Skip to main content

தேவேந்திரர் புராணம் - வினாக் கடிதங்கள்.

1


பேராசிரியர் அவர்களுக்கு, ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ கட்டுரையைப் படித்ததும் இதைத் தமிழ்ச் சூழலில் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.  ஒரு ஜாதியின் புராணமாக எடுத்துக் கொள்வது ஒரு பக்கம் நடக்கலாம்.  மதங்கள் தெய்வங்களைக் கொண்டு ஜாதிப்புராணங்களை உருவாகுவது போல இதுவும் ஒரு வகையாக இருக்க முடியுமா என்று நினைக்கிறேன்.  இதிலும், பெளத்தம் வருகிறது என்றாலும், பக்தர்களே இருக்கிறார்கள், புத்தர் வரவில்லை.  அதனால், இறுதியில் பக்தர்கள் அழிவையே சந்திக்கிறார்கள்.  அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரத்தின் வகைமாதிரி இது என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.  அதுவும் ஒரு புராணம் என்றே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.  அந்த வரிசையில் தேவேந்திரர் கதையும் ஒரு புராணமே என்று தோன்றுகிறது.  எனக்கு ஆச்சரியம் அளித்த விஷயம் என்ன என்றால், அயோத்திதாசரின் புராணத்திலும் உங்களது புராணத்திலும் மதம் இருக்கிறது, ஆனால் கடவுள் இல்லையே ஏன்?  ஒரு வேளை, கடவுள் இல்லாத உலகத்தில் மனிதன் எப்படி வீழ்கிறான் என்பது தான் இந்தப் புராணங்களின் உள்ளர்த்தமோ என்று எனக்குத் தோன்றியது.  


அன்புடன்

வெ. சந்திரசேகரன்




2


பேராசிரியர் தர்மராஜிற்கு,

மாற்று வரலாறுகள் புராணங்களிலிருந்தும் எழுதப்பட முடியும் என்பதை ஜான் வான் சினா போன்ற அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  அடித்தள மக்களின் விடுதலை முயற்சியில் இப்படியான மாற்று வரலாறுகளின் பங்களிப்பு அதிகம்.  எனவே, அப்படியொரு முயற்சியைப் பாராட்டவே வேண்டும்.  ஆனால், எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், புராணங்களிலிருந்து வரலாற்றை உருவாக்கலாம் என்பது வரை சரி.  விடுதலைக்கான வரலாறை புராணமாகவே எழுதுவதை எப்படி எடுத்துக் கொள்வது?  


மதியழகன் தணிகாசலம்


3


அன்புள்ள தர்மராஜ், 


பாஸ்டோரல் சமூகத்திற்கும் விவசாய சமூகத்திற்குமான முரண்பாட்டில் தேவேந்திர மக்கள் நிலங்களை இழந்ததாக ஒரு வரலாற்றைக் கட்டமைக்கிறீர்கள்.  இந்த மாதிரியான வரலாற்றுக்கு அயோத்திதாசரை முன்மாதிரியாகக் கொள்கிறீர்கள்.  எனக்கென்னவோ உங்களை வாசிக்கும் பொழுது, அயோத்திதாசரை விடவும் ராகுல சாங்கிருத்யாயனின் சாயலே அதிகம் தென்படுகிறது.  


அன்புடன், ஜி. எஸ். ஞானப்பிரகாசம்


4


பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களுக்கு,


வரலாறு என்றால் அறிவியல்பூர்வமான படைப்பு என்றே நாங்கள் படித்து வந்திருக்கிறோம்.  உங்களது வாதத்தின் படி அது அப்படி இல்லை போலத் தோன்றுகிறது.  அதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் (‘அயோத்திதாசர்’ நூலைப்படித்த பின்பே இதை எழுதுகிறேன்) வரலாறு அறிவியலாக இருப்பதை விடவும் விடுதலைக் கருவியாக இருக்க வேண்டும் என்பதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.  அது சரியாகவே இருந்தாலும், இது போன்ற ஒவ்வொரு சாதியின் வரலாறும் எப்படி விடுதலையைத் தரும்?  சிலர் வீழ்ந்த கதை எழுதுவார்கள், ஒரு சிலராவது மேம்பாட்டு கதையை எழுதுவார்களே, சாதியால் உயர்ந்தோம் என்று எழுதுவார்களே, அப்படி இருக்கும் போது குழப்பம் தானே வரும்.  இதை விளங்க வைத்தால் பயனாக இருக்கும்.


இப்படிக்கு

ராமகிருஷ்ணன் செல்லையா


5


வணக்கம்,


1. //‘
மள்ளர்என்ற புதுஅடையாளத்தை நிறுவுவதற்குக்காட்டிய முனைப்புகள் அதிகம்//

மள்ளர் என்ற புதிய அடையாளத்தை நிறுவ முயலவில்லை. ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட மள்ளர் என்ற அடையாளத்தை மீட்டெடுக்கின்றனர்

ஆதாரம்... 

மள்ளர்/பள்ளர்...

மானூர் ஆசாரிமார் சேப்பேடு, பள்ளு இலக்கியம், மல்லாண்டர் வழிபாடு, அரசு ஆவணம், மக்கள் வாழ்வில்...


2. கட்டுரையில் பல இடங்களில் பிராமணர்களால்தான் தேவேந்திரர்கள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கூறுகிறீர்கள்...

பின் எப்படி பல கோயில்களில் இன்று வரை பிராமணர்களால் தேவேந்திரர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்டம் கட்கட்டப்படுகிறது. தமிழகத்தில் எந்த சாதிகளும் பிராமணர்களோடு கோயில் திருவிழா நடத்துவது இல்லை. ஆனால் தேவேந்திரர்கள் மட்டும் இணைத்து நடத்துவது எப்படி

அதையும் விபாரமாக விளக்கங்கள்.


3. //கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்களப்பிரர்என்ற பெயரோடு நடைபெற்ற சமூக மாற்றம் தேவேந்திரர்களால் முன்னெடுக்கப்பட்டதே//

களப்பிரர் என்பவர் இன்றைய பிள்ளைமார் சமூகம் என பல வரலாற்று அறிஞர்களும் நிருப்பித்த போது, அது தேவேந்திரர்கள் என்பதற்கு என்ன சான்று உள்ளது... விளக்கங்கள்?


4. //தேவேந்திரர்களின் ஆன்ம பலமான பௌத்தத்தை வேரறுக்கும் முயற்சியிலும் இறங்கத் தொடங்கினார்கள்//

கட்டுரையில் பல இடங்களில் தேவேந்திரர்களின் மதமாக பெளத்தத்தை கூறுகிறேர்கள். தேவேந்திரன் என்ற பெயரே அதில் இருந்துதான் வந்ததாக கூறியுள்ளோர்கள். பெளத்தத்திற்கும் தேவேந்திரர்களுக்கும் உள்ள தொடர்பையும்,

பெளத்த துறவியாக தேவேந்திரர்களில் யார் உள்ளனர் என்றும் விரிவாக விளக்கங்கள்?


5. இது திராவிட கோட்பாட்டின் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இந்த கோட்பாட்டின் அடிப்படையில் எழுதுவது சரியான வரலாற்று ஆய்வாக இருக்காது.


இப்படிக்கு


வழுதி பாண்டியன்


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக