Wednesday, 23 May 2018

தூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை!

நேற்றிரவும் நான் உறங்கவில்லை. 
ஸ்டெர்லெட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற கிளர்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை விடவும், அதில் கலந்து கொண்டவர்களின் பரிதவிப்பும் நிராதரவான கூக்குரலும் மிக அருகில் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் காலையிலும், என் அருகே யாரோ அலறுவது போலவே இருக்கிறது. 
கடக்க முடியாத நாட்களின் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். 
என்னிடமிருந்த கடிகாரம் நின்று விட்டது. காலம் உறைந்து விட்டதாய் எனக்குச் சொல்கிறார்கள். 
உறைந்து விட்டது என்றால், ஏன் ஒரே மாதிரியான சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடக்கின்றன என்று நான் கேட்டேன். 
தாமிரபரணியிலும் இப்படி நடந்தது; பரமக்குடியிலும் இப்படி நடந்தது; மேலவளவிலும் இதே தான்; ஈழத்திலோ அரக்கத்தனமாய் நடந்தது. காலம் உறைந்தது என்றால் இவையெல்லாம் எப்படி சாத்தியம்? அப்படியானால், ஒரே இடத்தில் காலம் சுழல்கிறதா, ஒரு கடிகாரத்தைப் போல?
ஒரு நாள் என்பது 24 மணி நேரம் இல்லை; அது, நூற்றாண்டுகளாக விரியக்கூடியது என்கிறான் வரலாற்றாசிரியன். 
இந்த நூற்றாண்டு மக்களாட்சியில் விடிந்தது என்பதை அவன் நமக்குத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறான். 
வரலாற்றாசிரியனோடு எனக்கு இது தான் பிரச்சினையே. அவன், எப்பொழுதும் ஒரு கடவுளைப் போலவே யோசிக்கிறான். 
மனிதர்களின் நூற்றாண்டு, வரலாற்றாசிரியனுக்கும் கடவுளுக்கும் ஒரு நொடிக்கு சமானம். 
சலிப்போடு, கொஞ்சம் கோபமாகவே அவனிடம் சொன்னேன்: 
நீயும், உன் கடவுளும் செத்து ஒழியுங்கள்!
இனி நான், வரலாற்றாசிரியனின் பிணத்தையும் கடவுளின் பிணத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்.

*********
ஒவ்வொரு முறையும் மக்கள் நீதியை மட்டுமே கேட்கிறார்கள். ஆனால், மக்களாட்சி அவர்களுக்கு சாவை மட்டுமே வழங்குகிறது. 
கூலியை உயர்த்திக் கொடு என்று கேட்டதற்குத் தான் வெண்மணியும் தாமிரபரணியும். எங்களையும் மனிதர்களாய் நடத்து என்று கேட்டதற்குத் தான் பரமக்குடியும் முள்ளிவாய்க்காலும். சாவதா வாழ்வதா என்று கேட்பது தான் கூடங்குளமும் தூத்துக்குடியும். கொஞ்சம் கூட தயங்காமல், ‘செத்துவிடு!’ என்கிறது ஜனநாயக அரசு. 
அரசு நிகழ்த்தும் எல்லாப் படுகொலைகளுக்கும் ஒரே திரைக்கதை தான். நியாயம் கேட்டு போராடுகிறவர்களே கலவரக்காரர்கள்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும் இறுதியில் கலவரம் வெடித்தது என்று தான் சொன்னது; தாமிரபரணியில், பரமக்குடியில், இன்று தூத்துக்குடியில் என்று ஒவ்வொரு முறையும் அது ஒரே பல்லவியைத் தான் பாடுகிறது. 
‘பொது அமைதியைக் காப்பதற்காகக் கலவரக்காரர்களை சுட்டுக் கொன்றோம்!’.
இதனிடையே, நமக்கு அக்கறையாய் புத்திமதி சொல்வதற்கு நிறைய பேர் வருகிறார்கள். அவர்கள் நம்மிடம் சாத்வீகத்தைப் போதிக்கிறார்கள். அதாவது, அரசு சொல்லும் அமைதியைத் தான் அவர்களும் பேசுகிறார்கள். அறவழிப் போராட்டம், அகிம்சை வழிப் போராட்டம் என்று புதிய மொழியில் பேசத் தொடங்குகிறார்கள்.
கூடவே, புத்தியைப் பயன்படுத்தி போராட்டம் செய்ய வேண்டும் என்று இலவச அறிவுரையும் வழங்குகிறார்கள். 
அதாவது, பெருந்திரள் என்றைக்குமே ஆபத்தானது என்று அவர்கள் மீண்டும் மீண்டும் மறைமுகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 
இதற்கு, அவர்களுக்குக் கிடைக்கும் திருகல் முறுகலான உதாரணம், காந்தி!
பெருந்திரள் ஆபத்தானதா? காந்தி, புத்தியால் ஜெயித்தவரா?

**************

காந்தி, அகிம்சா வழியில் சுதந்திரப் போராட்டத்தை நிகழ்த்தினார் என்பது அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் கட்டுக்கதை. 
ஆனால், உண்மையில் காந்தியப் போராட்டமும் ரத்தக் கறைகள் படிந்தது தான். அவர், ஆயுதம் தாங்கிய படைக்குப் பதிலாக உன்மத்தம் கொண்ட வெகுஜனத்தை திரட்டி வைத்திருந்தார். 
வெகுஜனத்தின் போராட்ட வடிவம், கலவரம்!
அரசு சொல்வது போல, கலவரம் அப்படியொன்றும் மோசமான வார்த்தை இல்லை. அது பெருந்திரளின் இயல்பு. கோலாகலத்திற்கும், குதூகலத்திற்கும், கலவரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. 
தமிழில் ‘கலி’ என்றால் துள்ளல், ஆரவாரம் என்று பொருள். எந்தப் பக்கமிருந்து, எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது கோலாகலமா, கலவரமா என்று முடிவாகிறது.
மெரினாவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நிகழ்ந்த கோலாகலம், இறுதி நாளில் கலவரம் என்று அடையாளப்படுத்தப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டுமே ஒன்று தான். 
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் ‘கலி’, துப்பாக்கியால் சுட்ட மறுகணம் ‘கலவரமாக’ மாறிவிடுகிறது. மகாமகத்தில் ஜெயலலிதாவை பார்க்க வந்த கூட்டத்தின் கலி, ஒரு நொடியில் கலவரமாக மாறியதும் இப்படித்தான். அயோத்தியில் பாப்ரி மஸ்ஜீத்தை தரைமட்டமாக்கப் பயன்பட்ட கலவரமும், ஓர் இந்துக் கோலாகலம் தான்.
காந்தி, நிறைய தருணங்களில் இவ்வெகுஜனக் கலியை நினைத்து கலங்கியருக்கிறார். ஆனால், அது தான் அவரது ஆயுதமும் என்பதால் அந்தக் கலக்கத்தை மென்று விழுங்கி படியே இருந்தார். 
உண்மையில், கலவரம் தான் காந்தியின் வழி.

****************

ஆனால், இன்றைக்கு, அரசும் சரி பிறரும் சரி காந்திய வழி என்று அறிவுறுத்தும் அமைதி வழி, தந்திரத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 
அவர்கள் நம்மை தந்திரக்காரர்களாக இருக்கச் சொல்கிறார்கள். நீதியையும் நியாயத்தையும் கண்டு வெகுண்டு எழுவது மடமை என்று சொல்கிறார்கள். 
நீதிமன்றங்கள் மூலமாகவோ, ஆள் பழக்கம் மூலமாகவோ உங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அதாவது, பிரச்சினைகளை எழுத்தின் மூலமாக (மனு, மகஜர், விண்ணப்பம், மொட்டைக் கடிதம் வகையறா) வெளிப்படுத்துங்கள் என்கிறார்கள். அதாவது, தந்திரமாக தனி நபராக எதையும் எதிர் கொள்ளுங்கள் என்கிறார்கள். 
எஸ். வி. சேகர், ரஜினிகாந்த், கமலஹாசன் வெளிப்படுத்துகிற அரசியலை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள். தந்திரம் என்றால் என்ன என்று விளங்கும்.
தந்திரம், உதிரிகளின் குணம். திரளுவதற்கு வக்கில்லாத உதிரிகள் சூழ்ச்சிகளை பின்னத் தொடங்குகிறார்கள். அதையே திறம் என்றும் சாதிக்கத் தொடங்குகிறார்கள். 
வெகுஜனத்திற்கு தந்திரம் தெரிவது இல்லை. அது உணர்வுகளால் உந்தப்பட்டது. 
அதன் ஆகப்பெரிய எதிர்வினை கலி மட்டுமே! 
ஒரு வகையில் தந்திரங்களற்ற வெகுளி என்று கூட அதை அழைக்க முடியும். அதற்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான், ஆரவாரம். இதை மதம் செய்தால் கோலாகலம் என்றும், அரசியல் செய்தால் கலவரம் என்றும் அரசு வகைப்படுத்துகிறது. 
இந்திய ஜனநாயகம் உதிரிகளால் திட்டமிடப்பட்டது; எனவே, தந்திரங்களின் கூடாரமாக இருக்கிறது. 
அது, முழுக்க முழுக்க வெகுஜனத் திரட்சிக்கு எதிரான அமைப்பு. வேறு யாரையும் விட, காந்தியின் சீடர்களுக்கே பெருந்திரளின் ஆபத்து தெரியும் என்பதால், இந்தியாவில் மக்களாட்சியைத் திட்டமிடுகையில் மிகத் தந்திரமாக ஒரு காரியத்தை செய்தார்கள். 
பெருந்திரளைக் கையாளும் வேலையை மதத்திடம் ஒப்படைத்து விட்டு, மக்களாட்சி என்பதை தேர்தல் நேரத்து அரசியல் கோலாகலமாக மாற்றி விட்டிருந்தனர்.

***************

இந்திய ஜனநாயகத்தில் ‘மக்கள்’ என்ற காரணி ஏன் உருவாகாமல் போனது?
மக்களாட்சி என்பது ஒரு அரசியல் கோட்பாடு. ஒரு தேசத்தை உருவாக்க வேண்டிய அல்லது அதற்கானத் தேவையை வெகுஜனத் திரள் உணரும் பொழுது கட்டமைக்கப்படும் நவீன அரசியல் அமைப்பு அது.
ஒரு நிலப்பரப்பில் வாழும் வெகுஜனத்திரள், சமத்துவமான நியாய தர்மங்களில் நம்பிக்கை கொள்ளும் பொழுது தன்னை ‘மக்கள்’ என்று உணரத்தொடங்குகிறது. அன்றைக்கு, அம்மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் தன்னுணர்வைப் பெறுகிறார்கள். 
இந்திய தேச உருவாக்கத்தில் தவற விடப்பட்ட மிக முக்கியமான தருணம் இந்த ‘மக்கள்’ என்ற உணர்வு தொடர்பானது. ஆங்கிலேயருக்கு எதிரான எந்தவொரு போராட்டமும் ‘மக்கள்’ என்ற நவீனக் கூட்டத்தால் முன்னெடுக்கப்பட்டது இல்லை. காலம் காலமாக, மதங்கள், திருவிழா என்ற பெயரில் திரட்டி வைத்திருந்த வெகுஜனக் கூட்டத்தையே காந்தியும் பிறரும் ‘மக்கள்’ என்று சொல்லி வைத்திருந்தனர். 
இதன் விளைவாகவே, ஒவ்வொரு முறை தாழ்த்தப்பட்ட பிரிவினர் உரிமை கேட்டு திரளும் போதும், இந்திய வெகுஜனத்திற்கு அதிலிருக்கும் சமத்துவ வேட்கை விளங்காமலேயே போயிற்று. வெண்மணியிலிருந்து தொடரும் பல்வேறு உரிமைப் போராட்டங்களையும் வெகுஜனம் ‘கலவரம்’ என்றே சொல்லி வந்ததற்கானக் காரணமும் இது தான். கூட்டமாகத் திரள்வது என்றாலே அது மதம் தொடர்பான விஷயம் என்பது தான் இந்திய வெகுஜன உளவியல். தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதமாகத் திரளும் உரிமை இல்லை என்பதும் அதன் மூட நம்பிக்கை. 
இதனாலேயே, மக்களாட்சியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் தேர்தலில் தவறாமல் ஓட்டுப் போடுவது என்றும் சொல்லப்பட்டது. அதுவும் ஒரு, சுழற்சி திருவிழா. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய திருவிழா. அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதுடன் வெகுஜனத்தின் ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. 
இன்றைக்கும், ஜல்லிக்கட்டுப் பிரச்சினை, நீட் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, நியுட் ரினோ பிரச்சினை என்று எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, ஆட்சி மாற்றம் தான் என்று யோசிப்பதன் காரணமும் இது தான். அதாவது, ஆட்சியாளர்களால் தான் இவ்வளவு சிக்கல்களும். வேறு ஆட்சியாளர்களைக் கொண்டு வந்து விட்டால் எல்லாம் ஒரே நாளில் சரியாகி விடும் என்று நம்புவது தான் வெகுஜனத்தின் இயல்பு. அதாவது, உடனடியாய் தேர்தல் திருவிழாவை நடத்தி விட வேண்டும். நாட்டிற்குப் பிடித்த பீடை விலகி விடும் என்ற பாமர நம்பிக்கை இது.

*************

‘மக்கள்’ என்ற விழிப்புணர்வற்ற பெருங்கூட்டத்தை மக்களாட்சியில் எது தக்க வைத்துக் கொண்டிருக்கிறது?
மக்கள் என்ற நவீன அரசியல் அடையாளமாகவும் தமிழர்கள் உருமாறவில்லை; அதே நேரம், மத அடையாளங்களோடும் ஒன்றிணையவில்லை. அப்படியானால், தமிழக வெகுஜனத்தை எது திரட்டுகிறது என்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில் தான் - கவர்ச்சிகரமான தலைமை!
அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரையில் தமிழகம் கண்டிருந்த தலைமைகள் வெகுஜனத் திரட்சியின் அடையாளமாகத் தங்களைத் திறமையாக முன்னிறுத்தி இருந்தனர். ஜெயலலிதா இருந்த வரையில், அரசியல் ரீதியாய் தமிழர்களுக்கு எந்தவொரு இடர்பாடும் இல்லை - தமிழர்களின் மாபெரும் அரசியல் இடர்பாடே மத்திய இந்திய அரசை எதிர்கொள்வது தான்! இதை இந்தத் தலைமைகள் நாடகத் தன்மையோடு மிகச் சிறப்பாகவே செய்து வந்தனர்.
எந்தவொரு அரசியல் நெருக்கடி என்றாலும் - தமிழ் வெகுஜனத்திற்கு பெரிய நெருக்கடி இந்தி, காவிரி, ஈழம், திரைப்படம்கள், ஜல்லிக்கட்டு மட்டும் தான் - இந்தத் தலைமைகள் மத்திய அரசை எதிர்ப்பதும், கடிதம் தீட்டுவதும், நெருக்குவதும், மிஞ்சிய தருணங்களில் உண்ணாவிரதம் இருப்பதும் என்று நிகழ்த்திய வேடிக்கைகள் மட்டுமே போதுமானதாக இருந்தது. 
அமைப்பற்ற தமிழக வெகுஜனத் திரளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் இந்தத் தலைமைகள். இவர்களே அக்கூட்டத்திற்கு முகம் தந்தனர். அண்ணா, கலைஞர், புரட்சித் தலைவர், அம்மா என்று தமிழக வெகுஜனம் புளகாங்கிதம் அடைந்ததன் காரணம், எந்தவொரு அரசியல் கடமையும் இன்றி தான் வழக்கம் போல தான்தோன்றித்தனமாகவே திரிய முடியும் என்ற நம்பிக்கை தான். 
அம்மா இறக்கும் வரையில், கலைஞர் முதுமை அடையும் வரை தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் நெருக்கடியும் வந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் மேலிப்பவன் பார்த்துக் கொள்வான் என்ற அசாத்திய எண்ணம்.
இந்தத் தலைமைகள் ஒரு வகையில் உருவமற்றிருந்த தமிழக வெகுஜனத்திற்கு வடிவம் தந்தார்கள் என்றாலும், இன்னொரு வகையில் தமிழர்கள் மக்களாக உருமாற்றமடைவதையும் தடுத்தே வந்தனர்.

**************

தமிழகத்தில் ‘வெகுஜனங்கள்’ தான் உண்டு; ‘மக்கள்’ இல்லை. 
மக்களே அரசியல் விழிப்புடையவர்கள். அவர்கள் மக்களாட்சியின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அதனை முன்னிட்டு, தத்தம் வாக்குரிமையை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.
வெகுஜனத்திற்கு அரசியலெல்லாம் தெரியாது. தன்னை அரசியல் நீக்கப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் அதற்குப் பெருமையும் கூட. பண்பாடும் மதமுமே வெகுஜனத்தை ஒழுங்குபடுத்துகின்றன. சுத்தமான மூடநம்பிக்கைகளால் செய்யப்பட்டது. 
இருபதாம் நூற்றாண்டில், தமிழக வெகுஜனம் ஒரு மாபெரும் சங்கடத்தை எதிர் கொண்டது. அந்த சங்கடம், பெரியாரின் கடவுள் மறுப்பு. அவர் பேசிக் கேட்டால் சரி என்றே தோன்றுகிறது; கடவுள் இல்லை தான். ஆனாலும், ஒரு வெகுஜனமாய் வழிபாடு இல்லாமல் எப்படி வாழ்வது என்று தமிழர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 
இதுவொரு இருதலைக்கொள்ளி நிலை. தன்னை இயக்குவது மதம் என்று அதற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் பெரியார் பேசிய நாத்திகம் அதற்குத் தேவைப்பட்டது. அதில் பிரதானமாய் இருந்த பிராமண எதிர்ப்பு அது விரும்பவே செய்தது. இந்தச் சிக்கலிலிருந்து தமிழக வெகுஜனத்தை சினிமாவே மீட்டெடுத்தது. வழக்கமாய் வெகுஜன பராமரிப்பில் பண்பாட்டோடு இணைந்து மதம் என்ன வேலையைச் செய்யுமோ அதை சினிமா செய்தது தான் யாருமே எதிர்பாராத தற்செயல்!
சினிமா, வெகுஜனத் தமிழர்களின் சமயமாக மாறியது இப்படித்தான். இந்தியா முழுமையும் மத வெறியில் மூழ்கியிருந்த போது, தமிழர்கள் சினிமாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தது இப்படித்தான். அவர்களது அவதார புருசர்கள் சினிமாவிலிருந்து வந்தார்கள். தமிழ்ச்சினிமா அந்த வகையில் இயங்கும் (பண்பாடு) காலமாக (சமயம்) இருந்தது.
மக்களாட்சி பற்றிய தமிழர்களின் புரிதல் இவ்வளவு தான். 
ஆனால், 2017ல் இந்த நடைமுறையில் பெருங்கோளாறு ஒன்று வந்து சேர்ந்தது.
தலைவர்கள் காலாவதி ஆயினர்.

************

ஜெயலலிதாவின் மரணத்தையும் கலைஞரின் சுகவீனத்தையும் தமிழக வெகுஜனம் நிச்சயமாய் எதிர்பார்திருக்கவில்லை. இதன் வெளிப்பாட்டையே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நாம் பார்த்திருந்தோம். 
அந்தப் போராட்டத்தைக் கவனித்திருந்தீர்கள் என்றால் ஒரு விஷயம் விளங்கியிருக்கும். அது, ஆரம்பித்த பொழுது யார் இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இறுதியிலும் இருந்தார்கள். எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி, திடீரென்று கிளம்பி வந்த சிறு குழுவினர் தான் அதை ஆரம்பித்தார்கள்; அவர்களே இறுதியில் கடலுக்குள் இறங்கி நின்று போராட்டத்தை விட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில், அந்தப் போராட்டம் உலகக் கவனத்தைக் கவர்ந்து, ஊடக வெளிச்சம் அடைந்து, பிரபலங்களின் வருகையால் உற்சாகமடைந்த பொழுது ஒரு பெருங்கூட்டதைப் பார்த்தோமே, அது தான் நான் இத்தனை நேரமும் பேசிக்கொண்டிருக்கும் தமிழக வெகுஜனம். அந்த வெகுஜனம், ஒரு கோலாகலம் போல மெரினாவிலும் தமுக்கத்திலும் இன்னும் பல நகரங்களிலும் போராட்டத்தைக் கொண்டாடி விட்டுச் சென்றது. 
இந்த வெகுஜனம், நான் ஏற்கனவே சொன்னது போல, மூட நம்பிக்கைகளால் மட்டுமே செய்யப்பட்டது. அதன் புராணங்கள் சினிமாவிலிருந்து செய்யப்படுகின்றன. அதன் அகராதியில், அரசியல் என்றால் சாக்கடை என்று அர்த்தம். மொத்த பாரத்தையும் ஒன்றிரண்டு தலைவர்கள் மீது சுமத்தி விட்டு, தனது வயிற்றுப்பாட்டிற்காக ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம். 
ஆனால், இந்தக் கூட்டம் தான் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது.

***************

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம், அப்போராட்டத்தின் மீது அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அதனால் பலியான அப்பாவி உயிர்கள் குறித்தெல்லாம் தமிழக வெகுஜனம் கொந்தளித்து எழுமா? ஜல்லிக்கட்டைத் தடை செய்த போது கிளர்ந்தெழுந்த தமிழுணர்வும், அரசியல் தெளிவும் (?) இப்பொழுதும் நடைபெறுமா என்பது தான் என் முன்னிருக்கும் கேள்வி. 
களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் தோழர்களும் சரி, ஆங்காங்கே வாய்க்கிற இடங்களில் தத்தம் எதிர்ப்புணர்வைக் காட்டிக் கொண்டிருக்கும் நண்பர்களும் சரி, அப்படியொரு தருணத்தை உருவாக்குவதற்காகவே மெனக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
முட்டாளாகவும் முரடனாகவும் இருக்கும் அரசு இயந்திரம் கூட, எங்கே அப்படியொன்று நிகழ்ந்து விடுமோ என்று தான் நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே, தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவிக் கொண்டே இருக்கிறது. 
ஆனால், அப்படியொன்று நிகழ்வதற்கான சாத்தியங்கள் என்னவென்று நான் எழுதத் தொடங்கினால், சாத்தியமின்மைகள் தான் வரிசை கட்டி நிற்கின்றன.
1 - இது ஜல்லிக்கட்டு இல்லை; ஸ்டெர்லைட். 
2 - தமிழக வெகுஜனம் சிலாகிக்கிற ‘அமைதியான போராட்டமாக’ இது இல்லை.
3 - அப்பிரச்சினையில் சொல்லப்படுகிற ‘தூய காற்று, தூய நீர், தூய நிலம்’ என்பதை விளங்கிக் கொள்கிற கற்பனா சக்தி வெகுஜனத்திற்கு இல்லை; அதாவது, ஸ்டெர்லைட், கூடங்குளம், கதிராமங்கலம், நியுட் ரினோ எதிர்ப்புகள் வெகுஜனத் தளத்தில் சொல்லாடல்களாக உருவாகியிருக்கவில்லை.
4 - நெய்தல் நிலம் குறித்தும் அம்மக்கள் குறித்தும் பெருந்திரளின் ஞாபகங்களில் தொன்மப் பதிவுகள் எதுவும் இல்லை.
5 - ‘தைப் புரட்சிக்குப்’ பின் அரசு இயந்திரம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொண்டது போல, தமிழக வெகுஜனமும் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறது. 
6 - ஜல்லிக்கட்டு போராட்ட காலத்தில் போல் அல்லாது, இப்பொழுது புதிய தலைமைக்கான போட்டியாளர்கள் களத்தில் தென்படுகிறார்கள். அதனால் வெகுஜனம் அவசரப்பட்டு, விரக்தியில், நிச்சயமாய் தெருவில் இறங்காது.
7 - நீட் தொடங்கி ஸ்டெர்லைட் வரைக்குமான அத்தனை சிக்கல்களையும் அது, உருவாகி வரும் புதுத் தலைமைக்கான பரிசோதனைக் களங்களாக யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. அதாவது, இதுவெல்லாம் வாடிவாசல்கள். ஓடி வரும் காளைகளை அது கவனித்துக் கொண்டிருக்கிறது. 
அவநம்பிக்கையையும், அதைரியத்தையும் என் எழுத்து சுமந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால், இப்போதைக்கு, இதைத் தவிர வேறு எதையும் சொல்வதற்கு எனக்குத் தோன்றவில்லை.
நானும் உங்களைப் போல இது தமிழர்களின் மனசாட்சியை உலுப்பி, அவர்களைப் போராட்டக் களத்திற்கு இட்டு வந்து விடாதா என்று தான் ஆசைப்படுகிறேன். அப்படி நடந்தால், தமிழக வெகுஜனம் பற்றிய என் முடிவுகளை நான் உடனடியாக மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
அப்படி இல்லாத பட்சத்தில், என் கவனமெல்லாம், இந்தப் பெருந்திரளைக் கொல்வது எப்படி என்பது தான்! 
தமிழக வெகுஜனத்தைக் கொல்லாமல், தமிழக மக்கள் வெளியே வரமாட்டார்கள்.
(இப்போதைக்கு முடிந்தது.)

3 comments:

SIVAKUMAR VISWANATHAN said...

அபூர்வமான, ஆழமான அவதானிப்புகள். தமிழர்கள் ஏன் bipolar களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் தலைமையைத்தேர்ந்தெடுக்கும் மிக மிக முக்கியமான பணியில் ஏன் இந்த அசிங்கமான , கவலையூட்டும் மனோபாவம். உங்களைப்போன்ற சமூக அக்கறையும், ஞானமும் , அறிவும் உள்ளவர்கள் என்னதான் தீர்வு என்று நினைக்கிறீர்கள்.?

Anonymous said...

அருமையான அவதானிப்பு. இன்னும் கொஞ்சம் பின் சென்றால் மன்னராட்சியில் இருந்த Dispute ரெசொலூஷன் (Judiciary), Welfare சிந்தனைகள் (அரசியல்) இல்லாமல் இருப்பது தெரிகிறது.

ஸ்டீபன் ராஜ் said...

ஆக மொத்தம் போராடனும் ...கொல்லனும்...இல்ல யாராவது சாகணும்....இதுல காந்திய வேற இழுக்குறீங்க சார்