Skip to main content

3 'நோக்காடு' - நோகடிக்கும் துயர நிகழ்வுகள்

3   'நோக்காடு' - நோகடிக்கும் துயர நிகழ்வுகள்


தி. கமலி 


அவலங்களையும், அவற்றை எதிர்கொண்ட விதங்களையும், அவற்றை எதிர்த்த கலகங்களையும் பதிவுகளாக்கி எழுத்தினூடாகச் சகமனிதர்களுக்குப் பரப்பும் போது தமக்கான நீதியை, தமக்கான உரிமைகளைக் கேட்பதற்கான மனநிலை அவர்களுக்குள் உருவாகும். வரலாற்றை எழுதுவது மட்டுமன்றி எழுதப்பட்ட வரலாற்றை அழிப்பனவாகவும் செயல்படும், அபிமானியின் சிறுகதைகள் 'நோக்காடு' என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளன. அவற்றில் வெளிப்படும் சாதீ அடக்குமுறைத் துயர நிகழ்வுகள் பற்றி இக்கட்டுரை பரிசீலிக்கிறது.

 

‘குவிந்திருக்கும் என் விரல்களில் சாதீய அடக்குமுறையின் காயங்கள் வலிக்கின்றன. அந்த வலியின் பொருட்டு எழுந்த புலம்பல்களே இச்சிறுகதைகள்' என்றெழுதும் அபிமானி, தங்களின் சமூக விடுதலைக்காகப் போராடும் தலித் போராளிகளுக்கு இச்சிறுகதைகள் ஒரு பொறியாகப் பயன்படுமாயின் அதுவே தனது முயற்சிக்குக் கிடைத்த மகிழ்ச்சியாகக் கொள்ள விழைகிறார்.

 

சிறுமளஞ்சி சொடலச்சாமிக்கு ஒரு கிடா நேந்து விடுவதாக வேண்டிக் கொண்டபின், சாகக் கிடந்த மந்திரம் பிழைத்து நடமாடத் தொடங்குகிறான். காடுகரைக்கு வேலை சோலிக்குக் கிளம்பும் அவனும், அவன் மனைவியும் வாங்கிய கூலிகளில் எறும்புச் சேமிப்பாய் கொடை விழாவுக்குச் சேமித்துக் கொண்டு வருகிறான்.

 

கொடைவிழாவுக்குப் போவதென்றால் சும்மாவா? அய்நூறு ரூபாயாவது வேண்டியிருக்கும். வீட்டில் எல்லாருக்கும் புதுத்துணிகள் எடுக்கணும் சொந்தக்காரர்களையும் அழைத்துக் கொண்டு வண்டி கட்டிப் போகணும். சாப்பாட்டுச் செலவு அவனைச் சேர்ந்ததுதான். (நேர்ச்சை ப. 4)

 

மந்திரத்தின் உயிரைக் காப்பாத்தின சாமிக்குச் செய்ய வேண்டிய நேர்ச்சையை எப்பாடுபட்டேனும் செய்வது முக்கியம். நேர்ந்த உடனேயே சுகமாக்கிய சாமி நேச்சையைச் செய்யலேன்னா சும்மாவா வுட்டுரும்? சாமி குத்தம் ரொம்பப் பொல்லாதது என்றஞ்சுகின்றனர். மாசக் கூலிக்கு சித்தப்பாவிடமே மறியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான். ஆனால் செந்நாய்கள் வந்து தின்று விடக் கலங்குவதாகக் கதை முடிகிறது. 


அம்பேத்கார் அணி வீரர்களுக்கும் முத்து வீரன் அணி வீரர்களுக்கும் இடையே கபடி போட்டி நடக்கிறது.நம்ம வீட்டு எச்சிப் பருக்கயத் தின்னப் பயலுவகிட்ட நாம தோத்துட்டு போவுணுமாலே. புடிங்க, இல்லைன்னா அவனுவக் காலக் கையையாவது நொடிச்சிப் போடுங்க. தோத்திட்டுப் போனா அதவிடக் கேவலம் ஒண்ணும் கெடையாதுலே", என்று சாதி ஆதிக்கவுணர்வை உசுப்பி விட, வன்மம் கொண்டு, குழல் விளக்குகளை உடைத்து, பந்தலைச் சிதைத்து, பெஞ்சுகளைத் தூளாக நொறுக்கி, காவலர் வந்ததும், அங்கங்கே பரவலாய் கட்டிக்கட்டிகளாய் ரத்தம் உறைந்து கிடக்க காயப்பட்ட ஓலங்கள் காதுகளில் மோதுவதாக முடிகிறது ஒரு பொங்கல்.

 

மூணுமாதத்திற்கு ஒருமுறை மணிமுத்தாறில் வரும் தண்ணீருடன் வெள்ளித் துண்டுகளாய் அயிரையும், கெண்டையும், துளுவனும் வரும். தண்ணீர் வேகம் குறைந்து ஓடும் தாழ்வான பகுதியில் நைய்னாக்கமார்கள் எல்லாம் பானைத்திரிப் போட்டு மீன் அள்ள ஆரம்பித்து விடுவர். வெள்ளைச்சாமிக்கு மீன் ருசி ஆசையாக இருந்தது. மீன்களை வீட்டுக்குக் கொண்டு போகும் நைனாக்கமார்களிடம் வழியில் எதிர்ப்பட்டு யாசிக்கிற அவனைப் போன்றவர்களுக்கு இரக்கப்பட்டுக் கொஞ்சமாக அள்ளித் தந்து விட்டுப் போவார்கள். செவுனு நாய்க்கரிடம் அடியான் என்னையும் கவனியுங்கள் என்று வேண்டுகிறான். 'சாமங்காணும் வந்திட்டு போ' என்று அவர் சொன்னதை நம்பி செல்கிறான். ஆனால் பனைவெடலிகளுக்கு அப்பால் பள்ளத்தில் வியாபாரி ஒளித்துப் போயிருக்கும் சாராயக் கேன்களைத் திறந்து குடித்த செவுனுநாயக்கரும் முத்துசாமி நைனாவும், வெள்ளைச்சாமியை 'ஆளில்லாத நேரமாப் பார்த்து மீனக் களவாட வந்தாயா' என்று கேட்டு குடிபோதையில் அடித்து நொறுக்குகின்றனர். ஒடை மீனும் ஒரு சாதியினருக்குதான் உரிமை என்ற நிலை கூறப்படுகிறது.

 

நாற்பத்தைந்து ஆடுகள் கோனாருக்கும் அஞ்சு ஆடுகள் மகராசனுக்கும் ஆக வளர்க்கின்றனர். கோனாரோ, 'வெத்திலைப் பாக்கு போட்டுட்டு வரேன், மேயுலே' என்று சொல்லிவிட்டு புளியமரத்தடியில் கண்ணயர, சிறுவன் மகராசன் எல்லாவற்றையும் மேய்க்கிறான். ஒரு நாள் அவனும் அசந்து உறங்கி விட ஆடுகள் கோனார் வயலுக்குள்ளேயே புகுந்து விடுகின்றன. 'எலே, ஒன் வெள்ளச்சியை வெரட்டுலே' என்று கத்தியபடி தனது ஆடுகளை வாயால் விரட்டியும், அவனது ஆடுகளை கண்டபடி அடித்தும் விரட்டுகிறார். அடிபட்ட வெள்ளச்சியோ கொம்புகளை ஆவேசமாய்ச் சிலுப்பியபடியே அவரை எதிர்க்கப் பாய்கிறது. 'எல, சாதி கெட்டப்பயல! பிடிடா அந்த எளவெடுத்தத என்று பயந்து கொண்டே பின் வாங்கி ஓடுவதைக் காண அவனையும் அறியாமல் அவனது மனதுக்குள் ஒரு வித சந்தோசம் முகம் காட்ட, பிடிப்பது போலப் பாசாங்கு செய்தபடி வெள்ளச்சியைத் தொடர்ந்து ஓடுகிறான். இங்கு தான் எதிர்க்க முடியாததை தனது ஆடு எதிர்ப்பது கண்டு மகிழும் அவனது மனநிலை வெளிப்படுத்தப்படுகிறது.

 

இராணுவக்காரர்கள் பயிற்சிக்காக மலைமுகட்டுக்கு வந்து முகாம் போட்டு குண்டு வெடித்துப் பழகுவது வழக்கம். மழை பெய்யும் நாளில் வயல் வரப்புகளுக்கு நாத்து நட, களைபறிக்கப் போகும் மக்கள் கோடையில் மலைக்குப் போய் விறகு பொறுக்கி புல் அறுத்து அடுப்பில் உலையேற்றுவர். அன்னிக்கே பாடுபட்டு அன்னிக்கே பசியாத்திக் கொள்கிற ஏழை ஜனங்கள். ராணுவத்தினருக்குத் தெரியாமல் மலைமுகட்டிற்கு போய் இண்டு இடுக்குகளில் பதுங்கிக் கொண்டு ராணுவம் வெடித்துப் போட்டிருக்கும் குண்டுகளின் ஈய வெண்கலத் தகடுகளைப் பொறுக்கி வந்து காயலான் கடைகளில் வித்துக் காசாக்கி வயிறுகளை நனைக்க வேண்டிய நிலையில் எக்குத்தப்பாய் வெடிக்காத குண்டையும் எடுத்து வந்து வீட்டில் அசாதாரணமாகப் பத்திரப்படுத்தி வைக்க முயலுகையில் அது வெடித்து, சிறுவன் ஏசுராசனின் அய்யா, அம்மா, தம்பி, தங்கை, ஆச்சி எல்லோரும் இறக்கின்றனர். அனாதையாகிறான் ஏசுராசன். 


பொது சனங்களுக்கு அறிவிப்பு. ‘ராணுவம் முகாமிட்டுப்பயிற்சி நடத்துவதால் யாரும் மலைக்குப் போகக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். மீறிப் போனால் அதனால் ஏற்படும் நட்டங்களுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்காது என்று ஒலிபெருக்கி மூலம் ஒரு வேன் எச்சரித்துச் செல்கிறது. பசியால் இறந்தால் மட்டும் பொறுப்பேற்குமா என்று பொருமுகிறது ஏசுராசனின் மனம். இராணுவ வண்டிகளது அணிவகுப்பைப் பார்த்து முன்பெல்லாம் தனது சேக்காளிகளோடு பரவசப்படும் ஏசுராசனால் இப்போது பரவசப்பட முடியவில்லை. 


தன் தகப்பனின் 16 ஆம் நாளுக்காக 10 கோழி வெட்டிச் சோறு போடுகிறான் சுடலைக்கண்ணு. 'தேவுடியாவுள்ளேளா... அப்பிடி நாக்கு கேக்குதாக்கும். அடுத்தவன் கோழிய கசாப்புப் போட்டுத் திங்கறதுக்கு என்று தேவர் அடித்து நொறுக்குகிறார். அவர் கோழியைத் தான் எடுக்கவில்லை, என்ற இவனது குரல் எடுபடவில்லை. ஊர் கூடியும் அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் 50 ரூபாய் தண்டம் வாங்கிச் செல்லுகிறார். சுடலைக்கண்ணுவின் சித்தி அவரிடம் கோழியைத் திருப்பித் தந்து பணத்தைப் பெற்று விடுவதாகச் சொல்கிறாள். கோழியையும் பிடுங்கிக் கொண்டு, பணத்தையும் தரமறுத்து, 'தண்டம்' போட்டு அடித்து விரட்டும் அவலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


உயர் சாதியினரது காடுகரையில் வேலை பார்த்தே தன் வாழ்நாளை ஓட்டிவிட்ட மாரப்பனின் தந்தை வயக்காட்டிலேயே சுருண்டு விழ, மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று வைத்தியம் பார்த்ததில், ‘பக்கவாதம்' வந்து இருப்பதோடு, உயிர்பிழைக்கச் செய்ய வழியே இல்லை. சாயந்திரத்திற்குள் உயிர் பிரிந்து விடும் என்றனுப்பி விடுகின்றனர். பண்ணைக்குச் சொல்லிவிட்டும் யாரும் எட்டிப் பார்க்கவில்லை".

 

‘பண்ணையாரய்யா பத்திரம் குடுத்து உட்டாங்க. ஒன் அய்யா கிட்ட கைநாட்டு வாங்கி வரச்சொன்னாங்க... அதுக்குள்ளப் போயிட்டானே பொட்டுன்னு என்று செல்லமுத்துக் கோனார் வருந்துகிறான். பண்ணையார் பினாமியாகத் தன் பெயரைப் பயன்படுத்தி நில உச்சவரம்புச் சட்டத்தை ஏமாற்றுவதையே தனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதி விசுவாசத்தோடு உழைக்கும் மாரப்பனின் அய்யாவும், விசுவாசமாக உழைத்தவன் வயலிலேயே விருந்துக்கும் எட்டிப் பாராத பண்ணையும் காட்டப்படுகின்றனர்.

 

கருத்தாயி வந்து கக்கூஸு கழுவாமல் தெருவில் உள்ள குடித்தனங்கள் எல்லாம் நாற்றத்தில் தவிக்கிறது. சுத்தம் செய்ய வந்தவள் வயிறு கோளாறால் ஒரு கக்கூஸில் போகிறாள். உள்ளே சத்தம் இல்லாதது கண்டு வீட்டுக்காரி குரல் தருகிறாள். வயிற்றைப் பிடுங்கிக் கொண்டு போனதில் சோர்ந்தவளாய், 'கொஞ்சம் பொறுங்கம்மா! வயிறு இரையுது; மொத்தமா கழுவிட்டுப் போறேன்' என்கிறாள். பத்திரகாளி ஆகிறாள் வீட்டுக்காரி. 'ஒரு சக்கிலிச்சிக்கு நம்ம வீட்டுக் கக்கூசு கேக்குதாக்கும்....' என்று டக்கென்று கதவைத் திறந்தவள் அக்கினிப் பிழம்பாய் சினந்து, அதிர்ந்து போகிறாள்.என்ன வேல செய்யுத நீ... ஒன்ன கக்கூசு அள்ளச் சொல்லியிருக்கா? இல்லே அதுல ஒக்காந்து அசிங்கம் பண்ணச் சொல்லியுருக்கா மூதேவி" என்று பொரிந்து தள்ள கருத்தாயி மடமடவென்று எழுந்து நிற்கிறாள். அவளது வயிற்று மடமடப்பு குறைந்த மாதிரியில்லை. 


நிறம், இனம், கல்வி, பதவி, பணம், பால், சாதி போன்ற கூறுகள் மனித இனத்தை கூறு பிரிக்கின்றன. நால் வருணப் பாகுபாடும் கணக்கற்ற சாதிகளும் மனித தன்மையை மழுங்கடித்த அவல நிகழ்வுகள், அபிமானியால் சிறுகதை வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக