Skip to main content

அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை


ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார்.

ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள்.  குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது.  ஆனால், கொஞ்ச காலம் தான்.  சீக்கிரமே அந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட்டும் விடுகிறாள்.  வேறொரு தேசம், வேறொரு வாழ்க்கை என்று முழுவதுமாக மாறிப்போகிறாள்.    அம்மாவின் விரைந்த விடுபடுதலை மகனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  குழம்புகிறான்.   ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிறான்.   இந்த நேரம், ஒரு அமெச்சூர் உளவியலாளர் மகனுக்கு உதவ முன்வருகிறார்.   ஆனால், அவரது ஆலோசனை விபரீதமாக இருக்கிறது.   ‘அப்பாவை நீயே கொன்றதாக நம்பி, சடங்குகளைச் செய்.  குற்றவுணர்விலிருந்து விடுபடுவாய் !’




1. அப்பா - அம்மா - மகன் என்றொரு ஃப்ராய்டியக் குடும்பம்.  அப்பாவைக் கொன்ற குற்றவுணர்ச்சி தான் கதையின் சிக்கல்.  


2. அந்த அமெச்சூர் உளவியலாளரின் பெயர் மார்த்தா.   நமது மகனின் முதல் மனைவி. விவாகரத்தாகி இருவரும் வேறு வேறு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   அவளது இரண்டாவது கணவன், நமக்குத் தெரிய, தச்சு வேலை செய்கிறான்.  மேரி - ஜோசப் - ஜீசஸ்.  இதுவும் ஒரு ஃப்ராய்டியக் குடும்பம் தான்.  

3. மார்த்தா, ஒரு அமெச்சூர் உளவியலாளர் என்பதை தச்சு வேலை செய்து கொண்டிருக்கும் அவள் கணவனே நமக்குச் சொல்கிறான்.  ‘அவளிடம் தீர்வுகள் இருக்கின்றன!’  என்கிறான்.  அவன் செய்து கொண்டிருக்கும் தச்சு வேலையும் மார்த்தா சொன்ன உளவியல் சிகிச்சை தானாம்.   நாம் பார்க்கும் போதும் தச்சு வேலை தான் செய்து கொண்டிருக்கிறான்.  அப்படியானால், அவன் இன்னமும் குணமாகவில்லை.  அல்லது, அவனொரு நிரந்தர ரோகியாக இருக்கலாம்.   அதாவது, வாழ் நாள் முழுக் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியவன்.  அவனுக்கு என்ன ரோகம் என்று ஜெயமோகன் நமக்குச் சொல்வதில்லை.


4. மகனின் (கதையில் அவனுக்கு மகா என்று பெயர்) பிரச்சினை குறித்து ஜெயமோகன் நம்மிடம் தெளிவாகப் பேசி விடுகிறார்.  ‘அப்பாவைக் கொன்றது நான் தான்’ என்று அம்மா கதறி அழுது கொண்டிருக்கிற வரையில் மகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  அது கொலை என்பதை இருவரும் சேர்ந்தே மறைத்து விடுகிறார்கள்.  ஆனால், அதே அம்மா குற்றவுணர்விலிருந்து விடுபட்டதும் அவனுடைய சிக்கல் ஆரம்பித்து விடுகிறது.  அதெப்படி அத்தனை எளிதாய் அம்மா குற்றவுணர்விலிருந்து விடுபட்டு விடலாம் என்பது தான் அவனது ஆகப் பெரிய கேள்வி.


5. ஜெயமோகன் விளக்கவில்லை என்றாலும், மகனின் சிக்கலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  அதற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று, அம்மா எப்படி இத்தனை சீக்கிரம் குற்றவுணர்விலிருந்து வெளிப்பட்டாள்? இரண்டாவது, அந்தக் கொலையை மறைத்த வகையில் எனக்கும் குற்றத்தில் பங்கிருக்கிறதா?


6. இந்த நேரமே மார்த்தா அவனுக்கு உபாயத்தை சொல்லித் தருகிறாள் - அப்பாவை நீயே கொன்றதாய் நம்பி விடு.   


7. கிறிஸ்தவம் இப்படித்தான் சொல்கிறது.  பிதாவின் கட்டளையை மீறிய ஏவாளுக்கு மட்டுமல்ல, ஆதாமுக்கும் அந்தப் பாவத்தில் பங்கிருந்தது.  எனவே இருவரையும்  ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்ட வேண்டும்.  அப்பாவின் கட்டளையை மீறுவதற்கும் அவரைக் கொன்று விடுவதற்கும் அதிக வித்தியாசமில்லை.  அவ்விருவர் தான் என்றில்லை, அவர்களிடமிருந்து பலுகிப் பெருகிய மானுட இனத்திற்கே அந்தப் பாவத்தில் பங்கு உண்டு என்கிறது கிறிஸ்தவம்.  


8. கிறிஸ்தவம் இந்தப் பாவத்திலிருந்தே மனிதர்களுக்கு விடுதலை தருகிறது. மனந்திரும்புங்கள் என்பது கடைசியில் இது தான்.   ஞானஸ்நானம் (அறிவுக்குளியல்!) என்ற பெயரில் நடத்தப்படும் சடங்கு இந்தச் சாவான பாவத்திலிருந்தே உங்களை விடுவிக்கிறது.


9. ஃப்ராய்டும் ஏறக்குறைய இதே கதையைத் தான் நமக்குச் சொல்கிறார்.  ‘தந்தையின் பெயரால்!’ என்றொரு கதை இருக்கிறது.  அந்தக் கதையில் ஒரு மகன் அல்ல பல மகன்கள் சேர்ந்து ஒரே அப்பாவைக் கொன்று விடுகின்றனர்.  கொன்ற பின்பு தோன்றிய குற்றவுணர்ச்சி அவர்களைப் பதிலுக்குக் கொன்று கொண்டிருக்கிறது.  இந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட மனிதர்கள் சடங்குகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்கிறார் ஃப்ராய்டு.


10. கிறிஸ்தவமும் ஃப்ராய்டும் ஒரே விஷயத்தை தான் நமக்குச் சொல்கிறார்கள்.  குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்கு சடங்குகளைச் செய்வது தான் ஒரே வழி.  சடங்குகள், ஒரு வகை உளவியல் சிகிச்சை.  


11. மார்த்தாவை முன்வைத்து ஜெயமோகனும் இந்த வழிமுறையைத் தான் மகாவுக்கு பரிந்துரைக்கிறார்.  ‘போ.  போய் உன் தந்தையைக் கொன்றதற்கான பரிகாரச் சடங்குகளை மனப்பூர்வமாய் செய்! அது உன்னை சொஸ்தமாக்கும்!’  கிறிஸ்தவம், ஃப்ராய்டு, மார்த்தா என்ற அமெச்சூர் உளவியலாளர், ஜெயமோகன், இந்திய வாழ்க்கை வட்டச் சடங்குகள் என அத்தனை பேரும் ஒரே மாதிரியாக ஒரே தீர்வைத் தான் முன்வைக்கிறார்கள்.  அப்பாவைக் கொன்றதை ஒத்துக் கொள்!  எல்லாம் சரியாகிவிடும்.


12. அந்தக் கதையின் மாயத்தருணமாகவும் இதுவே சொல்லப்படுகிறது.  ‘நீயே தந்தையைக் கொன்றதாய் நினைத்துக் கொள்.  மீண்டு வருவாய்!’  அதாவது, இல்லாத அழுக்கைக் கழுவிக் கொள்.  செய்யாத கொலைக்காக மண்டியிடு.  இல்லாத கத்தியில் படிந்துள்ள ரத்தக்கறையைத் துடை.  இதறகென்றொரு வசீகரம் இருக்கிறது.  


13. இந்த வசீகரமே சடங்குகளின் உயிர் நாடி.    ஆடி அமாவசையில் மூத்தோருக்குச் செய்யும் நீர் நிலைச் சடங்குகளில் சொட்டுவது இந்த வசீகரம் தான்.  


14. இந்த வசீகரங்களே சடங்குகளிலிருந்து தொன்மங்களுக்கும் பரவுகின்றன.   மூத்தோர் வழிபாட்டை, ’தென்புலத்தார் கடன்’ என்று சொல்வதும், ’மேனி எங்கும் யோனி’ என்பதும் இப்படியான மயக்கங்கள்.


15. ஃப்ராய்டின் உளவியல் விளக்கங்களை நவீன தொன்மங்கள் என்று சொன்னால் ஆச்சரிப்படுவீர்கள்.  அவற்றிலும் வசீகரமிருந்தது.   பெரும்பாலும் கிரேக்க புராணங்களை துணைக்கழைத்து விவாதித்துக் கொண்டிருந்த ஃப்ராய்ட் ஒரு கட்டத்தில் தானே ஒரு புராணத்தை உருவாக்கத் தலைப்பட்டார்.   அந்தத் தொன்மம் ‘தந்தையின் பெயரால்’ என்று அழைக்கப்பட்டிருந்தது.  தொன்மம் இருந்தால் சடங்குகள் இருக்க வேண்டுமே, இருந்தன.  அந்தச் சடங்கில் உளவியலாளரும் மனம் பிறழ்ந்தவரும் பங்கேற்று வந்தனர்.


16. ஜெயமோகன் கதையிலும் அப்படியொரு சடங்கு நிகழ்கிறது.   காபி அருந்திய படி நடக்கும் உளவியல் சடங்கு.  அந்த நவீன சடங்கு உங்களை இன்னொரு பாரம்பரிய சடங்கிற்கு வழி காட்டிச் செல்கிறது.  போ.  போய் ஈமக்கிரிகைகளைச் செய்து விட்டு நிம்மதியாய் இரு!


17. இந்தக் கதைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது.  சமயங்களும், சடங்குகளும், உளப்பகுப்பாய்வுகளும், ஜெயமோகன் போன்ற கதைசொல்லிகளும் இந்த பரிமாணத்தைப் பெரும்பாலும் கண்டு கொள்வது இல்லை.  உண்மையிலேயே அப்பாவைக் கொன்றது அவ்வளவு பெரிய குற்றமா?  அதற்காக இத்தனை குற்றவுணர்ச்சி அடைய வேண்டியது அவசியமா?


18. இந்தக் கேள்விகள் உங்களுக்கு முரட்டுத்தனமாகத் தோன்றலாம்.  இப்படிக் கேட்டுப் பாருங்கள் அப்படித் தோன்றாது:  அரவத்தின் சொல் கேட்டு ஏவாள் கனியை உண்டது அத்தனை பெரிய பாவமா என்ன?  அதில் பாதியை காதலோடு ஆதாமுக்கும் தந்ததை சாவுக்கு நிகரான பாவம் என்று தான் சொல்வோமா?  அப்பாவின் அப்படியொரு கட்டளை மீற வேண்டிய ஒன்றல்லவா?  அதாவது, அப்பா கொல்லப்பட வேண்டியவர் இல்லையா?  நியாயமான கொலைக்காக யாராவது வருத்தப்படுவார்களா?


19. ஏவாள் நிஜமாகவே துணிச்சல்காரி.  அநீதியான அப்பாவின் வார்த்தையை மீறிய கலகக்காரி கூட.  அவள் தான் நிர்வாணத்தைக் கண்டு பிடிக்கிறாள்.  அதற்கு முன் நிர்வாணத்தை அறிந்தவர் அப்பா என்ற கடவுள் மட்டுமே.  கடவுளுக்குப் பெண் மீது அதனாலேயே கோபம் என்கிறது கிறிஸ்தவம் - பெண்கள் எப்பொழுதும் கடவுளாக முயற்சிக்கிறார்கள்.  ஆணுக்கோ பெண்ணின் காதலைத் துய்ப்பது தவிர வேறு ஒரு எழவும் தெரிவதில்லை.  


‘ஏவாள், மொழியின் மூலமே நிர்வாணத்தைக் கண்டடைந்தாள்’, என்று ஒரு முறை அயோத்திதாசர்  என்னிடம் சொல்லியிருக்கிறார்.  


தமிழில், அமுதமும் உண்டு நஞ்சும் உண்டு என்ற அவரது கோட்பாட்டை முன்வைத்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.   பேச்சு வேகத்தில், ’மொழி தான் மனிதனின் ஆகப்பெரிய சாதனை, தெரியுமா?’ என்றார்.


‘தெரியும்.  ஒவ்வொரு மனிதனும் எந்த மொழியில் சாதிக்கிறானோ அதுவே அவனது சாதி என்று எழுதியிருக்கிறீர்கள்’.


‘அது மட்டும் இல்லை; மொழி ஒரே நேரத்தில் அமிழ்தமாகவும், விஷமாகவும் இருக்கிறது.  நாகக்கனி என்பது ஒரு உவமை.  சிந்தனை பற்றிய உவமை.  அந்த ஞானத்தின் உச்சமே நிர்வாணம் - பரி நிர்வாணம்’ என்றார்.  


பின், ‘அப்படி கண்டடைந்த நிர்வாணத்தைத் தான் ஏவாள் ஆதாமிற்குக் காட்டியிருக்கிறாள்’ என்று என்னிடம் மெல்ல கிசுகிசுத்தார்.


20. அந்தக் கதையின் ஏவாள் பரிமாணத்தையும் ஃப்ராய்ட் தவறவிட்டிருந்தார்.  அவருக்கு மொத்த உலகமும் அப்பாவும் மகன்களும் அவர்களுடைய ஆண் குறிகளுமாக இருந்தது.  


21. அப்பாவைக் கொல்வது மட்டுமல்ல அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு அசைவும்  விலக்கப்பட்ட கனி தான்.  ஆனால் அந்தக் கனியால் மட்டுமே உங்களுக்கு நிர்வாணத்தை வழங்க முடியும்.  அந்தக் கனியை உண்பது மட்டுமல்ல, நிர்வாணத்தை நிர்வாணம் என்று காண்பதும் இதில் முக்கியம். 


22.  அந்த அமெச்சூர் உளவியலாளர் மார்த்தா வழியாக, மனக்குழப்பங்கள் இல்லாமல் சராசரியாய் வாழ்வது எப்படி என்று விளக்கம் தருகிறார் ஜெயமோகன்.  அதற்கு ஃப்ராய்டு என்றொரு வியாசர் பயன்பட்டிருக்கிறார்.


23. என்னிடம் கேட்டால், ஜெயமோகன் முடித்த இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது என்பேன்.  செய்யாத கொலையை செய்ததாய் நம்பி, சடங்குகள் செய்பவனிடம் சொல்வதற்கு காத்திரமான கதையொன்று இருக்கக் கூடும்.  அல்லது, கொலை செய்த சுவடே இல்லாமல் வாழும் அம்மாவிடம் இருக்கக்கூடும் மகனின் கண்களுக்குப் புலப்படாத ஆயிரம் சலனங்கள்.  


Comments

மிகமிகச் சாதாரணமான கதைக்கு இத்தனை வியாக்கியங்களா? ஜெயமோகன் ஏற்கெனவே ஊதி பெருக்க வைக்கப் பட்டிருக்கிறார். நீங்களும் உங்களின் பங்குக்கு ஜெயமோகன் என்கிற பலூனை ஊதுகிறீர்கள் போலிருக்கிறது. எதிர்மறை விமர்சனங்களும் ஒருத்தனை பிரபலமாக்கவும் அந்த படைப்பு பலரையும் சென்றடையவுமே பயன்படும். ஜெயமோகன் என்கிற பிரபலம் எழுதிய கதை என்பதால் தான் ஆனந்தவிகடன் இதை பிரசுரித்திருக்கிறது. பிரபலம் இல்லாத மேலும் ஆனந்தவிகடனின் ஆசிரியர் குழுவிற்கு அறிமுகமில்லாத வேறு யாராவது இந்த மாதிரியான ஒரு கதையை எழுதி அனுப்பியிருந்தால் அவர்கள் வாசித்துப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகந்தான்.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக