Skip to main content

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.)





தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும், தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. 'சாதி' குறித்துப் பரந்த அளவிலும், தீண்டாமை', 'வர்ணம்', 'விலக்கல்', 'தீட்டு' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால், வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும்.


'சாதி' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும், நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர், சாதியத்தின் வேர்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல், 'சாதி'யை அழித்தொழிக்கும் திட்டமொன்றையும் பேசுகிறவர்களாய் காணப்படுகின்றனர். இவர்கள் கட்டமைக்கும் விவாதங்களும், விளக்கங்களும் சாதியத்தின் மீது கொண்டிருக்கும் அடிப்படையான அவநம்பிக்கையிலும், கசப்புணர்விலும், ‘சாதியற்ற சமத்துவ சமுகம்’ என்ற கற்பனையின் ஆதாரத்திலுமே ஒன்றிணைக்கப்படுகின்றன என்பது முக்கியம்.


'சாதி'யை விநோதமான, வேறெந்தவொரு பண்பாட்டிலும் காணக் கிடைக்காத, அரியவொரு ஆராய்ச்சிப் பொருளென நினைக்கும் ஆய்வாளர்களுக்கும், அதன் மீதான வெறுப்பிலும் கோபத்திலும், அதனை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிய நினைக்கும் சிந்தனையாளர்களுக்குமான வேறுபாடுகளைக் சுவனத்தில் கொள்வது அவசியம்.


சாதியை ஆய்வுப் பொருளாகப் பாவிக்கும் ஆய்வாளர்கள், 'சாதி' அன்றாட வாழ்க்கை முறைகளில் எந்தெந்த வடிவங்களிலெல்லாம் வெளிப்படுகிறது என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்யும் முறையியலின் பால் மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால், பல்வேறு தரப்பட்ட காரணிகளால் குறுக்கும் நெடுக்குமாய் சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் இந்திய எல்லைக்குள், மொழி பேதங்களால், நிற பேதங்களால், பருவ நிலை மாற்றங்களால், வாழ்க்கை நிலை வேறுபாடுகளால், தொழில் பேதங்களால், வரலாற்று வேற்றுமைகளால், பண்பாட்டு மாறுபாடுகளினால், இன்னும் நீண்டு கொண்டே செல்லக்கூடிய காரணிகளால் வெவ்வேறு விதமான நடைமுறைத் தன்மைகளைப் பெற்றுக் கொண்ட சாதியமைப்பை, தங்களது துல்லியமான இளவரைவியல் முறையியல்களின் துணையோடு அணுகுகின்ற இவர்கள், கிளர்ச்சியூட்டும் விளக்கங்களை முன்வைக்கும் நபர்களாக அறியப்பட்டுள்ளனர்.


ஒருபடித்தான தரவரிசைக்கான வேட்கையே சாதிய அமைப்பின் பொதுக் குணமாக விளங்குகிறது என்று இருபதாம் நாற்றாண்டின் தொடக்கக் காலங்களில் சொல்லிச் சென்ற சமூகவியலாளர் லூயி டுமோவின் ஆய்வுகளும், அவரைப் பின்தொடர்ந்த ஆய்வாளர்களும் 'சாதியப் படிநிலை' என்ற இந்திய சமூகக் காரணிக்கான வேட்கை மேலிருந்து கீழாக அனைத்து மக்களிடமும் காணப்படுகிறது என்று கண்டெடுத்த விளக்கம், சாதி குறித்த ஆய்வு ரீதியிலான சொல்லாடலில் மாற்றங்களை ஏற்படுத்தியதை விடவும், சாதியொழிப்புச் சொல்லாடலில் விளைவித்த பாதிப்புகள் ஏராளம்.


சாதியொழிப்பை முன்வைத்துக் கட்டப்பட்ட அரசியல் சொல்லாடல், தனது நடைமுறைத் தேவைகளுக்காய் முன்னிலைப்படுத்தியிருந்த 'சாதி ஆதரவாளர்கள்’ - ‘சாதி எதிர்ப்பாளர்கள் என்ற எதிர்மறையானது கருத்தியல் சார்ந்தது அல்லவென்றும். சாதியப்படிநிலை அடுக்கில் ‘சாதி எதிர்ப்பாளர்கள்' என்ற பிரிவிற்கான சாத்தியம் எதுவுமில்லை என்றும், எல்லாச் சாதிகளும் தத்தம் சாதியின் மேலாண்மைக்கான வேட்கையை உள்ளூரக் கொண்டுள்ளன என்றும், ஆகக் கழிசடையான சாதியென்று எதுவுமிருக்கவில்லை, ஏனெனில் எல்லா சாதிகளும் தனக்குக் கீழ் யாரையாவது சுட்டிக் காட்டுகிறது என்றும், 'சாதியம்' தொடர்பான முதல் வகைச் சொல்லாடல் முன்வைத்த கருதுகோள்கள், இருபதாம் நாற்றாண்டின் சமூக அறிவியலில் ஏற்படுத்திய மாற்றங்களை விடவும், சாதிக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த நினைத்த இரண்டாம் வகைச் சொல்லாடலில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தின.


அடிப்படையானதும், இன்றியமையாததும் என்று கருதப்பட்ட 'சாதி எதிர்ப்பு' நிலைப்பாடு மீதான இது போன்ற அறிவியல் சார்ந்த விமர்சனங்கள், சாதியையும், அது சார்ந்த கட்டுமானங்களையும், அதன் வெளிப்பாடான தீண்டாமையையும் பண்பாட்டுக் காரணிகளாகக் கணக்கிலெடுத்து குழம்பிக்கொள்ளும் போக்கினையே பெரிதும் ஆதரித்து வந்தன. 


மிக இயல்பானது என்று தோன்றும் வகையில் 'சாதி'யைப் பண்பாட்டு உருவாக்கம் என்று யோசிக்க முனைந்த ஏராளமான பண்பாட்டு ஆய்வுகள், 'சாதி' என்ற நடைமுறையின் சாதகங்களை (அதாவது அது எவ்வாறு மரபான இந்திய அல்லது தமிழ்ச் சமூகத்தின் உறவுநிலைகளைப் பேணுகிறது. என்றும், வாழ்க்கை வட்டச் சடங்குகளை ஒழுங்கமைக்கிறது என்றும், பொருளாதாரப் பகிர்வை வெவ்வேறு சமூகக் குழுக்களிடையே அகிம்சா முறையில் நிகழ்த்துகிறது என்றும், 'ஊர்', என்ற பாரம்பரியச் சமூகக் கட்டமைப்பை நிர்வகிக்கிறது என்றும்) அகழ்ந்தெடுக்கும் பணியைச் செய்வதும் இருபதாம் நூற்றாண்டு சமூக அறிவியல்களில் நடைபெற்றது.


இந்தியச் சமூகத்தில் மட்டுமே காணப்படக்கூடிய சாதிக் கட்டுமானத்தை மேலும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்கிறோம் என்ற போர்வையில் செய்யப்பட்ட இத்தகைய ஆய்வுகள் இரண்டு முக்கியமான உள்ளீடுகளைக் கொண்டிருந்தன. ஒன்று, ‘பரவலாக எல்லோரும் சொல்வது போல், 'சாதி' என்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான கருத்தாக்கம் அல்ல; அது சில, பல காரணங்களுக்காக ஒட்டு மொத்த இந்தியச் சமூகமும் தனக்கென உருவாக்கிக் கொண்ட பண்பாட்டு நிறுவனம் என்பதால், போற்றத்தக்கக் காரியங்களையும் அது நிகழ்த்துகிறது. எனவே சாதியமைப்பை பன்முகப் பார்வை கொண்டு அணுகுவதே சரியானதாக இருக்க முடியும்.


இரண்டு, ‘சாதியையும் தீண்டாமையையும் இந்திய சமூகத்திலிருந்து வேரோடு பெயர்த்தெறிவது என்றைக்குமே சாத்தியமாகாத கற்பனை. கண்ணுக்குப் புலப்படாத வரலாற்று நிர்ப்பந்தங்களினால் தன்னைச் 'சாதி சார்ந்த சமூகமாகவே' இந்திய நாடு தகவமைத்துக் கொண்டுள்ளது. எனவே, சாதியை ஒழிப்பதென்பது இந்தியச் சமூகத்தைக் குலைப்பதாகும்.


இவ்விரண்டு உள்ளீடுகளில் ஏதாவதொன்றிளை கிரகித்துக் கொண்டதாகவே தற்காலச் 'சாதி' என்ற சொல்லாடல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பியக் கருத்தாக்கங்கள் ஏற்படுத்திய மயக்கங்களும், அவற்றின் மூலம் தருவிக்கப்படும் கண்டுபிடிப்புகள் தரும் குழப்பங்களும், போதாக்குறைக்கு நிகழ்காலச் 'சாதிய இயக்கங்கள்’ விளைவிக்கும் ஏமாற்றங்களும் நிறைந்த இத்தருணத்தில் தீண்டாமையின் தோற்றம் குறித்தும், அதளை வேரறுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அம்பேத்கர் எழுதியுள்ள சில அடிப்படையான செய்திகள் நமக்கு பயனளிக்கக் கூடுமென்ற நோக்கத்திலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.


*


'தீண்டாமையின் தோற்றம்' என்ற தனது ஆய்வை வேறெந்தவொரு சமூகவியல் அறிஞரையும் போலவே அம்பேத்கரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்தே தொடங்குகிறார். மிகவும் குறிப்பாக, 1910-ம் வருடத்திய மக்கள் தொகை அறிக்கையின் முன்னுரையாக எழுதப்பட்ட 'சமயங்களின் அடிப்படையிலான மக்கள் தொகை’ என்ற கட்டுரை அவருக்கு ஆர்வமூட்டுவதாய் இருந்தது. ஏனெனில், அதற்கு முன்பிருந்த வழக்கத்திற்கு மாறாக, இவ்வறிக்கையில் சமயப்பிரிவுகள் வேறு மாதிரியாக வரையறுக்கப்பட்டிருந்தன.


வழக்கமாய், இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், இந்துக்கள் என்றிருக்கும் மரபை மாற்றி, ‘இந்துக்கள்' என்ற பிரிவினர் மேலும் மூன்று உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வகைமையின்படி இந்துக்களில், தூய இந்துக்கள் என்றொரு பிரிவும், ஆவி வழிபாட்டினர் அல்லது பழங்குடியினர் என்று மற்றொரு பிரிவும், தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது தீண்டப்படாதவர்கள் என்ற மூன்றாவது பிரிவும் உருவாக்கப்பட்டிருந்தன.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளால் செய்யப்பட்ட இந்த மாற்றம் குறித்து அம்பேத்கருக்கு மூன்று கேள்விகள் எழுந்தன.  ஒன்று, இத்தகைய புதிய வகைமையை முன்வைக்கும்படி கணக்கெடுப்பு அதிகாரியை எது தூண்டியதுஇரண்டு, முன்வைக்கப்பட்ட புதிய வகைமைக்கான அடிப்படைச் சான்றாதாரங்கள் எவையெவை? மூன்றாவதாக, இந்து மதத்தின் மேற்கூறிய மூன்று உட்பிரிவுகளையும் நியாயப்படுத்தும் காரணிகள் எவையேனும் உள்ளனவா?


தனது முதல் கேள்விக்கான பதிலை அம்பேத்கரால் உடனடியாகவே சொல்ல முடிகிறது. ஏனெனில் 1910 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு முந்தைய வருடத்தில் ஆகா கானின் தலைமையில் இஸ்லாமியக் குழுவொன்று அப்போதைய வைஸ்ராயான மின்டோவைச் சந்தித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்தது. அவ்வறிக்கையில் இவ்வரிகள் இடம்பெற்றிருந்தன: 


'பொதுவாக இந்துக்கள் என்று சொல்லப்படுவோரின் எண்ணிக்கையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களையும், நாகரிக வளர்ச்சியடையாத, ஆவியுலக வழிபாடுகளையுடைய, சின்னஞ்சிறு சமயங்களைச் சார்ந்த மக்களையும் நீக்கிவிட்டோம் என்றால், இந்நாட்டில் இந்துக்கள் என்போரின் எண்ணிக்கையை விடவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்’.


மக்கள் சபைகளிலும், உயர் பதவிகளிலும் இஸ்லாமியர்களுக்குக் கூடுதலான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை உள்ளடக்கிய இவ்வறிக்கை, 'இந்து' என்ற அடையாளத்திலிருந்து ஆவிவழிபாட்டியினரையும், பழங்குடிகளையும், தீண்டத்தகாதவர்களையும் விலக்கி வைக்குமாறு ஏன் கோருகிறது என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாகவே 1910-ம் வருடக் கணக்கெடுப்பு அறிக்கையில் இந்துக்கள் என்ற பிரிவு மூன்று உட்பிரிவுகளைக் கொண்டதாக மாற்றப்படுகிறது.


இத்தருணம், இருபதாம் நாற்றாண்டின் தொடக்கக் காலங்களில் தமிழகத்தில் தீவிரமாக இயங்கி வந்த அயோத்திதாசரின் செயல்பாடுகள் நினைவுக்கு வருவது இயல்பு. மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்து பல வருடங்கள் உருண்டோடிய பின்பு, இஸ்லாமியர்களின் தரப்பிலிருந்து முன்மொழியப்பட்ட ‘இந்துக்கள்' என்ற வகைப்பாடு பற்றிய அடிப்படையான சந்தேகம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1870-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட காலத்திலேயே அயோத்திதாசரால் எழுப்பப்பட்டது. 


மிகச் சுலபமாக, பெருவாரியான இந்தியர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையைக் கண்டு கொண்டு, அதற்கு மாற்றாக அப்பெரும் மக்கள் திரளுக்கு ‘ஆதித்தமிழர்கள்' என்ற சமய அடையாளத்தை முன்மொழிந்த அயோத்திதாசரின் செயல் துணிச்சலும், தரிசனமும் உடையது.


1910-ம் வருட மக்கள் தொகைக் கனாக்கெடுப்பில் ‘இந்துக்கள்' என்ற வகைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கான உடனடிக் காரணம் இஸ்லாமியக் குழுவின் அறிக்கையே என்று சொல்லும் அம்பேத்கர், யாருடைய தூண்டுதலால் அல்லது வேண்டுதலால் இது நிகழ்ந்தது, ஏன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி இம்முடிவை மேற்கொண்டார் என்பதையெல்லாம் விட 'எந்த அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது?' என்பதே முக்கியமான விவாதப்பொருள் என்று தெரிவிக்கிறார். 


அதாவது, ‘இந்துக்கள்' என்ற பிரிவில் ஏற்படுத்தப்பட்ட மூன்று உட்பிரிவுகள் உண்மையில் மத அடிப்படைவாத உணர்வுகளைக் கொண்டிருந்ததாகவே அவர் உணர்ந்தார். 'நூறு சதவிகிதம் உண்மையான இந்துத்துவத்தால் செய்யப்பட்டவர்கள்’,  'அவ்வாறு இல்லாதவர்கள்' என்ற இரு பெரும் பிரிவுகளே இதன் அடிப்படை என்று எழுதினார்.


இதனைத் தொடர்ந்து மிக நிதானமாக தனது ஆய்வை வளர்த்தெடுக்க ஆரம்பிக்கிறார்.  1910-ம் வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் மேற்கூறிய மூன்று வகை இந்துக்களை அடையாளம் கண்டுகொள்வதற்காகப் பத்து விதமான வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சிலவற்றின் துணையோடு ஆவி வழிபாட்டினரையும் பழங்குடிகளையும் அடையாளம் காண முடியும். அது போலவே வேறு சிலவற்றின் மூலம் தீண்டத்தகாத சாதிகள் எவை என்பதையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். உண்மையில் இவ்வழிமுறைகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அலுவலகர்களுக்கு அளிக்கப்பட்ட கையேட்டிலேயே வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அவை வருமாறு:


1. பிராமணர்களின் மேலாண்மையை மறுத்தல்.

2. பிராமணரிடமிருந்தோ அல்லது வேறு ஏதாவதொரு இந்துக் குருவிடமிருந்தோ மந்திர உபதேசம் பெறாதிருத்தல். 

3. வேதங்களை மறுத்தல். 

4. இந்துக் கடவுள்களை வணங்காதிருத்தல்.

5. நல்ல பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாகக் கொள்ளாதிருத்தல்.

6. பிராமணப் புரோகிதர்களை அறவே ஏற்றுக் கொள்ளாதது. 

7. இந்துக் கோயில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதது. 

8. தொடுதலின் மூலமோ அல்லது அருகாமையில் நெருங்கி வருவதன் மூலமோ தீட்டை ஏற்படுத்துதல்.

9. இறந்தவர்களைப் புதைத்தல்.

10. மாட்டு இறைச்சி உண்பதும், பசுக்களுக்கு சடங்குகள் ஏதும் செய்யாமலிருப்பதும்.


மேற்கூறிய பத்து அடிப்படை விதிகளில் பிராமணர்கள், கோவில்கள், பசு போன்றவை தொடர்பான விதிகளை அதிமுக்கியமும் விவாதிக்கப்படவும் வேண்டியவை என்று கருதும் அம்பேத்கர் முதற்கட்டமாக பிராமணர்கள் பற்றிய விதிகளை ஆராயத் தொடங்குகிறார்.


பிராமணர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான உறவு ஒருவழிப்பட்டதல்ல என்பதை அம்பேத்கரால் மிக எளிதாகவே கண்டு கொள்ள முடிகிறது ‘பிராமணர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு மந்திரங்களை உபதேசிப்பது இல்லை' என்பதல்லாமல், 'தீண்டத்தகாதவர்கள் தங்களுக்கு மந்திரம் சொல்லும்படி பிராமணர்களை அனுமதிப்பதில்லை' என்பதே உண்மை. அதே போல, பிராமணப் பூசாரிகள் தீண்டத்தகாதவர்களுக்கு சடங்குகளைச் செய்வதில்லை என்று சொல்வதை விடவும், தீண்டத்தகாதவர்கள் தங்களுக்கென்று தனிப் பூசாரிகளைக் கொண்டுள்ளார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


பிராமணர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான இத்தகைய முரண்பாட்டை ஆணித்தரமாக நிறுவுவதற்காக அம்பேத்கர் ஏராளமான தரவுகளைக் கொண்டு வந்து சேர்க்கிறார். அதில் மிக முக்கியமானது. அபே துபே எழுதிய ‘இந்துப் பழக்க வழக்கங்கள்' என்ற நூலிலிருந்து அவர் காட்டும் குறிப்பு. இக்குறிப்பு, தமிழகத்தைச் சார்ந்த பறையர் இன மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் துபே, பிராமணத் தெருவினுள் தீண்டத்தகாதவர்களை எவ்வாறு அனுமதிப்பதில்லையோ அதே போல் தாங்கள் வசிக்கும் பகுதியினுள் பிராமணர்கள் நுழைவதை பறையர்களும் விரும்புவதில்லை’. பறையர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற சாதிகளான பள்ளர், அருந்ததியர் போன்றோரும் பிராமணர்கள் தங்கள் பகுதியினுள் வருவதை ஆதரிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பகுதிக்கு வருவது பெருத்த ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதுவதாய் துபே பதிவு செய்கிறார்.


இப்பதிவை தனது ஆதாரமாக அம்பேத்கர் குறிப்பிடுகையில் நமக்கு இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. ஏறக்குறைய இதே செய்தியை, இதே போன்ற நேரடிக் கள ஆய்வுத் தகவலுடன் அயோத்திதாசரும் பதிவு செய்திருக்கிறார். பிராமணர்களுக்கும் பறையர்களுக்குமான நெடுங்காலப்பகை இருப்பதாய்க் கருதும் அயோத்திதாசர், அப்பகைக்கான வரலாற்றுக் காரணங்களைத் தேடுவதற்கு முன், அத்தகைய மோதல் இன்றளவும் கிராமப்புறங்களில் நிகழ்ந்து வருவதாய் சொல்லி அதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறார்.


துபேயின் குறிப்புகள், தஞ்சாவூர் கெஸட்டியர் தகவல்கள், மெக்கன்ஸி குறிப்பேடுகளிலிருந்தான தரவுகள் என்று பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு விவாதிக்கும் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையேயான இத்தகைய விரோதப் போக்கின் காரணம் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புவதுடன், அதற்கான பல்வேறு சாத்தியங்களையும் விவாதிக்கத் தொடங்குகிறார். 



'தீண்டத்தகாதவர்' என்று அழைக்கப்படும். மக்கள், பிராமணர்களின் வேதங்களை மதிக்காததையும், அவர்களது மந்திரங்களைப் புறக்கணிப்பதையும், அப்பூசாரிகளைத் தங்களது குடும்ப வைபவங்களுக்கு அழைக்காமல் இருப்பதையும், இன்னும் ஒரு படி மேலே போய் தங்களது குடியிருப்புகளின் அருகாமையில் கூட பிராமணர்களை வரவிடாமல் தடுப்பதையும் கவனிக்கும்பொழுது இன்றைக்கு அவர்கள் மீது படிந்துள்ள 'தீண்டத்தகாதோர்' என்ற அடையாளமே முற்காலத்திலும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை; கடந்த காலங்களில் அவர்கள் 'நொறுக்கப்பட்ட மனிதர்களாகவே' அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது, பௌத்த சமயத்தைச் சார்ந்து, பிராமணிய மேலாண்மையை வரலாற்றில் எதிர்த்தவர்கள் என்பதால் நொறுக்கப்பட்ட மனிதர்களாக வாழ்ந்திருக்க வேண்டுமென்ற வாதத்தை விளக்குகிற அம்பேத்கர் அதன் சாதக பாதகங்களையும் விவாதிக்கத் தொடங்குகிறார்.


மேற்கூறிய வாதம் கருதுவது போல் பிராமணிய மேலாண்மையை மிகக் கடுமையாகச் சாடிய சமயம் பௌத்தம். குறிப்பாகச் சாதியமைப்பை வர்ணக் கோட்பாடாக வலியுறுத்தும் பிராமணியத்தை பௌத்தர்கள் வன்மையாகக் கண்டித்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. பிராமணப் பூசாரிகளை பௌத்தர்கள் என்றைக்குமே ஏற்றுக் கொண்டதில்லை. வெவ்வேறு வரலாற்றுச் சூழல்களில் பிராமணியம் அரசு அதிகாரத்தின் துணையோடு பெளத்தத்தின் மீது அடக்குமுறைகளை ஏவிய போது, பெளத்தர்கள் நொறுக்கப்பட்ட மக்களாகச் சிதறியதும் உண்மை. ஆனால், இவ்வாறு சிதறடிக்கப்பட்ட மக்களே பின்னாளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டனர் என்பது மிக எளிதாகவும் அவசரப்பட்டும் எடுக்கப்பட்ட முடிவாக அம்பேத்கருக்குக் தோன்றுகிறது.


வரலாற்றில் நிகழ்ந்த இவ்வளவு எளிதான மாற்றமா 'தீண்டாமை' என்ற மாபெரும் கொடுரத்தைத் தோற்றுவித்திருக்க முடியும்? நடைமுறையில் பெருத்த சிக்கல்களை உடையதாகத் தோன்றும் 'தீண்டாமை' என்ற பழக்கத்தின் தோற்றமும், சிக்கலானதாகவே அமைந்திருக்க வேண்டுமென்று அம்பேத்கர் கருதுகிறார்.  ஏனென்றால், பிராமணர்களின் கோபம் ஒட்டு மொத்த பௌத்தர்கள் மீதும் உருவாகியிருந்த சூழலில், ‘நொறுக்கப்பட்ட மக்கள்' மீது மட்டும் அது தீண்டாமையாக ஏன் வெளிப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறார்.  'தீண்டாமை என்பது நொறுக்கப்பட்ட மக்கள் மீது மட்டுமே படிந்துள்ளது என்பதைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக இதில் வேறு சில கூடுதல் காரணங்களும் செயல்பட்டிருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றுகிறது’.


அம்பேத்கரின் 'தீண்டாமை' தொடர்பான ஆய்வுகள் இந்தத் தருணத்தில் வேறொரு முக்கியமான காரணியை மையமிட்டு சுழலத் தொடங்குகின்றன. அது, மாட்டுக்கறி உண்ணும் வழக்கம். 


இந்த நாட்டில் தீண்டத்தகாதவர்களுக்கும் தகுந்தவர்களுக்குமான வேறுபாடுகள் ஏராளம் இருப்பினும், மிக முக்கியமான வேறுபாடு மாட்டிறைச்சியை சாப்பிடுதல்.  இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், இந்த நாட்டில் தீண்டத்தகாத சாதிகள் அனைத்தும் இறந்த பசுவோடு ஏதாவதொரு தொடர்பைக் கொண்டிருப்பதாய் அம்பேத்கர் கருதுகிறார். அதன் மாமிசத்தைத் தின்பவராகவோ அல்லது அப்பசுவின் தோலை உரிப்பவராகவோ. இதற்கு ஆதாரமாக அம்பேத்கர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சுட்டுகிறார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளரின் அறிக்கையின்படி தீண்டத்தகாதவர்கள் மாட்டு இறைச்சியை உண்பவர்களே என்பது நிரூபணமாகிறது' என்கிறார்.


மாட்டுக்கறியை உண்ணாத மக்களும், உண்ணுகிற மக்களும் வேறுவேறான சிந்தனையோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்பது உண்மை. உண்ணாதவர்களுக்குப் பசு புனிதமாகவும், இந்து தர்மமாகவும் தோன்றுகிறது. ஆனால், அதே சமயம் அதை உண்ணக்கூடிய மக்களும் கூட இதே போன்றவொரு தத்துவார்த்த விளக்கத்தை உண்ணுவதை நியாயப்படுத்தும் வகையில் சொல்கிறார்கள். இறந்த பசுவிற்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதை அதனுடைய மாமிசத்தை உண்டுவிடுவது தான்.  அதல்லாமல் அதனை வீசியெறிவதோ, மண்ணுள் புதைப்பதோ அவமரியாதை செய்வது போலத்தான்.


இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது மாட்டிறைச்சியை உண்ணும் நிகழ்வைக் கொண்டே 'தீண்டத்தகாதவர்கள்' என்ற பிரிவொன்று உருவாக்கப்பட்டது என்ற வாதம் அம்பேத்கருக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது. இதைக் கூடுதலாக வலியுறுத்தும் வகையில் இந்து சாஸ்திரமான ‘வேத வியாச ஸ்மிருதி’யின் சூத்திரமொன்றையும் ஆதாரமாகக் காட்டுகிறார். அச்சூத்திரம், ‘கருமான், போர்வீரன், வண்ணான் போன்ற பலரும் பசுவின் மாமிசத்தை உண்பவர்கள் என்பதால் அந்த்யஜர்கள்' என்று அழைக்கப்படுவதாய்ச் சொல்கிறது.

ஸ்மிருதியிலிருந்து பெறப்பட்ட இத்தகவல் அம்பேத்கரின் ஆய்வு முடிவை மேலும் வலுப்படுத்துகிறது.  தீண்டாமைக்கான மூல காரணம் மாட்டுக்கறியை உண்பதே என்ற முடிவிற்கு இதன் மூலம் அவர் வந்து சேர்கிறார். அம்பேத்கரைப் பொறுத்த அளவில் 'நொறுக்கப்பட்ட மக்கள்’ பௌத்தர்களாக இருந்ததும், மாட்டிறைச்சியை உண்டதுமே மிக முக்கியமான காரணங்களாகத் தோன்றுகின்றன. 


பௌத்தர்கள் மீதான துவேசமும் மாட்டிறைச்சி உண்பவர்கள் மீதான கோபமும் தீண்டாமை என்ற சமூகப் பழக்கத்தை நடைமுறைப்படுத்தியது. பௌத்தர்கள் மீதான இந்துக்களின் கோபம் மிகப் பொதுப்படையானது. நொறுக்கப்பட்ட மக்கள் மீது மட்டுமே செலுத்தப்பட்டதல்ல.  'நொறுக்கப்பட்ட மக்கள் மட்டுமே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் பௌத்தர்களாய் வாழ்ந்ததோடு, பிராமணர்கள் புதிதாக வளர்த்துக் கொண்ட பசு பக்திக்கு எதிராக அதனை உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்ததே ஆகும்’.


தீண்டாமையின் தோற்றக் காரணங்களாக இவ்விரண்டையுமே கண்டடைகிற அம்பேத்கர், 'மாட்டு மாமிசம் உண்ணும் வழக்கமே' தீண்டாமையை முழுமையாக விளக்குகிறது என்று கருதுகிறார். பௌத்த சமயம் அதிகார வர்க்கத்தினரால் அழித்தொழிக்கப்பட்டபொழுது, பெளத்தர்களாய் வாழ்ந்திருந்த வெகுசன மக்கள் தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டனர் என்று சொல்லப்படும் மற்றொரு விளக்கம் அவருக்கு அதிகபட்சமாகவும். ஒரு சார்புடையதாகவும் தோன்றுகிறது. எனவே, பிராமணர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான இரண்டாவது முரண்பாட்டை பிரதானமாக எடுத்துக் கொள்கிறார்.

அம்பேத்கரின் இத்தகைய முடிவுகளிலிருந்து, இச்சிந்தனையை மேலைடுத்துச் செல்வதற்கு நமக்கு சில அவதானிப்புகள் அவசியம்.  ஒன்று, அம்பேத்கரைப் போலவே தீண்டாமையின் வேர்க்கால்கள் என்று பௌத்த சமயத்தின் வீழ்ச்சியை அடையாளப்படுத்துகின்ற அயோத்திதாசரின் சிந்தனைகளை நாம் கூடுதல் கவனத்துடன் யோசிக்க வேண்டியுள்ளது. அம்பேத்கரைப் போன்ற நவீன அறிவுத்துறைகளின் உத்திகளோ முறையியல்களோ தெரியவராமலேயே அயோத்திதாசர் மிகச்சரியான முடிவுகளுக்கு வந்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


இரண்டாவதாக, அம்பேத்கர் சந்தேகம் கொள்ளும் பௌத்த சமய வரலாற்று விளக்கத்தை ஏற்றுக் கொள்வதில் அயோத்திதாசருக்கு எந்தவிதக் குழப்பங்களும் இருக்கவில்லை. வரலாற்றில் நடைபெற்ற சதியின் காரணமாக பௌத்தம் வீழ்த்தப்பட்டதையும் 'தீண்டத்தகாதவர்' என்ற பிரிவு உருவாக்கப்பட்டதையும் ஒரே செயலாகக் கருதும் அயோத்திதாசர், இன்றைய தீண்டப்படாதோரே அன்றைய பௌத்தர்கள் என்று அழைக்கவும் செய்கிறார். எனவே, பௌத்த வீழ்ச்சியோடு சாதியத்தை யோசித்துப் பார்ப்பது அயோத்திதாசருக்கு சரியென்றேபடுகிறது.


மூன்றாவதாக, அம்பேத்கரும் சரி, அயோத்திதாசரும் சரி சாதியத்தின் இன்றைய நிலையை மேற்கூறிய ‘பௌத்த வீழ்ச்சி விளக்கம்’ தெளிவாக விளக்கவில்லை என்பதில் ஒன்றுபடுகிறார்கள்.  அதாவது, அன்றைய பௌத்தர்கள் இவ்வளவு எளிதான புறக்கணிப்பின் மூலம் மட்டுமே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டனராவேறு காரணங்கள் இல்லையா என்னும் போது, அம்பேத்கர் இன்னுமொரு காரணத்தைத் தேடிப் போகிறார். ஆனால் அயோத்திதாசரோ நீண்ட நெடிய காலமாற்றங்களில் நடைபெற்ற இடையீடுகளே இதன் காரணம் என்று முடிவு செய்கிறார்.


சமூகப் பிரச்சினையொன்றின் வரலாற்றுக் காரணிகளைத் தேடுகின்ற பலரும் சாதாரணமாகச் செய்துவிடக்கூடிய தவறு, வரலாற்றை இயங்காததாகக் கற்பனை செய்தல்.  ஒவ்வொரு சமூகப் பண்பாட்டு நடவடிக்கையின் தோற்றத்தையும் கண்டடைகிற ஆய்வாளர்கள் வரலாற்றில் அவை அடைகின்ற உருமாற்றங்களையும் கணக்கிலெடுக்கத் தவறுகிறார்கள்.  இதனால், இன்றைய நிகழ்வுகளுக்கான காரண காரியங்களைத் தேடும்பொழுது அவற்றிற்கான மூல வேர்களைக் கண்டடைவதுடன் திருப்தியடைகிறார்கள். மாறாக, அம்மூலவேர்களிலிருந்து கிளர்ந்தெழுந்த விருட்சம் எவ்வெவ்வாறெல்லாம் கிளைவிட்டு படர்ந்திருக்கிறது என்று யோசிக்கும் வரலாற்று இயங்கியலை விளக்க முற்படும்போதே விவாதம் முழுமை பெறத் தொடங்கும்.  


தொடக்கத்தில் பௌத்தாகளாய் வாழ்த்திருந்து. பெருவாரியான சமூகத்தின் வகுப்புவாதத்தால் நசுக்கப்பட்டு, பொதுத்தளங்கள் அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட மக்கள் குழு, காலவோட்டத்தில், அதன் பின் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகளில் எவ்வெவ்வாறெல்லாம் உருமாறி வந்திருக்கிறது என்று யோசிக்கும் பொழுதே தீண்டாமையின் வரலாற்றை நம்மால் முழுமையாக எழுத முடியும். சாதியமைப்பின் வரலாறு அல்லது புறக்கணிப்பின் வரலாறு அல்லது தீண்டப்படாதோரின் வரலாறு என்பதை எழுதுவதில் அம்பேத்கரின் சிந்தனைகளும், அயோத்திதாசரின் சிந்தனைகளும் நமக்குப் பெருமளவில் பதவி செய்ய முடியும்.


'தீண்டாமை' தோன்றுவதற்கான காரணம் வேண்டுமானால் பௌத்த அழிப்பாக இருக்க முடியுமே தவிர, அந்நிகழ்வின் தொடாச்சியாக நடைபெற்ற சம்பவங்களை யோசிக்கும் பொழுதே இன்றைய சாதியமைப்பை முழுமையாக விசாரிக்க முடியுமென்று நம்புகிற அம்பேத்கர், அத்தொடர்ச்சியின் முக்கிய நிகழ்வாக 'மாட்டு மாமிசம்' உண்ணும் வழக்கத்தைக் கருதுகிறார்.  முதல் காரணமான பௌத்த வீழ்ச்சியில் திருப்தியுறாத அம்பேத்கர், இவ்விரண்டாவது காரணத்தில் அமைதியுற்றவராகத் தோன்றுகிறார். பிராமணர்களுக்கும் தீண்டப்படாதோருக்குமான முரண் 'மாடு' குறித்த இவ்விருவரின் அணுகுமுறையில் வீற்றிருப்பதாய் ஏற்றுக் கொள்கிறார்.


ஆனால், அயோத்திதாசர் இந்தக காரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் வலுக்கட்டாயமாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவே அவர் கருதுகிறார்.  பஞ்சம் போன்ற கொடியகாலங்களில் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாகவே மாட்டு மாமிசம் உண்ணும் பழக்கம் நடைமுறைக்கு வந்ததாய் எழுதுகிறார். அம்பேத்கரும், அயோத்திதாசரும் விவாதிக்கும் இது போன்ற சிக்கல்களை மேலும் மேலும் வளர்த்தெடுத்து, செறிவூட்டுவதன் மூலமே நாம் காத்திரமான செய்திகளைப் பெற முடியுமென்று தோன்றுகிறது.

 


துணைநூற்பட்டியல்: 


1 அலாய்சியஸ், ஞான, (தொகுப்.) 1999. அயோத்திதாசர் சிந்தனைகள் I, II, IIL நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை 

2. Rodrigues, Valerian (ed.), 2002. The Essential Writings of B.R. Ambedkar, Oxford University Press, New Delhi.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக