Friday, 21 October 2016

ரொம்பப் பேசுறீங்க, சமஸ்!தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன்.  அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல்.  திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன்.இதனால், அவருடைய கட்டுரைகளில் ஒரு அமைதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இந்த அமைதி, அலைந்து திரிந்து நிறைய மனிதர்களை சந்திப்பதால் ஏற்படும் அமைதி.

ஆனால், சமீபகாலமாக, சமஸ் இந்த அமைதியை தனது எழுத்துகளில் இழந்து வருகிறாரோ என்றொரு சந்தேகம் எனக்கு இருந்து வந்தது.  அது, இன்றைய தி இந்துவில் வெளியான காவிரி பற்றிய கட்டுரையில் உறுதிபட்டிருக்கிறது.

அந்தக் கட்டுரையில் அதிகமான சத்தம் கேட்கிறது, சமஸ்.  திராவிட மேடைப்பேச்சின் சத்தம். நீங்கள் எந்த வகையினரை உங்கள் கட்டுரையில் குற்றம் சாட்டுகிறீர்களோ அவர்களது நாடகப் பேச்சு போலவே உங்களது கட்டுரையும் அமைந்திருக்கிறது.

இயற்கையைப் பேணும் குறைந்தபட்ச அறிவு கூட தமிழர்களுக்கு இல்லை என்பதைத் தான் உங்கள் கட்டுரை தனது ஆகப்பெரிய குற்றசாட்டாக முன்வைக்கிறது.  அதனால், தமிழ் நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்; வரலாற்று நியாயத்தையே எத்தனை காலம் பேசிக்கொண்டிருப்பது என்று கேட்கிறீர்கள்; தமிழர்கள் அலட்சியமானவர்கள் என்கிறீர்கள்; இறுதியில் தமிழினத்தின் மனசாட்சியை குத்திக் காட்டி உங்கள் உரையை முடிக்கிறீர்கள்.

திராவிட மேடைப்பேச்சை கற்றுக்கொண்டதும் அக்கட்சிகளிலிருந்து வெளிவந்து, தன்னை லிபரல் என்றோ அல்லது வேறு ஏதோ ஒன்று என்றோ அறிவித்துக் கொள்ளும் நபர், காவிரியைப் பற்றி மேடையில் பேசுகிறார் என்றால் இப்படித்தான் பேசுவார்.  அதில் சாரம் என்று எதுவும் இருக்காது.  யோசனை இருக்காது.  எதிரில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவரை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துவது தான் அந்தப் பேச்சாளரின் நோக்கமாக இருக்கும்.  இதையே தான் உங்கள் கட்டுரையும் செய்கிறது.

சரி, நீங்கள் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்கு வருவோம்.

உண்மையில், காவிரி நீர் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல், இந்தியாவின் தேசியம் குறித்த நம்பிக்கைகளின் மீது விழுந்த விரிசல் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா என்று தெரியவில்லை.  ஆனால், உண்மை என்னவோ அது தான்.

வரலாற்றில் படை பலம் காட்டியே காவிரியின் உரிமையை நிலை நாட்டி வந்த தமிழகம், இந்திய தேசியம் கொடுத்த நவீனத்துவ வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டே ஜன நாயக வழியில் தனது உரிமைகள் மீட்டுத்தரப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தது.  அதனால் தான் நடுவர் மன்றம், ஆணைகள், நீதிமன்றம், மத்திய அரசு, மா நில அரசு, தீர்ப்பாயங்கள் என்ற நவ நாகரீக அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்க ஆரம்பித்தோம்.  இது, இந்திய இறையாண்மையின் மீது நாம் வைத்த நம்பிக்கை.

அதே போல, ஜன நாயக தேர்தல் முறையில் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுத்தால் அது, இயற்கையைப் பாதுகாப்பது முதற்கொண்டு அத்தனை காரியங்களையும் செவ்வனே செய்யும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு ஐந்தாண்டும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இதுவும், நாம் நவீன அரசியலமைப்பு மீது கொண்ட நம்பிக்கையினால் தான்.

ஆனால், காவிரி சிக்கலில், இந்த இரண்டு நவீன நம்பிக்கைகள் தான் பொய்த்துப் போகத் தொடங்கியிருக்கின்றன - தேசியம் என்ற சித்தாந்தமும், மக்களாட்சி என்ற அரசியலமைப்பும்.

நாம் நினைத்திருந்தது போல, அவையிரண்டும் நமது சிக்கல்களை தீர்ப்பதாகத் தெரியவில்லை.  மன்னராட்சி காலத்தில், காட்டுமிராண்டித்தனமாய் படையெடுத்துச் சென்று உரிமையை நிலை நாட்டி வந்த நிலை போதும் என்று தான் நாம் இந்தப் புதிய நாகரீக முறைக்கு வந்து சேர்ந்தோம்.  ஆனால், அக்காட்டுமிராண்டிகள் வாங்கித் தந்த உரிமையைக் கூட நவீனர்களால் வாங்கித் தர முடியவில்லை என்றால், நமது நவீனத்துவத்தில் தானே கோளாறு?

ஐந்து வருடத்திற்கொரு முறை, வாக்களித்து தேர்ந்தெடுக்கிற ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்று தொடர்ச்சியாகக் கண்காணிக்கிற வேலை மக்களுடையது அல்ல, சமஸ்.  மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே ஒரு நாளின் 24 மணி நேரம் போதவில்லை.  இதுவெல்லாமே, நமது அரசியல் அமைப்பின் கோளாறு.  அது செயல்படுகிறதா இல்லையா என்று கண்காணிக்க வேண்டிய ஊடகம் போன்ற அமைப்புகள்  தங்களது ஒழுக்கத்தை இழந்ததால் நிகழ்ந்த கோளாறு.  அதாவது,  ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் தான் அந்த நவீன கண்காணிப்பாளர், சமஸ்.  மக்கள் பத்திரிகையாளர்களைத்தான் இதற்காக நம்புகிறோம்.

பிரச்சினை என்னவென்று இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா?  பிரச்சினை மக்களிடம் இல்லை.  அப்படி இருப்பதாய் ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தி, அவர்களது நதி உரிமையை கேள்விக்குள்ளாக்குவதற்கு முயற்சி செய்கிறீர்கள்.

ஆனால், தோற்றுக் கொண்டிருப்பதென்னவோ, தேசியம், மக்களாட்சி, பத்திரிகையாளர் போன்ற நவீன கருத்தாக்கங்கள் தான்.  நாம் வேறு புதிய நாகரீக சமூக அமைப்பை தேடியாக வேண்டிய தேவை உருவாகிவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.  நவீனத்துவம் நாகரீகமானது என்று இனியும் நம்பிக்கொண்டிருக்க முடியவில்லை.  

காவிரி போன்ற பிரச்சினையில் இது தான் சமஸ் நடந்து கொண்டிருப்பது.  இதை, உங்கள் கட்டுரை எங்கே தவற விடுகிறது என்று புரிந்து கொண்டீர்களா?

வாசித்துக் கொண்டிருப்பவரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும் எளிய தந்திரத்தை நீங்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறீர்கள்.  அது தான் கோளாறே!.  

இது மேடைப்பேச்சின் அழகிய குதர்க்கம்.


blog-post_20.html
blog-post_20.html

12 comments:

M P Terence Samuel said...

The thin line separating critique and sarcasm or criticism and saddism/masochism... Very aptly, you've put in words.

செல்வம் said...

அருமை .மிக அழகாக கட்டுரையின் சாராம்சத்தை முன்னிலைப்படுத்தி விட்டீர்கள் .

சமயவேல் said...

தமிழ் மக்களைக் குறை கூறுவதற்கான சந்தர்ப்பங்களை தேசியர்கள் விட்டுவிடுவார்களா? சமஸ் ஒரு சமகாலப் புரிதல்களுடன் கூடிய இதழாளராக இருப்பதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அவரது பிறிதொரு முகம் குறித்து வருத்தமாக இருக்கிறது.அவர் இருக்கும் இடம் காரணமோ?

Unknown said...

ஆம். அந்தக் கட்டுரை தன் எழுத்து நடை வீரியத்தில் ஒரு நியாயத்துக்கு எதிராக மற்றொரு நியாயத்தை முன் நிறுத்துகிறது.

Anonymous said...

He is a spineless idiot.

Muthu said...

நல்ல பதிவு. நன்றிகள்.

Anonymous said...

"ரொம்பப் பேசுறீங்க, சமஸ்!"னு பார்த்த உடனே எதோ நீங்க கொஞ்சம் நிதானமா யோசிச்சு காவேரி பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவீங்கன்னு நெனச்சா சமஸ்ஸ விட நீங்க ரொம்பப் பேசிரிக்குறீங்க... சமஸ் மக்களை கைகாட்டினாலும் காவிரியில் நமக்கு முழு உரிமை இருப்பதை தெளிவாக சொல்கிறார், காவேரியை பாதுகாக்க மக்களுக்கும் பொறுப்பு இருப்பதை விளைக்கியுள்ளார், நீங்க அரசாங்கத்துக்கு பொறுப்பு உள்ளதை விளைக்கியுள்ளீர்கள். அதுமட்டும் அல்லாமல் " நாம் வேறு புதிய நாகரீக சமூக அமைப்பை தேடியாக வேண்டிய தேவை உருவாகிவிட்டது என்றே நான் நினைக்கிறேன் " னு சொல்லிட்டு ஒரு தீர்வு சொல்லுவீங்கன்னு நெனச்சா ஏமாற்றமே. மக்கள் என்ன பைத்திய காரங்கன்னு நீங்க ரெண்டு பேரும் நினைச்சிட்டு இருக்கீங்களா. உங்களுக்கு மக்கள் மேல் அக்கறை இருந்தால் ஒரு தீர்வ சொல்லி எப்படி செயல் படுத்தலாம்னு துணிந்து சொல்லுங்கள் பார்போம் .

sound said...

You are correct. Samas voice changed. Not only that. His views also. He wrote an absurd article on ANNA last month.

Ravi kumar said...

Tamil Hindu, like its English counterpart is a toilet tissue. Nothing more nothing less.

Jawahar Murugaiyan said...

இது உண்மையில் தலித்துகள், தலித் அமைப்பு தலைவர்கள் காந்தியை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் எப்படி தவறாக புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற கட்டுரையிலும் தேவையில்லாமல் அம்பேட்கரை இந்தக் கட்டுரையில் எதிர் நிருத்தி எழுதியிருப்பார்.சமஸ் நம்பும் மதிக்கும் மதிப்பீடுகளின் மீது அவர் கொள்ளும் கரிசணம்,பொது வெளியிலோ அல்லது அதைச் சார்ந்தவர்களிடம் இல்லையென்றால் இதைப்போன்ற கட்டுரை வருகிறது. சரியாக குறிப்பீட்டுள்ளீர்கள்.

Vetri Kondan said...

இவர் விலைபோய்விட்டாரோ, என எண்ணத்தோன்றுகிறது...

Piraikannan rajendran said...

அருமை