Skip to main content

9 காணி வீடு

9    காணி வீடு 


டி.டி. ரமேஷ் ராஜா



வீடு என்பது ஒரு கனவாக, ஒரு சிலருக்கு கோவிலாக. அரணாக மேலும் சிலருக்கு ஒரு லட்சியமாகக் கூட விளங்குகிறது. இவ்வாறான மதிப்பீடுகள் சமவெளியில் நேர்கோட்டில் இயங்கும் நமக்கு பொதுவானது. ஆனால் காணி மக்களுக்கு வீடு என்பது தற்காலிகமான ஒன்று மட்டுமே. நம் வாழ்வு முழுவதுமாக வீடு என்ற குறியீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சம காலத்தில், காணி வீடு மாத்திரம் மதிப்பீடுகளை உதறி நிற்பதன் அர்த்தம் என்ன? காணி வீடு என்ன சொல்கிறது. 


காணிக்காரர்கள்: தமிழ்நாட்டின் தென்மேற்கே காணப்படும் பொதிகை மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் 'காணிக்காரர்கள்'.  தற்சமயம் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியர் காணி குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, சேர்வலாறு, இஞ்சிக்குழி ஆகிய இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, விளவங்கோடு, கற்குளம் ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர். இதில் 'தற்சமயம்' என்ற சொல் காணி மக்களின் செங்குத்துக் கோட்டியக்கத்தை அர்த்தப்படுத்துகிறது.  இது சமவெளியின் நேர்கோட்டியக்கத்திற்கு எதிரானது. பொதிகை மலையில் பல இடங்களில் வாழ்ந்த இந்த இன மக்கள் தற்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். காணி மக்கள் தங்கள் குடியிருப்பு மனையை தேர்வு செய்யும் விதம் மிக சுவாரஸ்யமானது. 


காணி மக்களுக்கு பொதிகை மலை முழுவதும் சொந்தம். ஆனாலும் அவர்கள் நினைத்த இடத்தில் குடியேறி விடுவதில்லை. சமவெளி மனிதர்களுக்கு வீட்டில் தெய்வம் குடியிருக்க வேண்டும். அதற்காக அவர்கள் படும் பிரயத்தனங்கள் தான் எத்தனை! விளக்கு போடுவதிலிருந்து கோலம் போடுதல், கழுவி எடுத்தல், பூ கட்டுதல், பத்தி, சூடன், பழங்கள், தேங்காய் உடைத்தல் இத்யாதி என எவ்வளவு காரியங்கள்! 


ஆனால் காணி மக்களோ தாங்கள் குடியிருக்கும் இடத்தில் தெய்வ நடமாட்டம் இருத்தல் ஆகாது என கருதுகின்றனர். தெய்வத்தை நாம் தொந்தரவு செய்யக் கூடாது என்கின்றனர். அகத்தியர் காணி குடியிருப்பின் மூட்டுக்காணியான ஆறுமுகம் காணி கூறுவது இதை அழுத்தம் பெற வைக்கிறது. 'பொதிகை மலையில் மொத்தம் 101 தெய்வங்கள் வசிக்கின்றன. அத்தெய்வங்களின் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்துதான் நாங்கள் எங்கள் குடியிருப்புகளை நிறுவுகின்றோம். 


தெய்வம் வேறு மனிதன் வேறு என்று பிரித்தறியும் காணி மக்கள் இரண்டிற்குமான நடமாட்டத்தையும் ஒன்றோடு ஒன்று மோதலுறாமல் திட்டமிட வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகிறது. சரி, இந்த 101 தெய்வ நடமாட்டத்தை எப்படி அறிவது? அதற்கு பிலாத்தி இருக்கிறார். காணிக்காரர்களின் பிலாத்தி மாயப்படிப்பு படித்தவர். மந்திரங்கள் தெரிந்தவர். கொக்கறை என்ற இசைக்கருவி வாசித்து சாற்றுப் பாட்டு மூலம் மறைந்திருப்பதை வெளிக் கொணர்ந்து, அதை விரட்டி அடித்து சரி செய்பவர். அவர் தான் 101 தெய்வங்கள் வசிக்காத, நடமாடாத இடத்தை காணி மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். மூட்டுக்காணி அதைப் பின்னர் உறுதி செய்கிறார்.


வீடு: நிலம் முடிவு செய்யப்பட்ட உடன் மூட்டுக்காணி ஏறக்குறைய 10 அடி நீளமுள்ள ஒரு மரக்குச்சியின் உதவியால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு என நிலத்தை அளந்து தருகிறார். அந்த இடம் துப்புறவு படுத்தப்பட்டு சீரமைக்கப்படுகிறது. முதலில் மரக்குச்சிகளால் வேலி இடப்படுகிறது. தோட்டத்திலுள்ள கிழங்குகளையும் பழங்களையும் தேனையும் மிருகங்களிடமிருந்து பாதுகாக்க அது அவசியமாகிறது. நடுப்பகுதி வீட்டிற்கான இடமாகிறது. 


காணி மக்களின் வீடு பெரும்பாலும் செவ்வக வடிவில் காணப்படுகிறது. அதிக வீடுகள் ஆலப்பனை ஓலை அல்லது தருவைப்புல் ஆகியவற்றால் வேயப்பட்டிருக்கின்றன. சமீப காலத்தில் மண்சாந்து மூலம் இவர்களே தயாரிக்கும் செங்கல்களும் இடம் பிடிக்கத் தொடங்கின. காட்டு மரங்களை வெட்டி தூண்களை அமைத்து அதன் மேல் டாலி என்ற கொடியை கயிறாக பயன்படுத்தி, தருவைப் புல்லால் கூரைகளை அமைக்கின்றனர். 


தங்கள் வீட்டிற்கான தூண்களை இடுவதில் காணி மக்களின் ஒழுங்கு முறை அலாதியானது. கட்டாயமாக ஒரு வீடு ஆறு தூண்களைக் கொண்டிருக்க வேண்டும். தூண்களை இவர்கள் கால்கள் என்கிறார்கள். ஆறு கால்கள் கொண்டதே ஒரு வீடு. இந்தக் கால்கள் தாய், தகப்பன், ஒரு குழந்தை என்ற அமைப்பைக் குறிக்கிறது. மூன்று பேர்களுக்கு ஆறு கால்கள் என்பதால் வீட்டிற்கும் ஆறு கால்கள். ஆறு கால்கள் இருந்தால் குலம் தழைக்கும். இந்தக் கால்களின் மீது தான் கூரை உட்கார்கிறது. அது தெற்கு நோக்கி சாய்ந்திருக்கும். ஒரு வீட்டிற்கு குறைந்தது இரண்டு வாசல்கள் காணப்படுகின்றன. காணிப்பெண்கள் பெரும்பாலும் பின்வாசல் புழக்கத்தையே கடைபிடிக்கிறார்கள். 


இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு வீடு எழுப்பப்பட்டுவிடுகிறது. ஒருவருக்கொருவர் ஒத்தாசையுடன் வீட்டை கட்டுகிறார்கள். வீடு கட்டுவதற்கு என காணி மக்கள் எவ்வித சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவதில்லை. வீட்டை மாட்டுச்சாணம் கொண்டு மெழுகி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து அதில் மரச் சீனிக்கிழங்கு, திணை, மா, பலா, நார்த்தை, மிளகு போன்றவற்றை வளர்க்கிறார்கள். தேன் வளர்ப்பு முறையும் இப்போதைய வாழக்கையோடு ஒன்றி விட்டது. காணி வீட்டின் வாசல் குனிந்து செல்லக் கூடிய அளவிற்கே உயரம் உடையது. ஏறக்குயை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் வீட்டின் ஓலைகளையும் புற்களையும் அவர்கள் மாற்றி அமைக்கிறார்கள். வீட்டை மாற்றுவது போல் தங்கள் குடியிருப்புகளையும் இவர்கள் ஒட்டு மொத்தமாக திடீரென மாற்றி விடுகிறார்கள். 


முன்பு வாழ்ந்த இடங்களாக காணி மக்கள் நினைவு கூறும் இடங்கள் கண்டம் பாறை, கிடாவெட்டி பாறை, காட்டுமடம், மாவடி, காட்டுப்பட்டி, கன்னிப்பாறை, பொதிகையடி போன்றவையாகும். தற்சமயம் வாழும் இடங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளன. பொதிகை மலையின் மேல்பகுதியில் வாழ்ந்த இடங்களின் சோலை இவர்கள் மனதை நீங்காதிருக்கிறது. அகத்தியர் காணி குடியிருப்பில் வசிக்கும் சங்கரன் காணியின் மண் குறித்த தகவல் வியப்பாக இருக்கிறது.  'அகத்தியர் காணி குடியிருப்பில் கரையான்கள் அதிகமாக வருகின்றன. ஏனெனில் இந்த மண் பச்சை மண். ஆனால் பெரிய மயிலாறு, இஞ்சிக்குழு ஆகிய இடங்களில் கரையான்கள் இல்லை. ஏனெனில் அந்த மண் சுட்ட மண்' என்கிறார். 'அது என்ன பச்சை மண்? சுட்ட மண்?' என்றால் 'அது என்னமோ அது அப்படித்தான்' என்றொரு பதில். 


அரசும் நோயும்: காணி மக்களின் இடமாற்றத்திற்கு அவர்களது மனோபாவம் முதன்மையான பங்கு வகித்தாலும் குறிப்பிட்ட சில ஆண்டுகளாக நிகழும் இடமாற்றங்களுக்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறுகிறார்கள். ஒன்று தீராத நோய். மற்றொன்று அரசாங்கத்தின் காட்டிலாகா. முன்பு கண்டம் பாறையில் அம்மை நோயின் கொடுமை தாங்க முடியாமல் இறந்தவர்களின் சடலங்களை அப்படியே போட்டுவிட்டு வேறு இடம் பெயர்ந்தனர். அதே போல் காட்டிலாகா 'பிளான்டேஷன்' என்ற பெயரில் கட்டயாப்படுத்தி இவர்கள் குடியிருப்புகளை கீழிறக்கி இருக்கிறது. இன்று நோய்கள் அருகி விட்டன. காட்டிலாகா பெருகி விட்டது. 


காணி மக்கள் காட்டிலாகாவால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என நினைக்கிறார்கள். அவர்கள் மலைவாழ் மிருகங்களால் கொஞ்சமும் பாதிப்படைந்ததாய் தெரியவில்லை. அவற்றை பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் பயமில்லை. அவர்கள் பயங்கள் எல்லாம் கீழே சமவெளியிலிருந்து மேலே செல்லும் மனிதர்கள் மேல் தான். கீழிருந்து வரும் மனிதர்களுடன் நோய் நொடி தரும் தீய ஆவிகள் வந்து விடுவதாக நம்புகிறார்கள். இதை அவர்கள் 'வரதி' என குறிப்பிடுகின்றனர். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பிலாத்தி, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கொக்கறை வாசித்து, சாத்துப்பாட்டு பாடி, இந்த வரதியை விரட்டுகிறார். அதன் பின்னரே அவர்களின் நோய் நொடிகள் தீருகின்றன. 


காணி மனம்: காணி மக்களின் மனம் அகத்தியரால் ஆளப்படுகிறது. நாம் நினைக்கும் அகத்தியருக்கும் காணி மக்களின் அகத்தியருக்கும் அதிக வேறுபாடு உண்டு, பெரிய மயிலாறு ராமங்காணி கூறுவது நம்மை உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது.  அகத்தியர் யார் என்றால் எல்லாமே அவர் தான், வானம், பூமி, கடல், செடிகள் எல்லாம் தோன்றும் போதே அகத்தியர் இருக்கிறார். இப்போதும் இருக்கிறார். அவரை நம்மால் பார்க்க முடியாது. நாங்கள் அகத்தியரை வணங்க வருடாவருடம் பொதிகை உச்சியிலிருக்கும் பூங்குளம் சென்று வருகிறோம். ஆனால் பூங்குளத்தின் மேல் உச்சிக்குப் போக மாட்டோம். ஏனெனில் அது அகத்தியரின் தலை, அதை மிதிக்கக் கூடாது. 


உண்மை வீடு: காணி மக்களுக்கு பொதிகை மலைதான் உண்மையான வீடு. அதில் அவர்கள் கட்டும் வீட்டை சிறு நிழற்குடையாக மட்டும் கருதுகிறார்கள். எனவே தான் வீடு குறித்த மதிப்பீடுகள் அவர்களிடம் இல்லை. வீட்டை மிக அவசியமான ஒன்றாகக் கருதாததற்கு பொதிகை மலை முழுவதுமே தங்களுக்கு சொந்தமான வீடு என்கிற மனோபாவமே காரணம். கான்கீரிட்டுகளால் சூழப்பட்ட கட்டிடத்தையும் முத்திரைத்தாள்களில் பதிவு செய்யப்பட்ட நிலங்களையும் மட்டுமே தங்களுக்கு சொந்தமானவை என பிறர் மீதான பகைமையை அகத்துக்குள் வளர்த்துக் கொள்ளும் சமவெளி மக்களுக்கு காணி மக்களின் இம்மனோபாவம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக