Skip to main content

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை?



சுபிட்ச முருகனின் அடிப்படையான சிக்கல் உடலுறவு.  இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், உடலுறவுக்கு முன்னும் பின்னும் தோன்றும் மன மாறுபாடுகள்.  உடலளவில் தோன்றும் கோளாறுகளுக்கு ஊழ்வினை தான் காரணமோ என்று கதாநாயகன் குழம்பிக் கொள்கிறான்.   அவ்வூழை அறுத்தெறிவதற்காக பழனி மலைக்கு வந்து சேர்கிறான்.  எச்சில் சாமியார் மேற்பார்வையில் முருகனின் அருளும், வாக்கும் அவனுக்குக் கிடைக்கிறது.  ‘போய் விவசாயம் பண்ணு!’ என்று முருகன் அவனுக்கு அருள் சொல்கிறார்.     அவனது உடலுறவுச் சிக்கல் இப்படியாகத் தீர்த்து வைக்கப்படுகிறது.



************
தமிழில் வேளாண்மை, வன்கலவி போலவே கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  அதுவும், ஆண்மை மேலோங்கிய வல்லுடலுறவு.  இதற்கு எதிரிணையாக, கேரளத்தை சாக்காகக் கொண்ட பெண்மை மேலோங்கிய சம்போகம் என்ற கற்பனையும் நம்மிடம் உண்டு.  வேட்டையை விடவும், மீன்படித்தலை விடவும் அதிகபட்ச பெண் பங்களிப்பைக் கொண்ட விவசாய உணவு உற்பத்தி முறையை ஆண் குணமாகக் கற்பனை செய்வதற்கே நமது மரபு பழக்கியிருக்கிறது.

வேளாண்மை குறித்து நமக்கு நினைவிலிருக்கும் சித்திரங்களை யோசித்துப் பாருங்கள்.  குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட உழுத வரிகள் ஓடிய, ஒரு சம்போகத்திற்குப் பின் அயர்ந்து உறங்கும் பழுப்பு நிறக் கரம்பை நிலம்;  காளை பூட்டிய ஏரோடு சேறு கலங்கிய நிலத்தை முயங்கும் உழவன்;  ருதுவடைந்த குதூகலிப்போடு சிரித்து மயக்கும் பச்சை வயல்; நிறைமாதக் கர்ப்பத்தை சுமந்த களைப்பில் புசு புசுவென மூச்சு வாங்கும் அறுவடைக்குத் தயாரான வயல்;  பிரசவ கவிச்சு வீசும் அறுவடை முடிந்த வயல்.  உடலுறவை ஆணின் வன்கலவியாகக் கற்பனை செய்வதற்கு வேளாண்மை ஒரு சந்தர்ப்பம்.  

அஞ்ஞாடியில் பூமணி இன்னும் ஒரு படி மேலே போய், விவசாயமே மனித சமூகத்தை ஒருபால் காதலிலிருந்து இருபால் காதலுக்குப் பழக்கியது என்கிறார்.  அதாவது, வேளாண்மை உடலுறவை உற்பத்தி சார்ந்து யோசிக்கப் பழக்கியது.  உடலுறவில் செலவிடப்படும் உழைப்பே குழந்தை என்ற வணிகப்பொருளாக மாறுகிறது என்ற யோசனை இதன் விளைவு.  

உழவே வேளாண்மை என்பதை விட மிகச் சிறந்த முட்டாள்குறுக்கம் வேறு இல்லை.  ‘உழுதுண்டு வாழ்வார்’ என்பதும் அப்படியொரு அலட்சிய சொற்சேர்க்கை.   இந்த முட்டாள்தனமும், அலட்சியமுமே விவசாயம் குறித்த பொது அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்கிறது.  பள்ளுப்பாடல் வரைக்கும் வயல்ப்புறம் காமத்தைத் தான் கிளர்த்தியிருக்கிறது.  காமம் என்பது ஆணின் மாபெரும் உழைப்பு.  அந்த வெள்ளாமையைச் சிந்தாமல் சிதறாமல் வீடு கொண்டு வந்து சேர்ப்பதே பெண்மை.

உடலுறவிற்கும் வேளாண்மைக்கும் கற்பித்துக் கொண்ட ஒற்றுமைகள், வெள்ளாமையை சம்போகத்தின் குறிப்பானாக மாற்றியமைத்திருக்கிறது.  உழுதல், நீர் பாய்ச்சுதல், வீடு வந்து சேரும் வெள்ளாமை, வீடு வந்து சேரா வெள்ளாமை என்று அதன் பின் விவசாயம் குறித்து சொல்லப்பட்ட அத்தனையும் உடலுறவையும் பற்றியது.  

உடலுறவை விளைச்சல் கொண்டு தீர்மானிக்கப் பழகியதே வேளாண் பண்பாட்டின் ஆதாரக் கோளாறு.  உடலுறவு என்பது ஆண் - பெண் தொடர்பானது, கர்ப்பமே உடலுறவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணி, குழந்தைப் பேறே உடலுறவின் ஆகப்பெரிய சாதனை என்ற நம்பிக்கைகள் பண்பாட்டின் ஆதார சுருதிகளாகத் தேவைப்பட்டதால், உடலுறவை யதார்த்தமாக எதிர்கொள்ளும் வாய்ப்புகளை நமது சமூகம் தொடர்ந்து தவறவிட்டது.

இன்னொரு வகையில், வேளாண்மையை உடலுறவின் மெய் நிகர் தோற்றம் என்கிறது பண்பாடு.  அதாவது, பண்பாட்டைப் பொறுத்தவரை ஆணின் வன்முறையே உடலுறவு.  ஆனால், யதார்த்தம் எப்பொழுதுமே வேறு மாதிரியாக இருந்து வந்திருக்கிறது.  

**************
“ ’இப்பல்லாம் உச்சத்த பாக்க ஏன் தயங்குற? சட்டுன்னு கண்ணை மூடிக்கற’ அவள் கேட்டதும் அப்படியே நின்று விட்டேன்” என்ற வரியில் நாவல் நகரத் தொடங்குகிறது.  உடலுறவின் யதார்த்தம் ஆணின் மீது நிகழ்த்தும் முதல் தடுமாற்றம் இது.    

பாரம்பரிய வேளாண் ஆண்கள் இதை எதிர் கொள்வது இல்லை.  ‘காம வேட்கை’ என்ற பதம் அவர்களைப் பொறுத்த வரை உழவுக்குச் சமம்.  ஆனால், வேளாண் பெண்களில் பலரும் இதற்குப் பின் மனக்கோளாறுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.   திருமணமானப் புதிதில் பெண்களுக்கு பேய் பிடித்துக் கொள்வது தமிழில் ஒரு நாட்டுப்புற வழக்காறு.  உடலுறவு குறித்த யதார்த்தமான கற்பனையும் அது விளைவிக்கும் வேட்கையும் கொண்ட பெண், ஆண் அதனை வன்முறையோடு அணுகும் போது அடையும் உளக்குழப்பங்களுக்கு பேயோட்டுதல் தான் மிகச் சிறந்த மருத்துவமாகச் சொல்லப்படுகிறது.  வழக்காறில் மட்டுமல்ல தமிழக வரலாற்றிலும் பெண்களின் காதல் நோய்க்கு வேலன் வெறியாட்டு தான் ஒரே மருந்து. 

வேளாண் மதிப்பீடுகளில் பழகிய ஆண்களுக்கு உடலுறவு குறித்து எந்தவித மனக்குழப்பங்களும் வந்தது இல்லை.  அப்படியே வந்தது என்றாலும் அதனை நபும்சகம் என்று சொல்லி வைத்தனர்.   காமத்தை வன்முறையாகக் கையாளுவதற்கு ஆண்கள் தடுமாறுவதே இல்லையா என்றால், தடுமாறுவார்கள்; அப்படித் தடுமாறுவது வன்முறையின் கனத்தை இன்னும் அதிகமாகக் கூட்டுகிறது என்பதே உண்மை.  

திரைப்படங்களில் காட்டப்பட்ட எம்ஜியார், அவருக்குப் பின் பாக்யராஜ், தற்போது விஜய் சேதுபதி என அத்தனை பேரின் கதாபாத்திரங்களும் இப்படித் தடுமாறுவதையே தத்தம் காமமாகக் கொண்டிருந்தனர்.  சமீபத்தில் வெளிவந்த 96ல் காதலித்த பெண்ணின் ஸ்பரிசம் பட்டதும் மயங்கி விழும் ஆண், வளர்த்தவரைக் கண்டதும் சுணங்கத் தொடங்கும் ஜல்லிக்கட்டுக்காளை போன்றவர். திரிஷாவிடம் தான் அவர் தடுமாறுவார், மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனம்.  

*************
சுபிட்ச முருகன் நாவலைப் பேசுவதற்கான ஒரே காரணம், இதில் ஆணுக்குப் பேய் பிடித்தாட்டுகிறது.  அந்தப் பேய் ‘மஞ்சள்முகப்’ பெண் பேயாக இருக்கிறது.  பேய் பீடித்த அறிகுறியாக ‘உச்சத்தைப் பார்க்கத் தயங்குதல்’ என்பதும் சொல்லப்படுகிறது.

****************

உடலுறவின் தாத்பர்யங்களை அணுசரனையோடு விசாரிக்கக்கூடிய சொல்லாடலை முதன்முதலாக உளவியலே நமக்குத் தந்திருந்தது.  அதற்கு முன்பு வரை, எந்தவித நுண்ணுணர்வுகளும் அற்ற பண்பாடு, ஒழுக்கம், மரபு, நீதி, அறம் போன்ற கனவான்களே உடலுறவை விளக்கிக் கொண்டிருந்தனர்.  நுண்மையோடு பேசக்கூடிய இலக்கியமும் கூட காதலைக் கடந்து வர சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.  வேட்கை குறித்தும் ஆனந்தம் குறித்தும் பேசிக்கொண்டிருந்த லெக்கன் தான் முதன் முதலில் ‘உடலுறவில் உறவு என்று எதுவும் இல்லை’ என்று சொல்ல ஆரம்பித்தார்.  

உடலுறவு, உண்மையில், இருவரையும் வெவ்வேறாகப் பிரித்து விடுகிறது.  ஈடுபட்ட செயல் ஒன்று தான் என்றாலும், அதன் மூலம் ஒவ்வொருவரும் பெற்ற ஆனந்தம் தனித்தனியானது.  தனித்தனி ஆனந்தம் இருவரையும் வெவ்வேறு மூலைகளுக்கு விசிறி அடிக்கிறது.  உடலுறவு முடிந்ததும் நீங்கள் அடையும் உணர்வு, ஒரு வெற்றிடம்.  இந்த வெற்றிடத்தை காதலே நிரப்புகிறது என்கிறார் லெக்கன்.  

‘உடலுறவுப் பிந்தைய வெறுமை’ என்ற லெக்கனின் கருத்தை பரிசீலிக்கும் பாத்யோ, உள்ளுக்குள் ‘இது, உடலுறவு குறித்த ஆணின் யோசனையோ?’ என்ற சந்தேகத்தையும் அடைந்திருக்க வேண்டும்.  

அதைத் தீர்த்துக் கொள்வதற்காக, இரண்டாம் பாலினத்தில் சிமோன் தி பூவா உடலுறவிற்குப் பின் ஆணும் பெண்ணும் மற்றவர் உடலை அசிரத்தையாக உணர்வதாக எழுதியிருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்.   பெண்களும் உடலுறவுக்குப் பின் வெறுமையையே உணர்கிறார்கள் என்பதற்கு சாட்சி, சிமோன் தி பூவா.  எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை.  உடலுறவின் பின் பெண்கள் அடையும் உணர்வுகளைப் பெண்கள் தான் சொல்ல வேண்டும்.

கர்ப்பம் என்ற பூதத்தைக் கொன்று விட்டால் உடலுறவில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.  அதே போலக் கொண்டாடுவதற்கும் எதுவும் இல்லை.  கொண்டாடுவதற்கானக் காரணங்களை காதலே வைத்திருக்கிறது என்பது தான் லெக்கன் மற்றும் பாத்யோவின் முடிவு.

*************

நமது பண்பாட்டின் சிக்கல் கொஞ்சம் வேறுமாதிரியானது.  நாம் உடலுறவை ஆணின் வன்முறையாகவே கற்பனை செய்திருக்கிறோம்.  ‘ஒரு ஜல்லிக்கட்டுக் காளையைப் போல’ என்பதே நமது வெகுஜன அபிப்பிராயம்.  எனவே, கூடுமானவரை ‘அந்த’ வன்முறையைப் பேசாமலிருக்க நமது இலக்கியங்கள் மெனக்கிடுகின்றன.  அதற்குப் பதிலீடாக காதலைப் பேசியிருக்கிறார்கள்.  லெக்கனும் பாத்யோவும் கவனப்படுத்துகிற சமூகங்களுக்கு உடலுறவிற்குப் பின்னே வெறுமை என்றால், நமக்கு உடலுறவு குறித்த பேச்சே வெறுமையாக இருக்கிறது.  நாம் இந்த வெறுமையையே  காதலால் நிரப்புகிறோம்.

இதனாலேயே நமது பெரும்பாலான காதல் கதைகள் ஆண் வன்முறையாக இருக்கின்றன.  இலக்கியங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி காதல் வயப்பட்ட பெண்கள் ஆணுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதே மிகச் சிறந்த காதல் வெளிப்பாடாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  காதல் வயப்படாத பெண்களை வன்முறையின் மூலம் காதலுக்குள் வீழ்த்துவதும் மரபாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  ஏனெனில், நமக்குக் காதல் என்றால் ஆண்காமம் என்று பொருள். 

**************

சரவணன் சந்திரனின் நாவலில் கதாநாயகனுக்கு உடலுறவு குறித்தே உளக்குழப்பம் ஏற்படுகிறது.  உச்சம் ஏற்படுகையில் எதிர் உடலின் முகத்தை அவனால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.  அனிச்சையாகக் கண்களை மூடிக் கொள்கிறான்.  இதை அவனது எதிர் உடலே அவனுக்கு ஞாபகப்படுத்தும் பொழுது ஏறக்குறைய உடைந்து போகிறான்.  பாரம்பரியத் தமிழ் உடலுறவில் பெண்களுக்குப் பிடிக்கும் பேய்க்கு சற்றும் குறைவுபடாத பைத்தியம் பிடிக்கிறது.    

இந்தக் குழப்பத்திற்கான அடிப்படைகளையும் நாவல் நமக்குக் காட்டித்தருகிறது. நீலப்படங்களில் கண்டிருந்த மெய் நிகர் உடலுறவிற்கும் யதார்த்த உடலுறவிற்குமான இடைவெளியை நிரப்ப முடியாமல் கதாநாயகன் தடுமாறுகிறான்.  மெய் நிகர் உலகில் பெண் உச்சத்தை அடையும் காட்சி அவனும் உச்சத்தை அடைய உதவுகிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படி அல்ல.

உடலுறவில் அடையும் உச்ச ஆனந்தம் எப்பொழுதுமே தற்காதல் தன்மை உடையது என்கிறார் பாத்யோ.  ஒவ்வொருவரும் தனித்தனியே தத்தம் ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.  உடலுறவு நபர்களைப் பிரிக்கிறது என்பதன் அர்த்தமும் இது தான்.  இதனால், கூடுமானவரை எதிருடலை மெய் நிகராகக் கற்பனை செய்யவே ஒவ்வொரு உடலும் விரும்புகிறது.  ஏனெனில், உடலுறவின் நோக்கமெல்லாம் ஆனந்தத்தை அடைவது மட்டுமே, வழங்குவது அல்ல. 

எதிருடல் ஆனந்தத்தை அடைகிறது என்ற யோசனை மெய் நிகர் உலகில் தரும் கிளர்ச்சியை யதார்த்தம் தருவதில்லை.  எனவே, கூடுமானவரை ஆனந்தமடைவதைக் காட்டும் முகத்தைத் தவிர்த்து விட்டு வேறு உடல் அவயங்களில் ஒவ்வொருவரும் கவனத்தைத் திருப்புகின்றனர்.  அந்த அவயங்களே நமக்கு உச்சத்தைத் தருவதாக நம்பவும் விரும்புகிறோம்.  

*************

ஆனால், உச்சத்தின் போது கண்களை மூடிக் கொள்வதற்கானக் காரணமாக சரவணன் சந்திரன் ஒரு ஊழ்வினைக் கதையை நமக்குச் சொல்கிறார்.  அந்தக் கதை நமது பாரம்பரிய ஆண்வன் உடலுறவுக் கதையாக இருக்கிறது.  அதன் பின், மனக்குழப்பங்களுக்கு ஆளான கதாபாத்திரத்தோடு பழனி மலையில் போய்த் தேங்கி விடுகிறது நாவல்.  ஜெயமோகன் முன்னுரையில் சொல்வது போல மெய்யறிதல் நிஜமாகவே திரிபு நிலையாக மாறுகிறது.   ஒரு ஆன்மீக சுற்றுலாவை நமக்கு வழங்குவதோடு நாவல் தோற்றும் போகிறது.  

**********

நாவலில் நிகழும் சம்பவங்கள் எதனுடனும் எனக்கு தாவாக்கள் இல்லை.  அது போன்ற மனப்பிராந்திகளை உடைய இளைஞனுக்கு தமிழ் கூறும் நல்லுலகில் இப்படியெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்களை நான் மறுக்கவில்லை.  அதுவே யதார்த்தமாகவும் இருக்கிறது.  அதே போல, அதில் வரும் எந்தவொரு கதாபாத்திரத்திடமும் நான் இதை விடக் கூடுதலான நுண்ணுணர்வுகளை எதிர்பார்க்கவில்லை.  ஆனால், இப்படியொரு நாவலை எழுதும் தற்கால எழுத்தாளன் எப்படி இத்தனைக் கட்டுப்பெட்டியாக இருக்க முடியும் என்பதே எனது ஆகப்பெரிய சந்தேகமாக இருக்கிறது.

திருமணமானப் புதிதில் பேய் பிடித்துக் கொண்டதாய் சொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கதையை, கோடாங்கி அடித்து, அவளையும் அடித்து, பேயோடு உடன்படிக்கை செய்து, பின் விரட்டி, குணமாகி வீடு திரும்பி மெய்யறிந்தாள் என்று ஒருவரால் கதை எழுத முடியுமா?  சரவணன் சந்திரனால் முடிகிறது.  இடையிடையே, இந்திய ஞான மரபின் சாயல்கள் வேண்டி, எது மூலம், யார் நீ, எது நிர்வாணம், எது நீ போன்ற உள்ளீடற்ற உரையாடல்களையும் எழுத முடிகிறது.  

நமது ஞான மரபு நிச்சயமாய் மெய்யறிதலுக்கான பல்வேறு வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது.  தேடல் குறித்தும் வேட்கை குறித்தும் பல்வேறு உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.  ஆனால், நாவலில் சொல்லப்படுவது போல முருகனை அடிப்படையாகக் கொண்டு மெய்யறியும் ஞானத்தேடல்கள் நிச்சயமாய் நடக்கவில்லை.   

பழனி முருகன் வெகுஜனத் துக்கங்களுக்கான தெய்வம்.  அது பெருவாரியான மக்களின் இன்னல்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறையைக் கொண்டிருக்கிறது.  அதனாலேயே, முருகனின் அறுபடைகளை விடவும் அதற்காக மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைகளே முக்கியத்துவம் பெறுகின்றன.  

யாத்திரைகளின் போது ஒவ்வொருவரும் அடையும் அனுபவம் தான் முருகனின் ஆன்மீகம்; அந்தப் படைவீட்டில் பஞ்சாமிர்தத்தைத் தவிர வேறெதுவும் பெறப்படுவது இல்லை.  இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், அழகின் அல்லது முருகனின் தரிசனம் என்பது நடைவழியில் இருக்கிறது, கர்ப்பக்கிரகத்தில் இல்லை.  

உடலுறவு குறித்து ஒருவர் அடையும் மனக்குழப்பங்களுக்கு முருகன் வழங்கும் அருளாசி வேளாண்மை செய் என்பது தான் என்றால், அது மெய்யறிதல் அல்ல; பண்பாட்டிற்குத் திரும்புதல்; மரபைக் கடைபிடித்தல்; உடலுறவை மறுபடியும் ஆண் வன்முறையாகக் கற்பனை செய்தல்.  

************

நிஜமாகவே அந்தக் கதாபாத்திரம் மெய்யறிய வேண்டுமென்றால், ஊழ்வினையைத் தேடிக்கொண்டிருக்கும் படியோ அல்லது பாரம்பரியத்திற்குத் திரும்பு என்றோ நான் பரிந்துரைக்க மாட்டேன்.  உடலுறவின் போது நிகழும் குழப்பங்கள் முழுக்க முழுக்க உடலுறவின் குழப்பங்களே என்றும் அதனைக் காதலின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்றும் நான் சொல்ல விரும்புவேன்.  மெய்யறிதல் என்பது எதிர் உடலின் வேட்கையை அறிதல் என்பதன்றி வேறில்லை.     

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும...

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார...