Skip to main content

வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?

உயிர்மையில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறதுஒன்று, வெகுஜன இறையாண்மை; இன்னொன்று, பாசிசம்இவ்விரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதே அரசியல் யதார்த்தம் என்று நம் கழுத்தில் கத்தியையும் வைக்கிறது.  

உதறுது தானேஅதைத் தான் அந்தக் கட்டுரையும் விரும்புகிறது.  

இந்தக் கட்டுரை யாருக்காக எழுதப்படுகிறது?’ என்ற கேள்வியில் நாம் ஆரம்பிக்கலாம்நிச்சயமாய் இது வெகுஜனங்களுக்கோ அல்லது பாசிச சிந்தனை கொண்டவர்களுக்கோ எழுதப்பட்டது அல்லகட்டுரை நெடுக,  ‘கற்பிதங்களில் மூழ்கியிருப்பவர்கள்’, ‘பித்தர்கள்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்  பேஸ்மெண்ட் வீக்என்றெல்லாம் நக்கலடிக்கப்படும் சுதந்திரவாத சிந்தனையாளர்களை நோக்கித் தான் அது  பேசிக் கொண்டிருக்கிறது.  

*

வெகுஜன இறையாண்மையின் நியாயத்தை ராஜன், எர்னஸ்டோ லாக்லவ்வின்காலிக்குறிப்பான்என்ற கருத்தாக்கம் கொண்டு விளக்குகிறார்அது மிகச் சரியானதும் கூட. மக்களாட்சி என்ற கற்பனையும் கூட இதையே தான் ஆதரிக்கவும் செய்கிறதுஏதாவதொரு புள்ளியில் அல்லது சில புள்ளிகளில் தான் தலைமை தேங்கி நிற்க முடியும் என்பதில் சுதந்திர வாத சிந்தனையாளர்களுக்கும் எந்தக் குழப்பமும் இருக்கவில்லைஇதற்காக ராஜன் மானிடவியல் தரவுகளைக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் கூட இல்லைபழங்குடி இனங்கள் மட்டுமல்ல, வளர்ந்த நாகரீக சமூகங்களே கூட இத்தகைய நிறுவனக் கட்டமைப்பை மீறி யோசிக்க முடிவது இல்லை.

                               எர்னெஸ்டோ லாக்லவ்

ஆனால், இந்தக் காலிக்குறிப்பானை வாரிசு அரசியலுக்கும் நகர்த்தும் பொழுது தான் சிக்கலே தோன்றுகிறதுஅதற்கு காலிக்குறிப்பான் குறித்து சில அடிப்படையான விஷயங்களை நாம் அறிந்திருப்பது நலம்.

காலிக்குறிப்பான் என்ற கருத்தை லாக்லவ், சசூர் மற்றும் லெக்கனின் மொழியியல் சிந்தனைகளிலிருந்து பெற்றுக் கொள்கிறார்குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையே நிலவும் சந்தேகத்திற்கிடமான உறவை சசூர் குறிப்பிட, அதை வளர்த்தெடுக்கும் லெக்கன், குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்குமான பிணைப்பை விடவும், சக குறிப்பான்களுக்கு இடையிலான உறவு நெருக்கமானது என்று தெரிவித்தார்.  

அதாவது, உள்ளடக்கத்தின் வடிவங்கள் தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனஇந்தப் பிணைப்பை, அக்கூட்டத்திலுள்ள ஏதோவொரு குறிப்பான் தன்னை முற்றிலுமாக குறிப்பீட்டிலிருந்து விலக்கிக் கொள்வதன் மூலம் சாத்தியப்படுத்துகிறதுஒரு மூலைக்கல்லைப் போல.  point de capiton என்கிறார் லெக்கன்.  

இந்த point de capiton க்கு இன்னொரு பெயராக தலைமைக் குறிப்பான் என்பதையும் தெரிவிக்கிறார்கவனத்தில் கொள்ளுங்கள், தலைமைக் குறிப்பான் தன்னை முழுமையாக வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும்!

லெக்கனின் இந்த விஷயத்தை, அலெய்ன் பாத்யோ கணிதவியல் கொண்டும் நிரூபித்திருக்கிறார்கணச்சூத்திரம் அவருக்கு இந்த வசதியைச் செய்து தந்ததுஒவ்வொரு கணத்திலும், அக்கணத்தை கணமாகச் சித்தரிப்பது அதனுள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் வெற்றுக்கணம் தான் என்பது கணச்சூத்திரம்கணமாகத் திரளுகிற எந்தவொன்றுக்குமான விதியும் இது தான்இந்தக் கணிதச்சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே பாத்யோகணிதம் ஒரு மெய்ப்பொருளியல்என்ற அளவுக்கு அதனை விரித்துச் செல்கிறார்

லெக்கன் சொல்லும்  point de capiton அல்லது பாத்யோ சொல்லும் காலிக்கணம் அல்லது லாக்லவ் உருவாக்கும் காலிக்குறிப்பான், மூன்றுமே வெகுஜனம் என்றில்லை எந்தவொரு தொகுதியும் எவ்வாறு உருவாக முடியும் என்பதையே நமக்குக் காட்டித் தருகிறது.  

தெலியூஸ் குறிப்பிடும்சிந்தனையின் வடிவத்தைஇதனோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்அது, மொழியையும் கடந்து செல்கிற பாய்ச்சல்அதாவது, பொருள்கோளியலை மட்டுமல்ல, மெய்ப்பொருளியலை மட்டுமல்ல அதனையும் தாண்டிச் செல்கிற யோசனைஅதனை வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

இங்கு, நமது பிரச்சினை லாக்லவ் சொல்லும் காலிக்குறிப்பான், லெக்கன் சொல்லும் தலைமைக் குறிப்பான், பாத்யோ சொல்லும் வெற்றுக் கணம், மூன்றும் தான்.

காலிக்குறிப்பான் குறித்து விவாதிக்கும் லாக்லவ்வும் மெளவ்வும் இன்னுமிரண்டு விஷயங்களைப் பேசுகிறார்கள்காலிக்குறிப்பான் காலியாக இருப்பதாலும், அதனோடு அதிகாரம் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அக்காலிக்குறிப்பானை ஆக்கிரமிப்பதற்கு எப்பொழுதும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறதுஅதாவது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாய் கைப்பற்றுவதற்கான போட்டி.  

இதில் சிக்கல் என்ன என்றால், அந்த காலிக்குறிப்பானை ஆக்கிரமிப்பது என்றால் நிரப்புவது என்றே அர்த்தம்அப்படி நிரம்பி விட்டால், அது மேற்கொண்டு காலிக்குறிப்பானாக தொடர முடியாமல் போகும்எனவே, ஆக்கிரமித்தும் பலனில்லைஆனால், அதிகாரத்தைத் தக்க வைக்க ஆக்கிரமிக்கவும் வேண்டும்இந்த நிலையாமையே, காலிக்குறிப்பானை காலியாகவும் வைத்திருக்கிறதுஅதற்கானப் போட்டியை உயிரோடும் வைத்திருக்கிறதுஒரு தொகுதி, தொகுதியாக இயங்குவதற்குக் காலிக்குறிப்பான் காலியாக இருப்பது அவசியம்அதை நிரப்புவதற்கு போட்டிகள் இருப்பதும் அவசியம்ஒரு சமூகத்தின் பல்வேறு காரணிகளும் அக்காலிக்குறிப்பானை நிரப்பும் போட்டியில் பங்கு கொள்வதும், அதற்காக பிற காரணிகளோடு முரண்டுவதுமே லாக்லவ்விற்கு முக்கியமாகத் தெரிகிறதுஇந்த முரணையே அவர் புரட்சிகர ஜனநாயகத்தின் அஸ்திவாரமாகப் பார்க்கிறார்.

லாக்லவ் மற்றும் மெளவ் குறிப்பிடும் இன்னொரு விஷயம்தற்செயல்’.  காலிக்குறிப்பானை எந்தவொரு காரணி ஆக்கிரமிக்கிறது என்பது தற்செயலானதாக இருக்கும் வரையில் மட்டுமே அது காலிக்குறிப்பானாக இருக்க முடியும்என்றைக்கு, இந்தத் தற்செயல் தீர்மானிக்கப்பட்டதாக மாறுகிறதோ அன்றைக்கு ஜனநாயக சமூகம் பாசிசத்தை நோக்கி நடைபோடத் தொடங்கி விடுகிறது என்று அர்த்தம்.  

இனி, நாம் நமது பிரச்சினைக்கு வரலாம்ஒற்றை அதிகாரம் மட்டுமே வெகுஜன இறையாண்மை என்பதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லைஅந்த ஒற்றை எது என்பதை முரண்களுக்குப் பின் தற்செயலாய் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே வெகுஜன இறையாண்மையின் அடிப்படைமுரண்களற்ற, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வாரிசுகள் தலைமையை ஆக்கிரமிக்கும் குணம் வெகுஜன இறையாண்மைக்கு எதிரானது என்பதை ராஜன் நன்றாகவே அறிவார் என்று நினைக்கிறேன்.

இந்த நேரம், வாரிசு அரசியல் என்பது நமக்கு புதியது அல்ல என்பதையும் உணரவேண்டும்இந்திய சாதி சமூகம், வெகுஜன இறையாண்மையைக் கொன்ற சமூகம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  

காலிக்குறிப்பான் காலியாக இருப்பதாகவும் தோன்ற வேண்டும் ஆனால், அதே நேரம் அதை தன்னந்தனியே ஆக்கிரமித்துக் கொள்ளவும் வேண்டும் என்பதிலிருந்து சாதிய மனோபாவம் தோன்றுகிறதுஇந்தியாவில் இதை வெற்றிகரமாகச் செய்தவர்கள் பிராமணர்கள் என்பதும் (அதாவது, அவர்களே முதலில் பிராமணம் என்ற காலிக்குறிப்பானை ஆக்கிரமித்தார்கள்), அதன் நீட்சியாக பிறர் அனைவரும் தங்களை தனித்தனி துண்டுச் சாதிகளாக உணர்ந்தனர் என்பதையும், இந்த பிராமண முன்னெடுப்பை, அதாவது அவர்களது காலிக்குறிப்பான் ஆக்கிரமிப்பை எதிர்த்தே திராவிட இயக்கம் செயல்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  

விந்துவின் மூலம் தீர்மானிக்கப்படுவதல்ல அதிகாரம் என்பதே திராவிடத்தின்பிராமண எதிர்ப்புஎன்பதை விளங்கிக் கொண்டால், வாரிசு அரசியல் உருவாக்கும் சீர்கேட்டை நம்மால் உணர முடியும்.   இது காங்கிரஸூக்கு வேண்டுமானால் எந்தவித சங்கடத்தையும் உருவாக்காமல் இருக்கலாம்ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் இதைச் செய்வது திராவிட சிந்தனைகளிலிருந்து முற்றிலுமாய் தன்னை விலக்கிக் கொள்வது ஆகும்சாதி எதிர்ப்பில் ஊறிப் போயிருக்கும் தமிழகத்தில் திமுக வீழப்போகிற படுகுழி இது. (இந்த விஷயத்தைக் குறித்து மேலும் விரிவாகப் பேச நான் விரும்பவில்லைவிரைவில் வெளியாகவிருக்கும் அயோத்திதாசர் பற்றிய எனது நூலில் இதை முழுமையாக எழுதியிருக்கிறேன்.)


வெகுஜன இறையாண்மையை தந்திரமாக வீழ்த்தும் யுக்தியே சாதியம் என்ற திசையில் யோசித்துப் பாருங்கள்காலிக்குறிப்பான்களை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சக்திகள் மூலம் நிரந்தரமாய் நிரப்பி விடுவதும், ஆனால், அவ்வாறு செய்வதை தற்செயல் என்றும் நம்ப வைப்பதே சாதியத்தின் வெற்றிவாரிசு அரசியல் என்பது அந்த வகையில் வெகுஜன இறையாண்மையின் சாதிய வடிவம்இதற்கும் பாசிசத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.  

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக