Skip to main content

4 அருப்புக்கோட்டை ஆலயப் பிரவேசம்

4    அருப்புக்கோட்டை ஆலயப் பிரவேசம் 



ப. நாகூர்கனி 



தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 19 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் நூற்றுக்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளதாக அறியப்படுகிறது. அவர்களில் முதன்மைச் சாதியாக பறையர், பள்ளர், அருந்ததியர் உள்ளனர். பத்தொன்பது சதவிகித தாழ்த்தப்பட்ட மக்களில் அருந்ததியர் சுமார் 3 சதவிகிதம் உள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலேயே பள்ளர், பறையர், அருந்ததியர் எழுச்சிக்காகச் சில தலைவர்கள் தோன்றி அவரவர் மக்களுக்கு சங்கங்களை தோற்றுவித்தனர். 


இதில் அருந்ததியினருக்கென்று 1920 ஆம் ஆண்டு எல்.சி. குருசாமி என்பவர்அருந்ததியர் மகாஜன சபா என்கிற சங்கத்தைச் சென்னையில் தொடங்கினார். இப்படிப்பட்ட அமைப்புகள் மூலம் அருந்ததியினர் முன்னேற்றத்திற்கும், விழிப்புணர்ச்சிக்கும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் இம்மக்களின் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை வெள்ளையாபுரம் அருந்ததிய மக்களுக்காக நடத்தப்பட்ட ஆலயப் பிரவேசப் போராட்டம் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வாக இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையின் காரணமாக தீண்டாமை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. தீண்டாமையில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான தீண்டாமை ஆலய நுழைவு அனுமதி மறுப்பாகும். இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்பட்ட மக்களுக்கும் இடையே அடிக்கடி கலவரங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் சுமார் 1,000 கிராமங்களில் தீண்டாமை பல்வேறு வகைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


இந்தச் சாதீய மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களுமாகவே இருக்கின்றனர். தமிழகத்தில் உழைக்கும் விவசாயிகள் 85 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். இவர்களில் 40 இலட்சம் பேர் தாழ்த்தப்பட்டவர்களாகவும், 45 இலட்சம் பேர் பிறபடுத்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் தமிழக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் விவசாயிகளாவர். 


எனவே தீண்டாமைப் பிரச்சினையை எதிர்த்து காலங்காலமாகப் பல அமைப்புகளும் சமூக விழிப்புணர்வுக் குழுக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. வர்க்கப் போராட்டத்தில் அதிகக் கவனம் செலுத்தி வரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் விடுதலை முன்னணியும் சமீப காலமாக இப்பிரச்சினையில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு 1997 ஜுன் திங்கள் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட, மாநில அளவில் பல இடங்களில் அக்கட்சி மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது. இக்கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆய்வுக் குழுக்களை அனுப்பி தீண்டாமை மற்றும் கோவில் வழிபாடுகளில் பாரபட்சம் காட்டும் கிராமங்களைக் கண்டுபிடித்து அறிக்கை தயார் செய்தனர். அதனை அடிப்படையாக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோயில் நுழைவுப் போராட்டத்திற்காக நேரடி நடவடிக்கையில் இறங்கியது.

 

தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான கண்டனமும் எதிர்ப்பும் வலுப்பெற்று வருகிறது. தலித் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆதிக்க சக்திகள் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் தீண்டாமையை கடுமையாகக் கடைப்பிடித்தனர். தலித் சமுதாய விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பெயரில் அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் தொடங்கியதற்கு ஆதிக்க சாதியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு சுந்தரலிங்கம் பெயரில் இயங்கிய பேரூந்தில் ஏறிச் செல்லக்கூடிய தங்கள் சாதியினர் அபராதம் கட்ட வேண்டும் என கிராமங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி (தேவர்) அறிவிக்கவும் செய்தது. பேரூந்தின் பெயரை சாணியலாலும் தாராலும் அழித்து எதிர்ப்பைக் காட்டினர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பெயர்களை நீக்கி விட்டு பல்வேறு கோட்டங்களாகப் பிரித்து தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் எனப் பெயரிட்டது. இத்துடன் தமிழகத்தின் அனைத்து - மாவட்டங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன. இப்படி தீண்டாமையைக் கடுமையாகக் கடைபிக்கும் மாவட்டம் தான் விருதுநகர் மாவட்டம். 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடந்த கோயில் நுழைவுப் பேராட்டம், மற்றும் தேர்வடம் பிடித்து இழுக்கும் போராட்டம் பெரும்பாலும் பள்ளர், பறையர் சமூக மக்களாலேயே நடத்தப்பட்டன. ஆனால் அருப்புக்கோட்டை ஏ. வெள்ளையாபுரத்தில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் அருந்ததியர்களின் கோயில் நுழைவிற்காக நடந்த போராட்டமாகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட பிரிவிலும் அருந்ததியர் பிரிவு சற்று கீழான நிலையைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பிறரது கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தல், சாக்கடைகளைத் துப்புரவு செய்தல், செருப்புத் தைத்தல் போன்ற தொழிலைச் செய்வதால் தீண்டப்படாதவராக கருதப்படுகின்றனர். எனவே இம்மக்கள் தீண்டாமையை எதிர்த்தோ கோயில் நுழைவிற்காகவோ பெரும்பாலும் போராடியதில்லை. சமீபகாலமாக அருந்ததி சமூக மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருப்பதால் தீண்டாமையை எதிர்த்தும், கோயில் நுழைவிற்காகவும், தனிவாரியத்திற்காகவும் போராடி வருகின்றனர். இவர்களுக்கென்று தமிழ்நாடு அருந்ததியர் விடுதலை முன்னேற்றச் சங்கம் தொடங்கப்பட்டு எஸ்.டி. கலியாணசுந்தரம் போன்ற பலரது தலைமையில் தீண்டாமையை எதிர்த்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். 


அருப்புக்கோட்டை ஏ. வெள்ளையாபுரத்தில் அருந்ததியர்களின் ஆலய நுழைவிற்காக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியனிர் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அருப்புக்கோட்டை தாலுகா வெள்ளையாபுரத்தில் அருந்ததியர் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அருந்ததியினர் மீது பல ஆண்டுகளாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர். மேலும் வெள்ளையாபுரத்தில் இருக்கும் நரசிம்மன் பெருமாள் கோயிலுக்குள் அருந்ததியினரை அனுமதிப்பதில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1999 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல பேராட்டங்களை அருந்ததியினர் நடத்தி வருகின்றனர். ஆனாலும் ஆதிக்க சாதியினர் நரசிம்மன் பெருமாள் கோவிலில் அருந்ததியினரை அனுமதிக்க மறுத்து வந்தனர். அதை எதிர்த்துப் பல புகார்கள் கொடுத்தும் அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மார்ச்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கண்டன அறிக்கை வெளியிட்டார். 


1999 ஆம் ஆண்டு ஏ. வெள்ளையாபுரம் நரசிம்மன் கோவிலில் அருந்ததியினரை அனுமதிக்கும்படி பலமுறை போராட்டம் நடந்தது. 4.12.1999 அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அருந்ததியர்களை நரசிம்மன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது. ஆயினும் 19.12.1999 வைகுண்ட ஏகாதசியன்று இக்கோயிலுக்குள் அருந்ததியினர் மக்கள் சென்று வழிபட காவல்துறையும், மேல்சாதியினரும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் ஆதிக்க சாதியினருக்குத் துணையாக போலீஸ் செயல்பட்டதால் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் அய்யாவு ஆதிக்கச் சாதியால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அவர் மீது பந்தல்குடி காவல் நிலையத்தில் பொய் வழக்கும் போடப்பட்டதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கண்டித்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள நரசிம்மன் கோவில் ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே சொந்தம் என எழுதியுள்ளனர்.  இதில் அரசின் பங்கும் கணிசமாக உள்ளது.  


11.12.2000 அன்று நரசிம்மன் கோவிலில் அருந்ததியர் சென்று வழிபட அனுமதி கேட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பெருந்திரள் தர்ணாவை வெங்கட்ராமன் அறிவித்தார்.. வெள்ளையாபுரம் நரசிம்மன் கோயிலில் அருந்ததிகள் சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே 11.12.2000 அன்று பாரதி பிறந்த நாளில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைமையில் அருந்ததியர் சமூகம் நரசிம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. 


11.12.2000 அன்று அறிவித்தபடி பிற்பகல் 1 மணி முதல் செங்கொடிகளுடன் ஆண்களும் பெண்களுமாய் ஏ. வெள்ளையாபுரத்தில் குவிய ஆரம்பித்தனர். மாலை 4.30 மணியளவில் அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆத்மராமன், காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. கோவிலின் சாவியைத் தருவதற்கு ஆதிக்க சாதியினர் மறுத்தனர். இதனால் விவசாயிகள் சங்கத்தினர் மூன்று மணி நேரம் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்ட பின் கோவிலின் பூட்டை உடைத்து அருந்ததிய மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அருந்ததியர்களுக்கு இது பெரும் மகிழ்வைத் தந்தது.


பின்னர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் தலைமையில் அனைத்து தலித் மக்களும் தேங்காய், பூ, பழம் வைத்து வழிபாடு நடத்தினர்.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக