Skip to main content

பிறாமணாள் சினிமா

தி. ஜானகிராமனின் பாயசம் கதையை படமெடுத்திருக்கிறார்கள். வசந்த், இயக்கம். கூட்டமாகச் சேர்ந்து, திஜாரவின் பாயசத்தை சாக்கடையில் கவிழ்த்திருக்கிறார்கள். எழுத்தை காட்சியாகக் கற்பனை செய்யும் அருகதையே இல்லாத சினிமாக்காரர்களே நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடூரமானது!



இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள்.
முதலாவதாக, சாமநாது, திரைப்படத்தில் காட்டுவது போல, பொறாமையால் அந்த பாயச அண்டாவைக் கவிழ்த்து விடவில்லை. அப்படிக் கவிழ்த்ததற்கு இன்னும் சிக்கலானக் காரணங்கள் இருப்பதாக சிறுகதை சொல்கிறது.
உதாரணமாய், தனது தேகக்கட்டு குறித்து சாமநாதுவுக்கு இருக்கும் கற்பனை -

//“எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா? என்னையா, அவனையா? பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா? அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா? கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா?//
கலியாண சந்தடியில் அவருக்கு ஏற்படும் மூச்சிரைப்பு,
//“கண்ணூஞ்சலாடி நின்றார்….”
நாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்த ‘ஊஞ்சலை’!
சாமநாதனுக்கு மூச்சு முட்டிற்று.//
அவர் தனது உடல் ஆரோக்கியம் மீது கொண்ட நம்பிக்கையில் சந்தேகம் வந்த போதே, ஒற்றை ஆளாய் அந்த பாயச அண்டாவை கவிழ்த்துப் பார்க்க நினைக்கிறார். கவிழ்த்துக் கொட்ட அல்ல; பார்க்க!
காட்சிவடிவம் காட்டுவது போல, அந்தக் கவிழ்ப்பு அழுக்காறால் மட்டுமே நிகழ்ந்தது அல்ல. கூடவே வீறாப்பும், ஒரு வேடிக்கை மனமும் இணைந்தது.
அதனால் தான் அவருடைய நார்மடிப்பெண், ‘எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்!’ என்று கேட்கிறாள். திஜாரா இப்படித்தான் எழுதுகிறார்.
//கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு – மேல் வயிறளவு உயரம் பாயசம் மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. எப்படித்தான் தூக்கி மேடைமீது வைத்தான்களோ? மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராகத் தூக்கினால்தான் முடியும். ஐந்நூறு அறுநூறு பெயர் குடிக்கிற பாயசம்.
நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்.
சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார். ப்பூ – இவ்வளவுதானே. அடுத்தநொடி, வயிறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்துவிட்டது. பாயாசம் சாக்கடையில் ஓடிற்று.//



இரண்டாவது, திஜாரா சித்தரிக்கும் அந்தக் கிராமம். எல்லா நவீன வசதிகளும் சரசரவென்று அறிமுகமாகும் காலம் அது. பள்ளிக்கூடம், கூட்டுறவு நிறுவனம், பாலம், பேருந்து வசதி, வெல்லம் காய்ச்சும் சாலைகள் என்று அக்கிராமம் வெகுவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. சாமநாது, வேகமான இந்த மாற்றத்தை விளங்கிக் கொள்ளாதவர் அல்லது தனித்து விடப்பட்டவர். சுப்பராயனை மட்டுமல்ல, தில்லியில் சித்திரக்காரனாக வசிக்கும் அவரது இன்னொரு மகனின் படங்களைக் கூட அவரால் எதிர் கொள்ள முடியவில்லை. அதைப் பார்க்கப் பார்க்க அவரது உடல் நலிவடைகிறது.
//மாது வரைந்த படங்கள். கூர்ந்து பார்த்தார். சிரிப்பு வருகிறது. ஒரு படம் முழுதும் வெறும் முழங்கால். அதில் ஒரு கண். கண்ணில் ஒரு சீப்பு செருகியிருக்கிறது. இன்னொன்று பெண்பிள்ளை மாதிரி இருக்கிறது. ஒரு கால் பன்றிக்கால். வயிற்றைக் கிழித்துக் காட்டுகிறாள். உள்ளே நாலு கத்தி – ஒரு பால் டப்பா – ஒரு சுருட்டின சிசு. இன்னொன்று – தாமரைப் பூ – அதன்மேல் ஒரு செருப்பு. பாதிச் செருப்பில் ஒரு மீசை…
என்ன இதெல்லாம்! திகைப்பூண்டு மிதித்தாற்போல மனம் ஒடுங்கிப் பார்த்துக்கொண்டே நின்றார். கால் வலிக்கிறது. எனக்குக்கூடவா?//
நவீனத்துவத்தின் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத இறந்தகால நபர், சாமநாது. இந்தச் சிக்கலையே சிறுகதை விவரிக்கிறது. அதனால் தான், அது சிறுகதையாகவும் நிற்கிறது.
சாமநாதுவின் கதாபாத்திர உருவாக்கம் இன்னும் நுட்பமானது. உதாரணத்திற்கு இந்த இடங்களை வாசித்துப் பாருங்கள். இதைக் காட்சிப்படுத்துவதற்கு நம்மிடம் இப்போதைக்கு ஆட்கள் இல்லை என்பது உங்களுக்கே விளங்கும்.
1
“நீ இப்பவேதான் வேறயா இருக்கியே! நீ அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் ஆம்படையாளா. எங்க அண்ணா ஆம்படையாளான்னே புரியலியே-”
“தூ- போறும் – அசடு வழியவாண்டாம்” என்று வாலாம்பாள் நகர்ந்துவிட்டாள்.
“ம்ஹஹ” என்று அவருடைய அடித்தொண்டை மாட்டுக் குரலில் சிரித்தது – பெருமையோடு. பெருமை அசட்டுத்தனத்தோடு. பிறகு அவராகவே குழைந்து தொடர்ந்தார். “கோச்சுக்காதெ. உன் மனசு எப்படியிருக்குன்னு பார்த்தேன்.”
”போரும். என்னோட பேச வாண்டாம்.”
மூன்று நாள் வாலாம்பாள் பேசத்தான் இல்லை – அந்த அசட்டு விஷமத்திற்காக.
2
“அப்படியே அந்தப் பயலைக் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கண்ணு பிதுங்க…. அவன் பெண் பிள்ளைகளை எல்லாம் ஒரு சாக்கில் கட்டி…” அவர் பல்லை நெரித்தார்.
“காவேரியிலே கொண்டு அமுக்கட்டும். அப்பதானே கரையேறாத நரகத்திலே கிடக்கலாம். இப்பவே போங்கோ.”
அவளேதான். வாலாம்பாள்தான். துவைக்கிற கருங்கல்லில் அவள் மாதிரி தெரிகிறது. கறுப்பு நிறம். அலைபாய்கிற மயிர் – பவழமாலை. கெம்புத்தோடு. ரவிக்கையில்லாத உடம்பு. நடுத்தர உடம்பு. அவள் காவேரியில் குளிக்கும்போது எத்தனையோ தடவை அவரும் வந்து சற்றுத் தள்ளி நின்று குளித்திருக்கிறார். யாரோ வேற்றுப் பெண் பிள்ளையைப் பார்ப்பதுபோல, ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறார். அந்த ஆற்று வெளியில், வெட்ட வெளியில் ஈரப்புடவையை இடுப்பு, மேல்கால் தெரிந்து விடாமல் சிரமப்பட்டு அவள் தலைப்பு மாற்றிக்கொள்ளும்போது ஒரு தடவை அவர் பார்த்துக்கொண்டேயிருந்து, அவள் அதைக் கவனித்ததும் – சரேலென்று அவர் ஏதோ தப்புப் பண்ணிவிட்டது போல, அயல் ஆண் போன்று நாணினது…
இப்போதும் அது தெரிகிறது!



3
”சம்பாதிச்சதிலே பாதி நமக்குக் கொடுத்திருக்கான். மீதியை தன் தம்பியோட பாகம் பண்ணிண்டிருக்கான் சுப்பராயன். அவன் பிள்ளைகளுக்கு அதிலியும் கால் கால்னுதான் கிடைக்கும். ஏன் இப்படிக் கரிக்கறேள்…?” என்று இந்தக் காவேரியில் அவரைப் பிடித்து அலசினாள் அவள் ஒருநாள்.
ராட்சச முண்டை! கடைசி மூச்சு வரைக்கும் என்ன நியாய புத்தி! என்ன தர்ம புத்தி!
“என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே – போயிட்டியேடி” என்று முனகினார். கண்ணில் நீர் வந்தது. திரும்பிப் பார்த்தார். அடுத்த துவைகல் எங்கோ இருந்தது. யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். கேட்டாலும் சுலோகம் போலிருந்திருக்கும்.
(நர்மதே சிந்து காவேரி என்று சுலோகம் சொல்லிக்கொண்டே பிழிந்து) உடம்பைத் துடைத்து (க்கொண்டு) அரை வேட்டியைப் பிழிந்து கொசுவி உதறிக் கட்டி (க்கொண்டு) விபூதி பூசிக்கொண்டு நடந்தார் சாமநாது. (சித்தப்பா சித்தப்பா என்று அரற்றுவான் சுப்பராயன் பாவம்.)//
சினிமாக்காரர்களும் சரி, இலக்கியத்தில் இருந்து சினிமாவிற்குப் போனவர்களும் சரி, திஜாரா போன்றவர்களிடம் பிறாமணாள் பெருமையை மீட்டெடுப்பதை விடக் கேவலமானக் காரியம் வேறு இருக்க முடியாது.
அவர் காட்டும், பிராமணக் குடும்பங்களையும், நபர்களையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். இதில் தெரியக்கூடிய கூர்மையான விமர்சனத்தை இழந்து விட்டால், உங்களுக்கு மிஞ்சுவது வசந்த் போன்றவர்கள் உருவாக்கும், பிறாமணாள் சினிமா மட்டுமே.
1
காவேரிக்குப் போகிற சந்தில் இந்தண்டையும் அந்தண்டையும் குளித்தும் குளிக்கவும் ஆண்கள், பெண்கள், குளுவான்கள் எல்லாம் கடந்துகொண்டிருந்தார்கள். முக்கால்வாசி புது முகங்கள் – போகிற வாக்கில் பட்டுப் புடவைகள், வெறுங் குடங்கள் – வருகிற வாக்கில் சொளப்சொளப்பென்று ஈரப் பட்டுப் புடவைகள், நிறை குடங்கள். ஈரக்காலில் பாதை மண் ஒட்டி மிளகு மிளகாகத் தெறிக்கிறது. கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி – ஐந்தாறு வயசு – குளித்துவிட்டு அம்மணமாக வருகிறது.
2
நாலாவது பெண் – கலியாணமாகி மூன்றாவது வருடம் கணவனை இழந்து, பிறந்து வீட்டோடு வந்துவிட்டாள். பழுப்பு நார் மடி கட்டிக்கொண்டு பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். குடும்ப வழக்கப்படி தலைமுடியை வாங்கி நார்ப்பட்டுப் புடவை அணிவித்தார்கள். சுப்பராயனுடைய மூன்றாவது பெண்ணோடு ஒரே பந்தலில்தான் அந்தக் கலியாணம் நடந்தது.
3
முண்டனம் செய்த தலை. முப்பத்தோரு வயது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது.
4
மாலை மாற்றுகிறார்கள் – பெண்ணும் பிள்ளையும். அதையும் ஊஞ்சலையும் பார்த்தால், பார்வதி பரமேச்வரனை, லக்ஷ்மி நாராயணனைப் பார்க்கிற புண்யமாம். ஊரிலிருக்கிற விதவைகள்கூட மூலை முடுக்கெல்லாம் வந்து நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பல். ஒடிந்த பல், அழுக்கிடுக்குப் பல், தேய்ந்த பல், விதவைப் பல், பொக்கைப் பல், சமையற்காரன் கூட வந்து நிற்கிறான்.//
மதுரைக்காரர்களின் இடைநிலைச் சாதி சினிமாவைப் போல, இப்பொழுது நவரசா என்ற பெயரில் பிறாமணாள் சினிமா எடுத்திருக்கிறார்கள். வெட்கக்கேடு!

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக