Skip to main content

2 நிறையகுளம்

2     நிறையகுளம்



 தி. கோபிநாத்


திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம், நிறையகுளம். (கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகளும், சம்பவங்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இக்கட்டுரைக்கான தகவல்களை வழங்கியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனிநபர் அடையாளங்களும், பிற அடையாளங்களும் புனையப்பட்டுள்ளன. நிறையகுளம் என்பது புனைபெயர்). இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தது என்றாலும் திருநெல்வேலி நகரமே அருகாமை நகரமாக அமைந்துள்ளது. 


சுமார் 400 வீடுகளுக்கு மேல் இவ்வூரில் உள்ளன. ஆனால் தொடக்கத்தில் ஒரு சில குடும்ப வகையார்கள் மட்டுமே இருந்ததாக கூறுகின்றனர். உதாரணமாக மேலத் தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் குடும்பத்தைக் குறிப்பிடுகின்றனர். கருப்பையாவின் குடும்பம் தான் இவ்வூரில் இருந்ததாகவும் மற்றவர்கள் எல்லாம் வந்தட்டிகள் தான் என்றும், நாஞ்சான்குளம், தென்கலம், சிவந்திப்பட்டி போன்ற ஊர்களிலிருந்தே இவ்வூருக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள் என்பதை யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒரு பெண்மணி குறிப்பிடும் போது சிவந்திப்பட்டியில் ஒரு மேல்ஜாதி பெண்ணை அப்படியே உயிரோடு புதைச்சிட்டு இராத்திரியோடு இராத்திரியாக இங்கு வந்ததாக கூறுகிறார். காரணம் கேட்கும் போது ‘அவங்க கொடும் பண்ணியிருப்பாங்களா இருக்கும் அதான் உயிரோடு புதைசிருக்காங்க. அதனால தான், அந்தக் குடும்பத்தாருக்கு பொம்பள வாரிசு கூட இருக்காதுனு சொல்லுவாங்க' என்றார். 


ஊரில் ஒரே ஒரு முஸ்லீம் குடும்பம் இருந்தது. அவர்கள் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தனர். அந்த குடும்பம் ஊரை விட்டுச் சென்று நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

 

ஊருக்குக் கீழ்பகுதியில் வண்ணார்குடியும் தெற்கே அருந்ததியர் குடியும் பறையர்குடியும் உள்ளன. பறையர்குடி பெயர் மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு பறையர் சாதி மக்கள் யாரும் இல்லை. அவர்கள் ஊரை விட்டு போய் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஊருக்கு மேற்கு பகுதியில் ஆசாரிகள் குடும்பமும் முஸ்லீம் குடும்பமும் வாழ்கின்றன. தெற்குத்தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு, கம்மாபெட்டி தெரு, கிரவுண்டு என்று எல்லா இடத்திலும் இப்பொழுது பள்ளர்களே வசிக்கின்றனர்.


நிறையகுளம் என்ற இவ்வூர் சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களுக்காக வெகுவாக அறியப்பட்ட ஒன்று. வேறெந்த தமிழகக் கிராமத்தை விடவும் பொருளாதார ரீதியிலான மாற்றங்களை வெளிக்காட்டிய கிராமம். அதன் தொடர்ச்சியாக, சமூக மரியாதையை வேண்டி இவ்வூர் மக்கள் நிகழ்த்திய போராட்டம் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. சாதியத்தின் மோசமான பக்கங்களுக்காய் உதாரணம் காட்டப்பட்டு வந்த நிறையகுளம் சாதிய விடுதலைப் போரின் மாதிரி கிராமமாக மாறிய விதத்தை விளக்கும் வகையிலேயே இக்கட்டுரை அமைந்துள்ளது. சாதிய ஒடுக்குமுறை இருந்த காலத்து நடைமுறைகளையும், இன்றைய சூழலையும் ஒருங்கே அறிந்த தகவலாளியிடம் மேற்கொண்ட நேர்காணல் இங்கே தரப்படுகின்றது. 


தகவலாளியின் பெயர் முத்தம்மாள். இவரின் வயது 47. திருமணமாகி, பாளையங்கோட்டையில் வசித்து வரும் இவர், நிறையகுளத்திலேயே பெரும்பாலான காலங்களைக் கழித்தவர். இனி பேட்டி,

 

'அந்த காலத்திலெல்லாம் மருவத்தலை காட்டுக்கு ஜனங்க எல்லாம் அவுரி இலை உருவத்தான் போவும். ஊர்ல பவளக்கொடி, தாமரை இரண்டு பேரும் தான் சம்பளம் வாங்கிட்டு வருவாக. நம்ம ஆடு மாடு அவங்க காட்டுல மேய்ஞ்சிட்டுனு சொல்லி ஊருக்குள்ள வந்து அவதாரம் போடுவாங்க. தெண்டம் வசூல் பண்ணிட்டு போவாங்க. யாரு கேட்பா அவங்கள?


ஊர்ல வந்து பஞ்சாயத்தெல்லாம் பண்ணுவாங்களா?


ஆமா பத்து பதினைஞ்சு பேர் மொது மொதுன்னு கம்பு, அருவா, வேல்கத்தினு (இப்பெல்லாம் அவங்கிட்ட கூட அப்படி ஆயுதம் இருக்காது) ஊருக்குள்ள வருவாங்க. அம்மன் கோயில் ஆலமரம் இருக்குள்ள அங்க தான் வந்து வரிசையா திண்ணையிலே உட்கார்ந்துகிடுவாங்க. டீக்கடையிலிருந்து டீ சியெல்லாம் போட்டுக் குடுத்திட்டு, அவங்க முன்ன போய் துண்ட இடுப்புல கட்டிகிட்டு காலுல கைல்ல விழுவாங்க. 'ஐயா எங்கள ஒன்னும் செஞ்சிராதீங்க?' அப்படி இப்படி கதறத்தான் செய்வாங்க.

 

அவங்க வந்தவுடனே ஊர் மக்கள் எல்லாரும் ஒன்னா எப்படி கூடுவாங்க?

அதான் சக்கையா இருக்காம்லா. அவன் தான் ஊருக்குள்ள வந்து, 'இங்க பாருங்க, நம்ம ஆடுமாடு அவங்க தோட்டத்துக்குள்ள மேய்ஞ்சிருக்காம். அவங்கல்லாம் வந்திருக்காங்க. எல்லாரும் வாங்க'னு கூட்டிட்டு போவான்.


ஊருக்குள்ள உள்ள ஒன்னு ரெண்டு பெரிய ஆளுங்க போய் மன்னிப்பு கேட்பாங்க. பொம்பள புள்ளைங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க! வேடிக்கை எங்க பார்க்க? எல்லாம் பதறிக்கிட்டு தான் நிப்பாங்க. எப்பம் என்ன நடக்குமோனு பதறிக்கிட்டுதான் நிப்பாங்க!

 

வந்தவங்க எல்லாரும் என்ன வயசில உள்ளவங்களா இருப்பாங்க? எல்லாம் நாப்பது நாப்பத்தைஞ்சு வயசுக்காரங்க தான் இருப்பாங்க. எல்லாவனும் கையில அறுவா, கம்புனு ஏதாவது வச்சிருப்பான். ஒரு நாலஞ்சு பேரு வெடல பசங்களாவும் இருப்பாங்க. பஞ்சாயத்து எல்லாம் பண்ணி முடிச்சி ஊரை விட்டு போன பெறவு தான் நிம்மதியே வரும். ஊருக்குள்ள வந்திட்டாலே. எல்லாரும் பதறிகிட்டுத்தான் இருப்போம். அந்த காலத்தில் யாரு அவங்கள தட்டிக் கேட்கிறது?

 

இவ்வளவு மோசமா இருந்திட்டு அவங்கள எதிர்க்கனும் அப்படிங்கற எண்ணம் எப்படி வந்திச்சி? எப்ப முதல்ல அவங்கள எதிர்க்க ஆரம்பிச்சாங்க? 


நம்ம ஊரு ஆளுவ எல்லாத்துக்கும் சம்பளம் வாங்கி கொடுக்கிறது எல்லாம் நம்ம ஊர் பவளக்கொடிதான். இவ தான் ஆளுகள வேலைக்கு கூட்டிட்டு போறது. அவதான் மருவத்தலைக்கு போய் சம்பளத்த வாங்கிட்டு வருவா. அவ இங்க வந்து ஆளுகளுக்கு பிரிச்சு கொடுப்பா. அதிலயும் ஆளுக்கு, தலைக்கு மேல முக்கா ரூபா, ஒரு ரூபா வரைக்கும் எடுத்துருவா. அப்பெல்லாம் மூணு ரூபாய் சம்பளம். ஆளுகளுக்கு இரண்டு ரூபா, இல்லனா இரண்டே கால் ரூபா கொடுப்பா. இது தான் நடக்கும். 


மருவத்தலை சந்தனத்தேவன்! அவன் தான் ஊருக்குள்ள வந்து ஆளுகள வேலைக்கு கூட்டிட்டு போறது. சம்பளம் கொடுக்கிறது எல்லாம். ஊருல கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பிச்சி தான், 'இன்னும் மருவத்தலை காட்டுக்கு வேலைக்கு போவக்கூடாது'னு கட்டுப்பாடெல்லாம் போட்டு பாத்தாங்க. ஆனாலும் போறது போய்க்கிட்டுத்தான் இருந்திச்சி. சந்தனத் தேவனுக்கும் பவளக்கொடிக்கும் கொஞ்சம் பழக்கம். பெற அவன் ஊருக்குள்ள ஆரம்பிச்சான். ஊர்ல உள்ளவங்களுக்கு கொஞ்சம் கோபம் வந்திட்டு.


இதுக்கிடையில் நாரைக்கிணத்துக்காரங்களும் வருவாங்க. அப்போ நம்ம ராமையா கடை நல்ல வியாபாரம் இல்ல. கடையில வந்து இஷ்டத்துக்கு கலர ஒடச்சி குடிக்கிறது. கண்டதையும் பொறுக்கி தின்னுட்டு ஊர ஒரு ரவுண்டு அடிச்சிட்டு போவாங்க. ஊருக்குள்ள அவங்க வந்திட்டலே மக்கள் எல்லாரும் பதறிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்பாங்க. ராமையா பொண்டாட்டியும் அப்ப பழகுமுள்ள? அதனால் பிரசண்ட் கிட்ட பேசி இத இப்படியே விடக் ஒரு முடிவுக்கு வந்து தான் சந்தனத்தேவன வெட்டுனது.


ஒரு நாள் சம்பளம் கொடுக்க சந்தனத்தேவன் ஊருக்குள்ள வந்திருக்கான். அன்னைக்கு அவன் வருவானு எல்லாருக்கும் தெரியும். எப்படியும் ஆள காலி பண்ணியிரனும்னு ரெடியாத்தான் இருந்தாங்க ஊர்லயும். துக்தியம்மன் கோயில் முன்னால சைக்கிள்ள இரண்டு கையையும் வச்சி பேசிக்கிட்டு இருந்தவன் தான். அப்படியே அளவெடுத்து தரிச்ச மாதிரி இரண்டு கையையும் வெட்டிட்டாங்க. 


நாங்கெல்லாம் சின்ன புள்ளை. போய் பாக்கம்லா! அப்படியே இரண்டு கையும் துடிச்சிட்டு கிடந்திச்சில்லா! மோதிர கை துடிச்சிகிட்டே கிடந்திச்சில்லா! அப்படியும் அவன விடல. நேர ஒத்த வீட்டு வரைக்கும் ஓடிருக்கான். வெட்டுன உடனே சைக்கிள போட்டுட்டு நேரே மேக்கால போய் பள்ளிக்கொடத்து தெருவே நேரே தெக்காற ரெண்டு கையையும் மேல பாத்து தூக்கி பிடிச்சிகிட்டு தானே ஒடிருக்கான்! ஒத்த வீட்டுல போய் பொத்துனு கீழ விழுந்திருக்கான். தண்ணி தண்ணினு கேட்டுறுக்கான். அங்க உள்ளவங்க பச்ச தண்ணி கொடுத்திருக்காங்க. அவன் அது வேண்டாம். நீச்ச தண்ணி கொடுங்கனு சொல்லி வாங்கி குடிச்சிட்டு, பெற அங்கிருந்து போயிருக்கான்.


அதுக்கப்புறமே வரத்து கொறஞ்சிட்டு! கொறஞ்சிட்டு என்ன? வரத்தே இல்ல. ஆனா மறுநாளே பத்து பதினைந்து போலீஸ், மருவத்தலகாரங்கனு ஊருக்குள்ள வந்து திரும்பவும், அத மாதிரி தான் எப்ப என்ன நடக்குமோனு எல்லாம் பயந்து கிட்டு தான் இருந்தோம். பத்து பதினைந்து நாள் போலீஸ்காரங்க பள்ளிக்கொடத்துல பொங்கி தின்னுக்கிட்டு தான் கிடந்தாங்க. அவங்க பண்ணுன அநியாயம்! வீட்டுக்காட்டுல வளர்க்குற கோழிய பிடிச்சி அறுத்து தின்னுருவாங்க. வீட்டுக்காட்டுக்கு வருவாங்க. முருங்கக்காய் பறிப்பாங்க. அவுமானமா பேசுவாங்க. போவாங்க. 


சக்கையா பத்தி சொல்லுங்களேன்.


அவன் தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்கள ஊருக்குள்ள கூட்டிட்டு வந்து தண்டம் வாங்கி கொடுக்கிறது எல்லாம். இரண்டாயிரம் மூவாயிரம் பிரிஞ்சா இருநூறு முன்னூறு அவனுக்கு கிடைக்குமுல்லா? அதுக்குதான், வராதவங்களையும் ஊருக்குள்ள கூட்டிட்டு வர்ரதே அவன் தான். அவனையும் வெட்டுனாங்க. அதுக்கப்புறம் அவங்க வர்ரதே துப்புறவா நின்னுட்டு. அதுக்குள்ள ஊர்ல பசங்களும் வடக்க தெக்க போக ஆரம்பிச்சாங்க. பணம் வர ஆரம்பிச்சிட்டுலா. ஒன்னு ரெண்டு பேர் நல்ல படிக்கவும் செஞ்சாங்க நம்ம ராமசாமி அண்ணன் ஐ..எஸ். பெற வெளிநாட்டு பணம் வந்த பெறவு தான் நல்ல முன்னேற்றம் அடஞ்சிருக்கு. 


அப்ப பஸ் வசதியெல்லாம் எப்படி? 


பஸ் எல்லாம் ஒண்ணும் கிடையாது எல்லாம் டிரெய்னு தான். இங்க கோவில்பட்டி ரோட்டுல பஸ் போகும். நாங்க பள்ளிகூடம் போகும் போது போவும். ஆனா பஸ்ஸுக்கு யாரும் போக மாட்டாங்க. அங்க கோவிலூர்ல ஒரு நாலு அஞ்சு வீட்டுகாரங்க தேவமாரு இருந்துகிட்டு என்னா வரத்து வருவாங்க!


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக