Skip to main content

8 வீட்டுப்பெயர்கள்

8   வீட்டுப்பெயர்கள்



மொ. இரவிக்குமார் 



கேரள மாநிலம் பாலக்காடு வட்டாரத்தில் கோழிப்பாறைக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் எருமைக்காரனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. கிறித்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய ஊரிது. எருமைக்காரனூர் என்ற ஊர் எவ்வாறு உருவாகியது. எருமைக்காரன் குடும்பம் என்று குடும்பத்திற்கு எப்படிப் பெயர் ஏற்பட்டது. ஒரு குடும்பப் பெயர் பல குடும்பப் பெயர்களாகி எவ்வாறு மாற்றமடைகிறது. இங்கு வாழக்கூடிய மக்கள் எங்கிருந்து வந்தவர்கள், போன்ற பல வினாக்களுக்கு விடை காணும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைகிறது. 


இவ்வட்டாரத்தில் வாழக்கூடிய தமிழ்க் கிறித்தவர்கள், குறிப்பாக எருமைக்காரனூரில் வாழக்கூடியவர்கள் 250 / 300 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களிலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக வந்தவர்கள். ‘பரியம் போடுதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இதை அறிய முடிகிறது. 


திருமணத்தின் போது பரியம் (பரிசம்) போடுதல் என்ற நிகழ்ச்சி பெண் வீட்டில் வைத்து நிகழ்கிறது. அப்போது அந்நிகழ்ச்சியில் பெண் வீட்டுப் பெரியவர்களும், மாப்பிள்ளை வீட்டுப் பெரியவர்களும் குறிப்பாக மாமன், மச்சான் உறவுக்காரர்கள் பங்கு கொள்கிறார்கள். முதலில் பெண் வீட்டுப் பெரியவர்கள் எங்களுடைய காணி இது, எங்களுடைய முன்னோர்களுடைய பெயர் இது, இது என்று கூற, பிறகு மாப்பிள்ளை வீட்டுப் பெரியவர்களும் தங்கள் காணியையும், பரம்பரையையும் சபையில் கூறுகிறார்கள். தங்களுடைய பூர்வீகத்தை நினைவு கூறுவதற்காகவும் ஒரே காணியில் இருந்து வந்தவர்கள் சகோதர உறவுடையவர்கள் - திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவுமே இம்முறை பின்பற்றப்படுகிறது. 


பரியம் போடுவதற்கு மற்றொரு காரணமும் இம்மக்களிடையே கூறப்படுகிறது. பாண்டிய மன்னனின் கட்டளையின் பேரில் தமிழகத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் தான் இம்மக்கள். இவர்கள் குடியேறும் போது ஆண்டுக்கொருமுறை நீங்கள் எனக்கு வரி செலுத்த வேண்டுமென்று பாண்டிய மன்னன் கட்டளை பிறப்பித்திருந்தானாம். அந்த வகையிலேயே இவ்வாறு பரியம் போடப்படுகிறது. பரியம் போடும் போது அதனை நிறைவேற்றும் இன்றும் 31 - பணம் பரியமும் 16- பணம் பாண்டியும் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்குச் கொடுக்கின்றனர். இதன் அளவு அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.


பாண்டி என்பதற்கு பாண்டியநாடு, பாண்டியன் என்ற பொருள் மட்டுமல்லாமல் மாடு, வண்டி, எருது போன்ற பொருள்களும் உள்ளன. எனவே திருமணத்தின் போது அக்காலத்திலிருந்த வழக்கப்படி கால்நடைகளை பெண்ணுக்கு சீதனமாகக் கொடுத்திருக்கலாம். அதனால் கூட பாண்டி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். 


சாமிமுத்தனும், சின்னமுத்தனும்: திண்டுக்கல்லிருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் மாரம்பாடி என்ற கிராமமும், அங்கு சாமிமுத்தன்பட்டி, சின்னமுத்தன் பட்டி என்ற ஊர்களும் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்பு சாமிமுத்தன் பட்டியில் சாமிமுத்தன் என்பரும், சின்னமுத்தன்பட்டியில் சின்னமுத்தன் என்பவரும் வாழ்ந்து வந்தனர். சாமிமுத்தனுக்கு ஆண் வாரிசுகளும் சின்னமுத்தனுக்கு பெண் வாரிசுகளும் மட்டுமே பிறந்தன. அந்த ஊரில் அவர்கள் குடும்பத்திற்கு நாட்டாமைக்காரர் குடும்பம் என்று பெயர். உழவுத் தொழிலையும், கால்நடைகள் வளர்ப்பதையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தது அவர்கள் குடும்பம். கால்நடைகளில் எருமைகளே அதிகமிருந்தன. 


அச்சமயத்தில் அவ்வூர்களில் கடுமையான பஞ்சமும் அதனால் நோயும் ஏற்பட்டது. சாமிமுத்தனின், பாக்கியம், லாரன்ஸ் என்ற இரண்டு ஆண் மகன்கள் பஞ்சத்திற்கு பயந்து, பிழைப்பதற்காக ஐந்தாறு எருமைகளை ஓட்டிக் கொண்டு மேற்கு நோக்கி வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் கேரளாவின் கிழக்கு எல்லையோரப் பகுதியான அத்திக்கோடு என்ற இடத்தில் குடியேறினர். அவர்கள் குடியேறிய இடத்தில் ஏற்கனவே இதுபோல பஞ்சம் பிழைப்பதற்காக வந்திருந்த சில கிறித்தவக் குடும்பங்கள் குடியிருந்தனர். வந்த இருவரில் பாக்கியம் என்பவர் மட்டும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ்ந்தார். லாரன்ஸ் என்பவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பாக்கியம் குடும்பம் எருமைகள் வளர்ப்பில் ஈடுபட்டது.


திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த பாக்கியத்திற்கு எருமைகள் வளர்ப்பதும், எருமைகள் வியாபாரம் செய்வதுமே தொழிலாக இருந்ததால் அவரை அனைவரும் எருமைக்காரன் என்றே அழைக்கலாயினர். அவரது வீட்டிற்கு எருமைக்காரன் வீடு என்ற பெயர் ஏற்பட்டது. அவர்கள் குடியிருந்த தெருவிற்கு எருமைக்காரன் தெரு என்ற பெயரும், அவரது வாரிசுகளுக்கும் வீட்டுப் பெயராக எருமைக்காரன் வீடு என்ற பெயருமே நிலைத்து விட்டது. இன்றளவும் அப்பெயரே அவர்கள் குடும்பப் பெயராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 


அத்திக்கோடில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் எருமைக்காரன் தெருவிலிருந்த எருமைக்காரன் குடும்பத்தினர் சிலர். இடம் பெயர்ந்து வடமேற்கிலிருந்த காடுகளை வெட்டி அப்பகுதியில் குடியேறினர். பிறகு அது ஒரு ஊராகவே மாறி விட்டது. எனவே அவ்வூருக்கு எருமைக்காரனூர் என்ற பெயர் ஏற்பட்டது.


இம்மக்கள் புதிதாகக் குடியேறிய ஊர்களெல்லாம் கொச்சி ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.  பல கிறித்தவக் குடும்பங்களும் கொச்சி ராஜாவின் அனுமதி பெற்றும் பெறாமலும் குடியேறியிருந்தார்கள். கொச்சி சமஸ்தானம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஜெம்மிகளின் (ஜமீந்தார்கள்) கட்டுப்பாட்டில் இருந்தது. இம்மக்கள் குடியிருந்த பாலக்காடு வட்டமும் பல உட் பிரிவுகளுக்கு உட்பட்டிருந்தது. 


பாலக்காடு - கொச்சி பகுதிகள் வடசேரி, நெல்லிசேரி, மன்னத்து, சோன்டத்து, அங்கராத்து போன்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு குறுநில மன்னர்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இதில் நெல்லிசேரியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில்தான் எருமைக்காரனூர் இருந்தது. 


நெல்லிசேரி பகுதியானது கோழிப்பாறை நீலிப்பாறை எருமைக்காரனூர் இன்னும் பல ஊர்கள் அடங்கியது.  இவ்வூர் மக்களெல்லாம் அக்காலத்து முறைப்படி மன்னர்களுக்கு நில வரி செலுத்தி வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் நில உடமைச் சட்டம் வந்த போது அவரவர்கள் விவசாய நிலம் அவரவர்களுக்கே சொந்தமானது. இன்று எருமைக்காரன் குடும்பங்கள் எருமைக்காரனூரில் 35ம், அதனைச் சுற்றியுள்ள கோழிப்பாறை, நீலிப்பாறை, சொரப்பாறை, கணக்கன்களம், கொட்டில்பாறை போன்ற ஊர்களில் 30 குடும்பங்களுக்கு மேலும் உள்ளன. 


இன்றைய நிலையில் சில குடும்பங்கள் மட்டுமே எருமைகள் வளர்ப்பிலும், எருமைகள் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையும் கூலி வேலையையுமே நம்பியுள்ளன. சாமிமுத்தன்பட்டியில் இவர்கள் முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் மட்டுமே பிறந்தன. ஆனால் இன்று ஆண், பெண் இரு வாரிசுகளும் காணப்படுகின்றன.

கொழும்புக்காரன் குடும்பம்: எருமைக்காரன் குடும்பத்தில் ஒருவர் ஊர் விரும்பியாக வாழ்ந்துள்ளார். அவர் ஒரு இடத்திலே நிலையாக இல்லாமல் பல ஊர்களுக்கும் சென்று வந்துள்ளார். அவ்வாறு ஒரு சமயம் கொழும்புக்குப் போனவர் பல வருடங்கள் சென்று வந்திருக்கிறார். அதிலிருந்து அவரை கொழும்புக்காரன் என்று அவ்வூர் மக்கள் அழைக்கலாயினர், சந்தியாகு என்ற அவரையும் அவரது சந்ததிகளையும் கொழும்புக்காரன் குடும்பத்தினர் என்றே மக்கள் அழைத்தனர். அவர்களது வீடு கொழும்புக்காரன் வீடு என்று இன்றும் அழைக்கப்படுகிறது. 


ஆரம்பத்தில் மாரம்பாடி, சாமிமுத்தன்பட்டி மற்றும் சின்னமுத்தன்பட்டியில் நாட்டாமைக்காரராக இருந்த ஒரு குடும்பத்திலிருந்து சிலர் எருமைகளோடு வந்ததால் எருமைக்காரன் குடும்பமென்று பெயர் பெற்றது. அக்குடும்பத்திலிருந்து ஒருவர் கொழும்புக்குப் போய் வந்ததால் அவருக்கு கொழும்புக்காரன் என்றும் அவர் குடும்பத்திற்கு கொழும்புக்காரர் குடும்பமென்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. இவ்வாறுதான் குடும்பப் பெயர்கள் புதிதாகத் தோன்றுகின்றன. 


இந்த முறையில் மட்டுமல்லாமல் அவரவர்களின் பெயர்களாலும் குடும்பப் பெயர்கள் தோன்றுவதுண்டு. அவரவர்களுக்கு வைக்கப்படும் பெயர்களைக் கொண்டும் வீட்டுப் பெயர்கள் அமைவதுண்டு. எருமைக்காரனை சிலர் பாக்கியம் என்றும் இவர்கள் வீட்டை பாக்கியம் வீடு என்றும் அழைப்பதுண்டு. இவரைப் போலவே பலருக்கும் பாக்கியம் என்ற பெயர் இருப்பதால் எந்தப் பாக்கியம் என்று யாராவது கேட்டால் எருமைக்காரன் வீட்டுப் பாக்கியம் என்றும் கூறி தெளிவு பெறுகின்றனர். வீட்டுப் பெயர், குடும்பப் பெயரென்பது பரம்பரையை அடையாளம் கண்டு கொள்வதற்காக வைக்கப்படுகின்றது. எருமைக்காரன் பாக்கியம் மற்றும் அவரின் ஐந்து தலைமுறைகள் எருமைக்காரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழ்கின்றனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: பாக்கியம், சின்னப்பன், ஜோசப்பு, அமலநாதன். பிலிஞ்சோன். இவர்களின் பெயர்களாலும் வீட்டுப் பெயர்கள் அமைவதுண்டு, என்றாலும் எருமைக்காரன் வீடு பாக்கியம், எருமைக்காரன் வீடு சின்னப்பன், எருமைக்காரன் வீடு ஜோசப்பு என்றே அதிகமாக அழைக்கப்படுகின்றனர். 

எருமைக்காரனூரில் புனித கனிருந்தம்மாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. கிறித்தவ முறைப்படி ஆண்டுக்கு ஒரு முறை இக்கோயிலில் தேர் திருவிழா நடைபெறுகிறது என்றாலும் எருமைக்காரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், கொழும்புக்காரன் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை தங்களின் பூர்வீகமான திண்டுக்கல் சாமிமுத்தம்பட்டியிலுள்ள அந்தோணியர் கோயிலுக்குப் போய் வருகிறார்கள். அவர்களது பூர்வீகக் காணிக் கோயிலில் ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது. 16 ஆம் தேதியன்று திருவிழாத் தொடக்க நிகழ்ச்சியாகக் கொடிக்கம்பம் போடப்படுகிறது. அதில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அந்தக் கோயில் விசேஷத்தில் இவர்களின் குடும்பங்களே அதிகம் பங்கு கொள்கின்றனர். சாமிமுத்தன்பட்டியிலும், சின்னமுத்தன்பட்டியிலும் இன்றும் 200க்கும் அதிகமான நாட்டாமைக்காரர் குடும்பங்கள் உள்ளன.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக