Skip to main content

கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் - முன்னுரை

 ‘கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும் என்ற தலைப்பிலான இத்தொகுப்பு நூல் ஒரு வகையில் முன்னோடி, இன்னொரு வகையில் கடைசியும் கூட.  


ஏதாவதொரு தேர்ந்தெடுத்த சிறப்புப் பொருளில் கருத்தரங்கம் நிகழ்த்தி, அதற்கு தேர்வுசெய்யப்பட்ட கட்டுரைகளை அன்றே புத்தகமாகவும் வெளியிடும் வழிமுறைக்கு இந்நூல் முன்னோடி.  அதே நேரம், அந்த வழிமுறையில் வெளிவந்த காத்திரமான, இருபது வருடங்களுக்குப் பின்பும் தேவைப்படும் கடைசி நூலும் இது தான்.  


அதன் பின், கல்லூரிகளாலும், பல்கலைக்கழகங்களாலும், ஆய்விதழ்களாலும் வெளியிடப்படும் இத்தகைய கருத்தரங்க புத்தகங்கள் வணிக நோக்கில் சீரழிந்து போயின என்பதே உண்மை.  


அந்நாட்களில் நான் தூய சவேரியார் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் என்றாலும், இக்கருத்தரங்கும், புத்தக வெளியீடும் கல்லூரிக்கு வெளியிலேயே நடைபெற்றன.  


இந்த நிகழ்வில் என்னோடு இணைந்து பணியாற்றியவர் நண்பர் ‘மயன் டி. டி. ரமேஷ்ராஜா.  அவரது பக்கபலமின்றி இது சாத்தியமில்லை என்பதே யதார்த்தம்.  


அந்தப் புத்தகம் இன்றைக்கு அச்சில் இல்லை.  கிண்டில் பதிப்பாகக் கிடைக்கிறது என்றாலும் பலரால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.  அதனால், அக்கட்டுரைகளைத் தொடர்ச்சியாக இவ்வலைத்தளத்தில் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.  இன்று, அதற்கு எழுதப்பட்ட முன்னுரையைப் பதிவேற்றுகிறேன்.




முன்னுரை


பண்பாட்டு நிகண்டு என்ற செயற்திட்டம்


மக்கள் பண்பாட்டைப் பற்றிய அக்கறை நாட்டார் வழக்காறுகள் குறித்த விழிப்புணர்வாகவே தமிழில் அறிமுகமானது. வழக்காறுகளை சேகரிப்பதும். ஆவணப்படுத்தலும், ஆய்வுக்கு உட்படுத்தலும் மேற்கத்திய நாடுகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஓர் அறிவியலென செய்யப்பட்டு வருகிறது என்றாலும், தமிழகம் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வழக்காறுகளை மையப்படுத்திப் பேசுவதென்பது வேறுமாதிரியானது. 


தேசியம் என்ற உருவாக்கமும், பண்பாட்டு அடையாளங்கள் என்ற காரணியும் மூன்றாம் உலக நாடுகளில் இன்றளவும் அரசியல் சார்ந்த போராட்டங்களாகவே அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக, ‘எழுத்தறிவு' என்ற பெயரின் கீழ் சமூகத்தின் அனைத்துத் தளங்களும் வரையறுக்கப்படும் இருபதாம் நூற்றாண்டுச் சூழலில், நாட்டார் பண்பாட்டை முன்னிறுத்தும் செயல்பாடு, நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்திற்கும் எதிரான நிலைப்பாடாகவே கருதப்படவேண்டும். 


ஆனால், தமிழகம் மாதிரியான மிகப் பழமையான, அதே நேரம் செழுமையான எழுத்துப் பண்பாட்டைக் கொண்டுள்ள, அவ்வெழுத்துப் பண்பாட்டையே தனது நவீன அடையாளமாகக் கட்டமைத்துக் கொண்ட சமூகத்தில் நாட்டார் பண்பாட்டைப் பற்றிய அக்கறைகள் மலினப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. எழுத்திலக்கியச் சுமையையே தாங்கிக் கொள்ள முடியாத சமூகம் வழக்காற்று வளமையைப் பெயரளவில் சிலாகிப்பதோடு நிறுத்திக் கொள்ளும். ஏறக்குறைய தமிழகத்திலும் இது போன்ற பெயரளவு சிலாகித்தல்களே நடைபெற்றன.


மிகப் பரந்த எழுத்திலக்கிய மரபில் சலிப்புற்றிருந்த பலரும், தற்காலிக மாற்றத்திற்கென வாய்மொழி மரபுகளில் கவனம் கொள்ளும் போக்கே பெருமளவில் காணப்பட்டது. எழுத்துச் செழுமை மட்டுமல்ல, பேச்சுச் செழுமையும் தமிழுக்கு உண்டு; சில அபூர்வ தருணங்களில், வாய்மொழி மரபானது எழுத்து மரபினும் திறம் வாய்ந்தது; வாய்மொழி மரபே தமிழ் எழுத்து மரபின் முன்னோடி; நவீனத் தமிழ் முயற்சி வாய்மொழி மரபை உள்வாங்கியே செய்யப்பட வேண்டும் என்பவை போன்ற விளக்கங்களுடனே வெகுமக்கள் பண்பாட்டை அணுகும் போக்கு இருந்து வந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், எழுத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தமிழ், தமிழர், தமிழகம் போன்ற கருத்தாக்கங்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்க வேண்டியே வாய்மொழி மரபுகள் பயன்படுத்தப்பட்டன. 


எழுத்திலக்கிய வாசிப்பின் இடைவெளிகளை வாய்மொழி வழக்காற்று அறிவின் மூலம் நிரப்புவதும், நவீன எழுத்தை உருவாக்கும் உற்சாகமாக வழக்காறுகளை வரிந்து கொள்வதும் நடைபெற்றன. இது போலவே, நெடுங்காலமாய் எழுத்து சார்ந்த தகவல்களை மட்டுமே ஆவணங்களாகக் கொண்டு செய்யப்பட்ட வரலாறு, தனது நேர்மையும் முறைமையும் கேள்விக்குள்ளான போது வழக்காறுகளிருந்தும் வரலாற்றுத் தரவுகளைப் பெற முடியுமென்று சற்றே வளைந்து கொடுத்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.

 

எழுத்து மரபில் எப்பொழுதெல்லாம் சிக்கல்களும், முரண்பாடுகளும் தோன்றுகின்றனவோ அப்போதெல்லாம் வாய்மொழி மரபில் கவனத்தைக் குவித்தல் என்ற எல்லையை மீறி, நாட்டார் பண்பாட்டைத் தன்னளவில் முழுமையான ஒன்றென புரிந்து கொள்ள வேண்டும் என்ற பார்வை அதுகாறும் நம்பி வந்த பல்வேறு முன் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கியது. எழுத்தையும், அது சார்ந்த வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பண்பாடு வெளிப்படுத்தக்கூடிய ஒற்றைத் தன்மையையும், அதன் தொடர்ச்சியாக அப்பண்பாடு பிற அனைத்துப் பரிமாணங்களையும் மறுதலிக்கிற எதேச்சதிகாரத்தையும் மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் பொழுது ‘பண்பாடு' என்ற காரணி மேலும் மேலும் சிக்கலானதாய் மாறுகிறது. 


அதிகபட்ச செவ்வியல் குணங்களுடன் வலியறுத்தப்படும் ‘தமிழ்ப் பண்பாடு' என்னும் மாயத் தோற்றத்திற்கான எதிர்வினைகளாகவே நாட்டார் பண்பாடு செயல்பட்டு வருகிறது. தட்டையான, நேர்கோட்டுத் தன்மையிலான எழுத்துப் பண்பாட்டிற்கு எதிரான கலகத்தை நாட்டார் பண்பாடு வெளிப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்வதே பண்பாட்டு ஆய்வுகளின் இன்றைய தேவையுமாக இருக்கிறது.


'கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும் ' என்ற பெயரிலான கட்டுரைகளின் தொகுப்பு இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கும், அவற்றிலிருந்து கட்டப்பட்ட 'தற்காலத் தமிழகம்' என்ற பெருங்கதையாடலுக்கும் எதிரான வட்டாரம் சார்ந்த பல்வேறு எதிர் நிலைப்பாடுகளைப் பதிவு செய்வதே இத்தொகுப்பின் முதன்மைப் பணியாக அமைகின்றது. இவ்வாறு, நிறுவனமயப்பட்ட பெருங்கதையாடலுக்கு எதிராக முன் வைக்கப்படும் கலகக்கதையாடல்கள் பண்பாட்டுத் தளத்தை எல்லோருக்கும் பொதுவான வெளியாக மாற்றக்கூடும். அப்படியொரு வெளி உருவாகிற தருணத்தில், அதில் குறுக்கும் நெடுக்குமென பல்வேறு கதையாடல்கள் சமகாலத்தில் இயங்கக்கூடிய சூழல் தோன்றலாம். அப்படியொரு கனவை நோக்கிய நகர்தலாகவே இத்தொகுப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் 


*


பண்பாட்டு ஆய்வின் முதல் நிலை ஆவணப்படுத்தல். தமிழகம் போன்ற, பெருவாரியான மக்கள் பண்பாட்டைச் சரிவர ஆவணப்படுத்தாத சமூகத்தில், எதை ஆவணமாகக் கொள்வது, எதை விடுவது, ஆவணமாகக் கொண்டவற்றைத் தொகுப்பது எவ்வாறு என்பவை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுவது இயல்பு.


நாட்டார் பண்பாட்டு ஆவணங்களைத் தொகுப்பதில் பல்வேறு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அகராதி முறையில் (அகர வரிசையில்) வழக்காறுகளைத் தொகுத்ததும், களஞ்சியம் முறையில் (கருத்து வரிசையில்) தொகுத்ததும் பரவலாகக் கவனிக்கப்பட்ட தொகுப்பு முறைகள். இவையிரண்டுமே வாசகக் கண்ணோட்டத்துடன் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலானத் தகவல்களை விரைவில் தேடியறிவது எவ்வாறு என்றே வடிவமைக்கப்பட்டிருந்தன. 


அகராதி முறை, ஆவணங்களைத் துண்டு துண்டாக வரிசைப்படுத்தியது (ஆர்னி-தாம்சனின் கதையடைவு). களஞ்சிய முறையோ ஆவண முழுமையை வலியுறுத்தின (ஜேம்ஸ் ஃப்ரேசரின் தொகுதிகள்). ஆனால், பண்பாட்டு ஆவணங்களைப் பொறுத்த வரையில் ஒரு ஆவணம் பிற ஆவணங்களுடன் கொள்ளும் தொடர்பு இன்றியமையாதது. இத்தொடர்பே ஒரு பண்பாட்டை ‘முழுமை என உணரவும் செய்கிறது. இத்தகைய ஆவணங்களுக்கிடையிலான சிக்கலான உறவுகளை வெளிப்படுத்தும் தொகுப்பு முறை என்னவாக இருக்குமென்று யோசித்த பொழுதே ‘நிகண்டு' என்ற பழைய தமிழ் வடிவம் சரியானதாக அமைந்திருந்தது.


‘நிகண்டு' என்பது மொழியின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய தொகுப்பு முறை. மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை மொழிகள் அனைத்தும் மிகக் குறைவான சொற்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான அர்த்தங்களை வெளிப்படுத்தும் குணத்தையே கொண்டுள்ளன. இதனால் ஒரே சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்களும், ஒரே அர்த்தத்திற்குப் பல்வேறு சொற்களும் என்ற தனித்துவம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, ஒரு சொல் புழங்கும் சூழலைக் கொண்டு அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்கும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ஒரு மொழியை அறிவதும், பழகுவதும் என்பது இலக்கணத்தையோ, சொற்களையோ அறிந்திருப்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் அச்சொற்களின் பன்முகத்தை அறிந்திருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது முடிவாயிற்று. இதனாலேயே, தமிழில் அகராதியை விடவும் நிகண்டு மீண்டும் மீண்டும் செய்யப்படிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், நிகண்டு என்பது பன்முக முழுமையை நோக்கிய பயணம்.

 

மொழியை, நிகண்டு மட்டுமே சரியாக விளக்க முடிகிறது; அதுவே நியாயமானதும் கூட. இந்த சிந்தனையை அப்படியே நாம் பண்பாட்டிற்கும் பொருத்திப் பார்க்கலாம். ஏனெனில் மொழியும் பண்பாடும் ஒரே மாதிரியான ஒழுங்கமைப்பு முறைகளைக் கொண்டவை. மொழியின் அத்தனை லட்சணங்களும் பண்பாட்டிற்குண்டு. இன்னும் அதிகமாக மொழியே பண்பாடு, பண்பாடே மொழி என்று சொல்பவர்களும் உண்டு. மொழியின் பன்முகத்தைப் போலவே பண்பாட்டின் பன்முகத் தோற்றமும் இன்றியமையாதது. அப்பன்முகங்கள் வெளிப்படுத்தும் சிக்கலான உறவை ‘நிகண்டு முறையியல் கொண்டு ஆவணப்படுத்த முடியுமானால் ‘தமிழ்ப்பண்பாட்டு நிகண்டு' ஒன்றை நம்மால் வடிவமைக்க முடியும் என்ற சிந்தனை இவ்வாறே தோற்றம் பெற்றது. 


நிகண்டை பண்பாட்டு ஆவணப்படுத்தலின் முறையியலாகக் கொள்வதில் மேலுமொரு காரணமும் உண்டு. 'பாலி பாஷையில் ‘நிகண்டு' எனும் மொழிக்கு திராவிட பாஷையில் ‘பன்மொழி பொருள் விளக்கம்' எனப்படும்' (அயோத்திதாசர் சிந்தனைகள் - II, பக். 561). நிகண்டு என்ற வடிவம் பெருமளவில் தமிழ் பௌத்த, சமண சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டது. தமிழின் வீச்சையும், எல்லையையும் விளங்கிக் கொள்ள துணைபுரியும் நிகண்டுகள் ‘தமிழ் இலக்கிய வரலாறு' எழுதிய புண்ணியவான்களால் சௌகரியமாக மறக்கப்பட்டன என்பதே வரலாறு.      


தொல்காப்பியத்தில் தொடங்கி, சங்க இலக்கியம் புகுந்து, காப்பியம் வழியே, பக்தி இலக்கியத்தைச் சிலாகிக்கிற தமிழ்ப்புலவர் பரம்பரைக்கு எதிராக அயோத்திதாசர் போன்றோர் முன்வைக்கிற மாற்று மரபு பெருந்திரட்டு, பதார்த்த சிந்தாமணி, சீவக சிந்தாமணி, நிகண்டுகள் என இன்னொரு வரிசையை நமக்குக் காட்டித் தருகிறது. தமிழாய்வுகளில் அறிவியல் பார்வையை வலியறுத்தும் இம்மாற்று மரபினரை எதிர்க் கதையாடலாகவும், கலகக்குரலாகவும் அடையாளப்படுத்தும் முகமாகவே 'பண்பாட்டு நிகண்டு' என்ற பெயர் முன்மொழியப்படுகிறது.

 

'பண்பாட்டு நிகண்டு' என்ற தொடர் நிகழ்வின் முதற்கட்டமாகக் 'கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும்' என்ற தொகுப்பு வெளிவருகின்றது. இது போன்ற தொகுப்புகளே ‘தமிழ்ப் பண்பாட்டு நிகண்டு நோக்கி நம்மை அழைத்துச் செல்ல முடியும்.



15.12.2001                                                                                                                                                                                     டி. தருமராஜ் 

பாளையங்கோட்டை


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக