Sunday, 27 May 2018

ஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்?தமிழகத்தின் ஆகப்பெரிய பிரச்சினை, எல்லாவற்றையும் சம்பவமாக மட்டுமே பார்த்தல்.

தூத்துக்குடிப் படுகொலை விஷயத்திலும் அதுவே நடந்து கொண்டிருக்கிறது.  அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாம்.  அதாவது, தற்செயலாக நடந்ததாம்.  அந்த துரதிர்ஷ்டமும், தற்செயலும் தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டது என்று நம்ப வேண்டுமாம்.  ஆளுங்கட்சி மட்டுமல்ல, அவர்களை எதிர்ப்பவர்களும் இதைத் தான் சொல்கிறார்கள்.

ஆனால், தூத்துக்குடிப் படுகொலைகள் ‘திட்டமிடப்பட்ட விபத்து’ மட்டும் தானா?

‘இல்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும்.  கீழ்வெண்மணி, பரமக்குடி, தாமிரபரணி, மேலவளவு, உஞ்சனை எல்லாம் நமக்கு வெறும் பெயர்கள் அல்ல.  இதே போன்ற ‘திட்டமிடப்பட்ட விபத்துகள்’ நடந்த இடங்கள்.  அதனால், நம் எல்லோருக்குமே தெரியும் -  தூத்துக்குடிப் படுகொலை நிச்சயமாய் ஒரு விபத்து இல்லை.  

அது, தமிழக அரசின் இயல்பு.  இந்த நிமிடம் வரைக்கும் அக்கொடூர குணத்தை நியாயப்படுத்தும் வாதத்தை தான் அரசின் குரலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் கொடுங்கோலனாகத் தான் தமிழக அரசு வளர்ந்து வந்திருக்கிறது.  அதன் இயந்திரங்கள் அப்படித் தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.  

அசமஞ்ச வெகுஜனம் அதன் கொடூரக் கரங்களை நினைத்து எத்தனை தூரம் பயந்திருக்கிறது என்றால், அதைக் கொடூரம் என்று உணர்வதற்கோ அல்லது அப்படி யோசிப்பதற்கோ கூட அது நடுங்குகிறது.  இந்த நடுக்கத்தை மறைப்பதற்காக, அரசின் பயங்கர முகத்தை ஒரு கதாநாயகனின் முகத்தைப் போல அது கற்பனை செய்து கொள்கிறது.

பெருந்திரளுக்கு ஞாபகங்கள் தேவையில்லை.  அது, ஒன்றையொன்று இணைத்து யோசிப்பதும் இல்லை.  கீழ்வெண்மணி அதற்கு ஒரு சம்பவம்; தாமிரபரணி முற்றிலும் தொடர்பில்லாத இன்னொரு சம்பவம்;  அதே போல தூத்துக்குடி யாருமே எதிர்பார்த்திராத வித்தியாசமான சம்பவம்.  இந்த சம்பவங்களுக்கிடையே தொடர்ச்சியில்லை, ஒற்றுமைகள் இல்லை என்பதை வெகுஜனம் ஒரு மூட நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறது.  

வெகுஜனத்தின் இந்த மூட நம்பிக்கையைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  வரலாற்றை நினைத்து வெகுஜனம் நடுங்குகிறது.  

சம்பவங்களுக்கிடையே தொடர்புகள் இருப்பதாய் யாராவது நிரூபித்து விடுவார்களோ என்று கூட அது கிலியடித்துப் போயிருக்கலாம்.  அது அவ்வாறு யோசிக்கப் பயப்படுகிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.  ஆனால், அப்படி பயப்படுகிறது என்றால், அது ஏற்கனவே அத்தொடர்புகளை உணர்ந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனாலும் அப்படி ஒன்றை அது நம்ப விரும்பவில்லை என்றும் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், இந்த விஷயத்தில் எனக்கு அவநம்பிக்கையையும் சலிப்பையும் தருபவர்கள் இந்த வெகுஜனங்கள் அல்ல; நமது மரியாதைக்குரிய அறிஞர்கள், கருத்துரைஞர்கள்.  

இவர்கள் திரும்பத் திரும்ப ஆட்சி அதிகாரத்தை ஒரு மந்திரக்கோல் போல நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அந்தக் கோல் யார் கையில் இருக்கிறதோ அந்த திசையில் அரசு பயணிக்கும் என்று நமக்கு அரசியல் பாடம் நடத்துகிறார்கள்.  இன்றைக்கு அந்தக் கோல் அதிமுகவிடமும் பாஜகாவிடமும் இருப்பது தான் ஒட்டுமொத்த சிக்கலும் என்று நம்மிடம் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  

அதற்காக, நாம் அடுத்தத் தேர்தலின் போது சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  சென்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவான நபர்களை நாம் தேர்ந்தெடுக்காததைக் காரணம் காட்டி ஏளனம் செய்கிறார்கள். 

தவிர்க்கவியலா சூழல் போல நமக்கு வாய்த்த அத்தனை அறிஞர்களும் திமுக அனுதாபிகள்!  அனுதாபி என்பது தான் எத்தனை சோகமான வார்த்தை.  ஆனால், கட்சி சார்பானவர்களை இப்படித் தான் தமிழில் சொல்கிறார்கள்.

இது தான் சூழல்.  எனவே, இரண்டே இரண்டு விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன்.
1. எந்தவொரு நிகழ்வையும் சம்பவமாகப் பார்க்காதீர்கள்; அதன் பின்னிருக்கும் பொதுத் தன்மைகளைப் பாருங்கள்.  ஏனெனில், தூத்துக்குடிப் படுகொலை என்ற சம்பவம் தற்செயல்களால் அல்ல, நிரந்தரமான அரசு இயந்திரங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும் நான் இதையே தலையாய் அடித்துக் கொண்டேன்.  அது ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைப் பிரச்சினை அல்ல, மாநில இறையாண்மை என்ற பொதுப்பிரச்சினை என்று தனி மரமாய் நின்று கத்திக் கொண்டிருந்தேன்.   

அதையே தான் இப்பொழுதும் சொல்கிறேன் - இது தூத்துக்குடி என்ற ஒற்றை நகரின் பிரச்சினை அல்ல, இது போன்ற ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்தையும் ஒடுக்க நினைக்கும் அரசாங்கக் கட்டமைப்பின் பிரச்சினை.  அதிமுகவோ திமுகவோ ஏன் கம்யுனிஸ்டோ இல்லை தெரியாத்தனமாக விடுதலைச் சிறுத்தைகளோ கூட ஆட்சிக்கு வந்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் அடுக்குமுறை ஏவி விடப்படும்;  அது குறித்த வெளிப்படையான உத்தரவாதத்தை அவர்கள் வழங்காதவரை!

2. திமுக அனுதாபிகளாக இருப்பது ஒரு கெளரவம்.  அதாவது, இங்கு நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் வழங்கப்பட்டிருக்கிறது.  நான் உட்பட நிறைய பேர் திமுகவை ஆதரிப்பது, அதன் மீதான நல்லெண்ணத்தால் அல்ல; அதன் எதிரி மீதான கடும் வெறுப்பால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு ஒரு சாதகமான சூழல் இருக்கிறது.  அதாவது, அவர் புதிய தலைமை என்பதால் மிகச் சாதுர்யமாக திமுகவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதப் போவதாக எங்களைப் போன்றோரை நம்ப வைக்க முடியும்.  அதாவது புது ரத்தம் பாய்ச்சுவது, மறுமலர்ச்சி ஏற்படுத்துவது என்று எப்படி வேண்டுமானாலும் இதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அவர் எந்த வகையில் பழைய திமுகவிலிருந்து வேறுபட்டவர் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.  கலைஞர் திமுகவின் எந்தெந்த விஷயங்களுக்காக அவர் பெருமைப்படப் போகிறார், எந்தெந்த விஷயங்களுக்காக வெட்கப்படப் போகிறார் என்பதை நாங்கள் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஸ்டாலினுக்கு இப்படியொரு திமுகவின் புதிய அத்தியாயத்தை எழுதுவதில் ஆர்வம் இருப்பதற்கான அறிகுறிகளை நான் இன்னும் பார்க்கவில்லை.  என்னைப் பொறுத்தவரையில் அவர் திமுகவின் வரலாற்றை வீணே சுமந்து கொண்டிருக்கிறார்.  கலைஞர் பெரும் பாரமென அவர் தோள்களில் அமர்ந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.    ஸ்டாலின் மட்டும் கலைஞரின் மகனாக இல்லை என்ற சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள்.  அப்படியொரு இளம் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் திமுகவில் இந்தப் புதிய அத்தியாயச் சடங்கு என்றைக்கோ நடந்து முடிந்திருக்கும்.

அவர் இன்னமும் நம்பிக்கையான தலைவராக உருவாகாமல் இருப்பதற்கு, இந்தக் ‘கலைஞரின் மகன்’ என்ற அடையாளமே காரணம்.  மக்கள் அவரை ஸ்டாலினாக மட்டுமே பார்ப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.  ஆனால், அவருக்குத் தான் அந்த அடையாளத்தைத் துறந்து வருவதில் தயக்கங்களும் சிக்கல்களும் இருக்கின்றன.

ஸ்டாலின் அப்படியொரு புதிய அத்தியாயத்தை திமுகவின் வரலாற்றில் படைக்கப்போவதாக நிஜமாகவே நம்பியிருந்தால், தூத்துக்குடிப் படுகொலையை ஒற்றை சம்பவமாகச் சுருக்கியிருக்க மாட்டார்.  தாமிரபரணியில் நடந்தது போல இனி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று என்றைக்கோ சொல்லியிருப்பார்.  ‘தூத்துக்குடிப் படுகொலை தமிழகத்தின் நெடுநாளைய சிக்கலின் சமீபத்திய வடிவம்; அதைச் சரி செய்வதற்கு எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்!’ என்று கேட்டிருப்பார்.


3. இது நமது அறிஞர்களுக்கு - தயவு செய்து அனுதாபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

No comments: