Skip to main content

தலித் அரசியல் தலைவர்கள் யானைப் பாகன்களா?

'நான் ஏன் தலித்தும் அல்ல?' -  நூல் உரையாடல் - 1



1. 
கவசத்தை இழக்க முடியுமா ? - டி. தருமராஜிடம் சில கேள்விகளை முன்வைத்து....

நான் ஏன் தலித்தும் அல்லஎன்ற நூலுக்கான ஏற்புரையில் டி.தருமராஜ் இத்தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என இப்படி விவரிக்கிறார். இந்நூல் நட்பும் காதல் பற்றி விவரிப்பதாகவும், நட்புக்காக ஏங்குவதாகவும், நட்பு கொள்பவருக்கு தன்னுடைய தலித் அடையாளம் தொந்தரவாக இருப்பதாகவும், அதனால் என்னுடைய கடைசிகவசமானதலித் என்ற அடையாளத்தை இழப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் என கூறி நட்புக்கு அழைப்பு விடுக்கிறார். அதனடிப்படையில் தான் தலைப்பு வைக்கப்பட்டது என விளக்கிறார். இதில் என்னுடைய கேள்வியெல்லாம் ஒருவர் தன் தலித் அடையாளத்தை இழக்க முடியுமா என்பது தான்.
தலித் என்ற அடையாளம் நட்பு கொள்பவரை தொந்தரவு செய்கிறதோ இல்லையோ, என்னை தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். பொதுவெளியில் எந்த வேடமேற்றிருந்தாலும், என்ன செய்தாலும், எங்கு சென்றாலும், நட்பு, காதல் போன்ற எந்த உறவேற்க விரும்பினாலும் தலித் என்ற அடையாளம் என்னை அச்சுறுத்திகொண்டே தான் இருக்கிறது. நான் பூட்டிய அறைக்குள் இருக்கும் இடத்தைத் தவிர அனைத்து தொடர்புகளையும் கண்டு அஞ்சுகிறேன் ( இதுதான்கதவடைப்பு கோட்பாடுஎன்பதா ). இந்த தனித்த சூழலில் தலித் என்ற அடையாளத்தை இழப்பது என்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியும். அதனால் தான் ஆர்வமாய் கேட்கிறேன் இழப்பது எவ்வாறேன்‌று.
இந்த சாதிய சமூகத்தில் நட்புக்கு அழைக்கும் ஆசிரியர் தலித் தன்னுடைய அடையாளத்தை மட்டும் இழந்தால் போதுமா! நட்பு கொள்பவரிடம் சாதி இருக்கிறதே. இழிவு, தீட்டு, தீண்டமையை தினிப்பது தலித்தல்லாதோர்தானே, அவர்கள்தான் சாதிய அடையாளத்தை இழக்க முன் வர வேண்டும் தவிர தலித் தன் அடையாளத்தை இழப்பது எந்த விதத்தில் பயன்தர போகிறது. மார்க்ஸிய வார்த்தையில் சொன்னால்சாதிகீழிறக்கம்மேல்நிலையில் உள்ளவர்களிடம்தானே வரவேண்டும்.
முதலில் தலித்துதான் தன் அடையாளத்தை இழக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தாலும் நீங்கள் எந்த சொல்லை (‘சாதியற்றவன் உட்பட) பயன்படுத்தினாலும் அச்சொல்லின் மீது இழிவு என்ற முத்திரை குத்தப்படும் என்பது தான் வரலாறு.
சாதியை மறைத்து வாழ்ந்து விடலாம் என்றாலும் அது எத்தனை நாட்களுக்கு சாத்தியப்படும், மதம் மாறினாலும் சாதி விடுவதாக இல்லை என்பதும் எதார்த்தம். ஒருவேளை இந்த அடையாளத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் நான் தலித்தும் அல்ல, நான் ஆண்ட பரம்பரை என்று சொல்லிவிட்டு (வரலாறு முக்கியம்) யாராவது ஒருவரை காட்டி இவன் தான் தலித், நான் அவன் இல்லை என தப்பித்து கொள்ளலாமே தவிர கவசத்தை இழப்பது எப்படி சாத்தியப்படும்.

- பால்பாண்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

2.

‘இந்த ஆபத்தான நூலில் தருமராஜ் எழுப்பும் கேள்விகளை அவரது விவாத கருவிகளைக் கொண்டு சுயமாக எழுப்பிப் பார்த்தால் நான் ஒரு வாணியச் செட்டியாரும் இல்லை.. ஒரு நாடாரும் இல்லை.. ஒரு போயரும் இல்லை..கிறிஸ்தவனும் இல்லை.. இந்துவும் இல்லை.. இந்தியனும் இல்லை.. தமிழனும் இல்லை.. இப்போதைக்கு நான் ஒரு பெருஞ்சமூக வெறுப்பாளன் மட்டுமே. இதையும் கூட டி. தருமராஜ் நாளைய விவாதத்தில் உடைத்து ஏறியக் கூடிய சாத்தியம் உண்டு.’ 

- செல்வேந்திரன் (தனது கட்டுரையில் இறுதியில்…)

3.

‘…முரண்பாடுகளின் முகவரிகளை அறிந்தும்
முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு
உரக்கக் கூவிக் கொண்டே இருங்கள்
நான் ஏன் தலித்தும் அல்ல என்று.
முன்னூறு பக்கத்தின் 
ஒவ்வொரு பக்கமும்
ஒரு முட்டுச் சந்தில்
முட்டியே நிற்கிறது.
ஆழ்ந்த வருத்தங்கள்
தர்மராசன்.’

- சூர்யா சேவியர்


4.

மதிப்பிற்குரிய பேராசிரியருக்கு, 

உங்கள் புத்தகத்தை நண்பர்கள் சேர்ந்து வாசித்து விவாதித்தும் வருகின்றோம்.  ஏற்கனவே நிறைய பேர் குறிப்பிட்டதைப் போல கதை சொல்லுதல் உங்களது கட்டுரை எழுதும் முறையாக இருக்கிறது.  அதுவும், இந்தப் புத்தகத்தில் அதை எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்தியிருக்கிறீர்கள்.  ஆனால், புத்தகத்தின் ஆரம்பத்தில் நீங்கள் ‘பொறுப்புத் துறப்பு' என்ற பெயரில் எழுதியிருக்கும் கதை குழப்பமாக இருக்கிறது.  அந்தக் கதையில் வரும் யானை, தாழ்த்தப்பட்டவன் தான் என்று நான் விளங்கிக் கொண்டேன்.  அப்படியானால், அந்தக் குருடர்களில் ஒருவர், அரிசன் என்று சொன்ன காந்தியும் என்றாகிறது.  யானைப் பாகன், தலித் தலைவர்கள் என்று சொல்லலாமா?  உங்களுடைய பின்னணியின் படி அயோத்திதாசர் முதல் திருமாவளவன் வரை யானைப்பாகனாக இருக்கலாம் என்று எடுத்துக் கொண்டால்,  அந்த யானை ஏன் காணாமல் போக வேண்டும்?  தலைவர்கள் வந்த பின், யானை வலிமையுடன் அல்லவா வெளிவர வேண்டும்? அப்படித்தானே நடந்தது.  ஆனால், உங்கள் கதையில் யானை காணாமல் போகிறதே ஏன்?  நண்பர்களுக்குள் பெரிய விவாதம் வந்து, எங்களால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.  எல்லா தலித் தலைவர்களும் தோற்றுப் போனார்கள் என்று சொல்ல வருகிறீர்களா அல்லது எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?  இல்லை, தலைவர்களோடு இணைந்து வர தாழ்த்தப்பட்ட சமூகம் தயாராக இல்லை என்று சொல்கிறீர்களா என்பதை விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

- அறிவுமதி, புதுச்சேரி


**************




அன்புள்ள பால்பாண்டி, செல்வேந்திரன், சூர்யா சேவியர், அறிவுமதி,

நான் ஏன் தலித்தும் அல்ல என்ற இந்த நூல், ஒரு அரசியல் பிரகடனம் மாதிரியான தலைப்பை கொண்டிருக்கிறது.  ஆனால், உண்மையில் இது வழுக்குப் பாறை போன்றது.  இப்புத்தகத்தை வாசித்த பலரும் இதை உணர்ந்து வெவ்வேறு மாதிரியாக அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  நண்பர் செல்வேந்திரன் இதனாலேயே ‘இந்தப் புத்தகம் ஆபத்தானது' என்று சொன்னார்.  சி. சேவியர், இந்தப் புத்தகம் என்னை முட்டுச் சந்தில் போய் நிறுத்தி விடுகிறது என்று கோபமாகவே சொன்னார்.  பால்பாண்டியும் அறிவுமதியும் கூட இந்தக் குழப்பத்தையே கேள்விகளாகக் கேட்கிறார்கள்.  

நான் ஏன் தலித்தும் அல்ல என்ற கேள்வி ஒரு தொற்று நோய்.  மருந்து கண்டு பிடிக்கப்படாத தொற்று நோய்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நோய்க்கிருமியை வெற்றி கொள்வதற்காக வெவ்வேறு வரலாற்று புருசர்கள் அதை தங்களுக்குள் செலுத்திக் கொண்டு சாகசம் செய்திருக்கிறார்கள்.  சிலர், அந்த நோயைப் பலருக்கும் பரப்பிய பின் பரிதாபமாய் மரித்தும் போயிருக்கிறார்கள்.

அப்படியொரு தொற்று நோய்க் கிருமியைத் தான் இந்தப் புத்தகத்தில் நான் விழுங்கியிருக்கிறேன்.  ஒரு வகையில், மிகச் சிறந்த புத்தகங்கள் அனைத்தும் இப்படி விழுங்கி எழுதப்பட்டவை தான்.  அதனால் தான் புத்தகங்களை தொற்றக் கூடியவை என்று சொல்கிறோம்.

‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்ற இந்தப் புத்தகம் என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான புத்தகம்.  சாதி என்றால் என்ன தான் என்று பார்த்து விடுகிற வீம்பில் அதில் ஒரு பயணம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  

அந்த பயணத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.  இதே போன்ற பயணத்தை வெவ்வேறு காரணங்களுக்காக - மானிடவியல், மானுட விடுதலை, கலை உருவாக்கம் - மேற்கொண்ட பலரின் அனுபவத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்ட பின்பே எனது பயணம் முழுவதுமாக திட்டமிடப்பட்டது.

புத்தகத்தின் முன்னுரை, ஒட்டுமொத்த பயணத்தின் தன்மையையும் சுருக்கமாகச் சொல்வதை நீங்கள் உணர முடியும்.  மிகச் சிறந்த வாசகர்கள் இந்த முன்னுரையை கவனமாக வரிக்கு வரி படித்து என்னோடு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலித் என்பதை எவ்வாறு கடந்து செல்வது என்ற கேள்வி கட்டக் கடைசியாய் என் முன்னே ஒரு பெரிய மலையாய் எழும்பி நிற்கும் போது, அதை நான் கற்றறிந்த அறிவின் துணையோடு, கொஞ்சம் கொஞ்சமாக பெயர்க்கத் தொடங்குகிறேன்.  அதனோடு எனக்குள்ள ஒவ்வாமையை, பகுதி பகுதியாக விளக்கி, ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவரத் தொடங்குகிறேன்.  

தலித் என்பது ஒற்றை அடையாளம் - அது தான் என்னை மறுக்கிறது; அது ஒரு புலம்பல்; அது என்னை அநீதியின் சாட்சியமாகவே காட்சிப் படுத்துகிறது; ஒரு மதம் போல செயல்படுகிறது; தன்னையே அழித்துக் கொள்ளும் தற்கொலைப்படை போன்ற அனைத்தையும் விவாதிப்பதன் மூலம், நான் அந்த அடையாளத்திலிருந்து வெளியேறி விடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அது மிக வலுவாக என்னை என் பிடறியில் அடித்து வீழ்த்திய இடம் தான் - ‘துர்பாக்கிய ஆனால் ‘ என்ற வரி.

அறிவின் மூலமாக, தலித் என்ற அடையாளத்தை முற்றிலுமாக சிதைத்து, அதிலிருந்து வெளியேறி விடலாம் என்ற என் நம்பிக்கை தோற்றுப் போன இடம் அது.  எந்தவொரு ஊரில் சாதிய அடக்குமுறை நிகழ்ந்து அதை நான் கேள்விப்பட்டதும் என்னை ஒரு வலியும், பதட்டமும், வருத்தமும், பதட்டமும் வந்து கவ்வுகிறதே அதை என்னால் எப்பொழுதும் அறிவின் மூலமாக கடந்து விட முடிவதில்லை.  

இந்த இடத்திலேயே நான் ஒரு மாபெரும் உண்மையை என் எழுத்தின் வாயிலாக கண்டடைந்தேன் - சாதி என்பது அறிவின் மூலமாகக் கடக்க முடிவது மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் இறுதியில் அது உணர்வாக ஒவ்வொருவருக்குள்ளும் தேங்கி நிற்கிறது.

ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு, இது ஒரு காலகட்டத்தில் ‘அவமானம்’ என்ற உணர்வாக இருந்தது.  அந்த அவமானத்தை, ‘மாற்று வரலாற்றின்' மூலமாக துடைத்து விட பல்வேறு முயற்சிகள் நடைபெற்றிருந்தன; ஒரு உதாரணம், அயோத்திதாசரின் பூர்வ பெளத்தம். 

தலித் உரையாடலில் இந்த உணர்வு, ‘உயிர்வலி'யாக நின்று கொண்டிருக்கிறது.  

தலித் என்பது அரசியல் அடையாளம், எனவே அதை அறிவின் மூலமாக வென்று விடலாம் என்ற என் திட்டத்தை நான் மாற்றிக் கொண்டேன்.  மாறாக, அது விளைவிக்கும் உணர்விலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று யோசிக்கத் தொடங்கினேன்.  அது தான் இந்தப் புத்தகத்தில் நான் நிகழ்த்திய பாய்ச்சல்.

சாதி எல்லாருக்குள்ளும் ஏதோவொரு உணர்வாக மட்டுமே தங்கியிருக்கிறது என்று அறிந்த பின்பு, பதிலளிக்கப்படாதிருந்த வேறு பல கேள்விகளுக்கும் இப்பொழுது பதில்கள் துலங்கத் தொடங்கின.

சாதி, உணர்வாக மட்டுமே தங்கியிருக்கிறது என்றால், அது ஒரு புனைவு போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.  அது நிஜம் இல்லை; அது அடிப்படையில் எந்தவொரு ஸ்தூல நியாயத்திலிருந்தும் உருவானது இல்லை.  அது பொருளாதாரப் பங்கீட்டிலிருந்து உருவாக்கப்பட்டது இல்லை; உயிரியல் நியமங்களிலிருந்து தோன்றியது அல்ல; பண்பாட்டு நிகழ்வுகளிலிருந்து தருவிக்கப்பட்டது இல்லை.  அது, ஒரு புனைவாக மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. துர்ப்புனைவாக

இந்தத் தருணத்தில் தான், அந்தப் புத்தகத்தின் ‘பொறுப்புத் துறப்பை' எழுத நான் முடிவு செய்தேன்.

அந்தப் பொறுப்புத் துறப்பு, முழுக்க முழுக்க ஒரு புனைவு - ஞானத் தேடலுக்காக இந்திய மரபில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட ஒரு கதை அது.

அந்தக் கதையில் வரும் யானையப் போலவே, அந்தக் கதையையும் பலரும் பல மாதிரி தொட்டு, வித விதமாக விளக்கியிருக்கிறார்கள்.  எனக்கு, அந்தப் புனைவை திரும்ப எழுத ஆரம்பித்த பொழுது, சொந்த ஆடுகளம் போல இருந்தது.  எனக்குத் தகுந்த வகையில், அதை நான் எழுதிக் கொள்ள முடியும் என்று எனக்கு பூரண நம்பிக்கை வந்தது.

அந்த யானைக் கதையில் வரும் யானையை, தலித் என்று தான் ஆரம்ப வாசிப்பில் எல்லோரும் நினைக்கத் தொடங்குவார்கள்.  ஏனெனில் அந்தக் கதை அவ்வாறு பொய்த்தோற்றம் காட்டும் குணத்தைத் தான் தனக்குள் கொண்டிருக்கிறது.

அந்த வழக்கமான வாசிப்பின் படி, யானை, தலித்தாக கற்பனை செய்யப்படுகிறது.

தலித்துகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக விளக்குகிறார்கள்.  ஒருவர், ஹரிஜன் என்கிறார்; ஒருவர் தீண்டத்தகாதவன் என்கிறார்; ஒருவர் பஞ்சமர் என்கிறார்; இன்னொருவர் பட்டியலினத்தவன் என்கிறார்; அரசன் வழக்கம் போல, தலித் என்றால் ‘இது எல்லாமும் தான்' என்று சொல்லி கதையை முடிக்க நினைக்கிறார். 

அப்பொழுது யானைப்பாகன் முன்வந்து, ‘இது, யானை; அதாவது தலித்.  நீங்கள் நினைப்பது போல ஹரிஜன், தீண்டத்தகாதவன், பஞ்சமர் என்பதெல்லாம் பொய்' என்று சொல்கிறார்.  இத்தோடு இந்தக் கதையை முடித்திருந்தால் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வந்திருக்காது.  எல்லோருக்கும் தெரிந்த மிகச் சாதாரண கதை இது.   கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.  

ஆனால், நான் எழுதிய யானைக் கதையில் அந்தக் கடைசி வரி ஒட்டு மொத்த கதையையும் மாற்றி விடுகிறது.

யானைப் பாகன் சொல்லிக் கொண்டிருந்த ‘அந்த நேரம், யானை காணாமல் போய்க் கொண்டிருந்தது' என்பது தான் அந்தக் கடைசி வரி.  புதுச்சேரி அறிவுமதியும் அவரது நண்பர்களும் குழம்பிப் போனது இந்த இடத்தில் தான்.

ஏனென்றால், இந்த வாக்கியம், ஒட்டுமொத்த கதையையும் குலைத்துப் போட்டு விடுகிறது.  பாகன் சொல்வதைக் கேட்டு, யானை காணாமல் போகிறது என்றால்,  யானை என்றால் என்ன?  ‘அது தலித் தான்’ என்றால், ஏன் காணாமல் போக வேண்டும்?  

இந்தக் கேள்விகளே அந்தக் கதையை மீண்டும் முதலிலிருந்து வாசிக்க வைக்கிறது.  இது வழக்கமான யானையும் குருடர்களும் கதை இல்லை என்ற செய்தியும் கதைக்குள்ளேயே இருக்கிறது (ராஜாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சி - வேறு கதைக்குள் வந்து விட்டோமோ என்பது போல பார்த்தார்).

யானை என்பது எந்தவொரு ஆளையோ அல்லது சமூகக் குழுவையோ குறிப்பது அல்ல, அது உணர்வைக் குறிக்கிறது (அதாவது தலித்துகளைப் பொறுத்தவரையில் ‘வலி' என்ற உணர்வைக் குறிக்கிறது) என்ற செய்தியையே யானைப் பாகனின் வார்த்தைகள் சொல்கின்றன: ‘அது உயிருள்ள யானை; ரத்தமும் சதையுமான யானை’.

இந்த இடத்தில் தான், நான் என் தேடலில் கண்டடைந்த மாபெரும் ரகசியத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  உணர்வைக் கடப்பது எப்படி என்ற அந்த ரகசியம் தான் என்னைக் கடைசியில் காப்பாற்றவும் செய்தது.  அதாவது,

அறிவின் மூலமாக சாதியையும் அதன் செயல்பாடுகளையும் சிதைத்து வெற்றிகரமாக வெளியேறி வந்த பின்பும், அது இறுதியிலும் இறுதியாக ஒரு உணர்வாக உங்களுக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது - சிலருக்கு பெருமிதமாக, சிலருக்கு அருவருப்பாக, சிலருக்கு வலியாக, சிலருக்கு மகிழ்ச்சியாக, சிலருக்கு அச்சமாக, நாணமாக என்று சாத்தியப்படுகிற அத்தனை உணர்வுமாக.  

சாதி வழங்கக்கூடிய இந்த உணர்வை அழிப்பது எப்படி என்பதற்கு இது வரையில் சொல்லப்பட்டிருப்பதில் நான் தேர்ந்தெடுத்த ஒரே வெற்றிகரமான வழி - 

//அந்தக் குறிப்பிட்ட உணர்வை இது தான் என்று கண்டறிந்து விடுவது//

இது மிகச்சாதாரணமாகத் தோன்றலாம்.  ஆனால், ’வலி' என்பதைக் கண்டுபிடித்ததும் வலி நம்மை விட்டுப் பறந்து போய் விடுகிறது.  அச்சம் என்பதை உணர்ந்ததும் அந்தப் பயத்திலிருந்து நம்மால் வெளிவந்து விட முடிகிறது.  அருவருப்பாக உணர்கிறோம் என்பதை அறிந்து கொண்ட அடுத்த நொடி, அந்த அருவருப்பிலிருந்து விலகி விடுகிறோம்.  பெருமிதமடைகிறோம் என்று கண்டு கொண்ட மறு நிமிடம் அது குறித்த சந்தேகம் நமக்குள் ஏற்பட்டுவிடுகிறது.  இந்த உத்தியைத் தான் அந்தக் கதையில் பொறுப்பைத் துறக்கும் உத்தியாக நான் பயன்படுத்தியிருக்கிறேன்.

இப்பொழுது அந்தக் கதையை மீண்டும் வாசித்துப் பார்க்கலாம்.  அந்த யானை, தலித் அல்ல; மாறாக அது, சாதி உருவாக்கும் உணர்வு.  

அந்த உணர்வை, சிலர் பாரம்பரியம் என்கிறார்கள்; வேறு சிலர், சமூகக் கொடூரம் என்கிறார்கள்; இன்னும் சிலர், சமூக ஒழுங்கமைப்பு என்கிறார்கள்; வேறு சிலரோ, மனித உரிமை மீறல் என்கிறார்கள்.  இப்படி பலரும் பல மாதிரி சொல்கிறார்கள்.  ஆனால், அது என்ன தான் என்பதை என்றைக்குமே யாரும் அறுதியிட்டு சொல்வதில்லை.  எல்லாமுமாக இருக்கிறது என்பது தான் பொத்தாம் பொதுவான பதிலாக இருக்கிறது.

ஆனால், என்றைக்காவது, யானைப்பாகன்கள், அதை ரத்தமும் சதையுமாக நான் அறிவேன்.  அது எனக்குள் துயரமாகவும், வலியாகவுமே இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுகையில், அந்த யானை காணாமல் போகத் தொடங்குகிறது.  

ஒரு தலித்தாக அது என்னுள் ‘உயிர்வலி'யாக இருந்ததைத் தான் நான் இந்தப் புத்தகத்தில் கண்டுபிடித்தேன்.  அதைக் கண்ட மறு கணத்திலிருந்து, எனக்குள் அந்த ‘வலி’ காணாமல் போகத் தொடங்கியிருக்கிறது.  

இந்தக் கதையை, எனது மாணவர்கள் நிறைய பேர், நான் எழுதிய தொனியிலேயே படித்து என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னும், அறிமுகமில்லாத பல வாசகர்களும் கூட இந்தக் கதையும், ஒட்டுமொத்தமாய் புத்தகமும் வழங்கும் விடுதலையை உள்ளுணர்ந்து தங்களது மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

ஒரு எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்?  நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

டி. தருமராஜ்

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக