Skip to main content

நான் ஏன் தலித்?

அன்புள்ள டி. தருமராஜ்,

சென்னை புத்தகக் காட்சியில் ‘நான் ஏன் தலித் அல்ல?’ புத்தகத்தை வாங்கினேன்.  உங்களது வாதம், பெரும் சங்கடத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது.  ஆணவக் கொலைகள் பற்றிய கட்டுரை (அது கட்டுரை இல்லை கட்டுரைகள்) பல புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தது.  இப்பொழுது தான், ‘நான் ஏன் தலித் அல்ல?’ என்ற கட்டுரையை வாசித்து முடித்தேன்.  இந்தக் கட்டுரைக்கும் உங்களது ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கும் பெரிய பாய்ச்சல் நடந்திருக்கிறது.  அந்தப் புத்தகத்திற்கு நீங்கள் எழுதியிருந்த முன்னுரை எனக்கு நினைவில் இருக்கிறது.  என்னைக் கேட்டால், அதை இந்தப் புத்தகத்தின் முதற்படி என்று சொல்வேன்.  அதை வாசித்திருந்தாலே இப்பொழுது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும் என்றும் நினைக்கிறேன்.  துரதிர்ஷ்டவசமாக அந்தப் புத்தகம் இப்பொழுது எனக்குக் கிடைக்கவில்லை.  அதன் மின் வடிவம் கிடைத்தால் வசதியாக இருக்கும்.  முடிந்தால் அனுப்பித் தாருங்கள்.  அல்லது கிடைக்குமிடத்தை சொன்னால் கூட போதும்.

சிவமணி பார்த்திபராஜா



அனுபுள்ள சிவமணி பார்த்திபராஜா, 

2003ல் வெளிவந்த ‘நான் பூர்வ பெளத்தன்’ நூலுக்கான முன்னுரையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன்.  உண்மை தான், அந்த முன்னுரையை, இன்றைய சூழலில், ‘நான் ஏன் தலித்?’ என்றும்  தலைப்பிட்டு வாசிக்கலாம்.  அந்தப் புத்தகத்தின் மின் வடிவம் தயாரிக்கப்படவில்லை.  அந்தப் புத்தகமும் அச்சில் இல்லை.  அதன் மேம்படுத்தப்பட்ட அச்சு வடிவம் தயாராகிக் கொண்டிருக்கிறது.  அயோத்திதாசர் பற்றிய முழுமையான நூலாக அது தயாராகி வருகிறது.  கிழக்கு பதிப்பகம் மூலமே அதுவும் வெளிவரும்.

இதற்கிடையே, உங்களது தேவையைக் கருதி, அந்த முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்ட பகுதியை மட்டிலும் இங்கே தனியாக தந்திருக்கிறேன்.

‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ புத்தகம் உங்களுக்கு பிடித்திருக்கிறது குறித்து மகிழ்ச்சி.  முழுமையாகப் படித்து விட்டு உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.

டி. தருமராஜ்

*****************


(‘நான் பூர்வ பெளத்தன்' முன்னுரையிலிருந்து…)

எழுதுவதற்கான காரணங்கள் குறித்து ஏராளமாய் பேசப்பட்டுள்ளன. நிறைய பேருக்கு எழுத்து ஒரு கலை. சிலர் எழுதுவதன் மூலம் யோசிக்க விரும்புகிறார்கள். எழுதினால் மட்டுமே சிலருக்கு மன அமைதி கிடைக்கிறது. எழுத்து இன்னும் சிலருக்கு முகவரி போல.  இதற்கெல்லாம் அப்பால், ஆத்ம விசாரணையை மேற்கொள்வதன் மூலம், கடந்த காலக் குற்ற ஞாபகத்திலிருந்து விடுதலையடையும் உத்தியாகக் கூட ‘எழுதுதல் அறிவுறுத்தப்படுகிறது.
பல நேரங்களில் எழுத்து உணர்வுகளின் குவியலாகக் கற்பனை செய்யப்படுகிறது. அது, தன்னை வாசிக்கிறவர்களுக்குப் பல்வேறு வகையான உணர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது. ஒரு எழுத்து தரக்கூடிய உணர்வைப் பொறுத்தே அவ்வெழுத்தும் தரப்படுத்தப்படுகிறது. அழுகையை அல்லது அதற்கு நிகரான மன இறுக்கத்தைத் தோற்றிவிக்கும் எழுத்தையே முதல்தரமான எழுத்து என்று ஒப்புக்கொள்ளும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. 
எழுத்து, ஓர் வாகனத்தைப் போல் செயல்பட வேண்டுமென்று சிலர் கருதுகிறார்கள். அது, வாசகரை வேறொரு தளத்திற்குத் தூக்கிச் செல்வது இன்றியமையாதது என இவர்கள் வாதிடக்கூடும். 
ஆனால், எழுத்து பற்றிய ஒரு தலித்தின் பார்வை இவற்றிலிருந்து மாறுபட்டதாகவே அமைந்திருக்கிறது.
****************
‘எழுத்து பரவலாக்கப்பட்டதும், எழுதப்பட்ட செய்திகளையெல்லாம் படிக்க முடிகிற ஒரு தலித், தன்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அவதூறுகளையே முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனை விதமான அவதூறுகள்!
சிலவற்றைப் பார்த்த மாத்திரமே புரிந்து கொள்ள முடிகிறது - அவை சேற்றை வாரி இறைக்கின்றன! 
வேறு சில எழுத்துக்கள் பாசாங்கு வகை. உங்களுக்கு ஆதரவாய் பேசுவது போல நடித்துக் கொண்டே உங்கள் காலை இடறிவிடக் கூடியது. 
தன்னைப் பற்றிய அசிங்ககளையும், வசைகளையும், அநீதியான சித்தரிப்புகளையுமே பார்க்க முடிகிற தலித், அவற்றிற்கு எதிரான தனது நியாயங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை அடைகிறான். எழுத்து முறையை அவன் தேர்ந்தெடுப்பது என்பது இல்லாமல், ஒரு வகையான எழுத்து முறை அவனைத் தேர்ந்தெடுக்கிறது. அதாவது அவதூறுகளுக்கு எதிரான எழுத்து முறை.
****************
இந்த உலகில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் எதுவும் பேசமுடியும் - கடவுளும், தீண்டத்தகாதவனும்.
இவ்விருவர் பற்றியும் நீங்கள் விதவிதமாகக் கற்பனை செய்ய முடியும். 
இவர்களை விலங்குகள் போல் யோசிக்கலாம்; பெண் பித்தர்கள் என்று சித்தரிக்கலாம்; கேலி செய்யலாம்; இவர்களைக் கருவியாய்க் கொண்டு உங்களது எதிரிகளை வதம் செய்யலாம்; சில தருணங்களில் செருப்பால் கூட அடிக்கலாம். இப்படி, கடவுளைப் பற்றியும் தீண்டத்தகாதவர்களைப் பற்றியும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பூரண கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களில் கடவுளைக் காப்பாற்றுவதற்காக வரலாறு நெடுகிலும் பல்வேறு இயக்கங்கள் பாடுபட்டிருக்கின்றன. இயக்கங்களையும் தாண்டி இன்று அரசியல் கட்சிகளும் கூட கடவுளைக் காப்பாற்றுவதற்காக வரிந்து கட்டுவதைப் பார்க்கிறோம். இந்தச் சூழலில், நினைத்தையெல்லாம் பேசக்கூடிய ஒரே விஷயமாக உங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.
நீங்கள் இவர்களை விதவிதமான பெயர்களில் அழைக்கலாம், நீங்கள் கோபமாக இருந்தால், அவர்களைப் புலையன் என்றோ சண்டாளன் என்றோ சொல்லுங்கள். கோபமில்லாமல், உங்கள் மனதில் வெறுப்பு மட்டும் மண்டியிருக்கிறது என்றால் அவர்களைப் பஞ்சமன் என்று அழைத்துப் பார்க்கலாம். ஆன்மீகத்தில் திளைத்து, உங்களுக்கென ஒரு புனித பிம்பத்தை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் என்றால், அவர்களை ‘ஹரிஜன் என்று அழையுங்கள். ஒருவேளை நீங்கள் பேச்சளவில் ஜனநாயகத்தை வலியுறுத்துகிறவராய் இருக்கலாம். அப்படியானால் அவர்களைப் ‘பட்டியல் சாதிகள் என்ற அர்த்தத்தில் எஸ்.சி. என்று சொல்லுங்கள், அல்லது ‘அடிமட்ட சாதிகள் என்று சொல்லுங்கள்.
  வன்மத்துடன், ஊணில் தைக்கிறதைப்போல அவர்களைப் பேசவேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்படலாம். (அவ்வாறு தோன்றுவது இயற்கையும் கூட! இப்படியெல்லாம் உங்களுக்குள் தோன்றினால், நீங்கள் முழு சுவாதீனத்துடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.) இது போன்ற ஆவல் உங்களுக்கு ஏற்படுகையில், நீங்கள் தாராளமாய் அவர்களை பள்ளப்பயலே என்றும், பறப்பயலே என்றும்,  சக்கிலியப் பயலே என்றும் அழைக்கலாம். இவ்வாறு சொல்வதற்கு நீங்கள் கொஞ்சமும் கூச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்புவதாய் நமது பாரம்பரியமிக்க புனித நூல்கள் குறிப்பிடுகின்றன.
இன்னும் நீங்கள் பல்வேறு விஷயங்களைப் பேச முடியும் . உதாரணமாய் சுகாதாரம் பற்றிய அக்கறையை நீங்கள் வெளிப்படுத்த விரும்பலாம். அப்படியானால் நீங்கள் தாராளமாய் ‘அசுத்தமானவர்கள் என்று இவர்களை உதாரணம் காட்ட முடியும். இல்லை, நீங்கள் பெருகி வரும் மக்கள் தொகையைப் பற்றி யோசிக்கிறவராய் இருக்கலாம். பன்றிகளைப் போல் குழந்தைகளைப் பெற்றுத்தள்ளும் மக்கள் கூட்டத்தைக் குறிக்க நீங்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒழுக்கத்தின் மேன்மையைப் பேசுகையில், ஒழுக்கமின்மையின் சின்னமாக இவர்களைச் சித்தரிக்கலாம். உங்களுக்குத் திடீரென்று சமூகசேவை செய்யும் விருப்பம் தோன்றியிருக்கலாம். அவ்வாறு தோன்றுகையில் நீங்கள் இவர்களுடைய குடியிருப்புகளுக்குச் சென்று குழந்தைகளைத் குளிப்பாட்டுங்கள்; கழிவுநீர்க் கால்வாய்களின் அவசியத்தைப் பற்றி பேசுங்கள் ; குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டிய  அவசியத்தை வலியுறுத்துங்கள்; மனிதர்களும் வீட்டு விலங்குகளும் வெவ்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய தேவையைச் சொல்லுங்கள்;  இரவு நேரங்களில் அங்குள்ள குழந்தைகளுக்குப் பாடல்கள் மூலம் கல்வி போதியுங்கள். இப்படியே நீங்கள் உலகம் அறிந்த சமூக சேவராக மாற முடியும்.
‘தீண்டத்தகாதவர்களான இவர்களை மூலதனமாகக் கொண்டு நீங்கள் இன்னும் பல்வேறு அவதாரங்களை எடுக்க முடியும். சாதியத் தளைகளிலிருந்து இம்மக்களை விடுவித்து பொன்னுலகம் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதாக நீங்கள் தாராளமாய் வாக்குறுதி கொடுக்கலாம். உங்களையும் உங்களது வாக்குறுதிகளையும் நம்புவதற்கு இம்மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். உங்களைப் போன்ற சாயலுடன், நீங்கள் பேசும் அதே விஷயங்களைப் பேசிக் கொண்டு மகாபுருஷர்கள் வருவார்கள் என்ற பழங்கதைகள் அவர்களிடம் உள்ளன. உங்களது தலைமையின் கீழ் இம்மக்களைத் திரட்டுவதன் மூலம் நீங்கள் சமூகப் பேராளியாக உருமாற்றம் அடையமுடியும்.
போராளியாக விரும்பாதவர்கள் ‘அறிஞர்களாக மாற முயற்சிக்கலாம். முன்னதைக் காட்டிலும் இது இன்னமும் எளிதானது. ஏதாவதொரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ஆய்வு நிறுவனம் சார்ந்து நீங்கள் ‘அறிஞராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வேறெந்தவொரு பொருளைப் பற்றிய ஆராய்ச்சியைக் காட்டிலும் இம்மக்களைப் பற்றிய ஆராய்ச்சியைச் செய்வது சுலபத்திலும் சுலபம். ஏதாவதொரு ‘தீண்டத்தகாத கிராமத்தைச் தேர்ந்தெடுத்து நீங்கள் ஆய்வை மேற்கொள்ள முடியும். அவர்களது சமுதாய நிலை, நாட்டுப்புறச் சங்கதிகள், தெய்வங்கள் என்று ஏதாவதொரு தலைப்பில் நீங்கள் அறிஞராகிவிட முடியும்.
இதுவும் கசக்கிறது என்றால், நீங்கள் ‘சீர்திருத்தவாதியாக மாற முயற்சிக்கலாம். சமூகச் சீர்திருத்தவாதியாக மாறுவதற்கு இம்மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று சாதியின் கொடூரத்தன்மைகள் குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்யலாம். அல்லது நீங்கள் சமய சீர்திருத்தவாதியாக மாற முடியும். இந்து சமயம் தீண்டத்தகாதவர்களை எவ்வாறெல்லாம் ‘விரட்டியடித்து. அதனால் அவர்களில் பலர் எப்படியெல்லாம் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ‘திறந்திருந்த கோவில்களில் தஞ்சம் அடைந்தனர் என்ற கற்பனைகளைப் பரப்பி இந்து சமய சீர்திருத்தத்திற்குப் பாடுபடலாம்.
இப்படி எண்ணற்ற வழிகள் உள்ளன என்றாலும், நீங்கள் ‘தீண்டத்தகாதவனைப்' பற்றி பேசுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
நீங்கள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிற ‘தீண்டத்தகாதவர் தம்மை ‘தலித் என்று புரிந்து கொள்ளும் சமயத்தில் உங்களுக்கு வருகிறது ஆபத்து. 
அதன்பின், மனம் போனபடி பேசவும், எழுதவும் உங்களால் முடிவதில்லை. வெவ்வேறு தோரணைகளில் நீங்கள் செய்வது அனைத்தும் தூற்றுதலே என்பதைத் தலித் புரிந்து கொள்கிறான். நீங்கள் வரலாற்றைப் பொய்யாகத் திரிக்கிறீர்கள் என்பதை அவன் அறிகிறான். 
இறுதியாக, ‘தீண்டத்தகாதவர்கள் குறித்தும் விருப்பம் போல பேசவோ எழுதவோ முடியாத அவலநிலையை நீங்கள் அடைந்துவிடுகிறீர்கள். மீறியும் நீங்கள் எழுதும் பொழுது, அவர்கள் தலித்தாக நின்று உங்களை மறுக்கத் துவங்குகிறார்கள்.
‘தீண்டத்தகாதவர் பற்றி எதையும் எழுத முடியாத, ‘கருத்துச் சுதந்திரம் பறிபோன உங்களுடைய் நிலையைக் காட்டிலும் தலித்தென தன்னை உணர்ந்தவனின் வலி ஆழமானது என்பதை உங்களோடு சேர்ந்து பலரும் யோசிக்க மறுக்கிறார்கள். ‘எழுதுதல் என்பது பலருக்கும் விதவிதமான நோக்கங்களை உடையதாய் அமைந்திருக்கிறது. ஆத்ம விசாரணை, உண்மையை உணர்தல், எழுத்தின் தொன்மத்தை ஊடுருவுதல், சூட்சுமத்தை அறிதல், வாழ்க்கையாக மாற்றுதல், நிலைபேற்றை அடைதல், அகத்தூய்மையை வேண்டுதல் எனப் பல்வேறு காரணங்கள் உங்களுக்கு இருக்க முடியும்.
ஆனால், ஒரு தலித்தின் எழுத்து, அவன் மீது வாரி இறைக்கப்பட்ட அவதூறுகளை அகற்றுதல் என்பதையே செய்ய வேண்டியிருக்கிறது. தான்தோன்றித்தனமாக எழுதப்படும் பல்வேறு விஷயங்களை அவன் கூர்மையாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எந்தத் தோற்றத்தில் பதுங்கியிருக்கிறீர்கள் என்பதை அவன் யோசிக்க வேண்டியிருக்கிறது. உங்களது அறிஞர் என்ற விலாசமும், சமூக - சமய சீர்திருத்தவாதி என்ற பாசாங்கும், சமூக சேவகர் என்ற அடையாளமும், சமூகப் போராளி என்ற பாத்திரமும் அவனைச் சலிப்புற வைத்திருக்கிறது.  உங்களது வார்த்தைகளில் வெளிப்படும் பசப்புதலை அவன் தெளிவாகவே உணர்கிறான். சமூகத்தின் ஏதாவதொரு அடுக்கில் சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், நீங்கள் உடனடியாய் அவனை உள்ளிழுத்துப் பேசும் வித்தையை அவன் உணர்ந்து கொண்டான்.
தமிழ்ச் சமூகத்தில் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, ‘தலித் உணர்வுகள் வெளிப்படத் தொடங்கிய சமீப காலங்களில் இத்தகைய சலசலப்புகள் கணிசமாக அதிகரித்தும் உள்ளன. இந்திய அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து அக்கப்போர்கள் நடந்துள்ளன. மத அடிப்படைவாதம் பேசுகிறவர்களும், எதிர்ப்பவர்களும் கலவரங்களைச் செய்திருக்கின்றனர். அரசியலில் மத உணர்வுகளைக் கலக்கலாமா கூடாதா என்ற சண்டை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சிறுபான்மைச் சமூகத்தவர்களின் உரிமைகள் பேசப்படுகின்றன. அவர்களின் தேசப்பற்று கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. இதனிடையே இந்தியா வல்லரசாக மாறுவதற்கு இடைஞ்சலாக இருப்பது வறுமை மட்டுமே என்றும் அறிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய அத்தனை சலசலப்புகளின் போதும், ‘தலித்துகள் ஒரு பேசு பொருளாக இருந்துள்ளார்கள் என்பது முக்கியமானது. அதிலும் குறிப்பாக சமீபத்திய ‘மதமாற்றத் தடை சட்டம் பற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் தலித்துகளையே மையப் பொருளாகக் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் பல்வேறு நிலையினரும் தலித்துகள் குறித்து கருத்துத் தெரிவிக்கின்றனர். பல நேரங்களில் ‘தலித்துகள் என்றே குறிப்பாகவும், சில நேரங்களில் ‘அடித்தள மக்கள் என்ற பொதுப்பெயரின் மூலமும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்து மதம் தலித்துகளை ஏன் புறக்கணிக்கிறது என்ற தொனியில் நடைபெறும் அக்கப்போர், அவர்களது ஒழுக்கம், சுகாதாரம், வாழ்க்கை முறை குறித்த அவதூறுகளைப் பரப்புவதாக மாறுகிறது. இது நாள் வரையில் தலித்துகள் மட்டுமே மதம் மாறியிருப்பது போன்ற தோற்றமொன்று ஏற்படுத்தப்படுகிறது. அவ்வாறு மதம் மாறியவர்களும் ‘விரட்டியடிக்கப்பட்டதாலேயே மதம் மாறியதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சிறுபான்மைச் சமூகத்துத் தலித்துகளின் சமயப்பற்று ‘திறந்த மடத்தில் நாய் நுழைந்ததைப் போன்றது என்ற சிந்தனை(?) பரப்பப்படுகிறது.
இந்து அடிப்படைவாதிகளால் திரும்பத் திரும்ப சொல்லப்படும் வாதத்தை நாம் அறிவோம். அதாவது, இந்த நாட்டிலுள்ள கிறிஸ்தவ. இஸ்லாமிய தலித்துகள் அனைவரும் ஐரோப்பியப் பாதிரிகளின் கோதுமைக்காகவும், பால் மாவிற்காகவும், முகம்மதிய அரசர்களின் மிரட்டலுக்கு பயந்தும் மதம் மாறியவர்கள் என்பதே இந்த நாட்டின் உயர்சாதி அபிப்பிராயம். இதனாலேயே மதமாற்றத் தடைசட்டம் ‘ஆசைகாட்டுவதை’ குற்றமெனச் சொல்கிறது. ஆனால், இத்தடைச் சட்டத்தை எதிர்க்கின்ற ‘சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் கூட தலித்துகளின் மதமாற்றங்களை இதே கண்ணோட்டத்தோடு பார்ப்பது தான் நமக்கு வியப்பை தருகிறது.
இந்த சூழலைச் சாக்காக வைத்துக் கொண்டு, இந்து சமயத்தைப் புனருத்தாரணம் செய்ய விரும்பும் பலரும் சைவ, வைணவ மரபுகளின் மேன்மையைப் பேசத் தொடங்குகிறார்கள். வைணவம் என்ற பெயரில் இயங்கிய பொழுது சாதியக் கேள்வி எவ்வாறு சாமர்த்தியமாகக் கையாளப்பட்டது என்பதையும், அது ‘ இந்து’ வாக மாறிய பொழுது அச்சாமர்த்தியம் எவ்வாறு இல்லாமல் போனது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்து மதத்தின் சாமர்த்தியமின்மையே தலித்துகளின் மதமாற்றத்திற்குக் காரணம் என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். இன்றைய ‘இந்து சமயம் வைணவ சூழ்ச்சியை பயன்படுத்தினால் தலித் பிரச்சனை தீர்க்கப்படும் என்பது போலவும் பேசத்தொடங்கினார்கள். இந்து மதத்தின் மிகப்பெரிய பலவீனம் தலித்துகளைப் பிற மதங்களுக்கு விரட்டியதே என்றும் முடிவு சொன்னார்கள்.
வேறு சில சந்தியாசிகள் தலித்துகளை சரி வர குளிக்கச் சொன்னார்கள்; மாமிசம் சாப்பிடுவதைக் கைவிடச் சொன்னார்கள்; பிராமணர்களை வணங்கச் சொன்னார்கள். ஒவ்வொருவரின் பேச்சிலும், அவரவர் சாதியின் அனுகூலங்கள் மறைந்து கிடப்பதை இப்பொழுதெல்லாம் ஒரு தலித் தெளிவாகவே புரிந்து கொள்கிறான்.
இந்த நாட்டில் சாதியம் கொடூரமாக மட்டுமே வெளிப்படுகிறது என்று இனியும் நம்புவோமானால், நாம் பெருந்தவறுகளைச் செய்தவர்களாய் மாறுவோம். சாதியம் அடக்குமுறையாக, கொடுங்கோன்மையாக மட்டுமல்ல, கிறங்க வைக்கும் புன்னகையுடன், நடப்புணர்வாகவும் வெளிப்படுகிறது. பெருஞ் சமூகத்தால் கொண்டாடப்படும் தத்தம் சாதிய உணர்வுகளைப் பலரும் பல்வேறுவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
படுகொலை செய்வதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், விலங்கிலும் கேவலமாய் நடத்துவதும், இழிவான வகையில் தண்டிப்பதும், கட்டற்ற வன்முறையைப் பிரயோகிப்பதும் மட்டுமே சாதிய அடக்குமுறை என்று சொல்வதற்கில்லை. இன்றைய சூழலில் சாதி அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டதை வெட்கத்தோடு சொல்லியே ஆக வேண்டும்.
சாதி, நண்பர்களைத் தீர்மானிக்கிறது; கொள்கைகளைத் தீர்மானிக்கிறது;  நம்பிக்கைகளை வடிவமைக்கிறது; கும்பிட வேண்டிய தெய்வங்களைச் சொல்லித் தருகிறது; பொருளாதார நிலையை வடிவமைக்கிறது; கோட்பாடுகளை உருவாக்குகிறது. சாதியத்தின் தன்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாத இன்றைய சூழலில் சாதிய உணர்வுகளிலிருந்து விடுபட்டவர் என்று யாரைச் சொல்ல முடியும்?
இந்த உண்மையை நம்மோடு பலரும் ஒத்துக் கொள்வார்கள். சாதியம், நாம் கற்பனை செய்வதைவிடவும் ஆழமானது என்பதில் பலருக்கும் சந்தேகமில்லை. சாதிய உணர்வுகள் புத்திசார்ந்தது மட்டுமல்ல, பகுத்தறிவோடு திருத்திக் கொள்வதற்கு. அதன் வலைப்பின்னல் பொதுப்பிரக்ஞை சார்ந்தது. எனவே தான் சாதியத்தைத் தனிநபர்களால் வெல்ல முடிவதில்லை. அது, சமூகத்தால் திருத்தப்படவேண்டியது.
இந்த இடத்தில், இதுவரையில் நம்மோடு ஒத்துப் போன பலரும் முரண்படத் தொடங்குகிறார்கள். ‘சாதியம் தனிநபர் சார்ந்தது இல்லை, சமூகம் சார்ந்தது என்றால், சாதியம் தானே நமது பண்பாடு என்பதாக விவாதிக்கத் தொடங்குகிறார்கள். ‘பண்பாடு பற்றிய மயக்கமான, போதை தரும் விளக்கங்களைக் கொண்டிருக்கக் கூடிய மேற்கூறிய நபர்களுக்குச் சாதியமும் பண்பாடும் ஒன்றே தான் என்று சொல்வது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த அசெளகரியம் சிலரை சாதியத்திற்கு ஆதாவான நிலைப்பாட்டை கூட எடுக்க வைக்கிறது.  சாதியம் தான் நமது பண்பாடு’ ‘ என்ற முடிவிற்கு வந்து அதையே கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால், வேறு சிலர் சாதிக்கும் பண்பாட்டிற்குமான தொடர்பை ‘பகுத்தறிவு சார்ந்து விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இவர்களின் பகுத்தறிவு தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ‘சாதியம் என்ற காரணியைத் தனிமைப்படுத்தி அதற்குப் ‘பிராமணியம் என்று பெயர் சூட்டுகிறது. பிராமணியமே சாதியமாக உருவகப் படுத்தப்படுகிறது. இவ்வாறு பிராமணியத்தைக் கண்டுபிடித்தது இரண்டு வகைகளில் பகுத்தறிவுவாதிகளுக்கு உதவி செய்தது. ஒன்று, பிராமணியமே சாதியம் என்று சொல்வதன் மூலம், தமிழ்ப் பண்பாட்டின் புனிதம் குறித்த பழங்கதைகள் நிறுவப்படுகின்றன். இரண்டு, சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் எதிரி கண்ணுக்குத் தெரிபவராக இருக்கிறார்.

வரலாற்றில் நிகழ்ந்த இத்தகைய குழப்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, குறைந்த பட்சம் சுயநலமற்ற தன்மையோடு நமது பண்பாட்டையும், அதில் நிலவும்  சாதிய உணர்வுகளையும் நாம் அணுக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். சாதி, மதம், பண்பாடு போன்ற பல்வேறு காரணிகளும் விவாதத்திற்கான பொருட்களாய் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. சாதிய வேறுபாடுகள் நியாயமானவை என்று கருதுபவர்களுடன் நமக்கு எவ்வித உரையாடலும் அவசியமில்லை. சாதியத்தை மறுக்கிற, வேரறுக்க விரும்புகிற சிலராவது ஒரே தளத்திற்கு வரமுடியுமா என்று முயற்சிக்கலாம்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக