Skip to main content

தமிழ் நாட்டுப்புறவியல் - புதிய வடிவில் திருத்திய பதிப்பாக...

'தமிழ் நாட்டுப்புறவியல்', வெளிவருகிறது. 


மருதன் கங்காதரனின் அறிமுகக் குறிப்பு:


'இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள், தமிழ் நாட்டுப்புறவியல் என்ற சிந்தனையை நோக்கி உங்களை நகர்த்தக்கூடியவை.  அப்படியொன்று தேவைப்படுவதற்கான காரணங்கள் இதில் விரிவாக அலசப்பட்டுள்ளன.  அதே நேரம், அப்படியொன்று உருவாகியிருக்கும் என்றால், அந்த ஆய்வுகள் என்ன தோரணையில், என்ன தன்மையில் இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.’


இந்த வரிகளோடு தொடங்குகிறது டி. தருமராஜின் 'தமிழ் நாட்டுப்புறவியல்'. ஓர் அறிவுத் துறையை அறிமுகப்படுத்தும் எந்தவொரு பாட நூலுக்கும் வாய்க்கும் ஆரவாரமற்ற எளிய தலைப்புதான் இந்நூலுக்கும் வாய்த்திருக்கிறது. ஆனால் உள்ளிருந்து விரிந்துவரும் உலகம் முற்றிலும் வண்ணமயமானதாக இருக்கிறது. 


வாய்மொழி வழக்காறுகள், நாட்டாரிலக்கியம், நிகழ்கலைகள், கைவினைக் கலைகள், பழமரபுகள், கிராமத்துக் கடவுள்கள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவையெல்லாம் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’ அல்லது ‘ஒரு முக்கியமான கருத்துருவாக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்’  என்கிற தொனியோடு தருமராஜ் நம்மை அணுகுவதில்லை.


நான் ஒருமுறை பாவைக்கூத்தொன்றைக் கண்டபோது என்ன நடந்தது தெரியுமா, எனக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா, நான் அனுமானிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா என்று போகிறபோக்கில் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். அந்த உரையாடலில் நாம் பங்கேற்கும்போது அவர் பார்த்த காட்சிகளை நாம் காண்கிறோம், அவர் படித்ததை நாம் படிக்கிறோம், அவர் வந்தடையும் முடிவுகளை நாம் அசைபோடுகிறோம். எல்லாமே மிக இயல்பாக நிகழ்கின்றன. அவர் எதையும் விளக்குவதில்லை. எதை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்சென்று அதன்முன்பு நிறுத்தி, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தீண்டி உணர்ந்துகொள்ளுங்கள் என்கிறார்.


ஒருமுறை கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வந்து சேரும் கிராமியக் கலைஞரான பரமசிவராவ் அழிந்துவரும் தன் கலையை அறிமுகம் செய்து உணர்ச்சி மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி பாவைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பல பாவைகள் இருக்கும். சீதை என்றால் திருமணத்துக்கு முந்தைய சீதை, மணக்கோல சீதை, வனவாச சீதை, அசோகவன சீதை என்று பல பாவைகள் இருக்கும். அந்தக் குவியலிலிருந்து தனக்குத் தேவையானதை அவர் உருவியெடுத்து உயர்த்திக் காட்டுகிறார். 


ஒரு கட்டத்தில் அவருக்குத் தேவைப்படும் பாவை கிடைக்காமல் போய்விடுகிறது. அவர் பதட்டம் கொள்கிறார். பரபரப்போடு தேடுகிறார். நான் தேடும் பாவை இங்கேதான் எங்கோ இருக்கிறது என்று முணுமுணுத்தபடி அவர் பாவைகளைத் தூக்கி வீச ஆரம்பிக்கிறார். பாவையைக் காண்பிக்காவிட்டால் பரவாயில்லை தொடர்ந்து பேசுங்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் அவர் தேடுவதை நிறுத்துவதாக இல்லை. இப்படியே போனால் எங்கே பாவைகளை அவர் கிழித்துவிடுவாரோ என்னும் பதட்டத்தில், ‘பரமசிவராவ்! உங்களால் இன்னும் கொஞ்சம் மெதுவாக அப்பாவைகளைக் கையாள முடியாதா?' என்று சிலர் குரலெழுப்புகிறார்கள்.


அதன்பிறகு நடந்ததை தருமராஜ் சொல்கிறார். ‘இதற்குப் பரமசிவராவ் எங்களுக்குச் சொல்லிய பதிலே இங்கு முக்கியமானது. அதனை அசாதாரணமான ஒன்று என்றே நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நிறைய பேர் அதைச் சாதாரணம் என்கிறார்கள். ஒருவேளை சாதாரணத்திற்கும் அசாதாரணத்திற்குமான இடைவெளியில் அந்தப் பதில் வந்து சேரக்கூடும். நிறையப் பேருக்கு அவரது பதில் புரியவில்லை. அர்த்தம் புரிந்த சிலரோ பரமசிவராவ் என்ற கலைஞனின் உலகிற்குள் உன்மத்தம் பிடித்தவர்களாகத் திரிந்தார்கள். அவர் அன்றைய தினம் சொல்லிய மிக எளிமையான பதில் இதுதான்; ‘பாவைகளை நிதானமாகக் கையாளுவது என்றால் என்ன?’’


அம்பேத்கரின் கதையை பாவைக் கூத்தாக மாற்ற தருமராஜும் சில கலைஞர்களும் மேற்கொண்ட பிரயத்தனங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன. என்னது அம்பேத்கர் தமிழர் கிடையாதா? மராட்டியர் என்றா சொல்கிறீர்கள் என்று ஆரம்பத்திலேயே அதிர்ந்துபோகிறார்கள் கலைஞர்கள்.  அம்பேத்கர் பெரிய மனிதராக வருவார் என்று அருள் வாக்கு சொன்ன அவர் சித்தப்பா ஒரு சந்நியாசி என்பதை அறிய நேர்ந்ததும் அவர்கள் மகிழ்கிறார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் விரும்பிய புராண வகை தொடக்கம் அதில் இருந்தது. தவிரவும், சித்தப்பா சந்நியாசி பாவையைப் புதிதாக அவர்கள் செய்யவேண்டியிருக்காது. விஸ்வாமித்திரர்  அல்லது வசிஷ்டர் பாவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நிலைக்கவில்லை. அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்ட மகர் என்று சொல்லப்பட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏன் அவர் ஒரு ‘மண்டிகர்’ஆக இருக்கமுடியாதா என்கிறார்கள். இப்படியாக விரிந்துசெல்லும் உரையாடல் வந்து முடியும் இடம் அழுத்தமானது, நம்மால் எளிதில் மறக்கமுடியாதது.


ஓர் ஆய்வுப்பணிக்காகக் கிராமமொன்றுக்குச் செல்ல நேர்ந்தபோது எப்படி முகத்திலடித்தாற்போல் சாதி தன் எதிரில் வந்து நின்றது என்பதை தருமராஜ் விவரிக்கும் இடம் முக்கிமானது. மேற்கத்திய நவீன துறையான நாட்டுப்புறவியல் இந்தியாவுக்குள் நுழையும்போது அது எவ்வாறு சாதியை எதிர்கொண்டது, எத்தகைய உரையாடலை நிகழ்த்தியது, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் அளவுக்கு எப்படி நெருக்கம் கண்டது?


அனுபவங்கள், கதைகள், கதைகள் பற்றிய கதைகள் என்று கிளைகளைப் பரப்பியபடி விரிந்து விரிந்து செல்லும் அதே சமயம் விமரிசனப்பூர்வமான ஒரு பண்பாட்டு வரலாற்றுப் பிரதியாகவும் இந்நூல் உயர்ந்து நிற்கிறது. நாட்டுப்புறவியலைத் தமிழ்ச் சூழல் எவ்வாறு எதிர்கொண்டது, பிற அறிவுத்துறைகளில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியது,  என்னவெல்லாம் சாதித்தது, எங்கெல்லாம் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிட்டது என்பதையெல்லாம் இந்நூலிலிருந்து ஒருவர் தெரிந்துகொள்ளமுடியும். கிரிம் சகோதரர்கள், லெவி ஸ்ட்ராஸ், எரிக் ஃப்ராம், பிராய்ட், பெர்டினான் சசூர், காயத்ரி ஸ்பிவாக், ஏ.கே. ராமானுஜன், நா. வானமாமலை, அயோத்திதாசர்  அனைவரும் அருகருகில் திரட்டப்பட்டு ஒப்பிடப்படுகிறார்கள், விவாதிக்கப்படுகிறார்கள்.


நாட்டுப்புறவியல் என்று அழைக்கவேண்டுமா அல்லது நாட்டார் வழக்கியல் என்றா? அதென்ன தனியே தமிழ் நாட்டுப்புறவியல்? நாட்டுப்புறம், நாட்டார் ஆகிய சொற்கள் வேறு எதையெல்லாமோ உணர்த்துகின்றன அல்லவா? இவற்றைத் தொடர்ந்து கையாள்வது முறைதானா? மானுடவியலும் நாட்டுப்புறவியலும் எங்கெல்லாம் இணைகின்றன, எங்கெல்லாம் முரண்பட்டுப் பிரிகின்றன? இந்தியா போன்ற பின்காலனிய நாடுகளில் நாட்டுப்புறவியல் எதிர்கொண்ட கருத்துருவச் சிக்கல்களை விளங்கிக்கொள்வது எப்படி? சாதியோடு இத்துறை வளர்த்து வைத்திருக்கும் உறவை நாம் என்ன செய்யப்போகிறோம்?


நாட்டுப்புறவியலின் கதையை நாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மொழியியல், தத்துவம், வரலாறு, இனவரைவியல், உளவியல் உள்ளிட்ட துறைகளின்மீதும் நம் ஆர்வத்தை அடுத்தடுத்துச் செலுத்துகிறார் தருமராஜ். அவர் கரங்களுக்கு மட்டும் ஒவ்வொருமுறையும் சரியான பாவைகள் அகப்பட்டுவிடுகின்றன.


'நான் ஏன் தலித்தும் அல்ல?', அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை' ஆகிய நூல்களைத் தொடர்ந்து டி. தருமராஜின் 'தமிழ் நாட்டுப்புறவியல்' நூலை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது. 2011 ஆம் ஆண்டு புலம் வெளியிட்ட நூலின் திருத்தப்பட்ட, செழுமைப்படுத்தப்பட்ட பதிப்பு இது. முதலில் மின்னூலாகவும் பின்னர் நூல் வடிவிலும் வெளிவரும்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக