Skip to main content

7 திருமலை குடும்பத்து ஞாபகங்கள்: சில தொடர்ச்சியற்ற குறிப்புகள்

திருமலை குடும்பத்து ஞாபகங்கள்: 

சில தொடர்ச்சியற்ற குறிப்புகள் 



 இரா. பாவேந்தன் 


திருச்சி மாவட்டம் கீழக்கல்கண்டார்கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் திருமலை என்பவரின் பௌத்த, பார்ப்பனீய, ஞாபகக் குறிப்புகள் இக்கட்டுரையில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன. 


கீழக்கல்கண்டார்கோட்டை கிராமம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாகும். திருச்சி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரில் பட்டியல் இனமக்களில் ஒரு பிரிவினரான தேவேந்திரர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் முத்தரையர், பார்ப்பனர்கள் ஆகியோரும் வாழ்ந்து வருகின்றனர். 


கீழக்கல்கண்டார்கோட்டைப் பகுதி முன்பு கல்கண்டார் கோட்டை என வழங்கப்பட்டு வந்தது. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் பொன்மலை இரயில்வே நகரியத்தின் புறநகராக உருவான பகுதி மேலக்கல்கண்டார் கோட்டை என வழங்கப்பட்டதால் பழைய கல்கண்டார்கோட்டை என வழங்கப்படுகிறது. கீழக்கல்கண்டார்கோட்டை என்ற பெயர் வழக்கில் வந்ததற்கான வாய்மொழிக்கதை ஒன்றை இவ் ஊரைச் சார்ந்த கே. எஸ். சுவாமிநாதன் வழி அறிகிறோம். 'இந்த ஊரில் வாழ்ந்த பெண் ஒருத்தி மீது பாலியல் குற்றம் ஒன்றை சிலர் சுமத்தினர். இக்குற்றம் பற்றி விசாரிக்க ஊர் மன்றம் கூடியது. ஊர் மன்றத்தில் அப்பெண் குற்றவாளியாக நிறுத்தப்பட்டாள். விசாரணையில் அவள்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக ஊர்மன்றம் அறிவித்தது. அப்பெண் ஊர் மக்களைப் பார்த்து என் மீது அவதூறு பழி சுமத்திய நீங்கள் கல்லாகிப் போக எனச் சபித்து விட்டாள்.

 

அப்பெண்ணின் சாபம் காரணமாக மக்கள் அனைவரும் கல்லாகிப் போனார்கள். இக்கதையையே இவ்வூரைச் சார்ந்த பலரும் கூறுகின்றனர். தவறு செய்த பெண் இவ்வூரைச் சேர்ந்தவள் அல்ல. வெளியூர்ப் பெண் என்பதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் 'நத்தைக்களம்' என்ற பகுதியில் நடந்ததாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இந்த நத்தைக்களம் என்பது இவ்வூரின் புறத்தே உள்ள அழகுநாச்சியார் கோயிலுக்கு அருகில் உள்ளது. இந்தப் நத்தைக்களம் பகுதியில் புதையல் இருப்பதாக கருதி ஊரார் 1980 களில் இப்பகுதியை தோண்டினர். நீண்ட வடிவிலான கற்கள், கட்டடத்தின் செங்கல்கள், பானை ஓடுகள் கிடைத்ததாகவும், காவல் துறை தலையீட்டின் காரணமாக தோண்டும் பணிகள் தடைப்பட்டதாகவும் ஊர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 


இந்த ஊரை அடுத்துள்ள கீழக்குறிச்சி - பொன்மலைப்பட்டி சாலையில் மாவடிக் குளத்துக்குச் செல்லும் கரைக்கு முன்பாக செங்கல்லால் ஆன மண்டபம் ஒன்றுள்ளது. இம்மண்டபத்தை 'மங்கம்மாள்' என்று அழைக்கின்றனர். கல்கண்டா என்பது இலங்கையில் உள்ள பௌத்தகோயில் உள்ள ஊரின் பெயராகும் என்ற மற்றொரு கருத்தும் இங்கு நினைக்கத்தக்கது. 


திருமலை குடும்பத்து பௌத்த ஞாபகம்: திருமலை விமான நிலையத்தில் சபேதாராகவும். பிறகு பொன்மலை இரயில்வே தொழிலகத்தில் குமாஸ்தாவாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமலையின் தந்தை, தாத்தா, பாட்டன், பெயர்கள் முறையே மாது (சந்தனம்). செல்லன், ஒண்டி என்பன. திருமலை தன்னுடைய 40 வது வயதில் ஆறு மாத காலம் தூங்காத வியாதியால் பாதிக்கப்பட்டார். இந்நோய் குறித்து முத்துராஜா (முத்தரையர்) தெருவைச் சார்ந்த நாட்டு வைத்தியர் மொட்டையாண்டி ஒரு வாய்மொழிச் செய்தியைக் கூறியுள்ளார். அச்செய்தி வருமாறு 'திருமலைக்கு வந்துள்ளது பரம்பரை நோய். அவருடைய மூதாதையர்களில் ஒருவரான முத்தழகன் புத்தசாமியாராக இருந்துள்ளார். அவர் நாகப்பட்டினம் வழியாக கடல் கடந்து (சீனா) சென்றுள்ளார். ஊர் திரும்புகையில் ஏராளமான ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்து புத்தர் சிலையை நிறுவி வந்துள்ளார். முத்தழகன் வேறு பாஷையில் மக்களிடம் பேச அவருக்கு 'ஏதோ' ஆகிவிட்டதாக மக்கள் கருதினராம். முத்தழகனின் பரம்பரை நோயான தூங்காவியாதி அவருடைய சந்ததியினரான திருமலைக்கு வந்து விட்டது'. 


இச்செய்தியைத் தன்னுடைய இளம் வயதில் தன் தாயிடம் கேட்டதாக திருமலையின் மகன் இராஜகோபால் வழி அறிகிறோம். ஒத்த நோய் மூதாதையர்களிடம் இருந்து சந்ததியினருக்கு வரலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தனக்குத் தெரிந்த வாய்மொழிச் செய்தியை மொட்டையாண்டி திருமலை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். முத்தமிழகனின் தூங்காவியாதி பற்றிய வாய்மொழிச் செய்தியால் இக்குடும்ப மூதாதையர்களின் பௌத்தத் தொடர்பு பற்றிய செய்தியும் பதிவாகியுள்ளது. தங்கள் மூதாதையர் ஒருவர் நாகப்பட்டினம் வழியாக எங்கோ சென்றதாக தாத்தா செல்லன், அப்பா மாது. ஆகியோர் அடிக்கடி கூறியதாக திருமலை தகவல் தெரிவிக்கிறார். 


முத்தழகன் நாகப்பட்டினம் வழியாக சென்ற இடம் எது என்பது குறித்தான தகவல்களை அறிய இயலவில்லை. திருமலையின் மகன் மதியழகனும் மகள் காந்திமதி ஆகியோர் முத்தழகன் சென்ற இடம் சீனா என்கின்றனர். முத்தழகன் இக்குடும்பத்தின் எத்தனையாவது தலைமுறையைச் சார்ந்தவர் என்பதும் இக்குடும்பத்தினருக்கு நினைவில்லை. இவ்வூருக்கு அருகேயுள்ள கீழக்குறியில் 11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வணிகக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இவ்வூர்வழி ஒரு பௌத்த வணிகவழி இருந்ததை உறுதி செய்கிறது. இக்கல்வெட்டில் பௌத்தச் சிற்பம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இடம்பெறும் 'பள்ளிச்சந்தம்' என்ற சொல் இங்கு பௌத்தப்பள்ளி இருந்ததை உறுதி செய்கிறது. இக்கல்வெட்டு, பௌத்தப்பள்ளி ஆகியவை இவ்ஊரில் ஒரு கால கட்டத்தில் பௌத்தம் சிறப்புற்றிருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளலாம். இது போன்ற பௌத்தத் தொடர்பின் காரணமாகவே பிற்காலத்தில் இவ்வூரில் வாழ்ந்த முத்தழகன் பௌத்தனாக மாறி நாகப்பட்டினம் வழியாகக் கடல் கடந்து பௌத்தத் தொடர்புடைய பகுதிக்குச் சென்று திரும்பியிருக்கலாம். 


பார்ப்பனர் கொடுமை - ஞாபகங்கள்: கீழக்கல்கண்டார் கோட்டைப் பகுதியில் உய்யக் கொண்டான் ஆற்றுப் பாசன நிலங்களில் கரும்பு, வாழை, நெல் ஆகிய வேளாண்மைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சென்ற நூற்றாண்டின் தொடக்கம் முதல் குத்தகைதாரி பாதுகாப்புச் சட்டம் (1970) நடைமுறைப்படுத்தப்பட்டது வரை பெரும்பாலான நிலங்கள் பார்ப்பனர்களிடமே இருந்தன. சிறுபான்மை கோயில் நிலங்கள் பிறப்பட்ட சாதியினரான கள்ளர், உடையார், கோனார், முத்தரையர் ஆகியோர் வசமிருந்தன. இவ்வூர் நிலங்களில் தேவேந்திரர்கள் வேளாண்மைக் கூலிகளாகவே பணியாற்றி வந்தனர். 


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமலையின் தாத்தா செல்லனிடம் மட்டும் சில காணி காட்டுநிலங்கள் இருந்துள்ளன. பயிரிடப்படாத காட்டு நிலங்களைத் திருத்தி இக்குடும்பத்தினர் விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். செல்லனின் நிலங்களை அவருக்குப்பின் அவருடைய மகன் சந்தனம் பராமரித்து வந்தார். சந்தனத்தின் நிலங்களுக்கு கடைமடையாக நீர்பாய்வதால் நீர்தேக்கும் குழுமிக்கு சந்தனக்குழுமி எனப்பெயர். 


சந்தனம் நில உடைமையாளராக இருந்ததால் சாதிய அடுக்கில் உயர் வகுப்பினராகக் கருதப்பட்ட பார்ப்பனர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. சந்தனத்தின் மீது பொறாமை கொண்ட பார்ப்பனர்கள் சந்தனத்தைத் தண்டிக்க முடிவு செய்தனர். பார்ப்பனர் ஒருவர் வீட்டில் திருடு போனபோது கண்டெடுக்கப்பட்ட சாக்கு ஒன்றில் சந்தனத்தின் பெயர் இருந்ததால் சந்தனத்தின் மீது திருட்டுக் குற்றம் சாட்டினர். விசாரணை நடத்தப்பெற்று சந்தனம் தண்டிக்கப்பட்டார். பார்ப்பனர் நிலங்களுக்குத் தேவையான எருவை பள்ளர் தெருவழியாக எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், பள்ளர்களோ அவர்களின் ஆடுமாடுகளோ பார்ப்பனார் தெரு வழியாகச் செல்லக் கூடாது என்ற சாதிக் கட்டுமானம் இருந்தது. தன் சொந்த நிலத்திற்கு பார்பனத்தெரு வழியாக மாட்டு வண்டியில் எருவை எடுத்துச் சென்று சந்தனம் இக்கட்டுப்பாட்டை மீறினார். கட்டுப்பாட்டை மீறியதற்காக சந்தனம் தண்டிக்கப்பட்டார். தண்டனையாக சந்தனத்தின் பெயரை 'மாது' என அழைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 


பிற்காலத்தில் 'மாது' என்ற இழிவுப்பெயரே இவருக்கு பெயராகியது. சந்தனத்தின் பெயருடைய குழுமியை சங்கரன் குழுமி என அழைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கட்டுப்பாடு விதித்தனர். எனினும் சந்தனக்குழுமி என்ற பெயரே மக்கள் வழக்காற்றில் இன்றும் உள்ளது.


கீழக்கல்கண்டார்கோட்டை தேவேந்திரர்கள் குடிப்பழக்கம் காரணமாக இன்றைய விமான நிலையப்பகுதிக்குச் (செம்பட்டு) செல்வது வழக்கம். குடித்து விட்டு திரும்பிய பள்ளத்தெரு பள்ளர்களுக்கும் காட்டுத்தெரு பள்ளர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. கைகலப்பில் அடிபட்ட பள்ளத்தெரு பள்ளர்கள் ஆயுதங்களுடன் காட்டுத்தெரு பள்ளர்களைத் தாக்கினர். இத்தாக்குதலில் காட்டுத் தெருவைச் சேர்ந்த ஒருவர் மிதிபட்டு இறந்து போனார். மாதுவின் உறவினர்களும் இச்சண்டையில் ஈடுபட்டதால் 'மாது'வைக் குற்றவாளியாக்க பார்ப்பனர்கள் முடிவு செய்தனர். இயல்பாக நடந்த சண்டை மாதுவின் தூண்டுதலின் பேரில் நடந்த கொலை என்கிற மாதிரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் விசாரணை பல ஆண்டுகள் நடந்தது. வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. மாதுவின் மீது குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் நிலங்களை விற்று வழக்கு நடத்தி எல்லா நிலங்களையும் மாது இழந்து விட்டார். 


பிறகு மாது சில பிற்பட்டவகுப்பு நில உரிமையாளரிடம் குத்தகைக்கு நிலத்தை வாங்கி வாழை பயிரிட்டார். புயல் தாக்கியதன் காரணமாக வாழை சேதமடைந்தது. இந்நிலையில் குத்தகையைத் திருப்பித் தர இயலாத மாதுவிடம் அடிமைப்பத்திரம் எழுதிவாங்கும்படி பிற்பட்டவர்களை பார்ப்பனர்கள் தூண்டி விட்டனர். அடிமைப்பத்திரம் எழுதித்தர மாது மறுத்து விட்டார். தேவேந்திரர்களை அடிமைகளாக விற்கும் முறை, அடிமைகளாக தங்களையே எழுதிக் கொடுக்கும் முறை திருச்சி மாவட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்து வந்துள்ளதை இம்மாவட்டங்களில் கிடைத்த ஓலை ஆவணங்கள் வழி அறிகிறோம். 


பார்ப்பனர்களின் பொறாமை காரணமாக ஒடுக்குமுறைக்கு ஆளான மாது தன்னிச்சையாக உரிமைக்குரல் எழுப்பியுள்ளார். அவருடைய எதிர்ப்புணர்ச்சியை அடக்க 'பெயரை அழிப்பது', 'அடையாள அழிப்பு' 'பொருளாதார இழப்பு', 'அடிமையாக்கி அவமானப்படுத்துதல்' என்பதாக பார்ப்பனர் கொடுமைகள் தொடர்ந்தன. 


வெள்ளந்தாங்கி - கலகக்காரி: திருமலை, வெள்ளந்தாங்கி என்பவரின் மகள் லோகாம்பாளை 1934 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வெள்ளந்தாங்கியின் கணவர் ஜெகதீசன் இளம்வயதிலேயே இறந்து விட்டார். பிள்ளைகளான செவந்திலிங்கம், குமார், லோகாம்பாளை வெள்ளந்தாங்கியே வளர்த்து வந்தார். வாழை பயிரிடுவதன் நுட்பங்களை அறிந்திருந்த வெள்ளந்தாங்கி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வாங்கி வாழை பயிரிட்டு வந்தார். வேளாண்மையின் காரணமாக திரட்டிய பணத்தைக் கொண்டு தன் மாமா பண்டாரியின் இடத்தில் 1917 ம் ஆண்டு காரை வீட்டைக் கட்டினார். தேவேந்திரர் சமூகத்தில் இப்பகுதியில் முதல் காரை வீடான இதுதான் இன்னும் இடியாமல் உள்ளது. இக்காலகட்டத்தில் தேவேந்திரர்கள் காரை வீடு கட்டக் கூடாது என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இக்கட்டுபாடுகளை திருவெம்பூர் பகுதிக்குட்பட்ட 'கூத்தைப்பார்' கள்ளர்கள் விதித்தனர். 


தேவேந்திரர்கள் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப் பட்ட காலத்தில் வெள்ளந்தாங்கி தேவேந்திர மக்களின் ஒத்துழைப்புடன் பார்ப்பனர் கோயிலுக்கு மாற்றாக தன்வீட்டின் எதிரிலேயே (பள்ளத் தெருவிலே) மாரியாத்தாவுக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். கணவனை இழந்த தேவேந்திர பெண் பார்ப்பனிய மற்றும் கள்ளரிய ஒடுக்கு முறைகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன்னெழுச்சியாக தீரமுடன் செயல்பட்டுள்ள செயலை கலகச் செயல்பாடாகவே கருத இடமுண்டு.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக