரி இறைக்கின்றன! 
வேறு சில எழுத்துக்கள் பாசாங்கு வகை. உங்களுக்கு ஆதரவாய் பேசுவது போல நடித்துக் கொண்டே உங்கள் காலை இடறிவிடக் கூடியது. 
தன்னைப் பற்றிய அசிங்ககளையும், வசைகளையும், அநீதியான சித்தரிப்புகளையுமே பார்க்க முடிகிற தலித், அவற்றிற்கு எதிரான தனது நியாயங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை அடைகிறான். எழுத்து முறையை அவன் தேர்ந்தெடுப்பது என்பது இல்லாமல், ஒரு வகையான எழுத்து முறை அவனைத் தேர்ந்தெடுக்கிறது. அதாவது அவதூறுகளுக்கு எதிரான எழுத்து முறை.
****************
இந்த உலகில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் எதுவும் பேசமுடியும் - கடவுளும், தீண்டத்தகாதவனும்.
இவ்விருவர் பற்றியும் நீங்கள் விதவிதமாகக் கற்பனை செய்ய முடியும். 
இவர்களை விலங்குகள் போல் யோசிக்கலாம்; பெண் பித்தர்கள் என்று சித்தரிக்கலாம்; கேலி செய்யலாம்; இவர்களைக் கருவியாய்க் கொண்டு உங்களது எதிரிகளை வதம் செய்யலாம்; சில தருணங்களில் செருப்பால் கூட அடிக்கலாம். இப்படி, கடவுளைப் பற்றியும் தீண்டத்தகாதவர்களைப் பற்றியும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பூரண கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் கடவுளைக் காப்பாற்றுவதற்காக வரலாறு நெடுகிலும் பல்வேறு இயக்கங்கள் பாடுபட்டிருக்கின்றன. இயக்கங்களையும் தாண்டி இன்று அரசியல் கட்சிகளும் கூட கடவுளைக் காப்பாற்றுவதற்காக வரிந்து கட்டுவதைப் பார்க்கிறோம். இந்தச் சூழலில், நினைத்தையெல்லாம் பேசக்கூடிய ஒரே விஷயமாக உங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.
நீங்கள் இவர்களை விதவிதமான பெயர்களில் அழைக்கலாம், நீங்கள் கோபமாக இருந்தால், அவர்களைப் புலையன் என்றோ சண்டாளன் என்றோ சொல்லுங்கள். கோபமில்லாமல், உங்கள் மனதில் வெறுப்பு மட்டும் மண்டியிருக்கிறது என்றால் அவர்களைப் பஞ்சமன் என்று அழைத்துப் பார்க்கலாம். ஆன்மீகத்தில் திளைத்து, உங்களுக்கென ஒரு புனித பிம்பத்தை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் என்றால், அவர்களை ‘ஹரிஜன் என்று அழையுங்கள். ஒருவேளை நீங்கள் பேச்சளவில் ஜனநாயகத்தை வலியுறுத்துகிறவராய் இருக்கலாம். அப்படியானால் அவர்களைப் ‘பட்டியல் சாதிகள் என்ற அர்த்தத்தில் எஸ்.சி. என்று சொல்லுங்கள், அல்லது ‘அடிமட்ட சாதிகள் என்று சொல்லுங்கள்.
  வன்மத்துடன், ஊணில் தைக்கிறதைப்போல அவர்களைப் பேசவேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்படலாம். (அவ்வாறு தோன்றுவது இயற்கையும் கூட! இப்படியெல்லாம் உங்களுக்குள் தோன்றினால், நீங்கள் முழு சுவாதீனத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.) இது போன்ற ஆவல் உங்களுக்கு ஏற்படுகையில், நீங்கள் தாராளமாய் அவர்களை பள்ளப்பயலே என்றும், பறப்பயலே என்றும்,  சக்கிலியப் பயலே என்றும் அழைக்கலாம். இவ்வாறு சொல்வதற்கு நீங்கள் கொஞ்சமும் கூச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்புவதாய் நமது பாரம்பரியமிக்க புனித நூல்கள் குறிப்பிடுகின்றன.
இன்னும் நீங்கள் பல்வேறு விஷயங்களைப் பேச முடியும் . உதாரணமாய் சுகாதாரம் பற்றிய அக்கறையை நீங்கள் வெளிப்படுத்த விரும்பலாம். அப்படியானால் நீங்கள் தாராளமாய் ‘அசுத்தமானவர்கள் என்று இவர்களை உதாரணம் காட்ட முடியும். இல்லை, நீங்கள் பெருகி வரும் மக்கள் தொகையைப் பற்றி யோசிக்கிறவராய் இருக்கலாம். பன்றிகளைப் போல் குழந்தைகளைப் பெற்றுத்தள்ளும் மக்கள் கூட்டத்தைக் குறிக்க நீங்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒழுக்கத்தின் மேன்மையைப் பேசுகையில், ஒழுக்கமின்மையின் சின்னமாக இவர்களைச் சித்தரிக்கலாம். உங்களுக்குத் திடீரென்று சமூகசேவை செய்யும் விருப்பம் தோன்றியிருக்கலாம். அவ்வாறு தோன்றுகையில் நீங்கள் இவர்களுடைய குடியிருப்புகளுக்குச் சென்று குழந்தைகளைத் குளிப்பாட்டுங்கள்; கழிவுநீர்க் கால்வாய்களின் அவசியத்தைப் பற்றி பேசுங்கள் ; குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டிய  அவசியத்தை வலியுறுத்துங்கள்; மனிதர்களும் வீட்டு விலங்குகளும் வெவ்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய தேவையைச் சொல்லுங்கள்;  இரவு நேரங்களில் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடல்கள் மூலம் கல்வி போதியுங்கள். இப்படியே நீங்கள் உலகம் அறிந்த சமூக சேவராக மாற முடியும்.
‘தீண்டத்தகாதவர்களான இவர்களை மூலதனமாகக் கொண்டு நீங்கள் இன்னும் பல்வேறு அவதாரங்களை எடுக்க முடியும். சாதியத் தளைகளிலிருந்து இம்மக்களை விடுவித்து பொன்னுலகம் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதாக நீங்கள் தாராளமாய் வாக்குறுதி கொடுக்கலாம். உங்களையும் உங்களது வாக்குறுதிகளையும் நம்புவதற்கு இம்மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். உங்களைப் போன்ற சாயலுடன், நீங்கள் பேசும் அதே விஷயங்களைப் பேசிக் கொண்டு மகாபுருஷர்கள் வருவார்கள் என்ற பழங்கதைகள் அவர்களிடம் உள்ளன. உங்களது தலைமையின் கீழ் இம்மக்களைத் திரட்டுவதன் மூலம் நீங்கள் சமூகப் பேராளியாக உருமாற்றம் அடையமுடியும்.
போராளியாக விரும்பாதவர்கள் ‘அறிஞர்களாக மாற முயற்சிக்கலாம். முன்னதைக் காட்டிலும் இது இன்னமும் எளிதானது. ஏதாவதொரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ஆய்வு நிறுவனம் சார்ந்து நீங்கள் ‘அறிஞராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வேறெந்தவொரு பொருளைப் பற்றிய ஆராய்ச்சியைக் காட்டிலும் இம்மக்களைப் பற்றிய ஆராய்ச்சியைச் செய்வது சுலபத்திலும் சுலபம். ஏதாவதொரு ‘தீண்டத்தகாத கிராமத்தைச் தேர்ந்தெடுத்து நீங்கள் ஆய்வை மேற்கொள்ள முடியும். அவர்களது சமுதாய நிலை, நாட்டுப்புறச் சங்கதிகள், தெய்வங்கள் என்று ஏதாவதொரு தலைப்பில் நீங்கள் அறிஞராகிவிட முடியும்.
இதுவும் கசக்கிறது என்றால், நீங்கள் ‘சீர்திருத்தவாதியாக மாற முயற்சிக்கலாம். சமூகச் சீர்திருத்தவாதியாக மாறுவதற்கு இம்மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று சாதியின் கொடூரத்தன்மைகள் குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்யலாம். அல்லது நீங்கள் சமய சீர்திருத்தவாதியாக மாற முடியும். இந்து சமயம் தீண்டத்தகாதவர்களை எவ்வாறெல்லாம் ‘விரட்டியடித்து. அதனால் அவர்களில் பலர் எப்படியெல்லாம் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ‘திறந்திருந்த கோவில்களில் தஞ்சம் அடைந்தனர் என்ற கற்பனைகளைப் பரப்பி இந்து சமய சீர்திருத்தத்திற்குப் பாடுபடலாம்.
இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன என்றாலும், நீங்கள் ‘தீண்டத்தகாதவனைப்' பற்றி பேசுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
நீங்கள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிற ‘தீண்டத்தகாதவர் தம்மை ‘தலித் என்று புரிந்து கொள்ளும் சமயத்தில் உங்களுக்கு வருகிறது ஆபத்து. 
அதன்பின், மனம் போனபடி பேசவும், எழுதவும் உங்களால் முடிவதில்லை. வெவ்வேறு தோரணைகளில் நீங்கள் செய்வது அனைத்தும் தூற்றுதலே என்பதைத் தலித் புரிந்து கொள்கிறான். நீங்கள் வரலாற்றைப் பொய்யாகத் திரிக்கிறீர்கள் என்பதை அவன் அறிகிறான். 
இறுதியாக, ‘தீண்டத்தகாதவர்கள் குறித்தும் விருப்பம் போல பேசவோ எழுதவோ முடியாத அவலநிலையை நீங்கள் அடைந்துவிடுகிறீர்கள். மீறியும் நீங்கள் எழுதும் பொழுது, அவர்கள் தலித்தாக நின்று உங்களை மறுக்கத் துவங்குகிறார்கள்.
‘தீண்டத்தகாதவர் பற்றி எதையும் எழுத முடியாத, ‘கருத்துச் சுதந்திரம் பறிபோன உங்களுடைய் நிலையைக் காட்டிலும் தலித்தென தன்னை உணர்ந்தவனின் வலி ஆழமானது என்பதை உங்களோடு சேர்ந்து பலரும் யோசிக்க மறுக்கிறார்கள். ‘எழுதுதல் என்பது பலருக்கும் விதவிதமான நோக்கங்களை உடையதாய் அமைந்திருக்கிறது. ஆத்ம விசாரணை, உண்மையை உணர்தல், எழுத்தின் தொன்மத்தை ஊடுருவுதல், சூட்சுமத்தை அறிதல், வாழ்க்கையாக மாற்றுதல், நிலைபேற்றை அடைதல், அகத்தூய்மையை வேண்டுதல் எனப் பல்வேறு காரணங்கள் உங்களுக்கு இருக்க முடியும்.
ஆனால், ஒரு தலித்தின் எழுத்து, அவன் மீது வாரி இறைக்கப்பட்ட அவதூறுகளை அகற்றுதல் என்பதையே செய்ய வேண்டியிருக்கிறது. தான்தோன்றித்தனமாக எழுதப்படும் பல்வேறு விஷயங்களை அவன் கூர்மையாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எந்தத் தோற்றத்தில் பதுங்கியிருக்கிறீர்கள் என்பதை அவன் யோசிக்க வேண்டியிருக்கிறது. உங்களது அறிஞர் என்ற விலாசமும், சமூக - சமய சீர்திருத்தவாதி என்ற பாசாங்கும், சமூக சேவகர் என்ற அடையாளமும், சமூகப் போராளி என்ற பாத்திரமும் அவனைச் சலிப்புற வைத்திருக்கிறது.  உங்களது வார்த்தைகளில் வெளிப்படும் பசப்புதலை அவன் தெளிவாகவே உணர்கிறான். சமூகத்தின் ஏதாவதொரு அடுக்கில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், நீங்கள் உடனடியாய் அவனை உள்ளிழுத்துப் பேசும் வித்தையை அவன் உணர்ந்து கொண்டான்.
தமிழ்ச் சமூகத்தில் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, ‘தலித் உணர்வுகள் வெளிப்படத் தொடங்கிய சமீப காலங்களில் இத்தகைய சலசலப்புகள் கணிசமாக அதிகரித்தும் உள்ளன. இந்திய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து அக்கப்போர்கள் நடந்துள்ளன. மத அடிப்படைவாதம் பேசுகிறவர்களும், எதிர்ப்பவர்களும் கலவரங்களைச் செய்திருக்கின்றனர். அரசியலில் மத உணர்வுகளைக் கலக்கலாமா கூடாதா என்ற சண்டை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சிறுபான்மைச் சமூகத்தவர்களின் உரிமைகள் பேசப்படுகின்றன. அவர்களின் தேசப்பற்று கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. இதனிடையே இந்தியா வல்லரசாக மாறுவதற்கு இடைஞ்சலாக இருப்பது வறுமை மட்டுமே என்றும் அறிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய அத்தனை சலசலப்புகளின் போதும், ‘தலித்துகள் ஒரு பேசு பொருளாக இருந்துள்ளார்கள் என்பது முக்கியமானது. அதிலும் குறிப்பாக சமீபத்திய ‘மதமாற்றத் தடை சட்டம் பற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் தலித்துகளையே மையப் பொருளாகக் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு நிலையினரும் தலித்துகள் குறித்து கருத்துத் தெரிவிக்கின்றனர். பல நேரங்களில் ‘தலித்துகள் என்றே குறிப்பாகவும், சில நேரங்களில் ‘அடித்தள மக்கள் என்ற பொதுப்பெயரின் மூலமும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்து மதம் தலித்துகளை ஏன் புறக்கணிக்கிறது என்ற தொனியில் நடைபெறும் அக்கப்போர், அவர்களது ஒழுக்கம், சுகாதாரம், வாழ்க்கை முறை குறித்த அவதூறுகளைப் பரப்புவதாக மாறுகிறது. இது நாள் வரையில் தலித்துகள் மட்டுமே மதம் மாறியிருப்பது போன்ற தோற்றமொன்று ஏற்படுத்தப்படுகிறது. அவ்வாறு மதம் மாறியவர்களும் ‘விரட்டியடிக்கப்பட்டதாலேயே மதம் மாறியதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மைச் சமூகத்துத் தலித்துகளின் சமயப்பற்று ‘திறந்த மடத்தில் நாய் நுழைந்ததைப் போன்றது என்ற சிந்தனை(?) பரப்பப்படுகிறது.
இந்து அடிப்படைவாதிகளால் திரும்பத் திரும்ப சொல்லப்படும் வாதத்தை நாம் அறிவோம். அதாவது, இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவ. இஸ்லாமிய தலித்துகள் அனைவரும் ஐரோப்பியப் பாதிரிகளின் கோதுமைக்காகவும், பால் மாவிற்காகவும், முகம்மதிய அரசர்களின் மிரட்டலுக்கு பயந்தும் மதம் மாறியவர்கள் என்பதே இந்த நாட்டின் உயர்சாதி அபிப்பிராயம். இதனாலேயே மதமாற்றத் தடைசட்டம் ‘ஆசைகாட்டுவதை’ குற்றமெனச் சொல்கிறது. ஆனால், இத்தடைச் சட்டத்தை எதிர்க்கின்ற ‘சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் கூட தலித்துகளின் மதமாற்றங்களை இதே கண்ணோட்டத்தோடு பார்ப்பது தான் நமக்கு வியப்பை தருகிறது.
இந்த சூழலைச் சாக்காக வைத்துக் கொண்டு, இந்து சமயத்தைப் புனருத்தாரணம் செய்ய விரும்பும் பலரும் சைவ, வைணவ மரபுகளின் மேன்மையைப் பேசத் தொடங்குகிறார்கள். வைணவம் என்ற பெயரில் இயங்கிய பொழுது சாதியக் கேள்வி எவ்வாறு சாமர்த்தியமாகக் கையாளப்பட்டது என்பதையும், அது ‘ இந்து’ வாக மாறிய பொழுது அச்சாமர்த்தியம் எவ்வாறு இல்லாமல் போனது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்து மதத்தின் சாமர்த்தியமின்மையே தலித்துகளின் மதமாற்றத்திற்குக் காரணம் என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். இன்றைய ‘இந்து சமயம் வைணவ சூழ்ச்சியை பயன்படுத்தினால் தலித் பிரச்சனை தீர்க்கப்படும் என்பது போலவும் பேசத்தொடங்கினார்கள். இந்து மதத்தின் மிகப்பெரிய பலவீனம் தலித்துகளைப் பிற மதங்களுக்கு விரட்டியதே என்றும் முடிவு சொன்னார்கள்.
வேறு சில சந்தியாசிகள் தலித்துகளை சரி வர குளிக்கச் சொன்னார்கள்; மாமிசம் சாப்பிடுவதைக் கைவிடச் சொன்னார்கள்; பிராமணர்களை வணங்கச் சொன்னார்கள். ஒவ்வொருவரின் பேச்சிலும், அவரவர் சாதியின் அனுகூலங்கள் மறைந்து கிடப்பதை இப்பொழுதெல்லாம் ஒரு தலித் தெளிவாகவே புரிந்து கொள்கிறான்.
இந்த நாட்டில் சாதியம் கொடூரமாக மட்டுமே வெளிப்படுகிறது என்று இனியும் நம்புவோமானால், நாம் பெருந்தவறுகளைச் செய்தவர்களாய் மாறுவோம். சாதியம் அடக்குமுறையாக, கொடுங்கோன்மையாக மட்டுமல்ல, கிறங்க வைக்கும் புன்னகையுடன், நடப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. பெருஞ் சமூகத்தால் கொண்டாடப்படும் தத்தம் சாதிய உணர்வுகளைப் பலரும் பல்வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
படுகொலை செய்வதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், விலங்கிலும் கேவலமாய் நடத்துவதும், இழிவான வகையில் தண்டிப்பதும், கட்டற்ற வன்முறையைப் பிரயோகிப்பதும் மட்டுமே சாதிய அடக்குமுறை என்று சொல்வதற்கில்லை. இன்றைய சூழலில் சாதி அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டதை வெட்கத்தோடு சொல்லியே ஆக வேண்டும்.
சாதி, நண்பர்களைத் தீர்மானிக்கிறது; கொள்கைகளைத் தீர்மானிக்கிறது;  நம்பிக்கைகளை வடிவமைக்கிறது; கும்பிட வேண்டிய தெய்வங்களைச் சொல்லித் தருகிறது; பொருளாதார நிலையை வடிவமைக்கிறது; கோட்பாடுகளை உருவாக்குகிறது. சாதியத்தின் தன்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாத இன்றைய சூழலில் சாதிய உணர்வுகளிலிருந்து விடுபட்டவர் என்று யாரைச் சொல்ல முடியும்?
இந்த உண்மையை நம்மோடு பலரும் ஒத்துக் கொள்வார்கள். சாதியம், நாம் கற்பனை செய்வதைவிடவும் ஆழமானது என்பதில் பலருக்கும் சந்தேகமில்லை. சாதிய உணர்வுகள் புத்திசார்ந்தது மட்டுமல்ல, பகுத்தறிவோடு திருத்திக் கொள்வதற்கு. அதன் வலைப்பின்னல் பொதுப்பிரக்ஞை சார்ந்தது. எனவே தான் சாதியத்தைத் தனிநபர்களால் வெல்ல முடிவதில்லை. அது, சமூகத்தால் திருத்தப்படவேண்டியது.
இந்த இடத்தில், இதுவரையில் நம்மோடு ஒத்துப் போன பலரும் முரண்படத் தொடங்குகிறார்கள். ‘சாதியம் தனிநபர் சார்ந்தது இல்லை, சமூகம் சார்ந்தது என்றால், சாதியம் தானே நமது பண்பாடு என்பதாக விவாதிக்கத் தொடங்குகிறார்கள். ‘பண்பாடு பற்றிய மயக்கமான, போதை தரும் விளக்கங்களைக் கொண்டிருக்கக் கூடிய மேற்கூறிய நபர்களுக்குச் சாதியமும் பண்பாடும் ஒன்றே தான் என்று சொல்வது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த அசெளகரியம் சிலரை சாதியத்திற்கு ஆதாவான நிலைப்பாட்டை கூட எடுக்க வைக்கிறது.  சாதியம் தான் நமது பண்பாடு’ ‘ என்ற முடிவிற்கு வந்து அதையே கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், வேறு சிலர் சாதிக்கும் பண்பாட்டிற்குமான தொடர்பை ‘பகுத்தறிவு சார்ந்து விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இவர்களின் பகுத்தறிவு தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ‘சாதியம் என்ற காரணியைத் தனிமைப்படுத்தி அதற்குப் ‘பிராமணியம் என்று பெயர் சூட்டுகிறது. பிராமணியமே சாதியமாக உருவகப் படுத்தப்படுகிறது. இவ்வாறு பிராமணியத்தைக் கண்டுபிடித்தது இரண்டு வகைகளில் பகுத்தறிவுவாதிகளுக்கு உதவி செய்தது. ஒன்று, பிராமணியமே சாதியம் என்று சொல்வதன் மூலம், தமிழ்ப் பண்பாட்டின் புனிதம் குறித்த பழங்கதைகள் நிறுவப்படுகின்றன். இரண்டு, சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் எதிரி கண்ணுக்குத் தெரிபவராக இருக்கிறார்.

வரலாற்றில் நிகழ்ந்த இத்தகைய குழப்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, குறைந்த பட்சம் சுயநலமற்ற தன்மையோடு நமது பண்பாட்டையும், அதில் நிலவும்  சாதிய உணர்வுகளையும் நாம் அணுக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். சாதி, மதம், பண்பாடு போன்ற பல்வேறு காரணிகளும் விவாதத்திற்கான பொருட்களாய் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் நியாயமானவை என்று கருதுபவர்களுடன் நமக்கு எவ்வித உரையாடலும் அவசியமில்லை. சாதியத்தை மறுக்கிற, வேரறுக்க விரும்புகிற சிலராவது ஒரே தளத்திற்கு வரமுடியுமா என்று முயற்சிக்கலாம்.

Tuesday, 14 June 2016

நூல் விமர்சனம்

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் விமர்சனம் (பி. ஆர். மகாதேவன் எழுதியது)
பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும்.
‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன.
சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையும் நன்கு தெரிந்த பிரச்னையை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.
சாதி ஆணவக் கொலைகளில் சாதி வீட்டுப் பெண்கள் (மேல்சாதிப் பெண்களை அப்படிக் குறிப்பிடுகிறார்) தலித் ஆண்களை விரும்புவதை, இறுக்கமான ஆணாதிக்க சாதியத் தளைகளில் இருந்து விடுதலை பெற எடுக்கும் முயற்சியாகச் சொல்கிறார். 
சாதி வீட்டுக்காரர்கள் அனைவரும், தமது வீட்டுப் பெண்களை மாமனுக்குக் கட்டிக் கொடுக்கத் தேவைப்படும் பிராய்லர் கோழிகளாக வளர்ப்பதாகவும் எல்லை தாண்டிச் சொல்கிறார். ராஜ் கவுதமன், நேர் பேச்சிலோ கட்டுரையிலோ, கொஞ்சம் மேல் நிலை அடையும் தலித் ஆண்கள், தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.
எல்லா தலித் ஆண்களுக்குமே அவர்களைவிட மேல்சாதிப் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கு, சொந்த சாதிப் பெண்கள் மீதான தாழ்வான மனப்பான்மைதான் காரணமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.
நிஜத்தில், காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகளும் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள் தான், சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் தரப்பே அப்படிப் பார்க்கும்போது, அடங்க மறுக்கும் தரப்பும், அப்படிப் பார்ப்பதில் தவறில்லை தான்.
ஆனால், இருதரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில், இந்த சாதி கடந்த திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாக வேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம். நூலாசிரியரின் தாத்தா – பாட்டி கூட அப்படியான சாதி கடந்த திருமணம் செய்து கொண்டவர்கள் தான்!
மாட்டுக்கறி பற்றிய கட்டுரையில் ஜே.என்.யு.,வில் நடத்திய கருத்தரங்கங்களில், மாட்டுக்கறியை ரகசியமாகச் சாப்பிட்டது பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது, இடதுசாரிக் கோட்டைகளில்கூட நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி மதிப்பீடுகள், கொஞ்சம் நம்மை அதிர வைக்கின்றன.
அந்தக் கட்டுரையின் முடிவில், நூலாசிரியர் சொல்லியிருக்கும் விஷயமும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மிகவும் முக்கியமானது:
(பெரும்பான்மையினரின்) சமையலறைகளில் தயாரிக்கப்படாத உணவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது. கோவில்களில் பேசப்படாத பேச்சுகள் எவ்வளவு நாத்திக, பகுத்தறிவு மிகுந்ததாக இருந்தாலும் சமூகம் அதை வெறும் விடலைத்தனமாகச் சகித்து கொண்டு புறமொதுக்கி விடும்.
உயர் சாதி சார்ந்த மற்றும் பக்தி சார்ந்த மதிப்பீடுகளை அந்தக் குடும்பப் பெண்களிடம் கொடுத்திருப்பதே அந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம். இதைப் புரிந்துகொள்ளாத பொதுவுடைமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்றுவிட்டனவா என்ற கேள்வி மிகவும் ஆழமானது. தீவிர மறுபரிசீலனையைத் தூண்டக்கூடியது.
‘எலைட்’ தலித்தின் குரலாக உருவாகி வந்திருக்கும் இந்தக் கட்டுரைகள், புதிய சிந்தனைகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவையாக இருக்கின்றன.
தொடர்புக்கு: writer.mahadevan@gmail.com
– பி.ஆர்.மகாதேவன்

சாதி மறுப்பு, 'எலைட்' குணம்!!!

நான் ஏன் தலித்தும் அல்ல?
விலைரூ.275
ஆசிரியர் டி.தருமராஜ்
ISBN எண்-
Rating
    
    
பிடித்தவை 
பறவையொன்றின் ஒரு சிறகு, ஒரு பக்கம் பறக்கச் சொல்கிறது. வேறொரு சிறகு, எதிர்ப்பக்கத்தில் பறக்கச் சொல்கிறது. இப்படி இரு சிறகுகளும், இரு வேறு திசைகளில் பறக்கச் சொல்லும் பறவையின் தவிப்பே, இந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும்.

‘தலித்’ என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதை, ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அதேநேரம் தலித்துகளின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும் போது, பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில், சக உயிராகப் பங்கெடுக்கவும், அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்பி, தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயான ஊசலாட்டமே, நூலாசிரியரின் சுயம் சார்ந்த பிரச்னையாகவும், அவையே அவருடைய எழுத்துகளின் ஆதார அம்சமாகவும் விளங்குகின்றன.

சாதி ஆணவக்கொலை, மாட்டுக்கறி அரசியல் தொடங்கி ‘மெட்ராஸ்’ திரைப்பட அலசல், பூமணியின் ‘அஞ்ஞாடி’ தொகுப்பின் விமர்சனம், ‘மாதொருபாகன்’ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் பற்றி, நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையும் நன்கு தெரிந்த பிரச்னையை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்துகிறது.

சாதி ஆணவக் கொலைகளில் சாதி வீட்டுப் பெண்கள் (மேல்சாதிப் பெண்களை அப்படிக் குறிப்பிடுகிறார்) தலித் ஆண்களை விரும்புவதை, இறுக்கமான ஆணாதிக்க சாதியத் தளைகளில் இருந்து விடுதலை பெற எடுக்கும் முயற்சியாகச் சொல்கிறார்.
சாதி வீட்டுக்காரர்கள் அனைவரும், தமது வீட்டுப் பெண்களை மாமனுக்குக் கட்டிக் கொடுக்கத் தேவைப்படும் பிராய்லர் கோழிகளாக வளர்ப்பதாகவும் எல்லை தாண்டிச் சொல்கிறார். ராஜ் கவுதமன், நேர் பேச்சிலோ கட்டுரையிலோ, கொஞ்சம் மேல் நிலை அடையும் தலித் ஆண்கள், தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.

எல்லா தலித் ஆண்களுக்குமே அவர்களைவிட மேல்சாதிப் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கு, சொந்த சாதிப் பெண்கள் மீதான தாழ்வான மனப்பான்மைதான் காரணமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.

நிஜத்தில், காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகளும் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள் தான், சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் தரப்பே அப்படிப் பார்க்கும்போது, அடங்க மறுக்கும் தரப்பும், அப்படிப் பார்ப்பதில் தவறில்லை தான். 

ஆனால், இருதரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில், இந்த சாதி கடந்த திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாக வேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம். நூலாசிரியரின் தாத்தா – பாட்டி கூட அப்படியான சாதி கடந்த திருமணம் செய்து கொண்டவர்கள் தான்!

மாட்டுக்கறி பற்றிய கட்டுரையில் ஜே.என்.யு.,வில் நடத்திய கருத்தரங்கங்களில், மாட்டுக்கறியை ரகசியமாகச் சாப்பிட்டது பற்றிய குறிப்புகளைப் பார்க்கும்போது, இடதுசாரிக் கோட்டைகளில்கூட நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்க சாதி மதிப்பீடுகள், கொஞ்சம் நம்மை அதிர வைக்கின்றன.

அந்தக் கட்டுரையின் முடிவில், நூலாசிரியர் சொல்லியிருக்கும் விஷயமும் எழுப்பியிருக்கும் கேள்வியும் மிகவும் முக்கியமானது: (பெரும்பான்மையினரின்) சமையலறைகளில் தயாரிக்கப்படாத உணவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது. கோவில்களில் பேசப்படாத பேச்சுகள் எவ்வளவு நாத்திக, பகுத்தறிவு மிகுந்ததாக இருந்தாலும் சமூகம் அதை வெறும் விடலைத்தனமாகச் சகித்து கொண்டு புறமொதுக்கி விடும்.
உயர் சாதி சார்ந்த மற்றும் பக்தி சார்ந்த மதிப்பீடுகளை அந்தக் குடும்பப் பெண்களிடம் கொடுத்திருப்பதே அந்த அமைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம். இதைப் புரிந்துகொள்ளாத பொதுவுடைமை சித்தாந்தங்கள், பகுத்தறிவுக் கொள்கைகள், தீவிர கலை  இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்றுவிட்டனவா என்ற கேள்வி மிகவும் ஆழமானது. தீவிர மறுபரிசீலனையைத் தூண்டக்கூடியது.

‘எலைட்’ தலித்தின் குரலாக உருவாகி வந்திருக்கும் இந்தக் கட்டுரைகள், புதிய சிந்தனைகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவையாக இருக்கின்றன.
தொடர்புக்கு: writer.mahadevan@gmail.com

 பி.ஆர்.மகாதேவன்