Skip to main content

கர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘கர்ணன் திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெளியாகியுள்ளது.  கண்டா வரச்சொல்லுங்க…






அதற்குப் பயன்படுத்தப்பட்ட காட்சி வடிவங்கள் அற்புதமானவை.  பாடல் நெடுக, ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் கொண்டு சுவரில் ஓவியம் வரைகிறான்.  நெருப்பால் ஓவியத்தைச் சுட்டால் என்ன ஆகும்?  காகிதமும் சீலையுமே ஓவிய ஊடகங்கள் என்ற கடந்த சில நூற்றாண்டு மயக்கத்தைக் கடந்து யோசிக்க முடிந்தால், தீ நாவே ஆரம்ப கால வண்ணம் என்பது நமக்கு புலப்படும்.  பந்தமே, ஆதித் தூரிகை.


அந்த வகையில், எரிந்து கொண்டிருக்கும் பந்தத்தின் சிறு நுனியில் எரிந்து முடிந்த சுடு கரி என்ற யோசனை மிகப் பிரம்மாதமான கற்பனை.  ‘சமகாலக் கலை (contemporary art) என்று ஏதாவது பேசப் புகுந்தால் இதுவொரு கச்சிதமான உருவமாக செயல்பட முடியும்.  


கலை வடிவங்கள் எப்பொழுதுமே எரிந்து அவிந்த கரித்துண்டுகளால் செய்யப்படுபவை என்றொரு மூடநம்பிக்கை நம்மிடம் உண்டு.  அதன் மறுபக்கம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பு எதையும் படைத்து விடாது என்பதும் நமது இன்னொரு மூடநம்பிக்கை.  


தீயும் கரியும், இரண்டு வெவ்வேறு மனநிலைகளையும், சந்தர்ப்பங்களையும் விவரிக்கக்கூடியவை என்றே நாம் யோசித்து வந்திருக்கிறோம்.  ‘கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்ற ‘ஜல்லி கூட இந்தப் பாகுபாட்டிலிருந்து தான் உருவானது. 


தீ அழிக்கக்கூடியது என்பதால் அதன் உக்கிரத்திலிருந்து படைப்பு தோன்றாது என்பது ஒரு வாதம்.  ஆனால், அதன் குளிர்ந்த வடிவமான கரி அப்படி அல்ல; அது படைப்பு சக்தி நிரம்பியதாகச் சொல்லப்படுகிறது.  உறைந்து நின்றாலும் கரியினுள் ‘அவிந்த நெருப்பு இருக்கிறது என்ற கற்பனையும் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.  


இந்த யோசனை, நெடுங்காலமாய் நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்ட தருணத்தை யோசிக்கிறவர்கள் வெளிப்படுத்தும் கற்பனையை நினைத்துப் பாருங்கள்.  ஆதியில் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது - எல்லாமே தீத் துண்டங்கள்.  அவை சுழன்று, எரிந்து, அவிந்து, உறைந்த பின் தோன்றிய தண்மையிலிருந்து உயிர் உருவானது.  அதாவது, குளிர்ச்சியிலிருந்து படைப்பு சக்தி வெளீப்பட்டது. 


எந்த ஒன்றையும் படைப்பதற்கு தெளிந்த நீரோடை போன்ற மனமும், அமைதியான சூழலும் தேவை என்று கற்பனை செய்யப்படுவதன் அபத்தம் இது.  இதனாலேயே கலை என்றைக்குமே இறந்த காலத்தைச் சித்தரிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு.  ஆனால், உண்மையில் கலைக்கு ‘இறந்த - நிகழ் - வரும் போன்ற பாகுபாடுகள் இல்லை.  ஏனெனில், அது வெளிப்படும் தருணத்தை சார்ந்து அணுகப்படுவது இல்லை.  ஆனால், வெளிப்படும் தருணமே முக்கியம் என்றே பழமைவாதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.  


ஒரு உக்கிரமான பிரச்சினையின் மையத்திலிருந்து, அது தகித்துக் கொண்டிருக்கும் போதே, கலை உருவாக முடியாதா என்ற கேள்விக்கு தமிழ் மரபில் இது வரைக்கும் தெளிவான பதிலெழுதுவும் சொல்லப்பட்டதில்லை.  புராணீயம் இதனை இருவேறு வடிவங்களாகவே கற்பித்து வந்திருக்கிறது - எரியும் சிவனும், தணிந்த சக்தியும்.  இரண்டு வெவ்வேறு தன்மை கொண்ட பொருட்களின் பிணைப்பு என்று பொருள்.  ஒரு பக்கம் நெருப்பு, மறுபக்கம் கரி.  அர்த்தநாரி.  


ஆனால், உண்மையில், நெருப்பின் உள்ளே ஓவியம் வரைவதற்கான கரியும் இருக்கிறது என்ற சாத்தியத்தை மாரி செல்வராஜின் காட்சிப் படிமங்கள் வெளிப்படுத்துகின்றன.  இன்றைக்கு இது ஏன் முக்கியம் என்றால், தலித் படைப்புகளின் தலை போகிற பிரச்சினை இது தான். தலித் படைப்புகள் தங்களை ஆவணங்களாக அதாவது கரித்துண்டுகளாகப் பாவித்த காரணத்தால், ஒரு கட்டத்திற்குப் பின் நகர முடியாத சகதியில் சிக்கிக் கொண்டன.  


ஆனால், ‘சமகாலக் கலை என்ற யோசனை இந்தச் சிக்கலை சுலபமாகத் தீர்க்கக்கூடியது.  அதற்கு நெருப்பு வேறு, கரி வேறு அல்ல.  தீயினால் பொசுக்கிய ஓவியம் என்றால் மரபான கலையில் விபத்து என்று பொருள்.  ஆனால், சமகாலக் கலையில் அதன் அர்த்தமே வேறு.  ஓவியத்தை எரித்தல் என்றால், அழித்தல் அல்ல படைத்தல் என்று பொருள்.  வாள் எடுத்தல் உயிரை வாங்குவதற்கு அல்ல; உயிரைப் படைப்பதற்கு.  ஒரு மருத்துவரைப் போல.  ஒரு சவரக்காரரைப் போல.    


தென் தமிழகத்தின் வன்முறை வரலாற்றை கலை மூலம் பேசத் தொடங்கும் கலைஞன், தனது தளவாடங்களை புதிதாகச் செய்து கொள்வ்து போலவே மாரி செல்வராஜின் தீயால் சுட்ட ஓவியம் என்ற கற்பனை தோன்றுகிறது.  ஏகத்தும் எதிர்ப்பார்பை ஏற்றியிருக்கிறது கண்டா வரச்சொல்லுங்க… பாடல்.


https://youtu.be/xqxF-KM-CxI

Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...