Skip to main content

'அயோத்திதாசர்' நூலுக்கான தமிழ் தேசிய விமர்சனம்


‘ஏர்’ மகாராசன், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர்.  பள்ளி ஆசிரியர்.  அவரது ‘ஏறு தழுவுதல்’ என்ற நூல், ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சி நடந்த போது வெளிவந்து பரவலான கவனத்தையும், பாராட்டையும் பெற்றது.  பாவாணர் வழி வந்த தமிழர் அடையாள அரசியலை வரித்துக் கொண்டவர்.  மிகச்சிறந்த வாசகர்.  ‘அயோத்திதாசர்’ நூலை வாசித்த கொஞ்ச நாட்களில் அவரடைந்த உற்சாகத்தின் ஒரு சிறு துளி இந்தக் கட்டுரை.  கொஞ்சம் ‘எவ்ளோ பெரிய கட்டுரை!’ தான்.  அயோத்திதாசர் எழுத்துக்களுக்கு அவர் வந்தடைந்த பாதையை இங்கே விரிவாக எழுதியிருக்கிறார். 


‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலைத் திறந்த மனதுடன் படிக்கிற ஒவ்வொருவரும் படைப்பாக்க உளக்கிளர்ச்சியை அடைவார்கள் என்பது எனது பிடிவாத நம்பிக்கை.  தமிழில், சமீபத்தில், இப்படியொரு நூல் எழுதப்படவில்லை என்பது எனது துணிபு.  அதை நிரூபிக்கும் வலுவான சான்று இக்கட்டுரை. 


டி. தருமராஜ்


மகாராசன்

  

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் 

டி. தருமராஜின் ‘அயோத்திதாசர்’ நூலை முன்வைத்து.


மகாராசன்


தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது. அது, ஒற்றைத் தன்மையானதுமல்ல; ஒன்றை மட்டும் மய்யப்படுத்தியதுமல்ல. மேலதும் கீழதுமாக, மய்யமும் விளிம்புமாகக் கலந்த பன்மையின் தொகுப்பாகவே தமிழர் அறிவு மரபு வடிவமைந்து வந்திருக்கிறது. இவ்வாறாக, ஒவ்வொரு காலத்திய அறிவாளுமைகளால் முன்னெடுக்கப்பட்ட அறிவுச் செயல்பாடுகள் பொதுச்சமூகத்தின் ஏற்பைப் பெறுவதிலும் புறக்கணிப்பைச் சந்திப்பதிலும் நிறைய காரணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று சாதி; மற்றொன்று கருத்தியல்சார் அரசியல் ஆகும்.


சாதியும் (Cast), கருத்தியல் (Ideology) சார்ந்த அடையாள அரசியலும்தான் ஒன்றைப் பேசு பொருளாக்குவதில் மிக முக்கியப் பங்கை வகிக்கக் கூடியவை. அக்காலத்திலிருந்து இன்றுவரையிலும் இதுதான் தமிழ்ச் சமூகத்தின் மறைபண்பாய் இருந்துகொண்டிருக்கிறது.


அயோத்திதாசர் எனும் பேசுபொருள் :


தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபைத் தமது அறிவுச் செயல்பாடுகளால் வளப்படுத்தியவர்களுள் அயோத்திதாசப் பண்டிதரும் ஒருவர். அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகளைக் குறித்தும் பேசு பொருளாக்கி வெளிவந்திருக்கும் ஆய்வுநூல் பேராசிரியர் டி.தருமராசு எழுதிய அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை எனும் நூலாகும். கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக 2019இல் வெளியான இந்நூல், அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகள் முழுவதையும் ஆராய்ந்து அவற்றைப் பேசு பொருளாக்கியிருக்கிறது.


தமிழ்ச் சமூகம் அயோத்திதாசரைப் பேசு பொருளாக முன்னெடுக்க மறந்த அல்லது மறைத்ததன் பின்புலம் குறித்து எழுதும் நூலாசிரியர்,


சுமார் 125 வருடங்கள் கழித்து இன்றும்கூட தமிழ் கூறும் நல்லுலகில்அயோத்திதாசப் பண்டிதர்என்ற பெயர் எந்தவொரு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், தமிழகத்தின் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கிய அயோத்திதாசர், தமிழகத்து வரலாற்றாய்வாளர்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டார்.


தமது மரணம் வரையிலும், மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அயோத்திதாசரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இடம்பெற்று விடாதபடி பார்த்துக் கொண்ட தந்திரம் இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் வெற்றிகரமாகவே செயல்பட்டு வந்தது.


அயோத்திதாசரின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த தேசியக் கவிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், சுதேசிகளுக்கும் அவருக்குப் பின் தோன்றி, சென்ற நூற்றாண்டில் தமிழகமே தலைமேல் வைத்துக் கூத்தாடிய திராவிடச் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவரை இருட்டடிப்புச் செய்ததில் கணிசமான பங்கு இருக்கவே செய்தது. தமிழ்ச் சமூகத்தின் நாடி நரம்புகளிலும் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியையும் காழ்ப்புணர்வையும் தவிர்த்து இதற்கு வேறென்னதான் காரணமாக இருக்க முடியும்?’’ (பக். 41,42)


என்கிறார். அவர் கருதுவதுபோல, அயோத்திதாசரைப் பேசு பொருளாக முன்னெடுக்காமைக்குச் சாதியம் மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அயோத்திதாசரின் சாதிப் பின்புலம் சார்ந்த வேறுபல சமூக ஆளுமைகளோடும் அரசியல் சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுத்திருப்பதோடு, அவற்றைப் பேசு பொருளாகவும் மற்றவரும் பொதுச் சமூகமும் முன்னெடுத்திருக்கும் வரலாறும் இருக்கிறது. ஆகவே, அயோத்திதாசரைப் பேசு பொருளாக்க மறந்தது அல்லது மறைத்ததில் சாதியம் மட்டுமே காரணம் அல்ல எனக் கருதலாம்.


பிறகு ஏன் அயோத்திதாசர் பேசுபொருளாக முன்னெடுக்கப்படவில்லை?


குறிப்பாக, திராவிட இயக்கங்களாலும், திராவிட அரசியல்வாதிகளாலும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களாலும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும் / முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே ஆகும்.


தமிழர் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளாலும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்குப் பின்புலமும் அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும்.


திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியலாகும். அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியலையே பேசு பொருளாக முன்வைத்திருக்கிறார் டி.தருமராசு. அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியலைப் புரிந்துகொள்வதற்கான திறப்பைத் தருவதாக அமைந்திருக்கிறது அவரது நூல்.


அடையாள அரசியல் :


அயோத்திதாசர் முன்னெடுத்த தமிழர் அடையாள அரசியலானது, அக்காலத்தில் பரவலாக முன்னெடுக்கப்பட்ட மற்ற அடையாள அரசியல்களிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முன்பான காலகட்டத்தில் பல்வேறு அடையாள அரசியல்கள் முன்னெடுக்கப்பட்ட அதே அரசியல் சமூகச் சூழலில்தான் அயோத்திதாசரும் தமது அடையாள அரசியலை முன்வைத்திருக்கிறார்.


ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகிற அடையாள அரசியல்களுள், பிராமண மேலாதிக்க எதிர்ப்பு அரசியலும் ஒன்றாகும். அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்திருக்கிறது. அவருக்குப் பிந்தைய திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலும் பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலிலிருந்து முற்றிலும் முரண்பட்டதான அடையாள அரசியலையே அயோத்திதாசர் முன்வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிவுச் செயல்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது.


பிராமண மேலாதிக்கத்தை எதிர்க்கும் வகையில் உருவான அயோத்திதாசரின் அடையாள அரசியலையும், திராவிட இயக்கத்தின் அடையாள அரசியலையும், தமிழ்ச் சமூகத்தில் நிலைகொண்டிருந்த அவற்றின் வகிபாகத்தையும் ஒருங்கே வைத்துப் பார்க்கும்போதுதான் இருவேறு அடையாள அரசியலின் முரண்கள் தெளிவாகும்.


எதிர் மரபு :


தமிழ்ச் சமூக வரலாற்றில் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்குமான பகையும் முரணும் தொடர்ந்து நீடித்தே வந்திருக்கிறது. பிராமணர்களாய் அறிவித்துக்கொண்ட வந்தேறி ஆரியர்கள், இந்திய நிலப்பரப்பிலும் தமிழர் நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்த அரசியல் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு மொழித் தளங்களில் இருந்த யாவற்றையும் தமதாக்க முயன்றதோடு, அதிகாரப் பீடங்களைக் கைப்பற்றுவதற்கும் உரிய சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி இருக்கின்றனர். ஆரியப் பிராமணர்களின் சூழ்ச்சியில் தமிழரின் அதிகாரப் பீடங்கள் பலியாகிப்போனதும் அந்தந்த காலங்களில் நிகழ்ந்திருந்தாலும், ஆரியப் பிராமணர்கள் கட்டமைத்து வந்த பிராமணியக் கருத்தாக்கத்தை எதிர்ப்பதும் மறுப்பதுமான கருத்தியல் போர் மரபைத் தமிழர்கள் தமது அறிவுச் செயல்பாடுகளின் வழியே  வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.


பிராமணிய எதிர்ப்பு எனவும், ஆரிய எதிர்ப்பு எனவுமான ஓர் எதிர்மரபு தமிழரின் அறிவு மரபிலும் அறிவுச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆரியப் பிராமணிய மரபுக்கெதிரான குரலும் அதனையொட்டிய செயல்பாடுகளும் தமிழர் வரலாற்றில் நடந்தேறியிருக்கின்றன. இத்தகைய ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் வரலாற்று நீட்சியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் ஆரியப் பிராமணிய எதிர்ப்பின் குரல் தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், அரசியல் வடிவமும் பெறத்தொடங்கியிருக்கிறது.


பிராமண மேலாதிக்கம் :


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஆங்கிலேய வல்லாதிக்கச் சுரண்டல் ஒடுக்குமுறை ஆட்சி நிலவிக்கொண்டிருந்தாலும்கூட, அதிலும் அரசாங்க உயர் பதவிகளிலும் பொறுப்புகளிலும் பிராமணர்களின் அதிகப்படியான பங்கேற்பும் இருப்பும் தலையீடும் அதிகாரப் பரவலைச் செயலாக்குவதில் தலைதூக்கி இருக்கின்றன. அதாவது, ஆங்கிலேயர்களின் வல்லாதிக்க ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது.


19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகளிலும், நகரம் சார்ந்த பகுதிகளில் உருவாகிக் கொண்டிருந்த தொழில்துறைகளிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர். 1850 காலகட்டங்களில் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆங்கிலேய வல்லாதிக்க அரசு நிர்வாகப் பணிகளில் வட இந்தியப் பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியப் பிராமணர்களே உயரிய இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.


குறிப்பாக, மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த  பிராமணர்கள்  அரசுப் பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கியதால், அவர்களது அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. இதனால் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே அரசியல், சமூகம், பொருளாதாரம், வாழ்வியல், பண்பாட்டு நிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே நிலவி இருக்கின்றன.


இந்நிலையில், ஃபேர் பிளே (Fair Play) எனும் பெயரில் 1893இல் வெளியான இரண்டு புத்தகங்கள் அரசுப் பணிகளில் பிராமணர்களின் மேலாதிக்கத்தையும், பிராமணர் அல்லாதவர்கள் மீதான ஒதுக்குதல்களையும் பேசு பொருளாக்கி வெளிவந்திருக்கின்றன. அவற்றுள், ‘பிராமணர் அல்லாதார் இனங்களும் இந்திய அரசுப் பணியும்’ (The Non – Brahmin Races and Indian Public Service) என்பது முதல் புத்தகம்.


நூற்றைம்பது ஆண்டுகளாகப் பெயருக்குத்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள்; உண்மையில் இங்கே பிராமணர்களின் ஆட்சிதான் நடந்து வருகிறது எனவும், பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரசுக் கட்சி இயங்குகிறதுஇந்திய அரசுப் பணிகள் அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே என்ற நிலைதான் இன்னமும் நீடித்து வருகிறது என்பதே முதல் புத்தகத்தின் சாரம்.


அடுத்ததாக, ‘பிராமணர் அல்லாதார் இனங்கள் தெளிவு பெறுவதற்கான வழிவகைகள்’ (The Ways and Means for the Amelioration of Non – Brahmin Races) எனும் இரண்டாவது புத்தகமானது, அனைத்து அரசுப் பணிகளுமே பிராமணர்களுக்கு என்ற நிலையை மாற்றவேண்டும் எனில்வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு புதிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும்அதற்குப் பிராமணர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்; புரிதலையும் விழிப்புணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பிராமணர் அல்லாதார் தங்களுக்கென்றே சில பத்திரிகைகளைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.


அதாவது, பிராமணர் அல்லாதவர்களின் பிரச்னைகளை விளக்கும் வகையில் முதல் புத்தகமும், அவற்றுக்கான தீர்வுகளைச் சொல்லும் வகையில் இரண்டாவது புத்தகமும் வெளிவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


அப்போதைய அரசாங்க உயர் பதவிகளில் பெரும்பாலும் பிராமணர்களே இருந்திருக்கிறார்கள். மற்ற கீழ்ப் பதவிகள்தான் பிராமணர் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. உத்தரவு போடுவதும் அதிகாரம் செலுத்துவதுமே பிராமணர்களின் பணி உரிமையாக இருந்திருக்கிறது. பிராமணர்கள் ஏவுகிற பணிகளைச் செய்து முடிப்பதுதான் பிராமணர் அல்லாதவர்களின் பணிக் கடமையாக நிலவி இருக்கிறது.


பிராமணர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காகப் பணியிடங்களில் புறக்கணிப்பும் அவமதிப்பும் மறுப்பும் என பிராமணர்களின் வஞ்சனை அதிகரித்த காரணத்தால், அரசுப் பணிகளில் இருந்த பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில்தான், பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களுக்கான இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் முன் வந்திருக்கின்றனர்.


பிராமணர் அல்லாதார் சங்கம் :


பிராமண மேலாதிக்கம் நிலவிய இத்தகையப் பின்புலத்தில்தான் 1909இல் வழக்கறிஞர்களாக இருந்த பி.சுப்பிரமணியம், எம்.புருசோத்தம நாயுடு ஆகியோர் இணைந்துசென்னை பிராமணர் அல்லாதார் சங்கம்’ (The Madras Non Brahmin Association) எனும் சங்கத்தை, பிராமணர் அல்லாதவர்களின் பிரச்சினைகள் குறித்த அக்கறையோடும், அவர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கத்தோடும் தொடங்கியிருக்கிறார்கள்.


அரசாங்க உயர் பதவிகளில் பிராமணர்களின் மேலாத்திக்கம் பெற்றிருப்பதற்கு, பிராமணர்கள் பெற்றிருக்கும் கல்வி அறிவும் புத்திக் கூர்மையும்தான் காரணம் எனும் கருத்தைக்கொண்டு, நல்ல புத்திக் கூர்மையும், கல்வி கற்கும் ஆர்வமும் கொண்ட மேற்கொண்டு படிப்பதற்கு வசதியில்லாத நிலையிலிருக்கும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவிகளைச் செய்தல், பிராமணர் அல்லாத இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்நுட்பக் கல்வியைப் பெற  உதவுதல், அவ்வாறு கல்வியைப் பெற்றிருக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் ஊக்கத்தையும் சங்கம் கொடுத்தல் எனும் நோக்கங்களைக் கொண்டு அச்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.


அதாவது, சமூக அளவில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த பிராமணர் அல்லாத மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது. எனினும், பொருளாதாரப் பின்புலம் இன்மையாலும், வகுப்புவாதத்தைத் தூண்டுகிறார்கள்; இனவெறியைப் பரப்புகிறார்கள்; அதனை ஊக்குவிக்கக்கூடாது என்பதான பிராமணர்களின் எதிர்ப்பாலும் அச்சங்கம் மேற்கொண்டு செயல்பட இயலாமல் போயிருக்கிறது.


சென்னை ஐக்கியக் கழகமும் திராவிடர் சங்கமும் :


மேற்குறித்த அதே காலகட்டத்தில், அரசுப் பணிகளில் இருந்த பிராமணர் அல்லாதவர்களின் பெருவாரியான பங்கேற்போடு சரவணப் பிள்ளை, ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், என்.நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணர் அல்லாதவர்களால் இணைந்து 1912இல்சென்னை ஐக்கியக் கழகம்’ (The Madras United League) என்ற புதிய இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிராமணர் அல்லாதவர்களிடம் அச்சங்கத்தின் அறிமுகம் மெல்லப் பரவத் தொடங்கிய பிறகு, இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனும் இருவேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.


புதிதாக வைக்கப்படும் பெயர், பிராமணர் அல்லாத மக்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என்ற நோக்கில் பிராமணர் அல்லாதார் சங்கம் என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் எனவும், ஏற்கெனவே அந்தப் பெயரைப் போலவே 1909இல் ஒரு இயக்கம் உருவாகி மறைந்துவிட்டது. அதையே வைத்துக் கொள்ளலாம் எனவும் முன்மொழியப்பட்டிருக்கிறது. எனினும், பிராமணர் அல்லாதோர் எனும் பெயரானது எதிர்மறைப் பெயராக இருக்கிறது எனக் கருதியும், சென்னை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த பிராமணர் அல்லாத மக்களுக்கான பொதுவான பெயர் வைக்கக் கருதியும்சென்னை திராவிடர் சங்கம்’ (The Madras Dravidian Association) என்று அச்சங்கத்திற்குப் பெயர் வைத்துவிடுகிறார்கள்.


அதாவது, பிராமணர் அல்லாதவர்களால் - பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சங்கமானது, தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு திராவிடர் சங்கமாக வடிவம் அடைந்திருக்கிறது. மேலும், சி.நடேச முதலியார், பிட்டி.தியாகராயச் செட்டியார், பனகல் அரசர் எனும் ராமராய நிங்கார், டி.எம்.நாயர் உள்ளிட்ட பிராமணர் அல்லாத பிரபலங்களின் ஆதரவும் வழிகாட்டலும் அச்சங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அச்சங்கத்தின் செயல்பாடும் காங்கிரசைச் சார்ந்த பிராமணர் அல்லாதவர்களின் ஆதரவும் அதிகரித்திருக்கிறது.


இந்தக் காலகட்டத்தில் பிராமணர் அல்லாத மக்களின் மீது நடத்தப்பட்ட ஒதுக்கல்களையும் இழிவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில் 1915இல் சென்னை திராவிடர் சங்கமானது  இரண்டு கருத்துவிளக்க நூல்களை வெளியிட்டிருக்கிறதுஎஸ்.என்.கே என்பவர் தொகுத்தபிராமணர் அல்லாதார் கடிதங்கள்’ (Non Brahmin Letters) எனும் நூலில், பிராமணர் அல்லாத தலைவர்கள் எழுதிய இருபத்தியொரு கடிதங்கள் இடம்பெற்றிருக்கின்றன.


சி.சங்கரன் நாயர் எழுதியதிராவிடப் பெருமக்கள்’ (Dravidian Worthies) என்ற நூல், கல்வி கற்பதில் பிராமணர் அல்லாதவர்களின் நிலையைக் குறித்து விவாதித்திருக்கிறது. மேற்குறித்த இரண்டு நூல்களுமே பிராமணர் அல்லாதவர்கள் தமக்குரிய தனித்துவத்தைப் பெறவேண்டுமெனில், அமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும் எனவும், குறிப்பாக, திராவிட மகா சபை என்ற பெயரில் விரிவான அரசியல் அமைப்பு ஒன்றைத் தொடங்கி மாவட்டம், மாநகரம், நகரம், கிராமம் என்று பல்வேறு மட்டங்களில் அந்த இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளன. திராவிடர் சங்கத்தின் வளர்ச்சியைக் காங்கிரசுக் கட்சியில் இருந்த  பிட்டி. தியாகராயச் செட்டியார், டி.எம்.நாயர் உள்ளிட்ட தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்தும் வந்துள்ளனர்.


இந்நிலையில்தான், டி.எம்.நாயரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதாவது, 1916 ஆகசுடு மாதத்தில் டெல்லி சட்டசபைக்குச் சென்னை மாகாணத்தில்  நடைபெற்ற தேர்தலில் டி.எம்.நாயர் தோல்வியடைந்திருக்கிறார். நாயரை எதிர்த்துப் போட்டியிட்ட சீனிவாச சாசுதிரி என்ற பிராமணர் வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தது டி.எம்.நாயரை வெகுவாகப் பாதித்திருக்கிறது. பிராமணர்கள் தம்மைத் திட்டமிட்டுத் தோற்கடித்து விட்டார்கள் என்று அதிருப்தி அடைந்திருக்கிறார் டி.எம்.நாயர்.


தென்னிந்திய நல உரிமைச் சங்கம் / நீதிக் கட்சி :


 பிராமணர் அல்லாதோருக்காக ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கியே ஆக வேண்டும் என்கிற அரசியல் தேவையைப் பிராமணர் அல்லாதவர்கள் கைக்கொள்ளத் தொடங்கியது அப்போதுதான் நடந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடுகளின் விளைவாக 1916ஆம் ஆண்டு சி.நடேச முதலியார், டி.எம்.நாயர் மற்றும் தியாகராயச் செட்டியார் ஆகியோர் இணைந்துதென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) எனும் அரசியல் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், அதன் அரசியல் பிரிவாக நீதிக் கட்சி (Justice Party) என்றே பரவலாக அறியப்பட்டிருக்கிறது.


இந்தியாவில் அப்போது நிலவிய ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் சட்டமன்றங்களிலும் ஆட்சியாளர்களிடமும் முறையீடு செய்து அரசுப் பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறுவதற்குப் பலவாறு முயற்சிகள் செய்திருக்கிறது நீதிக்கட்சி. மேலும், அப்போதைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியே காங்கிரசுக் கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டிருக்கிறது. இக்காலத்தில்தான் மாண்டேகு சேம்சுஃபோர்டு அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம்1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி என்பதான ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.


காங்கிரசுக் கட்சி இம்முறையை ஆதரிக்கவில்லை. எனினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்திருக்கிறது. இரட்டை ஆட்சி எனும் இம்முறையின் மூலம் பிராமண ஆதிக்கத்தை வீழ்த்தி, பிராமணர் அல்லாதவர்களுக்கான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என அது நம்பியதுஇம்முறையின்கீழ் 1920ஆம் ஆண்டு முதன்முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறது. 1920 முதல் 1937 வரையிலான காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் அய்ந்தில் நான்கு முறை நீதிக்கட்சி அரசுகளே ஆட்சி புரிந்திருக்கின்றன. இவ்வாறாக, பிராமண எதிர்ப்பே நீதிக்கட்சி அரசியல் கொள்கைகளின் மய்யக் கருத்தாக இருந்திருக்கிறது.


நீதிக் கட்சியானது அரசியல் கட்சியாகப் பரவிய அதே காலகட்டத்தில் 1919இல் காங்கிரசுக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அரசியல் களத்திற்குள் நுழைந்திருக்கிறார் .வெ.ரா பெரியார்.


சுயமரியாதை இயக்கம் :


1922இல் அப்போதைய சென்னை மாகாணத்தின் காங்கிரசுக் கட்சித் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு, அரசுப் பணிகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையைக் காங்கிரசுக் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்மொழிந்திருக்கிறார் பெரியார்.


பெரியாரின் இந்தக் கோரிக்கையை அன்றைய  காங்கிரசுக் கட்சியில் உள்ளவர்களே நிராகரித்திருக்கிறார்கள். இதனாலேயே 1925இல்  காங்கிரசுக் கட்சியிலிருந்து பெரியார் விலகியிருக்கிறார். அதேவேளையில், சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, சமூக விடுதலைக்கான பிரச்சார இயக்கமாகச்சுயமரியாதை இயக்கம்எனும் இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார் பெரியார்.


பிராமணர் அல்லாதோர் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், பிராமணர் அல்லாதோர் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவுமான நோக்கில்  அதன் முக்கியக் கொள்கைப் பரப்புரைகள் அமைந்திருக்கின்றன. மூடப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்த்தல்; மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுத்துத் தெளிவுடையவர்களாக மாற்றுதல்; பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தல் போன்றவை அதன் பிரச்சாரச் செயல்பாடுகளாக அமைந்திருக்கின்றன.


இதனினும், சுயமரியாதை இயக்கத்தின் முக்கியப் பிரச்சாரக் கொள்கையாக அமைந்திருந்தது எதுவெனில், அரசு நிருவாகப் பணி, கல்வி போன்றவற்றில் வகுப்புவாரியான இட ஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அப்போதைய ஆங்கிலேய அரசு நிருவாகத்தை  வலியுறுத்தியதாகும். இதனால், சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, நீதிக்கட்சி ஆதரவு பெரியாருக்கும், பெரியாரின் ஆதரவு நீதிக் கட்சிக்கும் அக்காலத்தில் கிடைத்திருக்கிறது.


அப்போதைய சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு மாற்றாகவும், பிராமணர் அல்லாதவர்களின் அரசியல் கட்சியாகவும் இருந்து ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த நீதிக் கட்சியானது, 1937ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தபிறகு தேக்கநிலையை அடையத் தொடங்கிய காலத்தில்தான் அதன் தலைமைப் பதவியைப் பெரியார்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


திராவிடர் கழகமும் திராவிடக் கட்சிகளும் :


அதன் பிறகான காலத்தில், நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் இருந்தபோது 1944இல் நீதிக் கட்சி எனும் பெயர்திராவிடர் கழகம்எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் திராவிடர் கழகம் என்றே அழைக்கப்பட்டும் வருகின்றது.


அன்றைய காலகட்டங்களில் பெரியாரின் கருத்துகளைப் பேச்சிலும் எழுத்திலும் படைப்பிலும் மிகத் தீவிரமான அரசியலாக முன்னெடுத்தவர்களுள் ஒருவரான அறிஞர் அண்ணாவும் வேறு சிலரும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.) எனும் கட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில் தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர் 1972இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (...தி.மு.) எனும் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். திராவிடர் கழகம் தவிர தி.மு.; ...தி.மு.; தி.மு.கவிலிருந்தும் ...தி.மு.கவிலிருந்தும் பிரிந்த பலப்பல அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நோக்கிய இந்திய நாடாளுமன்ற / சட்ட மன்றத் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் என்பதான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.


எனினும், திராவிடர் கழகத்திற்கு முன்பும் பின்புமான இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும்திராவிட இயக்கங்கள்என்றே   பொதுவாகச் சுட்டப்படுகிறது. அந்தவகையில், தமிழ் நாட்டின் ஒரு நூற்றாண்டுகால ஆட்சி அதிகாரத்தின் பெரும்பகுதியைத் திராவிட இயக்கம்தான் இன்னும் செலுத்திக் கொண்டிருக்கிறது அல்லது திராவிட இயக்கத்தின் துணையோடுதான் தமிழகத்தில் ஒரு நூற்றாண்டு கால ஆட்சி நடந்திருக்கிறது.


திராவிட இயக்க அரசியல் :


பிராமண எதிர்ப்பு, காங்கிரசுக் கட்சி எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர்களின் நலன், வகுப்புவாரியான இட ஒதுக்கீடு, சுய மரியாதை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, கோயில் நுழைவு உரிமை, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, சமூகச் சீர்திருத்தம், சமூக சமத்துவம், கல்வி, இந்துமத எதிர்ப்பு, தமிழ் நாட்டுரிமை எனத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூகத் தளங்களில் இதழ்கள், நூல் வெளியீடுகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள், சிறை செல்லல் போன்றவற்றின் வாயிலாகத் தீவிரப் பிரச்சாரங்களைப் பெரியார் மேற்கொண்டிருக்கிறார்.


பெரியார் மேற்கொண்ட அரசியல் சமூகச் சீர்திருத்தப் பணிகளால் பிராமணிய எதிர்ப்பும், பிராமணர் அல்லாதவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, ஆட்சி அதிகார நலன்களும் உள்ளடக்கிய வெகுமக்கள் அரசியலை - வெகுமக்களிடம் கொண்டுசேர்க்கிற வெகுமக்கள் இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் வலுவாகவே பரவலாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் நேரடிப் பங்கேற்பு செலுத்தாத வெகுமக்கள் இயக்கமாய் அதன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.


அப்போதைய சென்னை மாகாணம் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னட நிலப்பகுதிகளையும், அந்நிலப் பகுதிகளைச் சார்ந்த தமிழர், தெலுங்கர், மளையாளி, கன்னட மக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. எனினும், பிராமண மேலாதிக்க எதிர்ப்பை முன்வைத்த பிராமணர் அல்லாதவர்களுக்கான திராவிட இயக்கத்தையோ அல்லது திராவிடக் கருத்தியல் செயல்பாடுகளையோ ஆந்திரத் தெலுங்கர், கருநாடகக் கன்னடர், கேரள மலையாளிகள் போன்றோர் அவரவர் நிலப்பரப்பிலான சமூகச் சூழலில் முன்னெடுக்கவுமில்லை; பரவலாக்கவுமில்லை; அவற்றில் முனைப்பும் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதேவேளை, திராவிட இயக்கத்தின் பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பு மற்றும் பிராமணர் அல்லாதவர்களின் சமூக, அரசியல், கல்வி, பொருளாதார நலன்கள் சார்ந்த அமைப்பாக்கச் செயல்பாடுகளும் அவற்றின் கருத்தாக்கச் செயல்பாடுகளும் தமிழ்நாட்டளவில் தமிழ்ச் சமூகத்தை முன்வைத்தே நடந்தேறியிருக்கின்றன.


தமிழ்ச் சமூகத்தில் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் வெகுமக்கள் அரசியல் திரட்சிக்கும், பிராமணர் அல்லாதவர்களின் ஆட்சி அதிகாரத்திற்கும் திராவிட இயக்கம்தான் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் ஒரு நூற்றாண்டுகால அரசியல் தேவையைத் திராவிட இயக்கம்தான் பூர்த்தி செய்திருக்கிறது.


அந்தவகையில், தமிழ்ச் சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் வகிபாகத்தை மறைக்கவோ மறக்கவோ முடியாது. தமிழ்ச் சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் திராவிட இயக்கதின் பங்கேற்பு மிகப்பெரும் துணையாகவே இருந்திருக்கிறது என்பதை வரலாறு குறித்தே வைத்திருக்கிறது.


திராவிட இயக்க அடையாள அரசியல் :


பிராமண மேலாதிக்க எதிர்ப்பும் பிராமணர் அல்லாதவர்களின் சமூக அரசியல் நலனையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம் முன்மொழிந்த திராவிட அரசியல், பிராமணர் அல்லாதவர்களின் அரசியலாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான ஓர் அடையாள அரசியலாகத் திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.


மேற்குறித்தவாறு, தமிழ்ச் சமூகத்தில் தமிழ்ச் சமூகத்தை முன்வைத்துக் கட்டமைக்கப்பட்ட திராவிட இயக்கமானது, பிராமண மேலாதிக்கத்திற்கு எதிரான பிராமணர் அல்லாதவர்களின் அடையாள அரசியலாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அந்த அடையாள அரசியலில்தமிழர் அடையாளம் நீக்கம்செய்யப்பட்ட ஒன்றாகவே வடிவமைக்கப்பட்டு வந்திருக்கிறது. பிராமணர் அல்லாதவர் இயக்கங்கள் ஒன்றுகூட தமிழ் / தமிழர் எனும் அடையாளத்தோடு இயங்கவில்லை. மாறாக, பிராமணர் அல்லாதார் / தென்னிந்தியர் / திராவிடர் எனும் அடையாளத்தையே முதன்மைப்படுத்திச் செயலாற்றி உள்ளன.


அவ்வகையில், திராவிட இயக்கத்தின் பிராமணர் அல்லாதோர் எனும் அடையாள அரசியல் என்பது, தமிழர் அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட தமிழர் அல்லாதவரான தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளிட்டவர்களின் அடையாளங்களை உள்ளீடாகக் கொண்டதாகும். அதாவது, பிராமணர் அல்லாதோர் என்பதற்குள் தமிழர் அல்லாதவரும் பங்கேற்கும் அரசியல் சமூகப் பொருளாரதார ஆட்சி அதிகார வாய்ப்புகளைத்தான் திராவிட இயக்கத்தின் அடையாள அரசியல் தந்திருக்கிறது; இன்னும் தந்து கொண்டிருக்கிறது.


திராவிட இயக்க முன்னோடி :


பொதுவாக, திராவிட இயக்கமே பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் எதிர்ப்பியக்கத்தின் தோற்றுவாயாகவும், எல்லா சமூகப் பிரிவினரும் உள்ளடக்கிய வெகுமக்கள் இயக்கமாகவும் கருதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. மேலும், திராவிட இயக்கத்தின் திராவிட அரசியலே பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான கருத்தியலாகவும் பேசு பொருளாக்கப்படுகிறது.


ஆனால், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே, திராவிட இயக்கத்தின் திராவிட அரசியலுக்கு முன்பாகவே பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்த பிராமணிய எதிர்ப்பியக்கத்தையும், பிராமணிய எதிர்ப்பு அரசியலின் கருத்தியலையும் தமிழ்ச் சமூகம் எல்லாக் காலத்திலும் கண்டடைந்தே வந்திருக்கிறது. அந்தவகையில், பிராமணிய மேலாதிக்க எதிர் மரபின் தொடர்ச்சியாய் இயக்கமாகவும் கருத்தியலாகவும் திகழ்ந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார்.


பிராமண மேலாதிக்க எதிர்ப்பை மய்யப்படுத்திய அரசியலையும் கருத்தியலையும் திராவிடம் / திராவிடர் எனும் பெயரில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே / அதை முன்னெடுப்பதற்கு முன்பாகவே அதே திராவிடர் / திராவிடம் எனும் பெயரில் பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்த இயக்கத்தையும் அதன் கருத்தியலையும் மிகத் தீவிரமாக முன்னெடுத்த வரலாறும் தமிழ்ச் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரலாற்று நீட்சியின் அடையாளம் அயோத்திதாசப் பண்டிதருடையது ஆகும்.


அயோத்திதாசர் பின்புலம் :


1845ஆம் ஆண்டில் மே மாதம் 20ஆம் நாளில் பிறந்த அயோத்திதாசர் (20.05.1845 - 05.05.1914), இளவயதுக் காலங்களில் தமது பெற்றோர் இட்ட காத்தவராயன் எனும் இயற்பெயராலே அறியப்பட்டிருக்கிறார். அவரது பிறப்பிடம் சென்னை எனவும், கோவை மாவட்டத்திலிருந்த ஒரு சிற்றூர் எனவும் கூறப்படுகிறது. எனினும், தமது தந்தையின் பணி காரணமாக நீலகிரிக்குப் புலம் பெயர்ந்திருக்கிறார். நீலகிரியில் ஜார்ஜ் ஹாரிங்டனிடம் அவரது தாத்தா வேலை பார்த்து வந்த குடும்பச் சூழல், இளம்வயதில் அயோத்திதாசருக்குப் பலவகைகளில் உதவியாய் இருந்திருக்கிறது.


அயோத்திதாசர், தமது தந்தையிடமும் சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்திதாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றிருப்பதோடு, தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் பாலி போன்ற மொழியறிவும் நிரம்பப் பெற்று விளங்கியிருக்கிறார். அதோடு, சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார். தமது ஆசிரியர் மீது கொண்ட அன்பாலும் மதிப்பாலும் காத்தவராயன் என்ற தமது இயற்பெயரை  அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டிருக்கிறார்.


அத்வைதானந்த சபை :


அயோத்திதாசர் தமது 25ஆவது வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான மலைவாழ் மக்களை முன்வைத்து 1870களில்அத்வைதானந்த சபைஎன்கிற ஒன்றை நிறுவியிருக்கிறார்.


அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அதனுடைய கொள்கைகள், சடங்குகள், பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றைப் பகுத்தறிவு ரீதியிலான தேடலோடே அணுகி இருக்கிறார். குறிப்பாக, இச்சபை இரண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார் டி.தருமராசு. ஒன்று, கிறித்துவ சமயப் போதகர்களின் சமயப் பரப்புப் பணிகளுக்கு எதிரான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது; இரண்டு, அத்வைத மரபின் மூலம் வர்ணாசிரம, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுப்படுத்துவது’’பக். 43) எனும் நோக்கிலேயே அச்சபையை அயோத்திதாசர் முன்னெடுத்திருக்கிறார்.


திராவிட பாண்டியன் இதழ் :


1880களில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் வெசிலியன் சபைப் பள்ளியொன்றை ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்காக  நடத்திக்கொண்டிருந்த வெசிலி சபையைச் சார்ந்த ஜான் ரத்தினத்துடன் அயோத்திதாசருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றுகிற வாய்ப்பும் அயோத்திதாசருக்குக் கிடைத்திருக்கிறதுஅவ்விருவரும் இணைந்துதிராவிட பாண்டியன்என்ற செய்தி இதழை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். ‘திராவிட பாண்டியன்இதழ் மூலமே அயோத்திதாசர் பத்திரிகைத் தொழிலின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.


திராவிட மகாஜன சபையும் ஆதித் தமிழர் எனும் அடையாள முழக்கமும் :


இதனையடுத்து, 1881ஆம் ஆண்டு அயோத்திதாசரின் பெருமுயற்சியால்திராவிட மகாஜன சபைஎன்ற அமைப்பு தொடங்கப் பெற்றிருக்கிறது. நீலகிரியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவராக அயோத்திதாசரே பணியாற்றியிருக்கிறார்.


இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளைஇந்துத்துவம்எனும் வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றிருக்கின்றன.


1881ஆம் ஆண்டு, ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, சமய அடையாளங்களைப் பதிவு செய்யும் வேலையையும் செய்திருக்கிறார்கள். பவுத்தர், சமணர், கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர் போன்ற செவ்வியல் சமய அடையாளங்களைச் சாராத பெருவாரியான மக்களுக்கு எந்தச் சமய அடையாளத்தை வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.


யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர், பவுத்தர், சமணர், சீக்கியர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்என 1861 முதல் 1891 வரையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் திரள்இந்துஎனும் அடையாளத்திற்குள் வலியத் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமாக மறைமுகமானமதமாற்றம்நிகழ்வதையும், ‘இந்துக்கள்என்ற அடையாளம், உயர்த்திக் கொண்ட சாதியினரின் தந்திரம் மூலம் ஆங்கிலேய வல்லாதிக்க அரசால் வலுக்கட்டாயமாக இந்திய / தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதையும் அறிந்த அயோத்திதாசர்இந்து எனும் அடையாளத் திணிப்பிற்கான எதிர்ப்புணர்வை அக்காலத்திலேயே மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்

.

இந்துஎனும் அடையாளம் ஆரியப் பிராமணிய வைதீக மரபை அடித்தளமாகக் கொண்டிருப்பது. அது, சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனக் கருதிய அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், சாதியக் கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து எனும் அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இந்து என்ற அடையாளத்தை ஏற்க மறுத்த அயோத்திதாசர்அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளத்தையும் மிகத்தெளிவாக முன்வத்திருக்கிறார்.


இந்திய தேசத்திலுள்ள பழங்குடி மக்களும், பஞ்சமர் என்றழைக்கப்படும் தாழ்த்தப் பட்டவர்களும்இந்துக்கள்என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவே, இவ்விரு மக்களும்ஆதித் தமிழர்கள்என்பதாகவே கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படல் வேண்டும்’’ பக். 45) என்ற குரலை 1881ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்.


இந்து எனும் அடையாளத்திற்கு மாற்றாக அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம் மொழி அடையாளமாக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகப் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஆதித் தமிழர்கள் என்ற அடையாளம் தமிழர்களான அவர்களது தமிழ்மொழி அடையாளத்தையும் அம்மக்களின் தொன்மை வரலாற்றையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது.


சாக்கிய பௌத்த சங்கமும் தமிழ்ப் பவுத்தமும் :


பிராமணர்களாலும் உயர்த்திக்கொண்ட சாதியினராலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்வுநிலைக்குக் காரணம் பவுத்தம்தான் எனக் கருதியிருக்கிறார் அயோத்திதாசர். அதாவது, பவுத்தமே ஒடுக்கப்பட்ட மக்களின் பூர்வீகச் சமயமாக இருந்திருக்கிறது; பவுத்தத்தைப் பின்பற்றியதாலேயே அவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள். ஆகவே, சாதி மற்றும் சமயப் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு எதிராகச் சாதி, வருண எதிர்ப்புச் சமயமான பவுத்தமே ஏற்ற தீர்வு என்றும் கருதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, இந்தியப் பாரம்பரிய மரபில் பேசப்பட்ட பவுத்த சமய அடையாளங்களிலிருந்து வேறுபட்டதமிழ்ப் பவுத்தம்என்கிற தமிழர் சமய அடையாளத்தையே கட்டமைத்திருக்கிறார்.


தமிழ்ப் பவுத்தம் எனும் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே 1898ஆம் ஆண்டு சென்னையில்சாக்கிய பௌத்த சங்கம்ஒன்றை  அயோத்திதாசர் தோற்றுவித்திருக்கிறார். தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்திச் செயலாற்றி இருக்கிறார் அயோத்திதாசர்.


ஒரு பைசாத் தமிழன் இதழ் :


தமிழ்ச் சமூக வரலாற்றில் அயோத்திதாசரின் சீரிய பங்களிப்புகளுள் குறிப்பிடத்தக்க மற்றொன்று, இதழியல் பணியாகும். அயோத்திதாசரை ஆசிரியராகக் கொண்டு, சென்னை இராயப்பேட்டையிலிருந்து 1907ஆம் ஆண்டு சூன் மாதம்  19ஆம் நாள் முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களைக் கொண்டு அன்றைய காலணா விலையில்ஒரு பைசாத் தமிழன்என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்திருக்கிறது.


உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காகச் சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்றுகூடி இப்பத்திரிக்கையை  ‘ஒரு பைசாத் தமிழன்வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்கக் கோருகிறோம்என்ற அறிவிப்பின்படி வெளியான ஒரு பைசாத் தமிழன் இதழின் நோக்கமானது, தமிழ்ச் சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அறிவு மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது.


தமிழன் இதழ் பரவல் :


ஒரு பைசாத் தமிழன் இதழ் வெளியான ஓராண்டுக்குப் பிறகுஒரு பைசாத் தமிழன் என்பதில் உள்ளஒரு பைசாத்எனும் முன்னொட்டு நீக்கப்பட்டுதமிழன்என்ற பெயரோடு 1908ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26ஆம் நாள்முதல் வெளிவந்திருக்கிறது.


1907 முதல் 1914 வரையிலான காலங்களில் தமிழன் இதழில் வெளி வந்த செய்திகளும் விரிவான தளங்களைக் கொண்டிருந்திருக்கின்றன. குறிப்பாக, மகளிர் பத்தி (Ladies column) எனும் தலைப்பில் பெண்கள் கல்வி, பெண்கள் வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.


அடுத்ததாக, பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள், அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடகக் கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் அக்காலத்தில் பரவி இருக்கிறது என்பர்.


அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயரும்தமிழன்எனும் அடையாளத்தையே முதன்மைப்படுத்தி இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அயோத்திதாசர் பேச்சும் எழுத்துமான அறிவுச் செயல்பாடுகள் :


மூட நம்பிக்கை மற்றும் தீண்டாமையை முன்மொழிந்த ஆரியப் பிராமணிய வேத இதிகாசப் புராணங்கள், தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பிராமணிய மேலாதிக்கம், உயர்த்திக்கொண்ட சாதியினரின் சாதிய மேலாதிக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் பூர்வீக வரலாறு, தமிழ் இலக்கியங்கள் மற்றும் வரலாறு பற்றிய மறுவாசிப்பு, அன்றைய அரசியல் சமூகச் சூழல் போன்றவை குறித்தெல்லாம் பேச்சாகவும் எழுத்தாகவும் செயலாகவும் மிகத் தீவிரமாக இயங்கி இருக்கிறார் அயோத்திதாசர்.


அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர, அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதியிருப்பதாகவும், அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது எனவும் கூறப்படுகிறது.


அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், அம்பிகையம்மன் சரித்திரம், அரிச்சந்திரன் பொய்கள், ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம், இந்திரர் தேச சரித்திரம், இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, சாக்கிய முனிவரலாறு, திருக்குறள் கடவுள் வாழ்த்து, திருவள்ளுவர் வரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், நூதன சாதிகளின் உள்வே பீடிகை, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, புத்த மார்க்க வினா விடை, மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம், முருக கடவுள் வரலாறு, மோசோயவர்களின் மார்க்கம், யதார்த்த பிராமண வேதாந்த விவரம், விபூதி ஆராய்ச்சி, விவாஹ விளக்கம், வேஷ பிராமண வேதாந்த விவரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம், வேஷபிராமண வேதாந்த விவரம் போன்றவை அயோத்திதாசர் எழுதிய நூல்களாகும்.


அயோத்திதாசர் தமது நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, மூடப்பழக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்தும், அவற்றின் ஊடாகத் தமிழ் மற்றும் பவுத்த அடையாளங்கள் குறித்தும் மிக விரிவாக எழுதியிருக்கிறார்.


பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்தும், பிராமணர் அல்லாதவர்களின் சாதி மேலாதிக்கத்தை எதிர்த்தும், சாதி பேதமற்றவர்களே தமிழர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களே பூர்வத் தமிழர்கள் என்பதைப் பேசுபொருளாக்கியும் தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத அக்காலத்தில், அனைவருக்குமான சமூக நீதி, சாதிபேதமற்ற சமூக மதிப்பீடுகள், விளிம்பு நிலையிலிருந்த மக்களின் ஒடுக்குமுறைகள் குறித்தெல்லாம் அயோத்திதாசர்  பேசியிருக்கிறார்.


அதிகாரத்தில் சம பங்கு, பிரதிநித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணுரிமை, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழியாதிக்க எதிர்ப்பு, வேத புராண எதிர்ப்பு, பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு போன்றவற்றுக்கான கருத்தியல் உரையாடல்களைச் தமிழ்ச் சமூகத்தில் அயோத்திதாசர் அக்காலத்திலேயே அறிவுச் செயல்பாடுகளாக நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு நூற்றாண்டு மறதி :


இந்நிலையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சமூகத் தேவைக்கான கருத்தியல்களைப் பேசுபொருளாக்கிய அயோத்திதாசரைக் குறித்தும், அவரது கருத்தாடல்கள் குறித்தும், அவருக்குப் பிறகான காலங்களில் நிலவியிருந்த திராவிட இயக்கம் பேசு பொருளாக்கி இருக்கவேண்டும். ஏனெனில், திராவிட இயக்கத்தின் ஆகப்பெரும் கருத்தாடல்கள் யாவும் அயோத்திதாசரால் ஏற்கெனவே பேசு பொருளாக ஆக்கப்பட்டவை.


இதைக் குறித்துக் கூறும் டி.தருமராசு,


திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான திராவிடன், பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு, சமதர்மம் போன்றவை தமிழ் பெளத்த மூலவரான அயோத்திதாசரிடமிருந்து கடன் வாங்கப்பட்டவை; அதே போல் வட தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் திராவிட இயக்கம் வேரூன்ற பெளத்த சங்கங்களே அடிப்படையாக இருந்தன. ஏறக்குறைய பெளத்த சங்கங்களின் அழிவிலேயே திராவிட இயக்கம் பிறந்ததுபக். 97,98)


என்கிறார். அயோத்திதாசரை முன் மாதிரியாகவும் முன்னோடியாகவும் பேசு பொருளாக்கி இருக்கவேண்டிய திராவிட இயக்கம், அவ்வாறு செய்யாமல் மறந்து போனது அல்லது மறைத்ததன் பின்புல அரசியல் என்ன?


பிராமணிய மேலாதிக்க எதிர்ப்பில் திராவிட இயக்கமும் திராவிட அரசியலும் பிராமணர் அல்லாதவர்களின் இருப்பையும் அடையாளத்தையுமே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, திராவிடர் எனும் பேரில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் உள்ளிட்ட உயர்த்திக்கொண்ட சாதியினரின் / பிற இனத்தவரின் குரலும் அடையாளமும் பங்கேற்பும்தான் அதிகமாய் இருந்திருக்கின்றன.


ஆனால், திராவிட இயக்கத்திற்கும் திராவிட அரசியலுக்கும் முன்பாகவே வெளிப்பட்டிருந்த அயோத்திதாசரின் பிராமணிய மேலாதிக்க எதிர்ப்புக் குரலானது, சமூக, அரசியல், கல்வி, பொருளாதார நிலைகளில் பின் தள்ளப்பட்ட / புறக்கணிக்கப்பட்ட / வஞ்சிக்கப்பட்ட / ஏமாற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் இருப்பையுமே பேசு பொருளாக்கி இருக்கின்றது.


அதாவது, பிராமணிய எதிர்ப்பின் அரசியல் திரளாகவும், அதன் கருத்தியலாகவும் வெளிப்படுகிற பிராமணர் அல்லாதவர் என்பதற்குள், மேற்குறித்த விளிம்பு நிலைக்கும் அப்பாலிருக்கும் மக்களையும் உள்ளடக்கிய பெருந்திரள் குரலையே அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தி இருக்கிறார்.


தமிழ்ச் சமூகத்தின் விளிம்புநிலைக் குரலையும் உள்ளடக்கிய அயோத்திதாசரது பேசு பொருட்கள் / சிந்தனைகள் / செயல்பாடுகள் குறித்து, அவருக்குப் பிறகான சமூக இயக்கங்கள், குறிப்பாகத் திராவிட இயக்கங்கள் ஒரு நூற்றாண்டு காலமாகவே பேசு பொருளாக ஆக்கப்படவில்லை. அதைத்தான் டி.தருமராசுஒரு நூற்றாண்டு மறதிஎனும் கட்டுரையில் மிக விரிவாகவே அதன் காரணத்தை முன்வைத்திருக்கிறார்.


திராவிட இயக்கம் குறித்த மறுவாசிப்புத் தேவை :


அயோத்திதாசர் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்தும் மறுவாசிப்பு செய்வதற்கான மூன்று நோக்கங்கள் இருப்பதாகக் கருதுகிறார் டி.தருமராசு. அதாவது,


அட்டவணைச் சாதிகள் என்றும் தலித் என்றும் சொல்லப்படும் வகைப்பாடுகளின் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை இருந்தது இல்லைகாலனியச் சொல்லாடலின் ஒரு அங்கமாக உருவாகி வந்த இந்த வகை, அம்பேத்கரின் புண்ணியத்தில் சுதந்திர இந்தியாவில் மேலும் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இந்த வகை எனக்குத் தனிப்பட்ட வகையில் பெரும் சுமையாகவே இருந்தது. இதிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதற்கு அயோத்திதாசரின் யோசனைகள் துணை செய்ய முடியும் என்பது ஒரு கருதுகோள்.


இரண்டாவதாக, திராவிடம் இயக்கம் வெற்றி பெற்ற மதமதப்பில் பிறந்து வளர்ந்த (அதாவது, 1967க்குப் பின் பிறந்தவர்கள்) எனக்கு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது மாபெரும் சவாலாக இருந்ததுஜனநாயக அரசியலமைப்பை மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன என்றாலும் திராவிட இயக்கங்கள் தங்களது ஆதாரமான கருத்தியல் நிலைப்பாடுகளை இழந்து விட்டன என்பதே உண்மைஇந்த உண்மை என்னிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியபடியே இருந்தது.

ஒரு விடுதலை இயக்கம், அரசியல் அதிகாரத்தை கையிலெடுக்கையில், கருத்தியல் நேர்மையைக் கை நழுவ விடுவது ஏன் என்பதை நான் விளங்கிக் கொள்ள விரும்பினேன்அதிகாரம், கருத்தியல் நேர்மை, வெகுஜன இயக்கம் போன்ற விஷயங்களை நாம் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும் எனக்குப் பட்டது. அந்த வகையில், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப சமத்துவம், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றை இன்னும் வலிமையாகக் கருக்கொள்வது எப்படி என்பதும் எனது கேள்வியாக இருந்ததுஇந்த முயற்சிக்கும் அயோத்திதாசர் பயனுள்ளவராக இருப்பார் என்று எனக்குப் பட்டது.


அதே போல, சாதி குறித்து நிலவும் எந்தவொரு அறிவியல் உண்மையிலும் எனக்கு சம்மதம் இருக்கவில்லை. அவற்றிற்கு எதிரான வலுவான ஒரு பாடு அனுபவங்கள் என்னிடம் இருந்தன. சாதி தொடர்பான எல்லா வியாக்கியானங்களும் இறுதியிலும் இறுதியாய், சுத்தம் - அசுத்தம் அல்லது பார்ப்பார் - பறையர் என்று சுருங்கிப் போவதில் நான் நிஜமாகவே அதிருப்தி கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, ‘பிராமண எதிர்ப்புஎன்ற ஒற்றைத் திட்டம் சாதி எதிர்ப்பாக நிலைநிறுத்தப்படுவது குறித்தும் எனக்கு உடன்பாடு இல்லைஇந்த உரையாடலுக்கும் அயோத்திதாசர் மிக முக்கியமான தரவாக இருக்க முடியும் என்பது இன்னொரு கருதுகோள்பக். 11, 12)


என்கிறார்.அதாவது, திராவிட இயக்க அரசியல் கருத்தியலின் போதாமைகள், அயோத்திதாசரின் அரசியல் கருத்தியலின் தேவைகள் குறித்ததே மேற்குறித்த கருதுகோள்களின் சாரம். இன்னும் குறிப்பாக, அயோத்திதாசரின் சமூக, அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு பற்றிய சிந்தனைகள் இன்றைய காலகட்டத்துச் சமூக அரசியல் சூழலிலும் பேசு பொருளாக ஆக்கப்பட வேண்டியவை என்பதைதான் டி.தருமராசின் கருதுகோள்கள் வலியுறுத்துகின்றன.


திராவிட இயக்க அரசியல் கருத்தியலின் போதாமையை / இடைவெளியை / விடுபடல்களை / குறைபாடுகளை அயோத்திதாசரின் கருத்தியல்களைக்கொண்டு முழுமையாக்கவோ செழுமைப்படுத்தவோ திராவிடக் கருத்தியலாளர்கள் முனைந்திருக்கலாம் அல்லது முயலலாம்.


ஆனால், பிராமண மேலாதிக்க எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர் அரசியல், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய எடுத்துரைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சமூக விடுதலை, தமிழர் அடையாள அரசியல், வழிபாடு உள்ளிட்ட சமய அடையாளங்கள், பண்பாட்டு வழக்காறுகள், சமூக வரலாறு பற்றிய கண்ணோட்டங்கள் போன்ற யாவற்றிலும் அயோத்திதாசரின் கருத்தியல் நிலைப்பாடு ஒன்றாக இருக்கிறது; திராவிட இயக்க அரசியல் கருத்தியல்வாதிகளின் நிலைப்பாடும் புலப்பாடும் வேறொன்றாக இருக்கின்றன.


இந்நிலையில், அயோத்திதாசரைக் குறித்த திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு மறதிக்கான காரணியாக டி.தருமராசு முன்வைக்கும் வாதம் சாதிப் பின்புலத்தையே அடையாளப்படுத்துகிறது.


பெரியாருக்கும் அயோத்திதாசருக்கும் தொடர்புகள் இருந்திருக்க முடியுமா? தொடர்புகள் இல்லையென்றாலும் அயோத்திதாசரைப் பற்றி அவருக்குத் தெரியாதிருக்க நியாமிருக்கிறதா? அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றால், அயோத்திதாசர் முன்வைத்த சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிடன், பிராமண எதிர்ப்பு போன்ற பல விஷயங்களை பெரியாரும் பேசியதன் பின்புலத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? அயோத்திதாசர் பற்றி அவர் அறிந்திருந்தார் என்றால், அயோத்திதாசரின் சிந்தனைகளை  உள்வாங்கியிருந்தார் என்றால், தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு முறையேனும் குறிப்பிடாமல் விட்டது ஏன்? ஒரு சிறு மேற்கோள் அளவில்கூட குறிப்பிடப்படும் தகுதியை அயோத்திதாசர் பெற்றிருக்கவில்லையா?


பெரியார் மட்டுமல்ல, அவரோடு கூட செயல்பட்ட திராவிட இயக்க செயல்வீரர்களும், அவரைப் பின்பற்றிய திராவிட இயக்கத்தின் தம்பிகளும் கூட அயோத்திதாசர் குறித்தும், தமிழ் பெளத்த செயல்பாடுகள் குறித்தும் மெளனம் சாதிப்பதன் யதார்த்தம் என்ன? உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாமல் இருந்ததா அல்லது பிறர் தெரிந்து கொள்ளாமலிருக்க மெளனம் காத்தார்களா அல்லது அயோத்திதாசர் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற உண்மை அவர்களது வாய்களையும், கைகளையும் கட்டிப்போட்டதா?”பக். 95, 96) 


என, திராவிட இயக்கத்தின் மீதான குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவுமே முன்வைக்கிறார் டி.தருமராசு.


பிராமண எதிர்ப்பு, பிராமணர் அல்லாதவர் நலன், பகுத்தறிவு, சமூக விடுதலை போன்றவை குறித்த கருத்தியல் நிலைப்பாடுகளில், அயோத்திதாசரின் அரசியல் முன்னெடுப்புக்கும் திராவிட இயக்க அரசியல் முன்னெடுப்புக்கும் ஒருமித்த நிலைப்பாடு இருப்பதுபோலத் தோன்றினாலும், அவையிரண்டும் வேறுவேறான அடையாள அரசியலையே உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அயோத்திதாசரைத் திராவிட இயக்கங்கள் பேசு பொருளாக்காமல் இருந்ததன் பின்புலம் சாதிதான் என அடையாளப்படுத்துவது முழுமையான வாதமாக அமையாது. எனினும், திராவிட அரசியல் கருத்தியலின் தோழமைக் கருத்தியலாகக்கூட அயோத்திதாசரது அரசியல் கருத்தியல் கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


அயோத்திதாசரது அரசியல் கருத்தியல் / அறிவுச் செயல்பாடுகள் தோழமைச் செயல்பாடுகளாகக்கூட திராவிட இயக்கங்கள் அணுக முடியாது போனமைக்குக் காரணம், அயோத்திதாசர் முன்னெடுத்த அடையாள அரசியலே பின்புலமாகும்.


அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகள், அவற்றின் கருத்தியல் புலப்பாடுகள் போன்றவை குறித்த அறிமுகமும் விவாதங்களும் திராவிட இயக்கத்தினருக்குக் கிடைத்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் அமைப்பாக்க வளர்ச்சிக்கும் கருத்தியல் முன்னெடுப்புக்கும்கூட அயோத்திதாசர் தோற்றுவித்த இயக்கமும் அவரது அறிவுச் செயல்பாடுகளும் பக்கத்துணையாய் இருந்திருக்கின்றன. இதைக்குறித்து ஆராய்ந்த ஞான.அலாய்சியசின் கருத்துகள் முக்கியமானவை எனக்கருதும் டி.தருமராசு, அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.


அயோத்திதாசரின் மறைவுக்குப் பின்னர், தமிழ் பெளத்த இயக்கத்தை வழி நடத்தியவர்களில் முக்கியமானவர்களாக லட்சுமி நரசு, அப்பாதுரையார் போன்றவர்களைச் சொல்லலாம். ‘தமிழன்பத்திரிக்கையை நடத்துவதையும், பெளத்த சங்கங்களைக் கட்டுவதிலும், பெளத்த மாநாடுகளை நடத்துவதையும் இவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.


1928ஆம் வருடம் தென்னிந்திய பெளத்த சங்கத்தின் பொது மாநாடு ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டின் தலைவராக லட்சுமி நரசு செயல்பட்டு வந்தார். மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாகவும், சிறப்புப் பேச்சாளராகவும் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். .வே.ரா. பெரியார் அவர்களில் ஒருவர். இந்த மாநாட்டின் மூலம் பெரியாரும் அப்பாதுரையாரும் ஒருவருக்கொருவர் நெருங்கி வந்து, பின் இறுதி வரை நண்பர்களாக இருந்தனர். அப்பாதுரையாரின் நட்பு பெரியாரைப் பல முறை கோலார் தங்கச் சுரங்கத்திற்கு அழைத்து வந்தது.


பெரியார் ஒவ்வொரு முறை கோலாருக்கு வரும் பொழுதும் பெளத்தம் தொடர்பான புத்தகங்களைத் தேடித் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அயோத்திதாசரின் எழுத்துக்கள் மீது அவர் அதிகமான ஆர்வத்தைக் காட்டினார். கோலாருக்குப் பெரியார் வந்தார் என்றால், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு என்று பல விஷயங்களைப் பற்றி பல பேருடன் விவாதித்துக் கொண்டேயிருப்பார். அப்படியான விவாதங்களில் தமிழ் இலக்கியம், வரலாறு, பிராமண எதிர்ப்பு, பகுத்தறிவு மீதான விமர்சனப் பார்வைகளுக்காகதான் அயோத்திதாசருக்கு கடமைப்பட்டிருப்பதாய்பலமுறை நேரடிப் பேச்சில் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவங்களையெல்லாம் அப்பாதுரையாரின் வழி வந்த பலர் இன்றும் ஞாபகத்தில் வைத்துச் சொல்கிறார்கள்.


அப்பாதுரையாருக்கும் பெரியாருக்குமான நட்பு பின்னாட்களில் இரு பத்திரிக்கைகளுக்கு இடையிலான நட்பாகவும் மலர்ந்தது. 1925இல் குடிஅரசு இதழ் தொடங்கப் பெற்றதற்கு மறு வருடம், 1926இல் அப்பாதுரையார்தமிழன்பத்திரிக்கையை மறுபடியும் கொண்டுவரத் தொடங்கினார். இவ்விரு பத்திரிக்கைகளும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன. அவற்றின் பார்வைகள் ஏறக்குறை ஒன்றே போல் இருந்தன. இரண்டு இதழ்களிலும் ஒரே மாதிரியான நபர்களே எழுதினார்கள். சுயமரியாதை இயக்க வெளியீடுகள் பற்றிய விளம்பரம்தமிழனிலும்தமிழ் பெளத்த வெளியீடுகள் பற்றிய விளம்பரம்குடி அரசிலும்வெளிவந்தன. குடி அரசு சமதர்மத்தை வலியுறுத்தியது. தமிழன் பெளத்த தர்மத்தைப் பேசியது.


சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக மாறி அரசியல் தளங்களில் செயல்படத் தொடங்கிய பொழுது, வட தமிழகப் பகுதிகளில், தமிழ் பெளத்த இயக்கத் தலைவர்களும், செயல் வீரர்களுமே முதன்மை உறுப்பினர்களாக விளங்கினர். திருப்பத்தூரைச் சார்ந்த டி.எச். அனுமந்து, கோலாரைச் சார்ந்த ஜி. அன்னபூரணி, செங்கல்பட்டைச் சார்ந்த சி.கே. குப்புசாமி இவர்களுள் சிலர். இதற்குப் பின்பு, பெளத்த கூட்டங்களுக்கும் திராவிட இயக்கக்