Skip to main content

96 - தமிழ்க் காதல் மொழி

ஜானுவைப் பார்த்ததும் ராம் துவண்டு போகிறான்.  மற்றவர்கள் முன்னிலையில் ஜானுவுடன் சகஜமாகப் பேசவோ பழகவோ அவனால் முடிவது இல்லை.  ஜானுவோ படு இயல்பாக இருக்கிறாள்.  

ராம் அடையும் சங்கோஜம் அவளுக்கும் நன்றாகவே தெரிகிறது.  எனவே, கூடுமானவரை  ரகசியமாக அவனோடு பேசத் தொடங்குகிறாள்.  ‘என்னாச்சு?’ என்று ஜாடையிலேயே கேட்பது.  ஒரக்கண்ணால் பார்ப்பது, திரும்பிப் பார்த்து  சிரிப்பது.  அவன் விரும்புகிற பாடலை மட்டும் பாடாமல் அலைய விடுவது. ‘வாய் திறந்து தான் கேளேன்…’ என்று சீண்டுவது.  அவன் பிறர் முன்னிலையில் எதையும் / எதுவும் கேட்க மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.  அதை ரசிக்கவும் செய்கிறாள்.  ஆனாலும், தனது சீண்டல்களை அவள் எங்கும் நிறுத்துவது இல்லை.  

இந்தச் சீண்டல்களுக்கே நாம் ‘காதல் மொழி’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.

காதல், முரண்பட்ட இரண்டு குணாம்சங்களுக்குள் நிகழ்கிறது என்றொரு சொலவடை உண்டு.  96ல் இது ஆணின் சங்கோஜமாகவும், பெண்ணின் தைரியமாகவும் காட்டப்படுகிறது. 



இந்தக் கூச்சம் / தைரியம் என்றால் என்ன?  

ராமின் சங்கோஜத்திற்கானக் காரணங்கள் வெளிப்படையாய்ச் சொல்லப்படுவது இல்லை.  ஆனால், ராம் ஜானுவைப் பார்த்துப் பதுங்குவதை பம்முவதை எல்லோரும் அறிந்திருந்தார்கள்.  ராம், ஜானு உட்பட எல்லோருக்குமே அது ‘காதல்’ என்று விளங்கியது.

தமிழ்த் திரைப்படங்களில் காதல் எப்பொழுதுமே தனிப்பட்ட விஷயம் இல்லை.  அதாவது, இரண்டு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட காரியம் இல்லை.  

தோழர், தோழியர் சூழ்ந்த ஒரு பட்டாளமாகத்தான் காதல் நடக்கிறது.  காதல் அந்தரங்கமானது என்றால், அதைப் பகிரங்கமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழறிஞர்களிடம் கேட்டால், காலங்காலமாகவே இது இப்படித்தான் என்று ‘பாங்கன்’, ‘பாணன்’, ‘தோழி’ என்று சான்றுகள் காட்டக்கூடும்.  தமிழில் காதல் மொழி ஏன் ஒரு குழுவின் மொழியாக இருக்கிறது?  அல்லது, காதலர்களுக்கு இடையே ஒரு பாங்கனோ அல்லது தோழியோ தூது செல்ல வேண்டியிருப்பது ஏன்?  ஒரு துபாஷி போல அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளரைப் போல.  

தலைவன் நினைப்பதை தலைவிக்கும் தலைவி விரும்புவதை தலைவனுக்கும் மொழிபெயர்ப்பதற்கு ஒரு ஆள் தேவைப்படுகிறது என்றால் அங்கே காதல் என்று எதைச் சொல்வது என்று குழப்பம் ஏற்படுகிறது.  ஒருவரையொருவர் உணர்ந்திராத இருவர் தானா தமிழில் காதல் செய்து கொள்கிறார்கள்?

ஆனால், உண்மையில் அந்தத் தூதர்கள் காதலர்களுக்கிடையில் செயல்படுவதை விடவும், நமக்கும் அந்தக் காதல் கதைக்கும் இடையே தான் அதிகமாகத் தூது செல்கிறார்கள்.  காதலர்களை விடவும் பார்வையாளர்களான நமக்குத் தான் அவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.  காதலர்களின் ஒவ்வொரு காதல் பேச்சையும் இந்த மொழிபெயர்ப்பாளர்களே நமக்குக் காதல் பேச்சாக மாற்றிக் காட்டுகிறார்கள்.

காதலி தனது உணவிலிருந்து சில பதார்த்தங்களை காதலனுக்கு வழங்கும் போது, அது குழுவினரின் கைகளுக்குள் மாறி வரும் பொழுதே அது காதல் பரிமாற்றமாக மாறுகிறது.  அப்படி கடந்து வராத வரை அது இல்லாதவனுக்கு வழங்கும் யாசகம்.  அது கருணை அல்ல காதல் என்று சொல்கிறவர்கள் நண்பர்கள்.

நோயிலிருந்து மீண்டு வந்த காதலியை தோழிகளும் பாணன்களும் விசாரிக்கும் பொழுது காதலன் மட்டும் விசாரிக்காமல் தயங்கி நிற்பது தான் காதலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.  

சாதாரண செய்கைகளைக் காதல் செய்கைகளாக நமக்கு மாற்றிக் காட்டுவது காதல் தூதர்களின் வேலை. வேறுபடுத்திக் காட்டுகிறார்கள்.  அந்த வேறுபாட்டை உணர்ந்து கொள்வதன் மூலமே பார்வையாளர்களான நாம் அங்கே காதல் நிகழ்கிறது என்று விளங்கிக் கொள்கிறோம்.  உண்மையில், அவர்கள் காதலர்களுக்கு இடையே அல்ல, காதலர்களுக்கும் நமக்கும் இடையே தான் தூது சென்று கொண்டிருக்கிறார்கள்.  

ஒரு வகையில், அங்கே காதல் இருப்பதாக நாம் அனுமானிப்பதற்கு அந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.  ஆதியிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் காதல் இப்படித்தான் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.  எந்தவொரு படைப்பிலும் காதலர்கள் பார்வையாளர்களான நம்மிடம் நேரடியாகத் தங்கள் காதலைச் சொல்ல முயன்றது இல்லை.  அல்லது, அப்படிச் சொன்னாலும் நமக்கு அது காதலாகத் தோன்றுவது இல்லை.  

காதல் மொழி எப்பொழுதுமே இது போன்ற தூதுக்களால் தான் நிரம்பியிருக்கிறது.  ஒரு மலர், பரிசுப்பொருள், தின்பண்டம் என்று குறியீடுகளால் நிரம்பியிருக்கிறது.  

வகுப்பறையில் எல்லோருக்கும் அவரவர் ஏடுகளைத் தருகையில், ஒருவனுக்கு மட்டும் செல்லமாய் தலையில் அடித்துத் தருவதும், அடுத்திருப்பவனுக்கு முகத்தில் விசிறுவதும் காதலின் வெளிப்பாடாகத் தோன்றுவதற்கு இந்த வேறுபடுத்தலே காரணம்.  அதே போல, நண்பன் கோமாளியாகவும் (பஃபுன்), தோழி விபரமானவளாகவும் சித்தரிக்கப்படுவதும் இதனால் தான்.

சின்னச் சின்ன செய்கைகளையும் காதல் மொழியாக மாற்றிக் காட்டுவதை காதலர்களின் நண்பர் குழாமே செய்கிறது.  எந்தவொரு மொழியிலும் அர்த்தங்களை உருவாக்குவது குறிப்பானோ குறிப்பீடோ அல்ல, அவற்றிற்கிடையேயான தர்க்கமே என்பது போல இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.  சசூரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், அந்த நண்பர் குழாம் ஒரு ‘இடுகுறித்தன்மை’; பியர்ஸின் வார்த்தைகளில் இது ‘விளக்கமளிப்போன்’. 

தமிழ்க் காதல் மொழி ஒரே நேரத்தில் இடுகுறித்தன்மையையும் (கோமாளி) விளக்கமளித்தலையும் (தோழி) கொண்டு இயங்குகிறது.  

இதுவொரு முக்கியமான தருணம்.  காதல் மொழியைத் தமிழ் ஆண்மை இடுகுறியாகவும், பெண்மை தர்க்கத்தோடும் அணுகுகிறது.  தமிழ்க் காதலன் தனது கதை சொல்லும் குரலாகக் கோமாளித்தனத்தை தேர்ந்தெடுத்தால், பெண் சூட்சுமத்தைத் தேர்ந்தெடுக்கிறாள்.  இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வதானால், ஆண்மை இடுகுறியாகவும், பெண்மை விளக்கங்களோடும் காதலை அர்த்தப்படுத்துகிறது.  

சசூரின் ஆண் மொழியியல், மொழியின் தடைகளைக் கடந்து, அது மறைத்து நிற்கும் நிஜத்தைக் கவனப்படுத்தவே பெரிதும் விரும்புகிறது.  அதாவது, வார்த்தைகள் மேகம் போல உண்மையின் மீது கவிந்திருக்கின்றன என்று அது கருதுகிறது.  மொழியின் பயன்பாடே அம்மூடாக்கை விலக்குவது தான்.  அது தான் உண்மைக்கான தேடலும் கூட.  

பியர்ஸின் பெண் மொழியியல், மொழியைத் தடையென யோசிப்பது இல்லை.  வார்த்தைகள் உருவாக்கும் அர்த்தமும் தனது அங்கமே என அது யோசிக்கிறது.

காதலியின் உள்ளக் கிடக்கையை தோழியே (விளக்கமளிப்போள்) பெரும்பாலும் வெளிப்படுத்துகிறாள்.  அவள் வேறு தோழி வேறு இல்லை.  

காதலனுக்கோ, தோழன் ஒரு பஃபுன் (இடுகுறி).  மீறி, தன் உணர்வைப் பேச வேண்டி வந்தால் தன் நெஞ்சோடு பேசிக் கொள்கிறான்.  காதலியின் அந்தரங்க உணர்வுகளைப் பேசுகிறவளாகத் தோழி உருவாக்கப்பட்டாள் என்றால், காதலனின் அந்தரங்கத்தை அவனே தன் மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்.

தமிழகக் காதல் மொழியை ஆண் ஒரு வகையாகவும், பெண் ஒரு வகையாகவும் கையாளுவதன் வெளிப்பாடே 96ல் ஜானுவுக்கும் ராமிற்குமான வேறுபாடுகள்.  

ராமிற்குக் காதல் மொழி ஒரு சராசரி ஆணுக்கானதைப் போல கடந்து செல்ல வேண்டிய பொய்யாகவே தெரிகிறது.  அவன், காதல் மொழியைப் பேசுவதற்குத் திக்குகிறான்.  அல்லது அம்மொழியை அவன் கற்றுக் கொள்ளவே இல்லை. காதல் அவனைப் பொறுத்தவரையில் ஒரு பொய்.  எல்லோரும் ஏற்றுக் கொண்ட பொய்.  அது, காமத்தைத் தான் வேறு வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.         

ஜானுவைப் பிறர் முன்னிலையில் கண்டதும் ராம் அடையக்கூடிய பதட்டம் அவனை ஒரு நோய் போல் பற்றியிருப்பதன் காரணமும் இது தான்.

ஜானு ஒரு முறை தற்செயலாய் ராமைத் தொட்டு விட தாங்க முடியாமல் மயக்கமடைகிறான்.  ஜானுவோ ராமின் இதயத்தைத் தொடுகிறாள், ராமிற்கோ அது பெண்ணின் ஸ்பரிசமாகத் தெரிகிறது.  இந்த மயக்கம், 22 வருடங்கள் கழித்தும் ராமிற்கு ஏற்படுகிறது. 


தமிழ் ஆண்கள் காதல் மொழியைப் பேசத் திக்குவதும், பெண்கள் சரளமாகப் பேசுவதும் ஏன்? 

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக