Skip to main content

Schizo's Stroll

இன்று காலையில் நான் யோசித்திருக்கக்கூடாது. பேசாமல் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கவேண்டும்.
வழக்கமாய் காலைகளில் நான் யோசிப்பது இல்லை. அந்நேரம் தான் எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதால், ட்ராபிக் அதிகமாகவே இருக்கும். ஆளுக்கு ஆள் குறுக்க மறுக்க போய்க் கொண்டிருப்பார்கள். அதனால் எப்பொழுதும் தவிர்த்து விடுவேன். ஆனால், இன்றைக்கு என்னவோ இப்படி ஆகி விட்டது.
முதலில் இந்த வரி மட்டும் தான் தோன்றியது - ‘சாதி, ஒரு பேச்சு!’
என்னடா இது வம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் அடுத்த வரி வந்து விழுந்தது - ‘சாதி எதிர்ப்பு, ஒரு இரைச்சல்!’
கூடவே மூன்றாவது வரியும் - ‘பிராமணியமோ காட்டுத்தனமான மெளனம்.’
மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது பயம் வந்தது.
‘சாதி ஒரு பேச்சு; சாதி எதிர்ப்பு இரைச்சல்; பிராமணியம் மெளனம்.’
உடனே, ’இந்த நூற்றாண்டின் எதிர்ப்பு அரசியல், இரைச்சலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது தானா?’ என்றேன் நான்.
நான் கேட்டதைக் கண்டு கொள்ளாமல், ‘பிராமணியத்தின் மெளனமும், பேச்சிற்கிடையிலான மெளனம் இல்லை; அது இப்பொழுது எழுத்தில் உருவாகும் மெளனம்!’ என்றேன் நான்.
‘அப்படியானால் இந்த நூற்றாண்டின் அரசியலையும், மெளனத்தின் வரலாறாகத்தான் எழுத வேண்டுமா?’ என்றேன் நான் பதிலுக்கு.
மீண்டும் நான் பேசுவதைக் கவனிக்காதது போல், ‘மெளனத்தின் வரலாற்றை எழுதினாலும், எழுதியதில் இல்லை வரலாறு’ என்றேன் நான்.
எனக்குக் கோபம் தலைக்கேறியது. எத்தனை நேரம் தான் உதாசீனத்தைத் தாங்கிக் கொளவது? ’பேச்சில் உருவாகும் மெளனமும், எழுத்தில் உருவாகும் மெளனமும் வேறு வேறா?’ என்று மட்டும் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு விலகி ஓடி வந்தேன்.
ஆனாலும் என் பின்னால், ‘பேச்சின் மெளனம் ஓசைகளின் இடைவெளிகளில் உள்ளது; எழுத்தின் மெளனம், ஓசைகளைக் கொன்று விடுவதால் உருவாகிறது’ என்று நான் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பது லேசாய் கேட்டது. நான் அதைக் கண்டு கொள்ளாமல் வந்து விட்டேன்.
நிஜமாகவே, காலை வேளையில் யோசிக்கக் கூடாது தான்! 
பேசாமல், சென்னை புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கலாம். ஜாலியாக இருந்திருக்கும். அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...